
பொன்மகள் வந்தாள். வெளிவருவதற்கு முன்பே பல விவாதங்களை கிளப்பி விட்ட திரைப்படம். இனி சூர்யா நடிக்கும் திரைப்படங்களுக்கு திரைக்கூடங்களை ஒதுக்க மாட்டோம் என உரிமையாளர்கள் மிரட்டினார்கள். அதையும் மீறி OTT தளத்தில் வெளிவந்திருக்கிறது இத் திரைப்படம். இதற்கு முன்பே கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்திலும் கிட்டத்தட்ட இதே பிரச்சனை ஏற்பட்டு பின், பின்வாங்கப்பட்டு திரைக்கூடங்களில் வெளியானது. இயக்குனர் சேரன் கூட இதே திசையில் D2H எனும் நிறுவனத்தை தொடங்கி ஆதரவில்லாமல் கைவிட்டார்.
இது ஒரு வகையில் புதிய தொழில்நுட்பங்களை மறுக்கும் போக்கு தான். திரைக்கூட உரிமையாளர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டை ஏற்படுத்திக் கொண்டு சின்னத் தொகை படங்களுக்கு நாள் ஒதுக்காமல் ஆண்டுக் கணக்கில் அவை பெட்டிகளில் தூங்கிய வரலாறு இங்கு உண்டு. மட்டுமல்லாமல் பன்னோக்கு திரைக்கூடம் (மல்டிபிளக்ஸ்) என்ற பெயரில் திரைப்பட பொழுது போக்கு என்பதை உழைக்கும் மக்களிடமிருந்து விலக்கி பணக்காரர்களுக்கானது எனும் திசையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள். திரைக்கூட உரிமையாளர்கள் மட்டும் என்றில்லை, தயாரிப்பாளர்கள், உச்ச நிலை நடிகர்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து திரைப்படக் கலையை உழைக்கும் மக்களிடமிருந்து விலக்கி விட்டார்கள். எளிய உழைக்கும் மக்கள் திரைப்படங்களை பார்க்க வேண்டும் என்றால், தங்களின் பல நாள் உழைப்பை செலவு செய்ய வேண்டும். அல்லது, தங்களின் பிற வசதிகளை இழக்க வேண்டும். அல்லது, சிறு சிறு குற்றங்கள் செய்ய வேண்டும் எனும் நிலையை ஏற்படுத்தி விட்டார்கள்.
ஒப்பீட்டளவில் இந்த நிலையை இல்லாமல் செய்கிறது அல்லது குறைக்கிறது எனும் அடிப்படையில் நேரடியாக சுகிப்பாளனிடம் கொண்டு சென்று சேர்க்கும் இந்த தொழில்நுட்பத்தை ஏற்க வேண்டும். அதேநேரம் OTT வழங்குனர்கள் கார்ப்பரேட்களாக, பன்னாட்டு நிறுவனங்களாக இருக்கின்றன. அவை தம்முடைய இருப்புக்காக, தம்முடைய இலக்குக்காக எதையும் செய்யும். ஆகவே, தற்காலிகமாக OTT ஐ ஏற்று வேறு புதிய தொழில்நுட்பங்களோ, அல்லது இருப்பதிலேயே எளிய சுகிப்பாளனுக்கு ஏற்ற மாற்று வடிவத்தை முயற்சிக்க வேண்டும்,. போகட்டும் நாம் திரைப்படம் குறித்து கவனத்தை திருப்பலாம்.
பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் கொடூரங்களுக்கு எதிராக அழுத்தமாக வாதாடுகிறது இந்தப்படம் என்கிறார்கள் விமர்சகர்கள். படமல்ல, பாடம் என்றும் கூட. அப்படி எந்த பாடமும் அழுத்தமும் தெரியவில்லை. ஒருவேளை அப்படி எந்த அழுத்தமும் தெரியாத அளவுக்கு தோல் தடித்து விட்டதோ.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த தொடர் கொலைகாரி குறித்த வழக்கு ஒன்று, மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது. தீர்ப்பளித்து முடித்த பழைய வழக்குகளை யார் வேண்டுமானாலும் இப்படி மீள் விசாரணைக்கு கொண்டுவர முடியுமா? என்பன போன்ற துறை வாயிலான கேள்விகளை விலக்கி விடுவோம். எடுத்துக் கொண்ட கருவும், அந்தக் கருவைக் கொண்டு சென்ற கதைக் களமும் சமகால நிகழ்வுகளை, யதார்த்தத்தை எதிரொலிக்கின்றன என்பது இந்த படத்தைப் பொருத்தவரை இன்றியமையாத ஒன்று.
காவல்துறை என்கவுண்டர்களை, காவல்துறையினரின் ரவுடித்தனங்களை ஏற்றுக் கொள்ளும் மனநிலையிலேயே மக்கள் பெரும்பாலும் இருக்கிறார்கள். அண்மையில் மருத்துவர்களை வன்புணர்வு செய்து எரித்துக் கொண்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். மக்கள் காவலர்கள் மீது பூத்தூவி வரவேற்பளித்தனர். மோதல் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் கழிப்பறைகளில் வழுக்கி விழுந்து கை கால்கள் முறிக்கப்பட்ட போது பெரும்பான்மை மக்கள் அதை கண்டு மகிழ்ந்தார்கள்.
இந்த நிலை ஏற்படுவதற்கு ஊடகங்கள் மிகப்பெரும் பங்களிப்பை வழங்கி இருக்கின்றன. ஊடகங்களில் வெளிவரும் அத்தனையும் காவல்துறை திரைக்கதை அமைத்து வழங்குபவை தான். ஆக, காவல்துறை யாரையாவது சுட்டுக் கொன்றுவிட்டு அவர்களின் மீது கொடூர திரைக்கதையை கட்டியமைத்து விட்டால் போதும் கேள்வி கேட்க ஆளிருக்காது. அண்மையில் மட்டும் எடுத்துக் கொண்டால், குஜராத் சொராபுதீன் வழக்கு தொடங்கி, சுவாதி கொலை வழக்கில் ராஜ்குமார் வரை போலீசு சொன்ன கதை, எதிர்க் கேள்விகள் இல்லாமல் நிருவப்பட்டன. இது போன்று அனைத்து வழக்குகளையும் மீள் விசாரணைக்கு எடுத்துக் கொண்டால் .. .. ..?
எந்தப் பொன்மகள் வந்தாலும் நிரூபிக்க முடியாது என்பது தான் உண்மை. இந்த வகையில் இந்த திரைப்படம் கற்பனையில் பயணிக்கிறது. கருவும், களமும் யதார்த்தமாக இருந்தாலும், நகர்வு கற்பனையாகி விட்டது. அதனாலேயே உள்ளீடற்ற உருளையைப் போல் ஓட்டையாய் இருக்கிறது படம். சரி, இதெல்லாம் படைப்பாளியின் படைப்பில் குறுக்கீடு செய்வதாகுமா?
இயக்குனருக்கு இது முதல் படமாம். காதல், சிரிப்பு, சண்டை என்று வணிக உத்திகளை ஒதுக்கி வைத்திருப்பதற்கு வரவேற்பு கொடுக்கலாம். ஆனால், செண்டிமெண்ட் காட்சிகளை மட்டுமே வைத்துக் கொண்டு படத்தை நகர்த்தலாம் என்பது சிவாஜி காலகட்டத்து உத்தி என்பதை குறிப்பிட வேண்டியுள்ளது. ஆசிபாக்கள் குறித்து ஒரு வசனம் வைத்து விட்டால் அது படம் பார்ப்பவர்களை உலுக்கி, கதையின் நகர்வுக்கு உழைக்காமல் இருந்ததை படைப்பாளியின் சுதந்திரமாக மாற்றிவிடும் என முடிவு செய்ய முடியாது அல்லவா. அதனால் தான், தற்கொலையாக சொல்லப்படும் எஸ்.ஐ யின் கொலைக்குப் பிறகு வேகமும், யதார்த்தமுமாக நகரவேண்டிய கதை ஜோதிகாவின் கண்களில் வழியவும் செய்யாமல், திரளவும் முடியாமல் நிற்கும் கண்ணீரைப் போல் படம் தேங்கி விடுகிறது.
காவல்துறை எப்படி குற்றத்துறையாக இருக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்ய வேண்டிய கதை, படம் முடிந்து வெளியில் வரும் போது அறியாத பெண்ணுக்கு நேர்ந்த சோகமாக மடைமாற்றம் அடைவது ஏமாற்றமே. இது படைப்பாளி சமூக யதார்த்தத்தோடு எந்த அளவுக்கு உறவில் இருக்கிறான் என்பதன் அளவீடு.

காவல் துறையின் அத்தனை குற்றங்களுக்கும் உடன்பட்டிருப்பது நீதி மன்றமும் தான். காவல்துறை கொண்டு செல்லும் அத்தனை வழக்குகளையும் நீதிமன்றக் காவல் தேவையா? என்ற கேள்வி எழுப்பப்படுவதே இல்லை. சட்டத்தை மீறும் அத்தனை அடாவடிகளையும் நீதி மன்றத்தின் இந்த அலட்சியத்திலிருந்தே காவல்துறை பெறுகிறது. ஆனால் மகளின் திருமணச் செலவு என்பது நேர்மையான நீதிபதியின் தவிர்க்க முடியாத சோகம் என்பது போல் காட்சிப்படுத்தி இருப்பதை எப்படி எடுத்துக் கொள்வது?
பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சமூகத்தின் பண்பாடு, சாதியப் பழக்க வழக்கம், ஆணாதிக்கம், நுகர்வு வெறி என அனைத்தும் கலந்து ஆண்களின் இயல்பாக ஆக்கப்பட்டிருக்கிறது. இந்த விதயங்கள் குறித்து படம் ஒரு புள்ளி அளவேனும் பேசவில்லை. நீதிமன்றத்தில் ஜோதிகா பெண்களுக்கு நேரும் கோடூரங்களுக்கு எதிராக பேசும் (அதாவது வாதாடுவது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்) பேச்சுகளில் கூட மிகக் கவனமாக இவை தவிர்க்கப்பட்டிருக்கின்றன. பெண்களுக்கு எதிரான பாலியல் கொடூரங்கள் பெண்கள் படும் துயரங்கள், இழப்புகள், வேதனைகளின் பாற்பட்டு ஆண்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இப்படித்தான் அதை புரிந்து கொள்ள முடிகிறது. என்றால், காண்பவர்களுக்கு இந்தப் படம் எதைக் கடத்துகிறது?
காவல் துறை எப்படி சட்டத்தையும் மாண்பையும் மீறி செயல்படும் துறையாக மாறி நிற்கிறது என்பதையா? கதையின் மையப் போக்கு இது தான் என்றாலும், எந்த இடத்திலும் காவல்துறையின் மீது விமர்சனக் கண்ணோட்டம் வந்து விடக் கூடாது என்பதற்காக மிகக் கவனமாக காட்சியமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. காவதுறை செய்யும் சட்ட மீறல்கள், அடாவடிகள் எல்லாம் வசனமாக பேசப்படுகிறதே தவிர எந்த இடத்திலும் காட்சியாக காட்டப்படவில்லை. எடுத்துக்காட்டாக, சிறுமிகளின் உடலை எடுத்து வந்து ஜோதி வீட்டின் பின்புறம் புதைப்பது, சரணடைந்து அழைத்துச் செல்லும் போது தேயிலை ஆலைக்கு அழைத்துச் செல்வது, போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வாங்குவது என வழக்கில் காவல்துறை செய்வதாக கூறப்படும் எதுவும் காட்சி வடிவில் படத்தில் இடம்பெறவே இல்லை. வசனமாகத்தான் கூறப்படுகிறது. எனவே, படம் பார்த்த யாருக்கும் காவல்துறையின் அடாவடிகள் குறித்த எந்த நினைவும் இருக்காது.
பெண்கள் மீது சுமத்தப்படும் பாலியல் வன் கொடுமைகளுக்கு எதிரான தார்மீக கோபம் என்பதையா? நீண்ட நீதிமன்ற காட்சிகளில் அப்படியான உருவாக்கம் எதுவும் இல்லை. நேர்கொண்ட பார்வை படத்தின் நீதி மன்ற காட்சிகளில் அந்த அழுத்தம் இருந்தது. யாராக இருந்தாலும் சரி. நோ என்றால் நோ தான் என்பது அழுத்தம் திருத்தமாக பதிய வைக்கப்பட்டிருந்தது. அப்படியான காட்சிகள் எதுவும் இந்தப் படத்தில் இல்லை.
படம் பார்த்து முடித்த பிறகு, அப்பாடா ஒரு வழியாக நீதி வென்று விட்டது இனி அடுத்த வேலையைப் பார்க்கலாம் எனும் அமைதி மனநிலைக்கே ஒரு பார்வையாளன் வந்திருக்க முடியும். வேறு வழியில் சொல்வதானால் தமாதமானாலும் கூட, நீதிமன்றத்தில் நிரூபிக்க போதிய வழிகள் இல்லாமல் போனாலும் கூட, எப்படியும் குற்றவாளி தண்டிக்கப்பட்டு விடுவான் எனும் அமைதியைத் தான் பார்வையாளனக்கு கடத்துகிறது. ஆனால் யதார்த்தம் அப்படி இல்லை என்பதைத்தான் நாள்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பின் எப்படி இத்திரைப்படம் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிராக பேசும் படம் என்று எல்லோரும் பிலாக்கணம் வைக்கிறார்கள் என்று புரியவில்லை.