
பத்தாம் வகுப்புத் தேர்வுகள் கிடையாது, அனைவருக்கும் தேர்ச்சி என அரசு அறிவித்திருப்பதை தொடர்ந்து, எல்லோரும் தங்கள் உவகையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த கொரோனா அச்சத்திலும் தேர்வை நடத்தியே தீர்வது என்று அரசு கடைசி வரை முயன்றது. இதற்கு மேலும் இழுத்துப் பிடித்தால் இருக்கும் கொஞ்ச மதிப்பையும் இழக்க நேரிடலாம் என்பதால் வேறு வழியின்றியே இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. இதற்குப் பின்னால் தனியார் கல்வி நிறுவனங்களின் வேட்டை எனும் காரணம் இருக்கிறது.
மறுபக்கம், புதிய கல்விக் கொள்கை என்பதன் ஒரு பகுதியாக, திட்டமிடப்பட்ட ஆன்லைன் வகுப்புகள், இந்த கொரோனா அச்சத்தை பயன்படுத்தி கடை விரித்தன. புதிய கல்விக் கொள்கை தேவை என்று நினைத்தவர்களைக் கூட, – ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு எந்த அளவுக்கு மன நெருக்கடியை ஏற்படுத்தும் என்று நேரில் கண்ட உண்மை – தங்கள் நிலைப்பாட்டில் லேசான அசைவை ஏற்படுத்த வைத்திருக்கிறது.
ஆனாலும் தனியார்மயக் கல்வி என்பதை இன்னும் அசைத்துப் பார்க்கவில்லை, அந்த மயக்கம் நீடிக்கிறது. அரசு பள்ளிகளை செம்மையாக நடக்கும் வரை இந்த மயக்கம் நீடிக்கத் தான் செய்யும். மட்டுமல்லாமல், இந்த கல்வி முறை நம் குழந்தைகளை என்னவாக மாற்ற விரும்புகிறது? எனும் கேள்வியும் இருக்கிறது.
நலிவடைந்து வரும் அரசுப் பள்ளிகளின் இன்றைய நிலை, இது குறித்து மத்திய,மாநில அரசுகளின் தொடர்ந்த கள்ள மெளனம். தமிழக மாணவர்களின் பின்புலம், ஆசிரியர்களின் மனநிலை, இன்றைய பாடத்திட்டம், தாய்மொழி வழிக்கல்வி, தனியார் மயம், அரசுத் துறையின் மெத்தனப்போக்கு ,அரசுப் பள்ளிகள் எதிர் கொள்ளும் சவால்கள் என எல்லா விசயங்களையும் குறுக்கு வெட்டாக அதே நேரத்தில் சுவாரசியமாக விசயத்தை எடுத்து வைக்கும், ஊடகவியலாளரான பாரதி தம்பி எழுதி, விகடன் வெளியீடாக வந்திருக்கும் கற்க கசடற விற்க அதற்குத் தக எனும் நூல். அந்த நூலின் ஒலிப்பதிவு தான் இந்த ஒலிநூல்.
மொத்த நூலும் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தரப்பட்டுள்ளன.
கேளுங்கள், கேட்கச் செய்யுங்கள்.
ஒலிக் கோப்பாக இந்நூல் தேவைப்படுவோர் மின்னஞ்சலில் தொடர்பு கொள்க