ஜார்ஜ் பிளாய்ட்: கற்பித்தது என்ன?

கடந்த வாரம் மே 25ம் தேதி, அமெரிக்காவின் மின்னாபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் எனும் கருப்பினத்தவர் அமெரிக்க காவல் துறையினரால் ஐயத்தின் பேரால் கைது செய்யும் போது மிருகத் தனமாக முழங்காலால் கழுத்தை நெறித்து கொலை செய்யப்படுகிறார். அவர் கடைசியாக பேசிய எனக்கு மூச்சு முட்டுகிறது எனும் வாக்கியத்தை முழக்கமாகக் கொண்டு அமெரிக்காவே போராட்டத்தால் பற்றி எரிகிறது. உலகிலேயே பாதுகாப்பு மிகுந்ததாக கருதப்படுகிற வெள்ளை மாளிகைக்குள்ளேயே போராட்டக்காரர்கள் நுழைந்திருக்கிறார்கள். உலகிலேயே மிகவும் ஆற்றலும் அதிகாரமும் கொண்டவராக கருதப்படும் அமெரிக்க அதிபர், பதுங்கு அறையில் பதுங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஒரு வகையில் இது மகிழ்வாகவும், மறு வகையில் வேதனையாகவும் இருக்கிறது. உலகில் நிறவெறி ஆதிக்கம் செலுத்தும் இடங்களில் அமெரிக்கா முதன்மையானது. ஒரு கருப்பின இளைஞன் கொலைக்காக கருப்பின மக்களோடு வெள்ளையின மக்களும் இணைந்து போராடுவது என்பது உலகெங்கிலுமுள்ள போராளிகளுக்கு உயிர் மூச்சை வழங்குவதாக அமைந்திருக்கிறது. என்னால் மூச்சு விட முடியவில்லை எனும் ஜார்ஜ் பிளாய்டின் சொல் உலகின் போராட்டங்களுக்கு உயிர்க்காற்றை வழங்கியிருக்கிறது. தொடர்புடைய நான்கு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதையும் மீறி, கொலை செய்த காவலரின் மீது கொலை வழக்கு பதிவு செய்திருப்பதையும் மீறி, ஒரு வாரத்தை கடந்த நிலையிலும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதன் அடுத்த கட்டமாகத்தான் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு அதற்குள்ளும் நுழைந்திருக்கிறது போராட்டம்.

வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்திருப்பது என்பது எளிதாய் கடந்து போகும் செய்தியல்ல. இது ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு செய்திகளை உணர்த்துகிறது. மக்கள், அரசுக்கு எதிராக ஒன்றை தம் மனதுக்குள் நினைக்கும் போதே அதை நாங்கள் மோப்பம் பிடித்துவிடுவோம் என்று பீற்றிக் கொள்ளப்படும், அமெரிக்க தகவல் வங்கி வலைப்பின்னல் (Data Bank Network) சும்மா பொன்மாற்று (பம்மாத்து) தான் என்று போராட்டக் காரர்களால் போட்டு உடைக்கப் பட்டிருக்கிற்து. அடுத்து, அரசிடம் திறமை வாய்ந்த உளவுப்படை இருக்கிறது. மிக நுணுக்கமாக உளவு கருவிகள் இருக்கின்றன. நம்மை கண்டுபிடித்து விடுவார்கள் என்றெல்லாம் மக்கள் அரசைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை என்பதையும் இந்தப் போராட்டம் தெளிவாக்கி இருக்கிறது.

ஆனால், இந்தப் போராட்டத்தின் இலக்கு என்ன? இந்தப் போராட்டத்தின் உள்ளடக்கம் என்ன? கருப்பின மக்களின் பாதுகாப்பு அமைப்பு (Black Lives Matter) ஒன்று போராட்டங்களை ஒழுக்கிணைக்கிறது என்றாலும், இந்தப் போராட்டம் மக்களின் தன்னிச்சையான பங்களிப்பின் காரணமாகவே வீரியமாகவும், தொடர்ந்து கொண்டும் இருக்கிறது. அமெரிக்க தன்னுடைய பொருளாதாரக் கொள்கைகளால், உலகளாவிய ஏகாதிபத்திய அமைப்புகளால், இராணுவ பலத்தால் உலகெங்கும் பல்லாயிரக் கணக்கான மக்களை கொன்று குவித்திருக்கிறது. தொடர்ந்து வெறியாட்டம் ஆடியும் வருகிறது. இதன் எதிர்ரொலிப்பு நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தின் உள்ளடக்கத்தில் இல்லை என்பது வேதனை தான். அதேநேரம் இது வெறுமனே ஒரு கொலைக்கு எதிராக மட்டும் நடக்கும் போராட்டம் அல்ல. கொரோனாவை அமெரிக்க அரசு கையாண்டு கொண்டிருக்கும் விதம், அதை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவது. நிர்வாக சீர்கேடுகள், ட்ரம்ப்பின் பொறுப்பற்ற பேச்சு என அனைத்தும் இணைந்து தான் மக்களை போராட தூண்டியிருக்கிறது என்பது தான் உண்மை. என்றாலும், இந்தப் போராட்டங்களை ஒருங்கிணைத்து மக்களுக்கு அமெரிக்காவின் கொடூரத்தன்மையை உணர்த்தி, அரசியல் ரீதியாக இலக்கு வகுத்து இந்தப் போராட்டத்தைக் கொண்டு செல்ல ஒரு புரட்சிகர கட்சி அங்கு இல்லையே என்பது உள்ளபடியே வேதனை தருகிறது.

இந்தப் போராட்டக் களத்தை அப்படியே இந்திய சூழலோடு பொருத்திப் பார்ப்போம். முதலில் இந்திய ஊடகங்கள் குறிப்பாக தமிழ்நாட்டு ஊடகங்கள் இந்தப் போராட்டத்தை, போராட்டச் செய்திகளை எவ்வாறு வெளிப்படுத்துகின்றன? வழக்கமாக அமெரிக்க செய்திகளுக்கு வழங்கும் முதன்மைத்தனம் இந்த போராட்டச் செய்திகளுக்கு கொடுக்கப்படவில்லை. அண்மையில் வடகொரிய அதிபர் இறந்து விட்டார் என்று அமெரிக்கா பரப்பிய பொய்ச் செய்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தில் பத்தில் ஒரு பங்கைக் கூட இந்த போராட்டச் செய்திகளுக்கு ஊடகங்கள் அளிக்கவில்லை. உலகிலேயே அதிகாரமும், பாதுகாப்பும் மிகுந்த வெள்ளை மாளிகைக்குள் போராட்டக் காரர்கள் புகுந்து விட்டார்கள் என்பதை சாலையோர வீட்டில் கட்டுப்பாட்டை இழந்த லாரி புகுந்தது என்பதைப் போல வெளியிடுகிறார்கள். இந்திய ஊடகங்கள் குறித்து புதிதாக கூறுவதற்கு ஒன்றுமில்லை. அவை அரசுகளின் அறுவெறுக்கத்தக்க ஊதுகுழல்கள் என்பது ஏற்கனவே பல முறை மெய்ப்பிக்கப்பட்டவை தான்.

ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதைப் போன்றும் அதை விட கொடூரமாகவும் இங்கு தினம் தினம் படுகொலைகள் நடக்கின்றன. ஓர் இளம் மாணவியை போராட்டத்தில் ஈடுபட்டார் எனும் ஒரே காரணத்துக்காக மிக நெருக்கமாக நின்று வாயில் சுட்டுக் கொல்ல முடிந்திருக்கிறது. போராடிய ஒரு பேரிளம் பெண்ணை கன்னத்தில் அறைந்து செவிப்பறையை கிழித்து செவிடாக்க முடிந்திருக்கிறது. தஞ்சமடைந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தது தொடங்கி, திருட்டில் பங்கு தரவில்லை என்பதற்காக சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓட முயன்றதால் சுட்டுக் கொன்றோம் என்று பேட்டி கொடுத்தது வரை, இன்னும் என்னென்னவோ, என்னென்னவோ நடந்திருக்கிறது இங்கே. இவைகளை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களைத் தவிர முனுமுனுப்பு கூட எழுந்ததில்லை இங்கு. ஏன்?

போராடும் உணர்வு பொதுவானது என்றாலும், போராட்டம் என்பது தொடர்புடைய மக்களின் வாழ்நிலை குறிப்பாக பொருளாதார நிலையுடன் தொடர்புடையது. தங்களின் குறைந்த அளவு பொருளாதார தேவைகளுக்கு கூட எதிரானதாக ஒன்று குறுக்கிடும் போது அதற்கு எதிராக போராட்டம் வெடிக்கிறது. குறைந்த அளவு பொருளாதாரத் தேவைகளுக்கு கூட வழியில்லாத போது விதி என்று மடங்கிச் செல்லவும், நம்முடைய அடிமை நிலையில் வேறொன்றும் செய்து விட இயலாது என்று ஏற்றடங்கி வாழவும் பலநூறு ஆண்டுகளாக இங்கு ஜாதியப் படிநிலை வாழ்வு மக்களை பழக்கி வைத்திருக்கிறது. அரசுக்கும் உழைக்கும் மக்களுக்குமான நேரெதிர் போக்கு இங்கு ஏற்படுத்தப்படவே இல்லை.

வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள்

அரசு ஒருபக்கம் ஏகாதிபத்தியத்தின் அடியாளாக நின்று எல்லா வளங்களையும் ஏகாதிபத்தியத்துக்கு படையல் வைக்கிறது. அது தான் பொருளாதார வளத்தை உண்டாக்கும் என்று மக்களை நம்ப வைக்க முடிகிறது. மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக செய்யும் சிறு சிறு வேலைகளும், உற்பத்திகளும், முதலீடுகளும் அரசு தொழிற்படும் பொருளாதாரத்தின் தயவிலேயே இருக்கிறது என்று மக்கள் நம்புகிறார்கள். விலைவாசி உயர்வு, வரிகள் அதிகரிப்பு, சலுகைகள், மானியங்கள் குறைக்கப்படுவதும் வெட்டப்படுவதும் அதனால் தான் நடக்கிறது என்று ஏற்கிறார்கள் மக்கள். இந்த நிலை நீடிக்கும் வரை எந்த தத்துவத்தைப் போதித்தும் பெருவாரியான மக்களை போராட்டத்தின் பக்கம் அணிதிரட்ட முடியாது. உழைக்கும் மக்களின் ஒரே மீட்சியான மார்க்சியத் தத்துவமானாலும் சரி.

அரசின் பொருளாதாரத்தையும், எளிய மக்களின் பொருளாதாரத்தையும் வேறுவேறாக பிரித்து, எளிய மக்களின் தனித்தனியான பொருளாதார ஆக்கங்களை ஒன்று திரட்டி, அதை அரசின் பொருளாதாரத்துக்கு எதிரானதாக முன்னிருத்த வேண்டும். எளிய மக்களின் பொருளாதாரத்தை அதாவது, எளிய மக்களின் வாழ்வை அழித்து அதைக் கொண்டு வளர்வதே அரசின் ஏகாதிபத்தியப் பொருளாதாரம். மக்கள் வாழ வேண்டுமென்றால் மக்களின் பொருளாதாரம் காக்கப்பட வேண்டும். அதை அழிக்க நினைக்கும் அரசு பொருளாதாரம் அழிக்கப்படாமல் தங்கள் பொருளாதாரம் நிலைக்காது என்று உணர்த்தி அரசு பொருளாதாரத்துக்கு எதிராக மக்கள் பொருளாதாரத்தை நிறுத்த வேண்டும்.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் அதாவது முதலாளித்துவ உற்பத்தி உச்சமடைந்திருக்கும் நாடுகளின் மக்கள் நிலையும், இந்திய போன்ற முதலாளித்துவ உற்பத்தி முறை வளர்ச்சியடையாத நாடுகளின் மக்களின் நிலையும் ஒன்றல்ல. தேசிய முதலாளித்துவத்தை வளர்ச்சியடையச் செய்வது என்பதன் பொருள், ஒரு தேசிய முதலாளியை தரகு முதலாளியாகவோ, பன்னாட்டு முதலாளியாகவோ வளர்த்தெடுப்பது என்பதா? உள்நாட்டு வளங்களை, உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்நாட்டில் சந்தைப்படுத்தும் பெரும் முதலீடு கொண்டிருக்கும் எந்த முதலாளியேனும், தற்கொலை செய்து கொள்ளும், நிலப்பிரபுத்துவ வீம்பும். கௌரவமும் கொண்டிருக்கும் விவசாயியோடு ஒன்றிணைய முடியுமா? விவசாயிகளையும், பாட்டாளிகளையும் அவர்களின் எளிய பொருளாதார ஆக்கங்கங்களின் வழியே ஒன்றிணைக்க வேண்டும். அதன் வழியே சோசலிச உற்பத்தி முறையின் நுண்ணிய வடிவங்களை அவர்களின் பழக்க வழக்கங்களுக்குள் கொண்டு வர வேண்டும். இது தான் ஜாதி, தீண்டாமை பேதங்களை ஒழிக்கவும், தங்களின் ஒன்றுபட்ட பொருளாதாரத்தை உருவாக்கவும் அதனை அரசு பொருளாதாரத்துக்கு எதிராக நிறுத்தவும் முடியும்.

இந்திய இடதுசாரிகளின் வேலை இது மட்டுமே. இதற்கான வழிகள் என்ன என்பதை கண்டடைவது மட்டுமே இந்திய இடதுசாரிகளின் நோக்கமாக இருக்க வேண்டும். மாறாக, அமெரிக்க போராட்டத்தைக் காட்டி அதே போல் ஒன்றுபடுவோம் வாருங்கள் என்றால் அதற்கு துணையாக இருப்பது மார்க்சியமே ஆனாலும் தோற்றுத் தான் போகும்.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s