அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே,
நூல்கள் வாசிக்கத் தொடங்கிய பள்ளிப் பருவத்திலிருந்தே, நாமும் இதுபோல் நூல்கள் எழுத வேண்டும் என்பது ஒரு விருப்பமாக, அறுந்து விடாத நூலாக உள்ளுக்குள் இருந்து கொண்டே இருந்தது. வாசிப்பை நேசிக்கும் அனைவருள்ளும் இப்படி ஓர் இழை ஊடும் பாவுமாக ஓடிக்கொண்டிருக்கும் என்றே எண்ணுகிறேன்.
கல்லூரி நாட்களில் இரண்டு நாவல்கள் எழுதி சுற்றுக்கு விட்டதும், அதற்கு கிடைத்த வரவேற்பும் தனி மகிழ்வை தந்தது. பின்னர் கவிதைகள் எழுதித் திரிந்ததும் ஒரு கனாக் காலமாக கடந்தது. கலை இலக்கியப் பெருமன்றத்தில் இருந்த போது தோழர்கள் கவிதைத் தொகுப்பு கொண்டு வரலாம் என முயற்சித்தார்கள். நாம் எழுதுவதெல்லாம் கவிதையா என்றொரு ஐயம் வந்து குத்த, பிடிவாதமாக மறுத்து விட்டேன். (இப்போதும் அந்த ஐயம் உண்டு) பின்னர் அவ்வாறு மறுத்தது தவறோ எனவும் யோசித்திருக்கிறேன்.
2008 ல் வலைதளம் தொடங்கி எழுத ஆரம்பித்ததும் நெருடலில்லாமல் இயல்பாக எழுதவந்தது. நான் எழுதியவைகள் இதுவரை அச்சில் வந்ததில்லை. ஒரு சில வெளியீட்டகங்களில் முயற்சித்த போது, ஆகும் செலவில் பாதி உங்களால் பங்களிக்க முடியுமா? வெளியிடும் படிகளில் எத்தனை விழுக்காடு உங்களால் விற்றுத் தர முடியும்? என்றெல்லாம் கேள்விகள் வந்தன. அதனால் அச்சில் கொண்டு வரும் விருப்பம் ஓர் ஓரத்தில் ஒடுங்கிக் கொண்டது.
நண்பர் ஒருவர் அமேசான் குறித்து அறிமுகம் செய்து முயலுங்கள் என்றார். ஊரடங்கும் கை கொடுக்க சோதனை முயற்சியாக, செங்கொடியில் வெளியிட்டிருந்த கட்டுரைகள், கவிதைகளை தொகுத்து குறு வெளியீடுகளாக கொண்டு வந்திருக்கிறேன். ஒரு டாலருக்கு குறைவாக விலை வைக்க முடியவில்லை என்பதால், குறைப்பதற்கு வேறு வழியில்லாமல் 77 ரூபாய்கள் என்று விலையிடப்பட்டிருக்கிறது. விலை என்றில்லாமல் ஒரு முயற்சி என்பதாகத் தான் இதை செய்திருக்கிறேன். வாய்ப்புள்ளவர்கள் வாங்கலாம், அல்லது, வாய்ப்புள்ளோருக்கு அறிமுகம் செய்யலாம்.
நன்றி.
********************
அரசு கவலைப்படுமா?
அரசு என்பது எப்போதுமே, எல்லோருக்கும் பொதுவானதாகவோ, உழைக்கும் மக்களுக்கானதாகவோ இருந்ததில்லை. அது எப்போதும் குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தின் அரசாகவே இருந்து வந்துள்ளது. அதேநேரம் அது எப்போதும் தன்னை அனைவருக்கும் பொதுவானதாக கட்டிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அதன் செயல்பாடுகள் அது தாங்கி நிற்கும் வர்க்கத்தை நோக்கி மட்டுமே இருக்கும். இந்த தொகுப்பில் இருக்கும் கட்டுரைகள் வெவ்வேறு காலப்பகுதியில் எழுதப்பட்டவைகளாக இருப்பினும், அரசின் வர்க்கத் தன்மையை அம்பலப்படுத்துவதாகவே இருக்கும். அந்த வகையில் இத் தொகுப்பு அரசைப் பற்றிய சரியான புரிதலை உங்களுக்கு ஏற்படுத்தும்.
பெருவெளியின் தூசு
செங்கொடி கவிதைகள்
காதல் மட்டுமா
கவிதைக்கு உணவு,
போராட்டம் இல்லாமல்
புவிக்கே இல்லை
உணவு.
பேசுதற்கெளியவா பெண்ணியம்?
பெண்ணியம் சார்ந்த கட்டுரைகள், கேள்வி பதில்கள்.
உக்ரைனை முன்னிட்டு கம்யூனிச அவதூறு
‘தமிழ் இந்து’ நாளிதழ் கடந்த ஆண்டு (2015) பிப்ரவரி மாதம் 2ம் தேதியிலிருந்து ஆறு நாட்கள் “உருக்குலைகிறதா உக்ரைன்?” என்ற பெயரில் தொடர் ஒன்றை வெளியிட்டது. அந்த நேரத்தில் பரபரப்பாக இருந்த சர்வதேசப் பிரச்சனையான உக்ரைன் பிரச்சனையை கம்யூனிச அவதூறுகளோடு, உண்மைக்கு மாறானதாக, அமெரிக்காவுக்கு ஆதரவான கண்னோட்டத்தில் அந்த தொடரை வெளியிட்டிருந்தது ‘தமிழ் இந்து’ அதற்கு மறுப்பாக செங்கொடி தளத்தில் வெளிவந்தது தான் இந்தத் தொடர்
கடையநல்லூர் ஒரு பார்வை
கடையநல்லூரை அறிந்தவர்களுக்கு மட்டும்
தன்னுடைய உற்பத்தி முறைகளில் இன்னும் நிலப்பிரபுத்துவ எச்சங்களைக் கொண்டிருக்கும், தனிமனிதர்களைப் பொருத்தவரை முதலாளித்துவ சிந்தனையில் ஊறிப் போயிருக்கும் கலவையான ஊர் கடையநல்லூர். ஆணாதிக்க அடக்குமுறைகளில் திளைத்துக் கொண்டே பெண்களுக்கு அதிக உரிமைகளை வழங்கியிருப்பதாக மதம் சார்ந்து கூறிக் கொண்டிருக்கும் ஊர். நாம் பிறந்து வளர்ந்தது கடையநல்லூர் என்றாலும், கடையநல்லூர் குறித்த ஓவ்வொருவரின் பார்வையும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது, இருக்கத்தான் செய்யும். ஆனால் இவ்விதமான பார்வைகளெல்லாம் கடையநல்லூர் குறித்த நம்முடைய கண்ணோட்டத்தை வளப்படுத்த உதவுகிறதா? என்பது முதன்மையானதொரு கேள்வி. அந்தக் கேள்வியின் விளைவே இக்கட்டுரைகள்.
திரைக்கும் மனதுக்கும் நடுவில்
ஒரு திரைப்படத்தில் எதை முதன்மையாகப் பார்ப்பது? தொழில் நுட்பம், காட்சியமைப்பின் பிரமாண்டம், பாத்திரங்களின் நடிப்புத் திறன், திரைக்கதை, வசனம், இசை என பல்வேறு அம்சங்கள் நிறைந்தது தான் ஒரு திரைப்படம். இவைகளை மட்டுமே கவனித்து ஒரு திரைப்படத்தை மதிப்பீடு செய்தால் அது சரியாக இருக்குமா? கலை என்பது கருத்துப் பரிமாற்றத்தின் அழகியல் வடிவம். திரைப்படம் எனும் அழகியல் வடிவத்தை செதுக்க பயன்படுபவை தான் மேற்கூறியவைகள். ஆனால் அழகியலை செதுக்க பயன்படும் கருவிகளை நுணுகி ஆராயும் எந்த திரைப்பட விமர்சகரும் அது என்ன கருத்தை வாசகனுக்கு பரிமாறுகிறது என்பதைக் கவனிப்பதில்லை. ஒரு திரைப்படத்தின் கருத்து என்ன என்பதைப் புறந்தள்ளிவிட்டு செய்யப்படும் விமர்சனங்கள் எதுவும் குப்பை என நான் கருதுகிறேன். படித்துப் பாருங்கள் இதில் நீங்கள் ஒன்றுவீர்கள் எனக் கருதுகிறேன்