
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 8
இந்தக் குடும்ப வடிவம் அமெரிக்க முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இரத்த உறவுகளை மிகவும் துல்லியமாகக் காட்டுகிறது. எனது தாயினுடைய சகோதரிகளின் குழுந்தைகள் அவளுக்கும் குழந்தைகளாகவே இருந்து வருகிறார்கள். அதே போல் என் தகப்பனாருடைய சகோதரின் குழந்தைகளும் அவருக்கும் குழந்தைகளாகவே இருந்து வருகிறார்கள். அந்தக் குழந்தைகள் எல்லாரும் எனக்கு சகோதரர், சகோதரிகள் ஆவர். ஆனால் எனது தாயின் சகோதரர்களுடைய குழந்தைகளோ இப்பொழுது அவளுக்கு மருமான், மருமக்களாக இருக்கிறார்கள். என்னுடைய தகப்பனாரின் சகோதரிகளுடைய குழந்தைகளும் அவருக்கு மருமான், மருமக்களாக இருக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் எல்லோரும் எனக்கு ஒன்றுவிட்ட சகோதரர், சகோதரிகள் ஆவர். ஏனென்றால் எனது தாயின் சகோதரிகளுடைய கணவர்கள் எல்லோரும் எனது தாயின் கணவர்களாக இன்னும் இருக்கும் பொழுது, எனது தந்தையாரின் சகோதரர்களுடைய மனைவியர் அனைவரும் எனது தந்தையாருடைய மனைவிகளாகவே நடைமுறையில் இல்லாவிட்டாலும் உரிமைப்படி இருக்க, சகோதரர், சகோதரிகளுக்கு உடலுறவு நிகழ்வதைத் தடுக்கும் சமுதாயத் தடையானது இதுவரை சகோதரர், சகோதரிகளாகக் கருதப்பட்டு வந்த ஒன்றுவிட்ட சகோதரர், சகோதரிகளை இரண்டு வகுப்புகளாகப் பிரித்து. சிலர் (தூர உறவினர்களும் உட்பட) சகோதரர், சகோதரிகளாக முன்போலவே இருந்து வருகிறார்கள்; மற்றவர்கள் – ஒரு பக்கத்தில் சகோதரர்களுடைய குழந்தைகளும் மறுபக்கத்தில் சகோதரிகளுடைய குழந்தைகளும் – இனிமேல் சகோதரர், சகோதரிகளாக இருக்கவே முடியாது; தாயாகவோ, தந்தையாகவோ அல்லது இரண்டு பேருமாகவோ அவர்களுக்கு பொதுவான பெற்றோர்கள் இனிமேல் இருக்க முடியாது; எனவே மருமான், மருமகள் என்ற ஆண், பெண் தாயாதிகள் என்ற வகுப்பு முதல் தடைவையாக அவசியப்படுகிறது; முந்திய குடும்ப அமைப்பில் இது அர்த்தமற்றதாகக் கருதப்பட்டிருக்கும். ஏதாவது ஒரு வகையில் ஒருதார மணத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் ஒவ்வொரு குடும்ப வடிவத்தையும் பார்த்தால், அமெரிக்காவின் உறவுமுறை என்பது மிகவும் அபத்தமாகவே தோன்றுகிறது. ஆனால், பூனலுவா குடும்பமோ, அதை அதன் கடைசி நுண்ணிய விவரங்கள் வரைக்கும் பகுத்தறிவு பூர்வமாக விளக்கவும் இயல்பானதென்று நியாயப்படுத்தவும் செய்கிறது. எந்த அளவுக்கு இந்த உறவுமுறை நிலவியிருந்ததோ, குறைந்தபட்சம், அதே அளவுக்கு இந்தப் பூனலுவா குடும்பமோ அல்லது அதைப் போன்ற ஒரு வடிவமோ இருந்திருக்க வேண்டும்.
இந்தக் குடும்ப வடிவம் ஹவாய்த் திவுகளில் உண்மையில் இருந்ததென்று நிரூபிக்கப்பட்டிருக்க்கிறது. ஸ்பெயினிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற பாதிரியார்களைப் போன்ற புனித மதப் போதகர்கள் கிறிஸ்துவ மதத்துக்கு ஒவ்வாத இந்த உறவுகளை “அறுவருப்பு” ஒன்றை மட்டும் காணாமல் கூடுதலாகச் சிறிது பார்க்க முடிந்திருந்தால் இந்தக் குடும்ப வடிவம் போலினீஸியா முழுவதிலும் நிலவுவதை அநேகமாக எடுத்துக்காட்டியிருக்க முடியும்.
[பாஹொஃபென் தாம் கண்டுபிடித்ததாக நினைத்துக்கொள்ளும் வரைமுறையற்ற புணர்ச்சி என்னும் உறவின் அடையாளங்கள், “Sumpfzeugung” என்றழைக்கப்படுவது குழு மணத்துக்குத்தான் பின்னொக்கிக் கொண்டு போய்விடுகிறது என்பதில் இனிமேல் எவ்விதமான சந்தேகமும் இருக்க முடியாது. “இந்தப் ‘பூனலுவா’ திருமணங்கள் ‘சட்டத்திற்கு உட்படாதவை’ என்று பாஹொஃபென் கருதினால் அந்தக் காலப் பகுதியைச் சேர்ந்த மனிதனும் அதே மாதிரி தற்காலத்தில் தகப்பன் வழியிலோ, தாய் வழியிலோ வந்த ஒன்றுவிட்ட அல்லது அதை விடத் தூர உறவுள்ள சகோதரர், சகோதரிகளிடையே நடக்கும் திருமணங்களை முறைகேடானவை என்றே கருதுவான், அதாவது இரத்த உறவுக் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர், சகோதரிகளிடையில் நடைபெறும் திருமணங்களாகவே கருதுவான்.” (மார்க்ஸ்.) (எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு.)]
அந்தக் காலத்தில் அநாகரிக நிலையின் இடைக்கட்டத்திலிருந்த பிரிட்டானியர்கள் “பத்து நபர்களாகவோ அல்லது பன்னிரண்டு நபர்களாகவோ சேர்ந்து தமது மனைவியர்களை பொதுவில் அனுபவித்து வந்தார்கள்; மிகப் பெரும்பாலும் சகோதரர்கள் சகோதரர்களுடன் சேர்ந்து அல்லது பெற்றோர்களும் அவர்களுடன் குழந்தைகளும் சேர்ந்து இப்படிப் பொதுவில் அனுபவித்தனர்” என்று சீஸர் சொல்கின்ற பொழுது அதைக் குழு மணம் என்று விளக்குவதே மிகவும் பொருத்தமாகும். மனைவியரைப் பொதுமையிலே வைத்துக் கொள்ள முடிகின்ற அளவுக்கு வயது வந்த பத்து அல்லது பன்னிரண்டு மகன்கள் அநாகரிக காலத்திய தாய்மார்களுக்குக் கிடையாது; ஆனால் பூனலுவா குடும்பத்துடன் பொருந்தியுள்ள அமெரிக்க உறவுமுறையில் பல சகோதரர்கள் இருக்க வாய்ப்புண்டு, ஏனென்றால் ஒரு மனிதனுடைய ஒன்றுவிட்ட சகோதரர்களும் தூர சகோதரர்களும் அவருடைய சகோதரர்களாவார்கள். “பெற்றோர்களும் அவர்களுடைய குழந்தைகளும் சேர்ந்து” என்னும் கூற்று சீஸர் நிலைமையைத் தவறாகப் புரிந்து கொண்டதைக் குறிக்கலாம். எனினும் இந்த முறை, தகப்பனாரும் மகளும் அல்லது தாயும் மகனும் ஒரே திருமணக் குழுவில் இருப்பதை விலக்குகிறது என்றாலும் தகப்பனும் மகனும் அல்லது தாயும் மகளும் அதிலிருப்பதை அறவே விலக்கவில்லை. காட்டுமிராண்டி மக்களினங்களிடையிலும் அநாகரிக மக்களினங்களிடையிலும் மனைவியரைப் பொதுவில் வைத்திருப்பதைப் பற்றி ஹெரடோட்டஸ் மற்றும் இதர பண்டைக்கால எழுத்தாளர்கள் எழுதியுள்ள விவரங்களுக்கு இந்தக் குழு மண வடிவம் அல்லது இதைப் போன்ற மற்றொரு குழு மண வடிவம் மிக எளிதான விளக்கம் தருகிறது. கங்கை நதிக்கு வடக்கேயுள்ள அயோத்தியைச் சேர்ந்த திகூர்களைப் பற்றி வாட்ஸனும் கேயும் எழுதியுள்ள இந்திய மக்கள் என்னும் நூலில் தருகின்ற வர்ணனைக்கும் இது பொருந்தும்:
“அவர்கள் ஒன்றாகவே” (அதாவது ஆண், பெண் உறவில்) “கூடி வாழ்கிறார்கள்; பெரிய கூட்டுச் சமூகங்களாக அநேகமாக வரைமுறையின்றிக் கூடி வாழ்கிறார்கள். அவர்களில் இருவர் திருமணமானவர்களாகக் கருதப்பட்டாலும் அந்த பந்தம் பெயரளவில்தான் இருக்கிறது.”
மிகவும் பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் குலம் என்னும் அமைப்பு பூனலுவா குடும்பத்திலிருந்துதான் நேரடியாகத் தோன்றியதாகத் தெரிகிறது. ஆஸ்திரேலிய வகுப்பு முறையும் அதற்கு தொடக்க நிலையாக இருக்கலாம் என்பது உண்மையே. [ஆஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளான இனக்குழுக்களில் பெரும்பான்மையாக உள்ள விசேஷக் குழுக்கள், மண வகுப்புகள் இங்கே குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு குழுவைச் சேர்ந்த ஆண்களும் குறிப்பிட்ட மற்றொரு குழுவைச் சேர்ந்த் பெண்களை மட்டுமே திருமணம் செய்து கொண்டார்கள். ஒவ்வொரு இனக்குழுவிலும் 4 முதல் 8 வரை இப்படிப்பட்ட பிரிவுகள் இருந்தன.] ஆஸ்திரேலியர்களுக்குக் குலங்கள் உண்டு, ஆனால் அவர்களிடையில் பூனலுவா குடும்பம் இன்னும் ஏற்படவில்லை. குழு மணத்தின் பண்பை அடையாத வடிவத்தையே அவர்கள் பெற்றுள்ளனர்.
குழுக் குடும்பத்தின் எல்லா வடிவங்களிலும் ஒரு குழந்தையின் தகப்பனார் யார் என்பதை அறுதியிட்டுச் சொல்ல இயலாது; ஆனால் அந்தக் குழந்தையின் தாய் யார் என்பதை உறுதியாகச் சொல்லலாம். அந்தக் குடும்பத் தொகுதி முழுவதில்முள்ள குழந்தைகள் எல்லோரையும் அவள் தன் குழ்ந்தைகள் என்றே அழைத்தாலும், அக்குழந்தைகளின் பால் ஒரு தாய்க்குரிய கடமைகளை அவள் செய்யுமாறு விதிக்கப்பட்டிருந்தாலும் அவள் மற்ற குழந்தைகளிலிருந்து தன்னுடைய சொந்தக் குழந்தைகளை அறிந்து வைத்திருக்கிறாள். குழு மண முறை இருக்கின்ற இடங்களில் எல்லாம் தாய்வழியாக மட்டுமே மரபு வழியைக் கண்டறிய முடியும் என்றும், ஆகவே பெண்வழி மட்டுமே ஒப்புக்கொள்ளப்பட்டது என்றும் தெளிவாகிறது. உண்மையாகப் பார்த்தால், காட்டுமிராண்டி நிலையிலுள்ள மக்களினங்கள் அனைத்திலும், அநாகரிக நிலையின் கடைக்கட்டத்தைச் சேர்ந்த மக்களினங்களிலும் இப்படித்தான் இருக்கிறது. இதை முதன்முதலில் கண்டுபிடித்தது பாஹொஃபெனுடைய இரண்டாவது மாபெரும் சாதனை ஆகும். மற்றவை நீங்கலாகக் தாய் மூலமாக மட்டுமே பரம்பரையை அங்கீகரிப்பதையும் அதிலிருந்து காலப் போக்கில் தோன்றிய வாரிசு உறவுகளையும் அவர் தாயுரிமை என்று குறிப்பிட்டார். சுருக்கத்தைக் கருதி நான் இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறேன். எனினும் இது பொருத்தமான சொல் அல்ல, ஏனென்றால் சட்ட ரீதியான அர்த்தத்தில் உரிமை என்று குறிப்பிடக் கூடியது எதுவும் இந்த சமுதாயக் கட்டத்தில் இன்னும் ஏற்படவில்லை.
பூனலுவா குடும்பத்தில் குறியடையாளமான குழுக்கள் இரண்டு உள்ளன, அவற்றில் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம்: அதாவது, ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரிகள், கிளை வயிற்றுச் சகோதரிகள் (அதாவது ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரிகளின் வழி வந்த ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட அல்லது அதை விடத் தூரமான உறவுள்ள சகோதரிகள்) ஆகியோரையும் அவர்களின் குழந்தைகளையும் அவர்களுடைய தாயின் வழி வந்த கூடப்பிறந்த சகோதரர்களையும் கிளை உறவுச் சகோதரர்களையும் (நமது அனுமானக் கூற்றின் படி இவர்கள் அவர்களுடைய கணவர்கள் அல்ல) கொண்ட குழுவை எடுத்துக் கொள்வோம். அதைப் பார்க்கும் பொழுது ஆதி வடிவக் குல அமைப்பின் உறுப்பினர்களாகப் பின்னால் வெளிப்பட்ட நபர்களின் குழு ஒன்று அப்படியே நமக்குக் கிடைக்கிறது. அவர்கள் எல்லோருக்கும் பொதுவான மூலத்தாய் உண்டு; அவள் மூலமாகத் தலைமுறை தலைமுறையாக வந்த பெண் சந்ததியினர் அனைவரும் அவள் வழிப் பிறந்த காரணத்தால் சகோதரிகள் ஆவார்கள். ஆனால் இந்தச் சகோதரிகளின் கணவர்கள் அவர்களுடைய சகோதரர்களாக இனிமேல் இருக்க முடியாது; எனவே அவர்கள் இந்த மூலத்தாய் வழி வந்தவர்களாக இருக்க முடியாது; எனவே அவர்கள் இந்த இரத்த உறவுக் குழுவை, பின்னர் அமைந்த குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால் இவர்களுடைய குழந்தைகள் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்களே, ஏனென்றால் தாய்வழி ஒன்றே நிர்ணயமானது, அது ஒன்றே நிச்சயமானது. தாய்த் தரப்பிலிருந்து வந்த மிகவும் தூரமான தாயாதி உறவுள்ளவர்களையும் உள்ளிட்ட எல்லா சகோதரர், சகோதரிகளிடையேயும் பாலியல் உறவு தடை செய்யப்படுவது நிலைநாட்டப்பட்டு விட்டால் போதும், அத்துடன் மேற்குறிப்பிட்ட குழு ஒரு குலமாக மாற்றமடைந்து விடுகிறது, அதாவது தமக்குள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படாதிருக்கின்ற பெண்வழி இரத்த உறவினர்களைக் கொண்ட, கறாராக நிர்ணயிக்கப்பட்ட ஒரு வட்டமாக அது தன்னை அமைத்துக் கொள்கிறது. அது முதல் சமுதாயம், சமயம் சம்பந்தப்பட்ட மற்ற பொது அமைப்புகளைக் கொண்டு தன்னை அது மேன்மேலும் கெட்டிப்படுத்திக் கொள்கிறது, அதே இனக்குழுவைச் சேர்ந்த மற்ற குலங்களிலிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்கிறது. இதை இன்னும் விரிவாகப் பின்னர் நாம் ஆராய்வோம். குலம் எனபது பூனலுவா குடும்பத்திலிருந்து அவசியத் தேவையாக மட்டுமின்றி வெளிப்படையாகவே பரிணாமமடைந்தது என்று நாம் கருதினால், குல அமைப்புகளைப் பெற்றிருந்ததாக இனங்கண்டு கொள்ளப்பட்ட எல்லா மக்களினங்களிடையிலும் – அதாவது அநாகரிக மற்றும் நாகரிக நிலையில் இருக்கின்ற அநேகமாக எல்லா மக்களினங்களிடையிலும் – இந்தக் குடும்ப வடிவம் முன்னர் இருந்ததை அநேகமாக சந்தேகமில்லாததாக அனுமானிப்பதற்கு நமக்கு ஆதாரமுண்டு.
மார்கன் தனது நூலை எழுதிய காலத்தில் குழு மண முறையைப் பற்றி நமக்கு மிகவும் குறைவாகவே தெரிந்திருந்தது. வகுப்புகளாகத் திரண்டிருந்த ஆஸ்திரேலியர்களிடையே நிலவிய குழு மணங்களைப் பற்றிச் சிறிதளவு தெரிந்திருந்தது. மேலும், மார்கன் 1871 ஆம் ஆண்டிலேயே ஹவாய்த் தீவுகளில் நிலவிய பூனலுவா குடும்பத்தைப் பற்றித் தனக்குக் கிடைத்த தகவலை வெளியிட்டிருந்தார். ஒரு பக்கத்தில், அமெரிக்க செவ்விந்தியர்களிடையே இருந்த உறவுமுறைக்குப் பூனலுவா குடும்பம் முழு விளக்கம் அளித்தது; மார்கனுடைய ஆராய்ச்சிகள் அனைத்துக்கும் இதுவே தொடக்க நிலையாக இருந்தது; மறு பக்கத்தில், தாயுரிமைக் குலம் அதிலிருந்து பெறப்படுவதற்குக் கிளை பிரியுமிடமாகவும் இருந்தது. கடைசியாக, ஆஸ்திரேலிய வகுப்புகளை விட எவ்வளவோ மேலான வளர்ச்சித் தரத்தை அது பிரதிநிதித்துவப்படுத்தியது. எனவே பூனலுவா குடும்பம் என்பது ஒரு வளர்ச்சிக் கட்டம், அந்தக் கட்டம் நிச்சயமாக இணைக் குடும்பத்துக்கு முந்தியதாக இருக்க வேண்டும் என்று மார்கன் நினைத்ததும் அது ஆதிகாலத்தில் பொதுவாகவே நிலவியது என்று முடிவு செய்ததும் நாம் புரிந்து கொள்ளக் கூடியதே. அதன் பிறகு குழு மண முறையின் இதர வடிவங்களின் தொடர்வரிசையைப் பற்றி நாம் அறிந்துள்ளோம். இந்த விஷயத்தில் மார்கன் வெகு தூரம் சென்று விட்டார் என்று நாம் இன்று அறிகிறோம். எனினும் அவர்கண்ட பூனலுவா குடும்பத்தில் குழு மணத்தின் உச்ச வடிவத்தை, மூலச்சிறப்பான வடிவத்தை எதிரிட்டது அவருடைய அதிர்ஷ்டமே. இந்த வடிவத்திலிருந்துதான் அதை விட மேலான கட்டத்துக்கு மாற்றம் ஏற்பட்டதை மிகச் சுலபமாக விளக்க முடிந்தது.
குழு மணத்தைப் பற்றி நம்முடைய அறிவை மிகவும் வளப்படுத்தியதற்கு லோரிமர் பைஸன் என்ற ஆங்கில மத போதகருக்கு நாம் மிகவும் கடமைபட்டிருக்கிறோம். ஏனென்றால் அவர் குடும்பத்தின் இந்த வடிவத்தை அதன் மூலச்சிறப்பான இருப்பிடமாகிய ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகளாக ஆரய்ந்தார். தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள மவுண்ட் காம்பியர் என்ற இடத்திலிருக்கின்ற நீக்ரோ மக்களிடம் வளர்ச்சியின் கீழ்க்கட்டத்தை அவர் கண்டார். இங்கே இனக்குழு முழுவதும் குரோக்கி, குமைட் எனப்படுகின்ற இரு பெரும் வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொன்றுக்குள்ளேயும் பாலியல் உறவு கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் மறுபக்கத்தில் ஒரு வகுப்பைச் சேர்ந்த ஒவ்வொரு ஆணும் அடுத்த வகுப்பைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் பிறவிக் கணவனாக இருக்கிறான்; அவளும் அவனுக்குப் பிறவி மனைவியாக இருக்கிறாள். இங்கே தனிநபர்களல்ல, முழுக்குழுக்கள் பரஸ்பரம் மணமுடிக்கப்படுகின்றன; வகுப்புடன் வகுப்பு மணம் செய்து கொள்கிறது. இன்னொன்றையும் குறித்துக் கொள்ள வேண்டும்: இரு புற மண முறை வகுப்புகளாகப் பிரிவு செய்யப்பட்டதால் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற ஒதுக்கலைத் தவிர வயது வேறுபாடு அல்லது நெருங்கிய இரத்த உறவு போன்றவற்றைக் குறித்து ஒதுக்கி வைத்தல் எதுவுமே இல்லை. ஒரு குரோக்கிக்கு ஒவ்வொரு குமைட் பெண்ணும் உரிமைப்படி மனைவி ஆவாள். ஆனால் குமைட் பெண் வழியாக அவருக்குப் பிறக்கின்ற மகளும் தாயுரிமைப்படி ஒரு குமைட் ஆவதால் அந்த மகளும் தனது தந்தை உட்பட ஒவ்வொரு குரொக்கிக்கும் பிறவி மணைவியாகிறாள். எப்படி இருப்பினும், நமக்குத் தெரிந்திருக்கிற படி இந்த வகுப்பு அமைப்பு இங்கே எவ்விதமான தடையும் விதிக்கவில்லை. எனவே உட்குழு மண முறையைக் கட்டுப்படுத்துகின்ற லேசான முயற்சிகள் எல்லாவற்றையும் மீறி, பெற்றோர்கள், பிள்ளைகள் இடையில் புணர்ச்சி நடைபெறுவது பயங்கரமானது என்று விசேஷமாகக் கருதப்படாமிலிருந்த ஒரு காலத்தில் இந்த அமைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். அப்படியானால் இந்த அமைப்பு வரைமுறையற்ற புணர்ச்சி நிலவிய நிலையிலிருந்து நேரடியாகத் தோன்றியிருக்க வேண்டும், அல்லது மண வகுப்புகள் ஏற்ப்பட்ட பொழுது பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் புணர்ச்சி வழக்கத்தால் ஏற்கெனவே தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்படியானால் இன்றைய நிலை இரத்த உறவுக் குடும்பம் வந்த வழியைக் காட்டுகிறது; அதிலிருந்து ஏற்பட்ட முதல் முன்னேற்றத்தை இது குறிக்கிறது. இரண்டாவது அனுமானம் மிகவும் சாத்தியமானதாகும். எனக்குத் தெரிந்த வரையில் ஆஸ்திரேலியாவில் பெற்றோர்கள், பிள்ளைகள் இடையில் திருமணத் தொடர்புகள், இருப்பதைப் பற்றி தகவல் கிடையாது. புறமண முறையின் பிற்கால வடிவம், அதாவது தாயுரிமை கொண்டாடும் குலம், அது தோன்றுவதற்கு முன்பே பொதுவாக இப்படிப்பட்ட உடலுறவுக்குத் தடை இருந்தது என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறது.
இரு வகுப்பு முறை என்பது தெற்கு ஆஸ்திரேலியாவில் மவுண்ட் காம்பியேரைத் தவிர அதற்கு இன்னும் கிழக்கில் டார்லிங் நதி பாயும் இடங்களிலும் வட கிழக்குப் பிரதேசத்திலுள்ள குவுன்ஸ்லாந்திலும் நிலவியது, என்வே மிகவும் பரவலாக இருந்தது. இந்த முறை சகோதரர், சகோதரிகளிடையில் மட்டுமே திருமணத்துக்க்குத் தடை செய்திருந்தது; தாய் தரப்பைச் சேர்ந்த சகோதரர்களுடைய குழந்தைகளுக்கு இடையிலும் சகோதரிகளுடைய குழந்தைகளுக்கு இடையிலும் திருமணத்துக்குத் தடை செய்திருந்தது. இவர்கள் ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதே அதற்குக் காரணம். மறு பக்கத்தில், சகோதரனின் குழந்தைகளுக்கும் சகோதரியின் குழந்தைகளுக்கும் இடையில் திருமணம் செய்தல் அனுமதிக்கப்பட்டது. உட்குழு மண முறையைத் தடை செய்வதில் இன்னொரு காலடி எடுத்து வைத்ததைக் காமிலராய் மக்களிடம் காணலாம். இவர்கள் நியூ சவுத் வேல்சிலுள்ள டார்லிங் நதிப் பிரதேசத்தில் உள்ளனர். இங்கே ஆதியிலிருந்த இரண்டு வகுப்புகள் நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளன; இவற்றில் ஒவ்வொரு வகுப்பும் இன்னொரு திட்ட வட்டமான வகுப்புடன் மொத்தமாக மணம் புரிந்து கொள்கிறது. முதல் இரண்டு வகுப்புகளும் பரஸ்பரம் பிறவிக் கணவன், மனைவியராக உள்ளனர். தாய் முதலாவது வகுப்பைச் சேர்ந்தவளா அல்லது இரண்டாவது வகுப்பைச் சேர்ந்தவளா என்பதைப் பொறுத்துக் குழந்தைகள் மூன்றாவது அல்லது நான்காவது வகுப்பில் உறுப்பினர்கள் ஆகிறார்கள். மேலும், இந்த மூன்றாவது, நான்காவது வகுப்புகளும் பரஸ்பரம் மணம் புரிந்து கொள்கின்றன; அவர்களின் குழந்தைகள் மீண்டும் முதலாவது மற்றும் இரண்டாவது வகுப்புகளைச் சேர்தவர்கள் ஆகிறார்கள். ஆக, ஒரு தலைமுறை எப்பொழுதும் முதலாவது, இரண்டாவது வகுப்புகளைச் சேர்ந்ததாக இருக்கும்; அதற்கடுத்த தலைமுறை மூன்றாவது, நான்காவது வகுப்புகளைச் சேர்ந்ததாக இருக்கும்; அதற்கும் அடுத்த தலைமுறை மீண்டும் முதலாவது, இரண்டாவது வகுப்புகளைச் சேர்ந்ததாக இருக்கும். இந்த அமைப்பு முறைப்படி, (தாய் தரப்பில் வந்த) சகோதரர், சகோதரிகளுடைய குழந்தைகள் கணவன், மனைவி ஆக முடியாது. ஆனால் அவர்களுடைய பேரக் குழந்தைகள் கணவன், மனைவி ஆகலாம். இது ஒரு விசித்திரமான சிக்கல் நிறைந்த அமைப்பு முறை. இத்துடன் பின்னாலுள்ள தாயுரிமைக் குலங்களை ஒட்டச் செய்ததனால் அது மேலும் சிக்கலடைந்து. ஆனால் இங்கு இதைப் பற்றி ஆராய முடியாது. ஆக, உட்குழு மண முறைக்குத் தடை போடுகின்ற உணர்வுகள் எப்படித் தம்மை மீண்டும் மீண்டும் நிலைநாட்டிக் கொள்கின்றன என்று பார்க்கிறோம்; எனினும் அவை தடவிக் கொண்டு போகின்ற ரீதியில், தன்னியல்பான முறையில், நோக்கத்தைப் பற்றித் தெளிவான சிந்தனையின்றிச் செயல்படுகின்றன.
ஆஸ்திரேலியாவைப் பொறுத்தமட்டில், குழு மணம் என்பது இன்னும் வகுப்பு மணமாகத்தான் இருக்கிறது; அதாவது கண்டம் முழுவதிலும் பரவியுள்ள ஆண்களின் ஒரு முழு வகுப்பிற்கும் அதே போல் கண்டம் முழுவதும் பரவியுள்ள பெண்களின் முழு வகுப்பிற்கும் இடையிலான மணமாகும். நெருங்கிப் பார்க்கும் பொழுது இந்தக் குழு மணம், விபசார முறையினால் கறைபடிந்த கற்பனையினால் அற்பவாதி நினைத்துக் கொள்வதைப் போல அவ்வளவு மோசமானதல்ல. அதற்கு மாறாக, அது இருந்தது என்று சந்தேகப்படுவதற்குக் கூட நெடுங்காலம் பிடித்தது. மேலும் சமீப காலத்தில் அது மறுபடியும் மறுக்கப்பட்டிருக்கிறது. மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் ஓர் ஆராய்ச்சியாளருக்கு அது தளர்வான ஒருதார மணத்தின் வகையைச் சேர்ந்ததாகத் தோன்றுகிறது; சில இடங்களில், அவ்வப்பொழுது சோரம் போய்க் கொண்டிருக்கின்ற பலதார மணமாகவும் அவருக்குத் தோன்றுகிறது. இத்திருமண உறவுகளை – நடைமுறையில் இவை ஒரு சராசரி ஐரோப்பியனுக்குத் தன்னுடைய திருமண வழக்கங்களைத்தான் நினைவூட்டுகின்றன – ஒழுங்குபடுத்துகின்ற விதியைக் கண்டுபிடிப்பதற்க்கு ஒரு நபர் பல ஆண்டுகள் பாடுபட்டாக வேண்டும். பைஸனும் ஹோவிட்டும் அப்படித்தான் பாடுபட்டார்கள். இந்த விதிப்படி, ஓர் ஆஸ்திரேலிய நீக்ரோ தன் வீட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் முகாமுக்கு முகாமாக, இனக்குழுக்கு இனக்குழுவாக வேற்று மக்களிடையில் அன்னியனாகச் சுற்றித் திரிகின்ற காலத்திலும் சிறிதும் கபடில்லாமல், எதிர்க்கவும் செய்யாமல் அவனிடம் தம்மை ஒப்படைக்கின்ற பெண்கள் மிகவும் அடிக்கடி அவனுக்கு கிடைக்கிறார்கள். அதே விதிப்படி, சில மனைவியரை உடைய ஒருவன் தன்னுடைய விருந்தினருக்கு அன்றைய இரவுக்கு தன் மனைவியரில் ஒருத்தியைத் தருகிறான். இது ஒழுக்கக் கேடு, சட்டமுறையை மீறுதல் என்று ஐரோப்பியன் பார்க்கலாம். ஆனால் அங்கே கண்டிப்பான விதி ஒன்று ஆட்சி புரிகிறது. அந்தப் பெண்கள் அந்த அன்னியருடைய மண வகுப்பைச் சேர்ந்தவர்கள்; எனவே அவர்கள் அவனுடைய பிறவி மனைவியராவர். ஒருவருக்கு ஒருத்தி என்னும் இதே அறச் சட்டமே தமக்குரிய மண வகுப்புக்கு வெளியே பாலியல் உறவைத் தடை செய்கிறது; அது மீறப்பட்டால் இனக்குழுவை விட்டு வெளியேற்றும் தண்டனை விதிக்கிறது. பெண்களைப் பலவந்தமாக கடத்திச் செல்வது அடிக்கடி நடைபெறுகிறது; சில இடங்களில் இது பொது விதியுமாகும். இவ்விஷயத்திலும் இவ்வகுப்பு விதி கண்டிப்பாகப் பின்பற்றப்படுகிறது.
இங்கும்கூட பெண்களைக் கடத்திச் செல்கின்ற முறை ஒருதார மண முறைக்கு – குறைந்தபட்சம், இணை மண வடிவத்தில் – மாற்றம் பெறுவதன் அறிகுறியை ஏற்கெனவே வெளிப்படுத்துகிறது. ஒரு வாலிபன் தன்னுடைய நண்பர்களது உதவியுடன் ஒரு பெண்ணைக் கடத்திக்கொண்டு அல்லது அவளுடன் வீட்டை விட்டு ஓடிப்போன பிறகு அவர்கள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக அவளுடன் பாலியல் உறவு கொள்கிறார்கள். ஆனால் அதன் பிறகு, அவளைக் கடத்தி வந்தவனே அவளுடைய கணவனாகக் கருதப்படுகிறான். அதற்கு மாறாக, கடத்தி வரப்பட்ட அந்தப் பெண் அந்த ஆணை விட்டு ஓடிப் போய் இன்னொருவனால் பிடிக்கப்பட்டால் அவள் அவனுக்குத்தான் மனைவி ஆகிறாள். முன்வந்தவன் தன் முதன்மை உரிமையை இழக்கிறான். ஆக, ஒன்றையொன்று விலக்கி வைக்கின்ற உறவுகளும் நீண்ட காலத்துக்கோ, குறுகிய காலத்துக்கோ தம்பதிகளாக இருப்பதும் அவற்றுடன் கூடப் பலதார மணமும் குழு மணத்துடன் சேர்ந்தும் குழுமணத்திற்குள்ளேயும் கூடத் தம்மை நிறுவிக் கொள்கின்றன. இந்தக் குழு மணம் பொதுவாகவே தொடர்ந்து நீடிக்கிறது. ஆக, இங்கும் கூடக் குழு மணம் படிப்படியாக நசிந்து வருகிறது. ஐரோப்பியர்களுடைய நிர்பந்தத்தின் விளைவாக முதலில் மறையப் போவது குழு மணமா அல்லது அதைக் கடைபிடிக்கின்ற ஆஸ்திரேலிய நீக்ரோக்களா என்பதே கேள்வி ஆகும்.
எது எப்படியிருப்பினும் ஆஸ்திரேலியாவில் உள்ள முழு வகுப்புகளிடையில் மணம் என்பது குழு மணத்தின் மிகவும் கீழான, புராதனமான வடிவமாகும்; ஆனால் பூனலுவா குடும்பம் என்பது, நமக்குத் தெரிந்தவரையில், அதன் உச்ச வளர்ச்சிக் கட்டமாகும். முன்னர் சொல்லப் பட்டது சுற்றித் திரிகின்ற காட்டுமிராண்டிகளின் சமூக அந்தஸ்துக்குப் பொருத்தமான வடிவமாகத் தோன்றும். பின்னால் சொல்லப்பட்டது இருக்க வேண்டும் என்றால் முதலில் பொதுவுடைமை ரீதியில் அமைந்த கூட்டுச் சமூகங்களின் ஒப்பீட்டளவில் நிலையான குடியேற்றங்கள் இருந்திருக்க வேண்டும். இது அதற்கடுத்த மேலான வளர்ச்சிக் கட்டத்துக்கு நிச்சயமாகக் கொண்டு செல்கிறது. இவை இரண்டுக்கும் இடையில் இடைநிலைக் கட்டங்கள் நிச்சயமாக இருக்கும். இங்கே இப்பொழுதுதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்ற, இன்னும் பரிசீலனை செய்யப்படாத ஆராய்ச்சித் துறை நமக்கு முன்னே இருக்கிறது.
இந்நூலின் முந்தைய பகுதிகள்