
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோவுக்கு வெளியே உள்ள பரபாங்கி நெடுஞ்சாலையில் ஒரு வசந்த காலையில் இரண்டு ஆண்கள் ஒரு மரத்தின் கீழ் தூங்குகிறார்கள். அவற்றில் ஒருவன் வண்ணமயமான கோடுகளுடன் உள்ள கருப்பு விரிப்பில் படுத்திருக்கிறான்; மற்றொறுவன் பைகள் இணைக்கப்பட்ட மிதிவண்டிகளுக்கு அருகில் தூக்கிப் போடப்பட்ட வெள்ளை சாக்கில் படுத்திருக்கிறான். இதேபோன்ற ஏற்பாடுகளில் மேலும் மூன்று ஆண்கள் சிறிது தூரம் தொலைவில் தூங்குகிறார்கள். அவர்களின் உடைகளும், தலையும் அழுக்கடைந்துள்ளது, பயணத்தின் அழுக்கு மற்றும் வியர்வை அவர்களின் உடல் முழுவதும் உள்ளது.
ஏப்ரல் 15 ஆம் தேதி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் கொரோனா வைரஸ் ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்படும் என்று அறிவித்த ஒரு நாள் கழித்து, அவர்கள் 5 பேரும் ஜெய்ப்பூரிலிருந்து மிதிவண்டிகளில் புறப்பட்டு 600 மைல் தொலைவில் பீகாரின் கோபால்கஞ்சை அடைய உள்ளனர்.
ஐந்து பேரும் ஜெய்ப்பூரில் வாடகை அறைகளைப் பகிர்ந்து கொண்டனர், அங்கு அவர்கள் கட்டுமானத் தொழிலாளர்களாக பணிபுரிந்தனர், ஒரு நாளைக்கு 300 ருபாய் சம்பாதித்தனர். அரசாங்கம் கோரியபடி, வேலைகளை இழந்த போதிலும், மார்ச் மாதத்தில் அவர்கள் ஊரடங்கை மதித்து அங்கேயே இருந்தனர். அது நீட்டிக்கப்பட்ட பிறகு, அவர்கள் உணவுக்கு வழியில்லை என்று அஞ்சி வீட்டிற்கு திரும்பிச் செல்ல முடிவு செய்தனர்.
சைக்கிள்களின் பின் இருக்கையில் பொருந்தக்கூடியவற்றை மட்டுமே அவர்கள் கொண்டு வந்தார்கள். அவர்கள் ஐந்து நாட்களில் 370 மைல்கள் சைக்கிளில், இரவு நேரம் என்றும் பாராமல் பயணத்தை தொடர முடியாமல் களைப்படையும் வரை பயணித்தனர். ஜெய்ப்பூரில் கொத்தனாராக பணிபுரிந்த உமேஷ் குமார், “நாங்கள் இரண்டு இரவுகள் மட்டுமே தூங்கினோம்”, ”நாங்கள் எடுத்துச் சென்ற உலர்ந்த தின்பண்டங்களையும் வழியில் வெள்ளரிகளையும் வாங்கி சாப்பிட்டோம்.” என்றார்.
குமார் இந்திய நகரங்களில் தினசரி ஊதியத்திற்காக வேலை செய்யும் 13 கோடியே 90 லட்சம் புலம்பெயர் தொழிலார்களில் ஒருவர். அவர்களில் பலர் விவசாயிகள், அவர்கள் கடன்களை அடைக்க அல்லது விதைகள் மற்றும் விவசாய கருவிகளுக்காக தினசரி கூலித் தொழிலாளர்களாக மாறி பணம் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் முறைசாரா தொழிலாளிகளாக வேலை செய்கிறார்கள், தொழிற்சங்கங்களாலோ, அரசியல்வாதிகளாலோ பாதுகாக்கப்படாதவர்கள், அவர்களின் ஊதியமும் சலுகைகளும் அவரவர் முதலாளிகளின் விருப்பு வெறுப்பின் படியே வழங்கப்படுகின்றன. ஊரடங்கு நடைமுறைக்கு வந்தபோது, கோடிக் கணக்கானவர்கள் அதில் சிக்குண்டு, வேலையில்லாமல் இருந்தனர்.
மார்ச் மாத இறுதியில் இருந்து, அரசாங்கம் மாநில எல்லைகளை மூடி, பொது போக்குவரத்தை நிறுத்தியபோது, காவல்துறையை எதிர்கொள்ள வேண்டி வரும், உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் போய்விடும் மற்றும் கடுமையான வெப்பத்திற்கு ஆளாக நேரிடும் என்றெல்லாம் அவர்கள் மனதை பேரச்சம் நிறைத்த போதிலும் பல்லாயிரக் கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நகரங்களை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்கள் நடந்தும், சைக்கிளிலும் மற்றும் வழியில் வரும் வண்டிகளில் உதவி கேட்டும் பயணித்தனர். பெரும்பாலும் அவர்கள் அறிந்த ஒரே பாதை: ரயில் தடங்கள். தந்தைகள் குழந்தைகளை தங்கள் தோள்களில் சுமந்து சென்றார்கள், பெண்கள் தலையில் உடமைகளை வைத்திருந்தார்கள், பலர் லாரிகளில் நெரிசலாக நின்றுகொண்டு பயணித்தார்கள். அனைவரும் வீட்டை சென்றடையும் வழியைக் கண்டுபிடிப்பதில் உறுதியாக இருந்தார்கள்.

பீகாரில் இருந்து குடியேறிய 23 வயதான அமித் குமார், “வேலைகள் இல்லை, உணவு இல்லை” என்று கூறினார். உத்தரபிரதேசத்தின் அலிகரில் இருந்து பீகார் தலைநகரான பாட்னாவுக்கு பயணித்த ஒரு லாரியின் பின்புறத்தில் 108 பேருடன் நிற்க அவர் ஒரு லாரி டிரைவருக்கு 1500 ருபாய் (கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் உழைத்த கூலி கொடுத்தார்) ஆனால் காவல்துறையினர் லாரியை தடுத்து அவர்களை லக்னோவில் தனிமைபடுத்தி வைத்தனர்.
“வீட்டிற்கு நடந்து செல்வது தான் அவர்களின் ஒரே வழி” என்று கேரளாவை தளமாகக் கொண்ட இடம்பெயர்வு மற்றும் உள்ளடக்கிய மேம்பாட்டு மையத்தின் (Center for Migration and Inclusive Development) நிர்வாக இயக்குனர் பெனாய் பீட்டர் கூறினார். “அவர்கள் வீட்டிற்குச் சென்றே ஆக வேண்டியிருந்தது, ஏனென்றால் அது மட்டுமே அவர்களுக்கு உறங்க ஒரு கூரையும், குறைந்தபட்ச உணவும், சமூகத்தின் ஆறுதலையும் கொடுக்கும்.”
ஆனால் வீட்டிற்கு செல்லும் பயணத்தின் நிலைமைகள் பெரும்பாலும் பாதுகாப்பற்றவை. ஒவ்வொரு நாளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சாலையில் இறக்கும் அறிவிப்புகள் வருகிறது. மே 8 அன்று, 19 பேர் சரக்கு ரயிலில் மோதி இறந்தனர்; அவர்கள் நடந்து சென்றதில் மிகவும் சோர்வடைந்துவிட்டதாகவும், அவர்கள் ரயில் தடங்களில் தூங்கியதாகவும், ரயில் வரும் ஒலி கேட்கவில்லை என்றும் உடன் வந்தவர்கள் தெரிவித்தனர். ஒரு வாரத்திற்குப் பிறகு உத்தரபிரதேசத்தின் அவுராயாவில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற இரண்டு லாரிகள் மோதியதில் 27 பேர் கொல்லப்பட்டனர்.
பஸ் நிலையங்கள் மற்றும் நெரிசலான தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் அதிகமான புலம்பெயர் தொழிலார்களை எதிர்கொண்ட அரசாங்கம், மே 1 ஆம் தேதி சிறப்பு ரயில்களில் தொழிலாளர்களை வீட்டிற்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்வதாக கூறியது. மேலும் அந்த தொழிலாளர்கள் சமூக தூரத்தை கவனித்து வருவதாகவும், அவர்களுக்கு இலவச நீர் மற்றும் உணவு வழங்கப்படுவதாகவும் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜவுளித் தொழிலாளி கிருஷ்ணா மோகன் குமார், மகாராஷ்டிராவின் கோலாப்பூரிலிருந்து பாட்னாவுக்கு அரசு ரயில் மூலம் திரும்புவதற்காக ஒரு நாளின் சம்பளத்திற்கும் அதிகமாக 800 ரூபாய் கொடுத்ததாகக் கூறினார். மேலும் அவர் பயணத்தின்போது, தொழிலாளர்கள் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் அல்லல்பட்டனர் என்று கூறினார்.
“பயணத்தின்போது, அதிகாரிகள் தண்ணீரையும், உணவுப் பொட்டலங்களையும் கையில் கொடுக்காமல் நுழைவாயிலுக்கு அருகே கொட்டிச் சென்றனர், எல்லோரும் தங்கள் பங்கைப் பெறுவதற்கு (நாய்களைப் போல்) ஒருவருக்கொருவர் விழுந்தடித்துக் கொண்டனர்,” என்று அவர் கூறினார். “நாங்கள் தண்ணீர் காலியானபோது, ரயிலில் இருந்து கீழே இறங்கி அருகிலுள்ள நீர்நிலைகளில் இருந்து (ஒரு சாகசச் செயலைப் போல்) தண்ணீரை சேகரித்தோம்.” ரயில் மீண்டும் நகரத் தொடங்குவதற்கு முன்பு பயணிகள் ரயிலில் இருந்து பாட்டில்களுடன் குதித்து அவற்றை நிரப்ப முயற்சிக்கும் வீடியோவை அவர் காட்டினார். “நகரங்களில் அவர்கள் எங்களை தெரு நாய்களைப் போல நடத்துகிறார்கள்” என்று மோகன் கூறினார். “அவர்கள் இப்போது மட்டும் ஏன் எங்களை சிறப்பாக நடத்தப் போகிறார்கள்?” (இந்த வாக்கியத்தின் பொருளும் வலியும் புரிகிறதா நண்பர்களே)
எதிர்வரும் நெருக்கடிகள்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீட்டிற்கு வந்தவுடன்பிரச்சனை முடிவதில்லை, அங்குதான் ஆரம்பமாகிறது. இந்தியாவின் மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பேர் பொருளாதார நெருக்கடி மிகுந்த கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். 2014, 2015 இல் அடுத்தடுத்த பொருளாதாரச் சரிவை தொடர்ந்து 2016 இல் ஊழலைத் தடுக்கும் முயற்சியில் புழக்கத்தில் இருந்த 80 சதவீத பணத்தை அரசாங்கம் திடீரென தடை செய்த போது ஏற்பட்ட நெருக்கடி என பெரும் பின்னடைவை சந்தித்திருந்தது.
கிராமப்புறங்களில் தற்கொலை விகிதம் அதிகமாக உள்ளது: தேசிய குற்ற பதிவு துறையின் புள்ளிவிவரத்தின் படி, 2018 இல் 10,349 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் சராசரியாக ஒரு நாளைக்கு 28 க்கும் மேற்பட்ட இறப்புகள். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தற்போதைய வருகை நிலைமையை இன்னும் மோசமாக்கும்: சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கூற்றுப்படி, இந்த தொற்றுநோய் இந்தியாவில் 400 மில்லியன் முறைசாரா தொழிலாளர்களை ஆழ்ந்த வறுமைக்கு தள்ளக் கூடும்.

“ஊரடங்கு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சொந்த ஊர் திரும்புவது கிராமப் புறங்களில் வேலையில்லாத தொழிலாளர்கள் பட்டாளத்தை உருவாக்கப் போகிறது” என்று பெல்ஜியத்தில் பிறந்த இந்திய வளர்ச்சி பொருளாதார நிபுணரும் உணவுப் பாதுகாப்பு மற்றும் பசி குறித்த நிபுணருமான ஜீன் ட்ரெஸ் கூறினார். மேலும் அவர் “நிலமற்ற தொழிலாளர்கள் மற்றும் சாதாரண தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்கள். அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படக் கூடியவை. ” என்று கூறினார்.
மே 6 நிலவரப்படி, கிராமப்புற இந்தியாவில் வேலையின்மை விகிதம் 24.3 சதவீதமாக இருக்கிறது, இது ஏப்ரல் மாதத்தில் 16 சதவீதமாக இருந்தது. புலம் பெயர்ந்தோர் நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில், உலகின் மிகப் பெரிய வறுமை எதிர்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதத் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புச் சட்டத்தின் (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ) கீழ் தினசரி ஊதிய விகிதத்தை அரசாங்கம் 19 ருபாய் 64 காசுகள் அதிகரித்து 180.50 ருபாயிலிருந்து 200.14 ருபாயாக உயர்த்தியது மற்றும் அதிக வேலைகளை உருவாக்க ரூ .40,000 கோடி முதலீடு செய்தது. இந்த சட்டம் ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் குளறுபடிகளுடன் கூடிய, நேரடியான வேலைக்கு உத்தரவாதம் அளிக்கிறது, மேலும் இது 2006 இல் நிறைவேற்றப்பட்டதிலிருந்து பல கிராமப்புற குடும்பங்களை கொஞ்சமேனும் வறுமையிலிருந்து ஆற்றுப்படுத்தியுள்ளது.
ஆனால் எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ இன் கீழ் வழங்கப்படும் பணிகள் பெரும்பாலும் நில மேம்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் பயிர் நடவு ஆகியவற்றில் இருப்பதால், இது பொதுவாக மழைக்காலம் துவங்குவதற்கு முன்பு மே மற்றும் ஜூன் மாதங்களில் அதிகமாக நடக்கிறது. “எனவே ஊரடங்கு நேரம் நிலைமையை மிகவும் மோசமாக்கியுள்ளது” என்று ட்ரீஸ் கூறுகிறார்.
பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக அரசாங்கம் 20 லட்சம் கோடி நிதியை அறிவித்துள்ளது, இதில் இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 46.3 கோடி மதிப்புள்ள உணவு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 1947 இல் தொடங்கப்பட்ட ஏழைகளுக்கான உணவு மானிய திட்டமான பொது விநியோக முறைமையின் (பி.டி.எஸ்) கீழ் விநியோகிக்கப்படும் தானியங்களின் அளவை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், உணவு இல்லாத சுமார் 10 லட்சம் மக்கள் பி.டி.எஸ்ஸிலிருந்து எதையும் பெற மாட்டார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுகளை வாங்குவதற்கான சரியான ஆவணங்கள் சிலருக்கு இல்லை, ஏனெனில் ரேஷன் கார்டுகள் முகரியைச் சார்ந்தவை. உதாரணமாக, பெண்கள் திருமணம் செய்துகொண்டு வேறொரு பகுதிக்குச் செல்லும் போது, அவர்களின் அட்டைகள் அடுத்த முகவரிக்கு மாற்றப்படாவிட்டால் அவர்கள் ரேஷனை இழக்கிறார்கள்.
“அரசாங்கம் பி.டி.எஸ்ஸை விரிவுபடுத்தி, விரைவில் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ) கீழ் அதிக வேலைகளை உருவாக்கவில்லை என்றால், நாம் கிராமப்புறங்களில் கடுமையான வறுமையை பார்க்க வேண்டிவரும்,” என்று ட்ரீஸ் கூறினார்.
அது கொரோனா வைரஸைக் கூட கணக்கில் கொள்ளாது. மே 27 ஆம் தேதி நிலவரப்படி 1,50,000 க்கும் அதிகமான கோவிட் -19 பாதிப்புகளோடு இந்தியா சீனாவை முந்தியுள்ளது. மே 1 முதல், சிறப்பு ரயில்கள் நகரங்களில் இருந்து மக்களை கிராமங்களுக்கு அழைத்துச் செல்லத் தொடங்கிய போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் மாநிலங்களில் கோவிட்- 19 பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவின் கிராமப்புற மருத்துவமனைகள் நாட்டின் படுக்கைகளில் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே கொண்டுள்ளன – இது 10,000 பேருக்கு 3.2 படுக்கைகள் என்ற விகிதத்தில் உள்ளது – மேலும் அவை நோய் பரவலை கையாளத் தகுதியற்றவை.
“கிராமப்புறம் நெருக்கடியிலிருந்து இன்னும் வெளிவரவில்லை,” என்று பீட்டர் கூறினார். மேலும் அவர் “இதன் விளைவு அடுத்த சில வாரங்களில் வரவிருக்கிறது, அது பேரழிவு தரக்கூடும்.” என்று கூறினார்.
இது நேசனல் ஜியோகிராஃபிக் கட்டுரையின் தமிழாக்கம்