குடும்பம் 4

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 9

3.இணைக் குடும்பம். குழு மணத்தின் போதோ அல்லது அதற்கு முன்னரோ நீண்ட காலத்துக்கோ, குறுகிய காலத்துக்கோ ஒரு வகையான இணை வாழ்க்கை இருந்தது. ஆணுக்குப் பல மனைவியர் இருப்பினும் அவர்களில் ஒருத்தி அவனுடைய பிரதான மனைவியாக (அவனுக்கு மிகப் பிடித்தமான மனைவி என்று அவளைக் கூறுவதற்கு அநேகமாக இடமில்லை) இருந்தாள். அதே போல், அவளுடையா பல கணவர்களில் அவனும் பிரதான கணவனாக இருந்தான். இந்த நிலைமை கிறிஸ்துவ மத போதகர்கள் மத்தியில் குழப்பமுண்டாக்கியது. அவர்கள் குழு மண முறையில் சில சமயங்களில் பெண்களை முறைக்கேடாகப் பொதுவில் அனுபவிப்பதையும் சில சமயங்களில் ஒழுக்கத்தை மீறிய பிறன் மனை நயத்தலையும் பார்க்கிறார்கள். எனினும் குல அமைப்பு வளர்ச்சிய்டைந்த பொழுது வழக்கமாகி விட்ட இணை முறை அவசியத்தின் காரணமாக மேன்மேலும் நிலைபெற்றது. இப்பொழுது பரஸ்பரம் மணம் செய்து கொள்ள முடியாமல் போய்விட்ட “சகோதரர்களின்” குழுக்களும் “சகோதரிகளின்” குழுக்களும் எண்ணிக்கையில் அதிகரித்த பொழுது இந்த இணை முறை மேலும் நிலைபெற்றது. இரத்த உறவினர்கள் தமக்குள் திருமணம் செய்து கொள்வதைத் தடை செய்வதற்குக் குலம் அளித்த தூண்டுதல்கள் விஷயங்களை ஓட விரட்டின. இப்படித்தான், இராகோஸ் மக்களிடையிலும் அநாகரிக நிலையின் கடைக்கட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான செவ்விந்திய இனக்குழுக்கள் இடையிலும் அவர்களுடைய அமைப்பு அங்கீகரிக்கின்ற எல்லா உறவினர்களுக்கு இடையிலும் திருமணம் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த உறவினர்கள் சில நூறு வகைப்பட்டவர்களாவர். இந்த மணத் தடைகளின் சிக்கல்கள் அதிகரித்த படியால் குழு மணங்கள் மேன்மேலும் நடைபெற முடியாமல் ஆயின. அவற்றுக்கு பதிலாக இணைக் குடும்பம் ஏற்பட்டது. இந்தக் கட்டத்தில் ஒருவன் ஒருத்தியுடன் வாழ்கிறான். எனினும் பலதார மணமும் சமயங்களில் சோரம் போவதும் ஆணின் உரிமை என்னும் வகையில் அந்த வாழ்க்கை நடைபெறுகிறது. பொருளாதாரக் காரணங்களுக்காகப் பலதாரமணம் செய்து கொள்ளுதல் அநேகமாக கிடையாது. அதே சமயத்தில் இணைந்து வாழும் காலத்தில் பெண் கற்புடன் இருக்க வேண்டும் என்பது மிகவும் கண்டிப்பாக வற்புறுத்தப்படுகிறது. அவள் சோரம் போனால் குரூரமாகத் தண்டிக்கப்படிகிறாள், இரு தரப்பினரும் திருமண உறவை சுலபமாக ரத்து செய்து விடலாம்; அப்பொழுது குழந்தைகள் முன்பு போலவே தாய்க்கு மட்டுமே சொந்தமாவார்கள்.

இரத்த உறவினர்களிடையில் மண விலக்கு இடை விடாது விரிவடைவதில் இயற்கைத் தேர்வும் தொடர்ந்து செயல்படுகிறது. மார்கன் கூறியபடி, “இரத்த உறவில்லாத குலங்களிடையே நடக்கும் திருமணங்கள் உடலிலும் உள்ளத்திலும் மேலும் வலிமை மிக்க மக்களைப் படைப்பதற்கு உதவின. வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்ற இரு இனக்குழுக்கள் ஒரு மக்களினமாகக் கலக்கின்ற பொழுது புதிய மண்டையும் மூளையும் அவ்விரண்டு இனக்குழுக்களின் திறமைகளின் மொத்தத்துக்கு ஏற்ப விரிவடையும் நீளவும் செய்யும்.” ஆகவே, குலங்கள் ரீதியிலமைந்த இனக்குழுக்கள் தம்மைக் காட்டிலும் பிற்போக்கான இனக்குழுக்களை வென்று விடும் அல்லது தம்முடைய உதாரணத்தின் சக்தியினால் தம்முடன் இழுத்துச் செல்லும்.

ஆகவே, வரலாற்றுக்கு முந்திய காலத்தில் குடும்பம் அடைந்திருந்த வளர்ச்சி இரு பாலினருக்கு இடையில் பொது மணம் நிலவிய வட்டம் இடைவிடாது குறுகிக் கொண்டு வந்ததில் அடங்கியிருக்கிறது. ஆரம்பத்தில் இனக்குழு முழுவதுமே இவ்வட்டத்திற்குள் இருந்தது. முதலில் நெருங்கிய உறவினர்களையும் பிறகு மேன்மேலும் தூர உறவினர்களையும் ஒருவர் பின் ஒருவராக விலக்கி வைத்தும், கடைசியில் திருமணம் ஒன்றினாலேயே உறவினர்களானவர்களையும் விலக்கி வைத்தும் குழு மணத்தின் ஒவ்வொரு வடிவமும் நடைமுறையில் இயலாதபடி செய்யப்பட்டது. முடிவில் ஒரே ஒரு தாம்பத்திய ஜோடிதான் எஞ்சியது; அது தற்பொழுது இன்னும் தளர்ந்த முறையில்தான் இணைக்கப்பட்டுள்ளது; அது தான் மூலக்கூறு; அதுவும் கலைந்து விட்டால் திருமணமே இல்லாது போய்விடும். ஒருதார மணம் ஏற்பட்டதில் இக்கால அர்த்தத்தில் ஒருவன் ஒருத்தி காதலுக்குச் சிறிது கூடச் சம்பந்தமில்லை என்பதை இது ஒன்றே எடுத்துக் காட்டுகிறது. இந்தக் கட்டத்திலுள்ள எல்லா மக்களினங்களின் நடைமுறையும் இதற்கு மேலும் ஆதாரங்களைத் தருகிறது. முந்திய குடும்ப வடிவங்களில் பெண்கள் பஞ்சம் ஆணுக்கு ஒருபோதும் ஏற்படவில்லை. அதற்கு மாறாக, தேவைக்கு அதிகமாகவே பெண்கள் கிடைத்தார்கள். ஆனால் இப்பொழுது பெண்கள் கிடைப்பது கிராக்கியாகி விட்டது. அவர்களைத் தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே இணை மண முறையுடன் பெண்களைக் கடத்திச் செல்லும் பெண்களை விலைக்கு வாங்குவதும் தொடங்குகின்றன. மிகவும் ஆழமாக வேரூன்றிய மாறுதல் வந்து விட்டதன் பரவலான அறிகுறிகள் இவை; அதற்கு மேல் ஒன்றுமில்லை. இந்த அறிகுறிகளை, பெண்களைக் கொள்வதற்காக இருந்த வழிமுறைகளைப் பற்றிய அறிகுறிகளை மட்டுமே ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஏட்டறிவாளியான மாக்லென்னான் குடும்பங்களின் விசேஷ வடிவங்களாக உருமாற்றி, அவற்றைக் “களவு முறைத் திருமணம்” என்றும் “விலைக்கு வாங்குதல் மூலமாக நடக்கும் திருமணம்” என்றும் அழைத்தார்.

மேலும், அமெரிக்க செவ்விந்தியர்கள் மற்றும் (அதே கட்டத்திலிருக்கின்ற) இதர மக்களினங்களிடையிலும் கல்யாண ஏற்பாடு என்பது சம்பந்தப்பட்ட இரு தரப்பினருடைய விவகாரம் அல்ல; பல சமயங்களில் அவர்களைக் கலந்து கொள்வதுமில்லை. அது அவர்களுடைய தாய்மார்கள் சம்பந்தப்பட்ட விவகாரம். ஆக, முற்றிலும் அறிமுகம் இல்லாத இரண்டு நபர்களுக்கு இடையில்தான் அடிக்கடி நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. திருமண நாள் நெருங்கும் பொழுதுதான் இந்த ஏற்பாடு முடிவு செய்யப் பட்டிருப்பதைப் பற்றி இரு நபர்களும் அறிகிறார்கள். திருமணத்திற்கு முன் மணமகளின் குல உறவினர்களுக்கு (அதாவது பெண்ணின் தாய்வழி வந்த உறவினர்களுக்குத்தான், தந்தைக்கும் ஆவருடைய உறவினர்களுக்கும் அல்ல) மணமகன் பரிசுகள் அளிக்கிறான். இந்தப் பரிசுகள் மணம் பேசப்பட்ட பெண்னை வாங்கியதற்குரிய பரிசுகளாக பயன்படுகின்றன. அவளோ விரும்பினால் திருமணத்தை ரத்து செய்து கொள்ளலாம். எனினும் பல இனக்குழுக்களில், உதாரணமாக இராகோஸ்களிடையில் இப்படிப்பட்ட திருமண ரத்துக்களுக்கு எதிராகப் பொதுமக்கள் உணர்ச்சி படிப்படியாக வளர்ந்தது. சச்சரவுகள் ஏற்படும் பொழுது இரு தரப்பினருடைய குல உறவினர்கள் குறுக்கிட்டு சமரசப்படுத்த முயல்கிறார்கள். அந்த முயற்சிகள் தோற்ற பிறகுதான் கணவனும் மனைவியும் பிரிகிறார்கள். குழந்தைகள் தாயிடமே விடப்படுகின்றன. இருவரும் மறுபடியும் திருமணம் புரிய உரிமை பெற்றவர்களாகிறார்கள்.

இணைக் குடும்பம் என்பது சுதந்திரமான தனிக் குடும்ப வாழ்வை அவசியப்படுத்துகிறது அல்லது விரும்பச் செய்வதற்கு இயலாத அளவுக்கு மிகவும் பலவீனமாகவும் ஸ்திரமின்றியும் இருந்தது. அது முற்காலத்திலிருந்து வந்த பொதுவுடைமைக் குடும்ப வாழ்க்கையைக் கலைத்து விடவில்லை. ஆனால் பொதுவுடைமைக் குடும்ப வாழ்க்கை என்பது குடும்பத்தில் பெண்ணின் மேலாதிக்கத்தைக் குறிக்கும்; இயற்கையான தந்தை யார் என்று நிச்சயமாக நிர்ணயிக்க முடியாத காரணத்தால் இயற்கையான தாயை மட்டுமே அங்கீகரிக்கின்ற நிலை பெண்களுக்கு, அதாவது தாய்மார்களுக்கு அதிகமான மதிப்பு அளிப்பதைக் குறிப்பதைப் போன்றதே இது. சமுதாயம் தொடங்கும் பொழுது ஆணுக்குப் பெண் அடிமையாக இருந்தாள் என்பது 18 ஆம் நூற்றாண்டின் அறிவியக்க காலத்திலிருந்து நமக்குக் கைமாற்றித் தரப்பட்டுள்ள கருத்துகள் எல்லாவற்றிலும் மிகவும் அபத்தமான கருத்தாகும். எல்லாக் காட்டுமிராண்டிகளிடையிலும் அநாகரிக நிலையின் கடைக்கட்டத்திலும் இடைக்கட்டத்திலும் உள்ள மக்களிடையிலும் ஓரளவுக்கு அதன் தலைக்கட்டத்திலுள்ள மக்களிடையிலும் பெண் சுதந்திரமான நிலையிலிருந்தது மட்டுமின்றி மிகவும் மதிப்புமிக்க நிலையை வகித்து வந்தாள். செனீகா இராகோஸ் மத்தியில் பல ஆண்டுகள் மத போதகராக இருந்த ஆஷர் ரைட் என்பவர் இணைக் குடும்பத்தில் இன்னும் பெண் வகித்து வருகின்ற நிலையப் பற்றித் தருகின்ற சாட்சியத்தைக் காண்போம்:

”அவர்களுடைய குடும்ப அமைப்பைப் பொறுத்த மட்டில், பழைய நீளமான வீடுகளில் வசித்த பொழுது (சில குடும்பங்களைத் தழுவியிருந்த பொதுவுடைமைக் குடும்பங்கள்) ஏதாவது ஒரு கிளான் (குலம்) அநேகமாக மேலோங்கியிருந்திருக்கக் கூடும்; பெண்கள் மற்ற கிளான்களிலிருந்து (குலங்களிலிருந்து) கணவன்மார்களைக் கொண்டார்கள் பெண் பிரிவே வீட்டில் சகஜமாக ஆட்சி புரிந்தது. சேமிக்கப்பட்ட பொருட்கள் பொதுவில் இருந்தன. தன் பங்குக்கு பொருட்களைக் கொண்டு வந்து தருவதற்கு வழியில்லாத, துரதிர்ஷ்டம் பிடித்த கணவன் அல்லது காதலன் கஷ்டப்பட வேண்டியதே. அவனுக்கு வீட்டில் எத்தனை குழந்தைகள் இருந்த போதிலும், எத்தனை பொருட்கள் இருந்த போதிலும் எந்த வினாடியிலும் அவனை வெளியேறும்படி உத்தரவிட முடியும். அப்படி உத்தரவிடப்பட்ட பிறகு அதை மீற முயல்வது அவனுக்கே நல்லதல்ல, அந்த வீட்டில் அவன் இனியும் இருக்க முடியாது. அவன் தனது கிளானுக்கு (குலத்துக்கு) திரும்பிவிட வேண்டியதுதான் அல்லது வெளியேறிச் சென்று வேறு கிளானில் புதிய திருமண உறவைத் தொடங்க வேண்டியதுதான்; அப்படி அடிக்கடி நடைபெற்றது. பொதுவாக, மற்ற இடங்களைப் போலவே கிளான்களில் பெண்கள்தான் பெரும் சக்தியாக இருந்தார்கள். தேவையான சந்தர்ப்பங்களில், தலைவனின் கொம்புகளைத் தட்டியெறிந்து – அதை அப்படித்தான் குறிப்பிட்டார்கள் – அவனைச் சாதாரண வீரர்களின் அணியில் தள்ளுவதற்கு அவர்கள் தயங்கியதில்லை.”

பொதுவுடைமைக் குடும்பத்தில் பெரும்பாலான பெண்கள் அல்லது எல்லாப் பெண்களுமே ஒரேயொரு குலத்தைச் சேர்ந்தவர்கள்; ஆண்களே பல்வேறு குலங்களிலிருந்து வந்தவர்கள். பூர்வீக காலத்தில் பெண்கள் எல்லா இடங்களிலும் மேலோங்கிய நிலையில் இருந்துவந்ததற்கு எதார்த்த அடிப்படை இதுவே. இதை பாஹொஃபென் கண்டுபிடித்தது அவர் செய்த மூன்றாவது பெரும் சேவையாகும். இன்னொன்றையும் நான் சேர்த்துக் கூறலாம். காட்டுமிராண்டி மற்றும் அநாகரிக நிலையிலுள்ள மக்கள் மத்தியில் பெண்கள் மீது அளவுக்கு மீறிய வேலை சுமத்தப்பட்டிருக்கிறது என்று பிராயாணிகளும் மத போதகர்களும் எழுதியிருக்கின்ற செய்திகள் மேற்கூறியவற்றுடன் எவ்விதத்திலும் முரண்படவில்லை. இரு பாலாரிடையேயும் உழைப்புப் பிரிவினையை நிர்ணயிப்பதற்குரிய காரணங்கள் வேறு, சமுதாயத்தில் இரு பாலாருடைய அந்தஸ்தை நிர்ணயிப்பதற்குரிய காரணங்கள் வேறு. நாம் முறையானதென்று கருதுவதற்கு மேல் கடுமையாக உழைக்கின்ற பெண்களைக் கொண்ட மக்களினங்கள் நமது ஐரோப்பியர்கள் பெண்களுக்குத் தருகின்ற மதிப்பை விட அதிகமான உண்மையான மதிப்பு வைத்திருக்கிறார்கள். போலி உபசாரங்களால் சூழப்பட்ட, எல்லாவிதமான உண்மையான உழைப்பிலிருந்தும் விலக்கப்பட்டுள்ள நாகரிகச் சீமாட்டியின் சமூக அந்தஸ்து அநாகரிக நிலையைச் சேர்ந்த, கடுமையாக உழைக்கின்ற பெண்ணின் அந்தஸ்தை விட சமூக ரீதியில் மிகவும் கீழானதாகும். அந்தப் பெண் தன் மக்கள் மத்தியில் உண்மையாகவே ஒரு சீமாட்டியாக கருதப்பட்டாள். அவள் வகித்த நிலையின் தன்மையினால் அவள் அப்படி இருந்தாள்.

இன்று அமெரிக்காவில் குழு மணத்தின் இடத்தை இணைக் குடும்பம் முழுவதும் கைப்பற்றி விட்டதா என்பதை இன்னும் காட்டுமிராண்டி நிலையின் தலைக்கட்டத்திலேயே இருக்கின்ற வட மேற்கு அமெரிக்க, மேலும் குறிப்பாக, தென் அமெரிக்க மக்களினங்களிடையே மேலும் நெருங்கி ஆராய்வதன் மூலமாகவே முடிவு கட்ட இயலும். பின்சொன்ன மக்களினங்களிடையே பாலுறவுச் சுதந்திரம் நிலவுவதைப் பற்றி ஏராளமான உதாரணங்கள் கொடுக்கப்படுவதால் பழைய குழு மணம் முழுமையாக ஒடுக்கப்பட்டிருந்ததாக அனுமானிக்க முடியாது. எப்படியிருப்பினும், அதன் எல்லா அடையாளங்களும் இன்னும் மறைந்து விடவில்லை. குறைந்தபட்சம் நாற்பது வட அமெரிக்க இனக்குழுக்களில், ஒரு குடும்பத்தின் மூத்த சகோதரியைத் திருமணம் செய்து கொள்கின்ற ஆண் அவளுடைய சகோதரிகள் எல்லோரையும் – அவர்கள் உரிய வயதை அடைந்ததும் – தனது மனைவிகளாகக் கொள்ள உரிமை பெற்றிருக்கிறான். சகோதரிகளைக் கொண்ட ஒரு முழுக் குழுவுக்கு கணவன்மார்கள் பொதுவாக இருந்த அமைப்பின் எச்சம் இது. மேலும், கலிபோர்னிய தீபகற்பத்திலுள்ள (காட்டுமிராண்டி நிலையின் தலைக்கட்டத்தைச் சேர்ந்த) இனக்குழுக்களிடையே சில விழாக்கள் உண்டு. அவ்விழாக் காலங்களில் வரைமுறையற்ற புணர்ச்சியில் ஈடுபடுவதற்காக சில “இனக்குழுக்கள்” திரண்டு வருகின்றன என்ற பான்கிராஃப்ட் கூறுகிறார். இவை அநேகமாக குறிப்பிட்ட குலங்களாகும்; ஒரு குலத்தின் பெண்கள் இன்னொரு குலத்தைச் சேர்ந்த ஆண்கள் எல்லோரையும் பொதுவான கணவர்களாகவும், அதே போல் ஒரு குலத்தின் ஆண்கள் இன்னொரு குலத்தின் பெண்கள் எல்லோரையும் பொதுவான மனைவியராகவும் கொண்டிருந்த பழங்காலத்தை இவற்றிற்கு மங்கலாக நினைவூட்டுவதைக் குறிப்பவையே இந்த விழாக்கள். இந்த வழக்கம் ஆஸ்திரேலியாவில் இன்றும் நிலவுகிறது. சில மக்களினங்களில் வயதானவர்கள், தலைவர்கள் மற்றும் மந்திரவாதி-புரோகிதர்கள் பொது மனைவியர் முறையைத் தமது நோக்களுக்குப் பயன்படுத்திக்கொள்வதும் பெரும்பாலான பெண்களைத் தமக்கே ஏகபோகமாக்கிக் கொள்வதும் நடைபெருகின்றன. ஆனால் அவர்கள் கூட, தம் முறைக்கு சில விழாச் சமயங்களிலும் மக்கள் பெருந்திரளாகக் கூடுகின்ற காலங்களிலும் பழைய பொதுமையை அனுமதித்து, தமது மனைவியர் வாலிவர்களுடன் இன்பம் துய்ப்பதை அனுமதிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். இப்படிக் குறிப்பிட்ட காலங்களில் நடைபெறுகின்ற சாடர்னேலியத் திருவிழாக்களுக்கு வெஸ்டர்மார்க் தனது நூலின் 28-29 ஆம் பக்கங்களில் வரிசை வரிசையாக உதாரணங்களைத் தருகிறார் [சாடர்னேலியத் திருவிழாக்கள்- பண்டைகால ரோமாபுரியில் அறுவடைத் திருவிழா; சனி (சாடர்ன்) கடவுளின் விழாவாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் போது மக்கள் வரைமுறையற்ற புணர்ச்சியில் ஈடுபட்டார்கள். சாடர்னேலியா என்னும் சொல் தற்பொழுது காமக் கேளிக்கையை, கட்டுப்பாடில்லாத கொண்டாட்டத்தைக் குறிக்கிறது]. இந்த விழாக்களில் அந்த பழைய சுதந்திரமான புணர்ச்சி முறை குறுகிய காலத்துக்கு அமுலுக்கு வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த ஹோக்கள், சாந்தால்கள், பஞ்சார்கள், கோட்டர்கள் மற்றும் சில ஆப்பிரிக்க மக்களினங்கள் இதற்கு உதாரணமாகும். இதில் வேடிக்கை என்னவென்றால் வெஸ்டர்மார்க் இவற்றைக் குழு மணத்தின் எச்சங்களாகக் கருதாமல் – அவர் குழு மணத்தையே மறுக்கிறார் – பண்டைக்கால மனிதனுக்கும் பிற  விலங்குகளுக்கும் பொதுவாக இருந்த புணர்ச்சி வேட்கைக் காலத்தின் எச்சங்கள் என்று இதிலிருந்து முடிவு கட்டுகிறார்.

இப்பொழுது பாஹொஃபெனுடைய நான்காவது மாபெரும் கண்டுபிடிப்புக்கு வருகிறோம். அதுதான் குழு மணத்திலிருந்து இணை மண முறைக்கு மாறிய, பரவலாக இருந்த வடிவமாகும். தெய்வங்களின் பண்டைக்கால கட்டளைகளை மீறியதற்காகச் செய்யப்படுகின்ற பிராயச்சிதம், ஒரு பெண் கற்பு உரிமையைப் பெறுவதற்குச் செய்யும் தவம் என்று பாஹொஃபென் புரிந்து கொண்டாரே, அது உண்மையிலே என்ன? பொதுக் கணவர்களைக் கொண்ட பழைய முறையிலிருந்து விடுபட்டுத் தன்னை ஒருவருக்கு மட்டுமே ஒப்படைக்கின்ற மாயத் தோற்றமே அது. இத்தவம் குறிப்பிட்ட வரம்பகளில் ஒப்படைப்பு என்னும் வடிவத்தைப் பெறுகிறது. பாபிலோனியப் பெண்கள் ஆண்குக்கு ஒரு தடவை மிலிட்டா ஆலயத்தில் தங்களை ஒப்படைக்க வேண்டியிருந்தது. இதர மத்திய கிழக்கு நாட்டு மக்களினங்கள் தமது இளம் பெண்களை சில ஆண்டுகளாக அனெய்டிஸ் தேவதையின் ஆலயத்துக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அங்கே அவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட, தங்களுக்கு பிடித்தமான ஆண்களுடன் சுதந்திரமாகக் காதல் செய்ய வேண்டும். பிறகுதான் அவர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். மதத் திரையினால் மூடப்பட்ட இத்தகைய வழக்கங்கள் மத்திய தரைக் கடலுக்கும் கங்கை நதிக்கும் இடையிலுள்ள ஆசிய மக்களினங்களில் அநேகமாக எல்லாவற்றுக்கும் பொதுவாகும். பிராயசித்தக் காணிக்கையின் சுமை காலப்போக்கில் படிப்படியாக குறைக்கப்படுகிறது. இதை பாஹொஃபெனே குறிப்பிட்டார்:

”ஒவ்வொரு ஆண்டும் அர்ப்பணம் செய்து கொள்வதற்கு பதிலாக ஒரேயொரு நிகழ்ச்சியுடன் நின்று விடுகிறது. பெருமாட்டிகளுடைய பொதுமகளிர் முறைக்குப் பிறகு இளம் பெண்களின் பொதுமகளிர் முறை வருகிறது. அது திருமண சமயத்தில் அமலுக்கு வருகிறது. வரைமுறையின்றி எல்லோரிடமும் தன்னை ஒப்படைத்தது மாறி சில நபர்களிடம் ஒப்படைத்தல் நடக்கிறது” (தாய் உரிமை, பக்கம் XIX).

இதர மக்களினங்களில் மதத் திரை இல்லை. பண்டைக்காலத்தில் திரேஸியர்கள், கெல்டுகள் மத்தியிலும் தற்காலத்தில் இந்தியாவின் பல ஆதிக்குடிகள் மலாய் மக்களினங்கள். பசுபிக் கடல் தீவு மக்கள் மற்றும் பல அமெரிக்க செவ்விந்தியர்கள் மத்தியிலும் பெண்களுக்குத் திருமணம் நடைபெருகின்ற வரை பாலியல் உறவு விஷயத்தில் மிகவும் அதிகமான சுதந்திரம் உண்டு. அநேகமாகத் தென் அமெரிக்கா முழுவதிலும் இப்படித்தான் இருக்கிறது. அந்தக் கண்டத்துக்குள் சிறிதளவு நுழைந்து பார்த்த எவரும் அதற்குச் சான்று தருவார்கள். அகலீஸ் என்பவர் (பிரேஸில் நாட்டில் பிரயாணம், போஸ்டன் மற்றும் நியுயார்க், 1886, பக்கம் 266) செவ்விந்தியப் பரம்பரையில் வந்த ஒரு பணக்காரக் குடும்பத்தைப் பற்றிப் பின்வரும் தகவலைக் கூறுகிறார். அந்த வீட்டிலுள்ள மகளுக்கு அவர் அறிமுகம் செய்யப்பட்ட பொழுது அவளுடைய தந்தையாரைப் பற்றி விசாரித்தார். தந்தையார் என்றால் தாயின் கணவர், பராகுவேக்கு எதிராக நடைபெறுகின்ற போரில் சேவை செய்யும் அதிகாரி என்று கருதிக் கொண்டார். ஆனால் தாயாரோ சிரித்துக் கொண்டே, இவளுக்குத் தந்தை இல்லை, இவள் சந்தர்ப்பவசமாக பிறந்த பெண் என்று விடை கூறினாள்.

”இங்குள்ள செவ்விந்தியப் பெண்கள் அல்லது கலப்பினப் பெண்கள் முறைக்கேடான வழியில் பிறந்த தம்முடைய குழந்தைகளைப் பற்றி இப்படி எப்பொழுதும் பேசுகின்றனர். அவர்களுடைய உணர்வில் குற்ற மனோபாவமோ, வெட்கமோ கிடையாது. இது மிகவும் சகஜம். அப்படி இல்லாதிருப்பதே விதிவிலக்கு என்று தோன்றுகிறது. குழந்தைகள்…. பெரும்பாலும் தாயைப் பற்றி மட்டுமே அறிந்திருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களைப் பற்றிய கவலையும் பொறுப்பும் அவள் மீதே விழுகின்றன. ஆனால் தந்தையைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அந்தத் தந்தை மீது தனக்கோ, தன் குழந்தைகளுக்கோ எவ்வித உரிமையும் இருப்பதாகத் தாய்மாருக்குப் படுவதாகவும் தோன்றவில்லை.” நாகரிக மனிதனுக்கு இங்கே மிகவும் விசித்திரமாகத் தோன்றுவது தாயுரிமைப்படியும் குழு மணத்திற்குள்ளும் இருக்கின்ற விதியே தவிர வேறில்லை.

ஒரு சில மக்களினங்களில் மணமகளுடைய நண்பர்கள், உறவினர்கள் அல்லது திருமணத்துக்கு வந்த விருந்தினர்கள் திருமணத்தின் பொழுதே மணமகள் மீது தமக்குள்ள பழைய சம்பிரதாய உரிமையைக் கையாள்கின்றனர்; மணமகன் மணமகளைக் கடைசியாகத்தான் அனுபவிக்கிறான். பண்டைக்கால பெலியாரிக் தீவுகளிலும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆகில்கள் இடையிலும் இப்பழக்கம் இருந்தது. அபிஸ்ஸீனாவைச் சேர்ந்த பெரியாக்கள் மத்தியில் இன்று கூட இப்படியே. வேறு சில மக்களினங்களில் அதிகாரப் பதவியிலிருக்கின்ற ஒருவர் – இனக்குழு அல்லது குலத்தின் தலைவர், காசிக், ஷமான், புரோகிதர், சிற்றரசர் அல்லது வேறு எந்தப் பட்டம் பெற்றிருந்தாலும் சரி – கூட்டுச் சமூகத்தின் பிரதிநிதியாக மணமகளுடன் முதல் இரவு உரிமையை அனுபவிக்கிறார். நவீன புத்தார்வவாதப் பூச்சு எப்படியிருப்பினும் இந்த முதல் இரவு உரிமை இன்றைய நாள் வரை குழு மணத்தின் ஒரு எச்சமாக அலாஸ்கா பிரதேசத்திலுள்ள பெரும்பாலான குடிகளிடையிலும் (பான்கிரஃப்ட், சுதேச இனக்குழுக்கள், முதக் தொகுதி, பக்கம் 81) வடக்கு மெக்சிகோவிலுள்ள தாஹுக்களிடையிலும் (அதே நூல், பக்கம் 584) இதர மக்களினங்களிடையிலும் நீடித்திருக்கிறது. குறைந்தபட்சம் ஆதியில் கெல்டிக் நாடுகளாயிருந்தவற்றில் இது மத்திய காலம் முழுவதிலும் இருந்தது. அங்கே அது குழு மணத்திலிருந்து நேரடியாக ஏற்பட்டது – உதாரணமாக, ஆரகான். காஸ்தீலில் என்றும் பண்ணையடிமையாக இருக்கவில்லை, ஆனால் ஆரகானில், ஃபெர்டினாண்டு கத்தோலிக்கர் 1486 இல் ஆணை பிறப்பிக்கின்ற வரை மிக மோசமான பண்ணையடிமை முறை நிலவியது [ஸ்பெயின் அரசான ஐந்தாவது ஃபெர்டினாண்டு கத்தோலிக்கர் 1486 ஏப்ரல் 21இல் விவசாயிகளுக்கும் பிரபுக்களுக்கும் இடையில் செய்த மத்தியஸ்தம் இங்கே குறிப்பிடப்படுகிறது. ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதியான கடலோனியாவில் நிலப்பிரபுக்கள் எதிர்த்து விவசாயிகள் கலகம் செய்ததன் விளைவாக அவர் ஒரு மத்தியஸ்த ஆணை வெளியிட்டார். அதன்படி, விவசாயிகள் நிலங்களோடு பிணைக்கப்படுதல், முதலிரவு உரிமை உட்பட் விவசாயிகளால் எதிர்க்கப்பட்ட சில நிலப்பிரபுத்துவ கட்டாய சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன; ஆனால் விவசாயிகள் அதற்கு நட்ட ஈடாகப் பெருந்தொகை கொடுத்தார்கள்]. இந்தச் சட்டம் பின்வருமாறு:

”மேற்கூறப்பட்ட பிரபுக்கள் (செனோர்கள், பாரன்கள்) விவசாயி திருமணம் புரிந்து கொண்ட பெண்ணுடன் முதல் இரவில் படுக்கக் கூடாது என்றும், திருமணம் நடந்த இரவில் அவற் படுக்கைக்குச் சென்ற பிறகு தமது அதிகாரத்துக்கு அறிகுறியாக அவர்கள் கட்டிலையும் அவளையும் தாண்டுவது கூடாது என்றும், மேற்கூறப்பட்ட பிரபுக்கள் விவசாயியினுடைய புத்திரர்கள் அல்லது புத்திரிகளின் சேவைகளை, ஊதியம் தந்தோ, தராமலோ, அவர்களுடைய சித்தத்துக்கு விரோதமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்றும் நாம் தீர்ப்பளித்துப் பிரகடனம் செய்கிறோம்.” (சுகன்ஹைம், பண்ணையடிமை முறை, பீட்டர்ஸ்பர்க், 1861, பக்கம் 355; கடலோனிய மொழியிலுள்ள மூலத்திலிருந்து மேற்கோள் தரப்பட்டுள்ளது.)

அவர் குறிப்பிடுகின்ற “பொதுமகளிர் முறை” இலிருந்து ஒருதார மணத்திற்கு மாற்றமடைந்த காலம் நெடுகிலும் அந்த மாற்றத்தைக் கொண்டுவந்தவர்கள் பெண்களே என்று பாஹொஃபென் கூறுவது மீண்டும் முற்றிலும் சரியானதே. பொருளாதார நிலைமைகளின் வளர்ச்சியின் விளைவாக, அதாவது பழைய பொதுவுடைமை முறை பலவீனமடைந்து மக்கள் தொகையின் அடர்த்தி அதிகரித்ததன் விளைவாகப் பழைய சம்பிரதாய பாலியல் உறவுகள் தமது வெகுளித்தனமான, பூர்விகமான காட்டுத் தன்மையை இழந்து வர வர அந்த உறவுகள் மேன்மேலும் தரக்குறைவாக, ஒடுக்குபவையாகப் பெண்களுக்கு தோன்றியிருக்க வேண்டும். அவர்கள் கற்புரிமைக்கு, விடுதலை என்ற முறையில் குறிப்பிட்ட ஒரு நபரைத் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாகத் திருமணம் செய்து கொள்வதில் வேட்கை கொண்டிருந்திருக்க வேண்டும். இந்த முன்னேற்றம் ஆண்களிடமிருந்து தோன்றியிருக்க முடியாது. அவர்கள் நடைமுறைக் குழு மணத்தின் இன்பங்களைக் கைவிடுவதற்கு ஒருபோதும் – இன்றைய நாள் வரை கூட – கனவு கூடக் கண்டதில்லை என்ற காரணமே இதற்குப் போதும். பெண்கள் முயன்று இணை மண முறை நோக்கி மாற்றம் கண்ட பிறகுதான் ஆண்கள் கண்டிப்பான ஒருதார மணத்தை – அது பெண்களுக்கு மட்டுமே என்பதைச் சொல்ல வேண்டியதில்லை – புகுத்த முடிந்தது.

காட்டுமிராண்டி நிலைக்கும் அநாகரிக நிலைக்கும் இடைப்பட்ட எல்லைக் கோட்டில்தான் இணைக் குடும்பம் எழுந்தது; முக்கியமாக காட்டுமிராண்டி நிலையின் தலைக்கட்டத்திலும் சிற்சில இடங்களில் மட்டும் அநாகரிக நிலையின் கடைக்கட்டத்திலும் அது தோன்றியது. காட்டுமிராண்டி நிலைக்கு குறிப்பு அம்சமாகக் குழு மணமும் நாகரிக நிலைக்கு குறிப்பு அம்சமாக ஒருதாரநிலையும் இருப்பதைப் போல அநாகரிக நிலைக்கு இணைக் குடும்பம் குறிப்பு அம்சமாக உள்ளது. அது நிலையான ஒருதார மணத்தை நோக்கி மேலும் வளர்ச்சியடைவதற்கு இதுவரை செயல்பட்டிருப்பதாக நாம் அறிந்துள்ளவற்றிலிருந்து மாறுபட்ட காரணங்கள் தேவைப்பட்டன. இணைக் குடும்பத்தில் குழு அதன் கடைசி அலகுக்குக் குறுக்கப்பட்டு விட்டது; இரு அணுக்களைக் கொண்ட மூலக்கூறாக, ஒருவனும் ஒருத்தியுமாகக் குறுக்கப்பட்டு விட்டது. இயற்கைத் தேர்வு குழு மணத்தின் வட்டத்தை இடைவிடாது குறுக்கித் தன்னுடைய பணியை முடித்தது. இந்தத் திசையில் மேற்கொண்டு செய்வதற்கு அதற்கி ஒன்றும் இருக்கவில்லை. புதிய சமூக ரீதியான விசைச் சக்திகள் செயல்படாமல் இருந்திருந்தால் இணைக் குடும்ப முறையிலிருந்து ஒரு புதிய குடும்ப வடிவம் தோன்றுவதற்கு காரணமே இருந்திருக்காது. ஆனால் இந்த விசைச் சக்திகள் செயல்படத் தொடங்கின.

நாம் இணைக் குடும்பத்தின் மூலச்சிறப்பான களமாகிய அமெரிக்காவை விட்டுப் புறப்படுகிறோம். குடும்பத்தின் முன்னைவிட மேலான வடிவம் அங்கே வளர்ந்தது என்று நாம் முடிவு செய்வதற்கு ஆதாரம் எதுவும் கிடையாது, அல்லது அந்தக் கண்டத்தைக் கண்டுபிடித்துக் குடியேறுவதற்கு முன்பு அங்கே எந்தக் காலத்திலும், எந்தப் பகுதியிலும் கண்டிப்பான ஒருதார மணம் இருந்தது என்பதற்கும் ஆதாரம் எதுவும் கிடையாது. ஆனால் பழைய உலகத்தில் வேறுவிதமான நிலைமை இருந்தது.

இங்கே மிருகங்களைப் பழக்குவதும் மந்தைகளைப் பெருக்குவதும் இதுவரை கேட்டறியாத செல்வத்திற்குரிய ஓர் ஊற்றுக்கண்ணைத் தோற்றுவித்து, புத்தம் புதிய சமூக உறவுகளைப் படைத்தன. அநாகரிக நிலையின் கடைக்கட்டம் வரை வீடும் உடைகளும், நேர்த்தியற்ற ஆபரணங்களும், உணவு பெறுவதற்கும் தாயாரிப்பதற்கும் பயன்பட்ட கருவிகளும், அதாவது படகுகளும் ஆயுதங்களும், மிகவும் சாதாரண ரகத்தைச் சேர்ந்த வீட்டுச் சாமான்களும் மட்டுமே நிலையான செல்வமாக இருந்தன. உணவுக்கு நாள்தோறும் பாடுபட வேண்டியிருந்தது. ஆனால் இப்பொழுது குதிரைகள், ஒட்டகங்கள், கழுதைகள், மாடுகள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், பன்றிகள் ஆகியவற்றின் மந்தைகளுடன் முன்னே போய்க் கொண்டிருக்கின்ற, மேய்ச்சல் தொழில் புரிந்த மக்களினங்கள் – இந்தியாவில் ஐந்து நதிகள் பாய்கின்ற பகுதியிலும் கங்கை நதிப் பிரதேசத்திலும் ஆரியர்கள், அதை விட நீர் வளமிக்க ஆக்ஸஸ், ஜக்ஸார்தஸ் ஆறுகள் பாய்கின்ற புல்வெளிப் பிரதேசங்களில் உள்ள ஆரியர்கள், யூப்ரடீஸ், டைக்ரிஸ் ஆறுகள் பாய்கின்ற பிரதேசங்களில் இருந்த செமைட்டுகள் – தம்மிடமிருந்த உடைமைகளை வெறுமனே மேற்பார்வை செய்து மிகவும் சாதாரணமான முறையில் கவனிப்பதன் மூலமாகவே அவற்றின் எண்ணிக்கையை மேன்மேலும் அதிகமாகப் பெருக்கவும் பால், இறைச்சி உள்ளிட்ட ஊட்டம் நிறைந்த உணவைப் பெறவும் முடிந்தது. உணவு சேகரிப்பதற்கு இதுவரை கையாண்ட முறைகள் அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டன. ஒரு காலத்தில் அவசியமாக இருந்த வேட்டைத் தொழில் இப்பொழுது அபூர்வமாக ஈடுபடுகின்ற வேலையாக மாறி விட்டது.

இந்நூலின் முந்தைய பகுதிகள்

  1. மாமேதை ஏங்கல்ஸ்.
  2. 1884 ல் எழுதிய முன்னுரை
  3. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி
  4. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2
  5. ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய கலாச்சாரக் கட்டங்கள்
  6. குடும்பம் – 1
  7. குடும்பம் – 2
  8. குடும்பம் – 3

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s