எல்லைச் சிக்கலின் முரண்பாடுகள்

சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்று கூறிக் கொண்டு, பயன்பாடு தீர்ந்த அல்லது பயன்பாடு குறைந்த பொருட்களை   ஒளிப்பதிவு கருவிகளின் முன் உடைத்துக் கொண்டிருக்கிறார்கள் சங்கிகள். அதாவது, அரசு சீனாவுக்கு எதிராக இருக்கிறது என்றும், சீனாவின் பொருளாதாரத்தை குலைக்கும் நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியிருக்கிறது என்றும் நாம் புரிந்து கொள்ள வேண்டுமாம். மெய்யாகவே, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைச் சிக்கலில், சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா கொண்டிருக்கிறது என்றால், இந்தியாவுக்கான சீனத் தூதரை அழைத்து கண்டிக்கலாம், சீனாவுக்கான இந்தியத் தூதரை திரும்ப அழைக்கலாம். இந்தியா சீனா இடையேயான ஒப்பந்தங்களை முறித்துக் கொள்வதாக அறிவிக்கலாம்,  பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸின் புரவலர்களாக இருக்கும் பனியாக்களை இந்திய சீன வர்த்தகத்துக்காக திறக்கப்பட்டிருக்கும் அலுவலகங்களை மூடி விட்டு இந்தியாவுக்கு திரும்புமாறு பணிக்கலாம், இவ்வாறு சொல்லிக் கொண்டே செல்லலாம். ஆனால் இவை எதையுமே செய்யாமல், ஆர்.எஸ்.எஸ் தன் சங்கிகளைக் கொண்டு சீனப் பொருட்களை புறக்கணிப்பது போல் படம் காட்டிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவால் சீனப் பொருட்களைப் புறக்கணிக்க முடியுமா? தனி ஒரு நாட்டின் பொருட்களை இன்னொரு நாடு புறக்கணிப்பது என்ற தன்மை இன்றைய பொழுதில் ஏகாதிபத்தியங்களால் நீக்கப்பட்டு விட்டது. ஒரு நாட்டின் உற்பத்திப் பொருளின் உட்பகுதிக் கருவிகளில் பல நாடுகளில் இருந்து – எங்கெங்கெல்லாம் மூலப் பொருளும், உழைப்புக் கூலியும் குறைவாக இருக்கிறதோ அங்கிருந்தெல்லாம் உற்பத்தி செய்யப்பட்டு – கொண்டு வந்து இணைக்கப்படுகின்றன. இதில் எந்த நாட்டுப் பொருளை புறக்கணிப்பது? தவிரவும், இன்றைய நிலையில் சீனாவின் கை படாத எந்த ஒரு பொருளும் உலகில் இல்லை என்று சொல்லக் கூடிய அளவில் சீனாவின் உற்பத்தி மேலோங்கி இருக்கிறது. எனவே, சங்கிகள் படம் காட்டுவதை ஒதுக்கி விட்டு, அதன் பின்னிலமாக இருக்கும் எல்லைச் சிக்கலைப் பார்க்கலாம்.

தொடக்கத்திலிருந்து இந்தச் சிக்கல் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்திருக்கும் செய்திகளைத் தொகுத்துப் பார்த்தால், சீனா இந்தியாவின் எல்லைக்குள் எல்லை தாண்டி வந்து ஆகிரமித்துக் கொண்டு, அதை தட்டிக் கேட்ட இந்திய இராணுவ வீரர்களை கொடூரமாக கொன்று குவித்து விட்டு, பின் மோடியின் எச்சரிக்கையை கண்டு பயந்து பின்வாங்கிச் சென்றிருப்பதாகத் தான் புரிந்து கொள்ள முடியும். இந்திய ஊடகங்களைப் பொருத்தவரை அவை தாமாகவே செய்தி சேகரித்துச் சொல்வது தனி மனிதனின் காதல் பிரச்சனைகளில் மட்டும் தான். அதுவும் கள்ளக் காதல் என்ற கிளுகிளுப்பான பெயரில். ஏனையவை அனைத்தும் அரசும், போலீசும் தரும் செய்திகளை அப்படியே அட்டியின்றி வெளியிடுவது தான். இந்த வகையில் ஊடகங்களில் வந்திருப்பதெல்லாம் அரசு சொன்ன அல்லது சொல்ல விரும்பிய செய்திகள் தாம். எனவே, அவைகளைக் கண்டு நாட்டுப்பற்று ஊற்றெடுப்பதோ, அவைகளில் உண்மை இருப்பதாக நம்புவதோ அறிவீனர்களின் செயல்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சற்றேறக் குறைய 3,500 கிமீ எல்லைப் பகுதி, முழுமையாக வரையறுக்கப்பட்டு இரு நாடுகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட எல்லைப் பகுதியா? என்றால், குறிப்பான எல்லை இல்லாமல், இரு நாடுகளும் ஒப்புக் கொள்ளாமல் விடப்பட்டிருக்கும் எல்லைப் பகுதிகளே அதிகம். இன்னொரு விதமாகச் சொன்னால், காஷ்மீர் எனும் ஒரு தனி தேசிய இனப் பகுதி இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய மூன்று நாடுகளாலும் குரங்கு ஆப்பத்தை பங்கு வைத்த கதையைப் போல் தங்களுக்குள் ஆக்கிரமித்து வைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இந்தியா வெளியிடும் வரை படங்களில் காஷ்மீர் முழுவதும் இந்தியப் பகுதி என்பது போலவே குறிப்பிடப்பட்டிருக்கும். அண்மையில் நேபாளம் தன்னுடைய பாராளுமன்ற ஒப்புதலுடன் வெளியிட்டிருக்கும் படம் குறித்து எம்பிக் குதித்த எவரும், இந்தியா காஷ்மீர் குறித்து வெளியிட்டு வரும் படம் குறித்து எந்தக் கருத்தும் கூறியிருக்க மாட்டார்கள். இந்திய சீன எல்லையைப் பொருத்த வரையில் தன்னுடைய இடம் என இந்தியா கருதும் பல இடங்களை சீனாவும் சொந்தம் கொண்டாடி வருகிறது என்பது தான் உண்மை. ஒரு சரியான அரசு முதலில் எல்லை சிக்கல்களை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்தி குறிப்பான எல்லை வகுத்து ஏற்கச் செய்திருக்க வேண்டும். ஆனால் மவோ தலைமையிலான மக்கள் சீனம் இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போது அதைப் புறந்தள்ளி சிக்கல் தீராமல் பார்த்துக் கொண்டதில் இந்தியாவின் பங்கு அதிகம். 1962ல் நடந்த போரில் சீன தான் வெற்றி கொண்ட பல பகுதிகளை மீண்டும் இந்தியாவிடமே ஒப்படைத்து விட்டு வெளியேறியது வரலாறாக இருக்கிறது.

இவ்வாறு கூறுவதை சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாடு என்று கூற முடியுமா? நாட்டுப்பற்ரு என்பது, ஒரு நாட்டின் அரசு தன் குடிமக்களை எந்த அளவுக்கு சிறப்பாக வாழ வழியமைத்துக் கொடுக்கிறது என்பதோடு, பிற நாட்டு மக்களையும் அதே போல மதிக்க வைப்பதற்கு முயல்கிறது என்பதில் இருந்து தொடங்குகிறது. தான் பிறந்த நாடு என்பதற்காக அந்த நாடு செய்கின்ற அத்தனை குற்றங்களையும் ஆதரிப்பது என்பதில் இல்லை.

இப்போது நடந்திருக்கும் எல்லை மோதலுக்கும் இருபது இராணுவ வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கும் பின்னுள்ள நிகழ்வுகள் என்ன? முதலில் ஏற்கனவே பலமுறை இது போன்ற மோதல்கள் நடந்துள்ளன. பாகிஸ்தான் எல்லையில் மோதல் என்றால் அதை பெரிதாக விளம்பரப் படுத்துவதும், திருப்பித் தாக்குவதும், சர்ஜிகல் ஸ்ட்ரைக் புளகங்களும் வழக்கமாக உள்ள இங்கு, சீன எல்லையில் மோதல் என்றால் அடக்கி வாசிப்பதும், கடந்து போவதும் வாடிக்கை. காரணம் பாகிஸ்தான் எதிரியாகவும் எதிரியின் மீதான தாக்குதல் தேசியப் பெருமிதமாகவும் இங்கு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அருணாச்சலப் பிரதேசத்துக்கு தனி விசாவை சீனா வழங்குகிறது என்று கிளப்பி விடப்பட்டதெல்லாம் அந்தந்த நேரத்து அரசியல் முதன்மைத்தனம் கருதி செய்யப்பட்ட விளம்பரங்கள். அதே போல இப்போதும் கொரோனா, பொருளாதார தோல்விகளிலிருந்து மக்களை திசை திருப்ப இந்த எல்லை மோதல் விசிரி விடப்படுகிறது என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என்று ஒதுக்கி விட முடியாது. என்றாலும், வேறுசில காரணங்களால் இந்த எல்லை மோதல் முதன்மை பெற்றிருக்கிறது.

ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தை இனியும் அனுமதிப்பதில்லை எனும் பொருள்பட ஜெர்மன் அதிபர் ஏஞ்சலினா மெர்கல் அறிவித்திருந்தாலும் தற்போதைய மேலாதிக்கத்தை தக்க வைப்பதற்காக அமெரிக்காவும், புதிய மேலாதிக்கமாக மாறுவதற்கு சீனாவும் போட்டி போடுகின்றன என்பது தான் இன்றைய உலக நிலை. அரசு குறுக்கீடற்ற வர்த்தகம் என முழங்கிய அமெரிக்கா சீனப் பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதற்கும், அமெரிக்க டாலர்களை அதிகமாக கையிருப்பில் வைத்துள்ள சீனா அதனைக் காட்டி மிரட்டுவதற்கும் பின்னணியில் இருப்பது இந்தப் போட்டி தான். சீனாவின் பட்டுப் பாதை முன்னெடுப்புகளுக்கும், சீனா பாகிஸ்தான் வர்த்தக வழித்தடம் [China Pakistan Economic Corridor (CPEC)] செயல்படுத்தப் படுவதற்கும், இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைகப் பணிகளுக்கும், நேபாளம் பாகிஸ்தான் போன்ற இந்தியாவின் அண்டை நாடுகளை தன்னுடைய நட்பு நாடாக்கிக் கொள்வதற்கும் முதன்மையான காரணம் இந்தியா அமெரிக்காவின் பிராந்திய வல்லரசாக மாறியிருக்கிறது என்பது தான். சீனாவை ஒட்டியுள்ள ஆசியப் பகுதிகளைப் பொருத்தவரை சீனாவை எதிர்கொள்ள கிட்டத்தட்ட பொருளாதார இராணுவ வலுவுள்ள ஒரே நாடு இந்தியா என்பதால் அமெரிக்காவும் சீனாவும் இந்தியாவைக் குறிவைத்தே தங்கள் நகர்வுகளைச் செய்து வருகின்றன.

பஞ்சசீலக் கொள்கை, அணிசேராக் கொள்கை என்று இந்தியா முன்னெடுத்த வெளியுறவுக் கொள்கைகள் போதிய வெற்றியை தராதது வெளிப்படையானதிலிருந்தே இந்தியா அமெரிக்கா பக்கம் சாய்ந்து வந்திருக்கிறது. 90களின் சோவியத் ஒன்றியம் சிதைந்ததன் பின்னால் அமெரிக்காவின் அடியாளாக மாறத் தொடங்கியது. குறிப்பாக அணுஆயுத ஒப்பந்தம் தொடங்கி அமெரிக்காவுடனான இராணுவ ஒப்பந்தங்கள் வரை இது தொடர்கிறது. இதன் தொடர்ச்சியாகத் தான் G7, G20 போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் கூட்டத்தில் இந்தியாவை இணைக்க அமெரிக்க முயற்சிக்கிறது. இதனால் இந்தியாவை கண்காணிப்புக்குள் வைப்பதும், கட்டுப்படுத்துவதும் சீனாவுக்கு தேவையாக இருக்கிறது.

இதில் இன்னொரு முரண்பட்ட செய்தியும் இருக்கிறது. இதுவரை இந்தியப் பிரதமர்களில் அதிகமுறை சீனாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டது மோடி தான். மட்டுமல்லாது குஜராத் முதல்வராக இருக்கும் போதும் பலமுறை அரசுமுறைப் பயணமாக சீனா சென்று வந்திருக்கிறார். அண்மையில் சீன அதிபர் மாமல்லபுரம் வந்தது போல் இந்தியாவும் சீனாவும் இதற்கு முன்னர் இவ்வளவு நெருக்கமாக இருந்ததில்லை. அப்படி இருக்கும் போது வழக்கமான எல்லை மோதல் இந்த முறை இவ்வளவு தீவிரமாக போனதன் காரணம் என்ன?

இந்த விதயத்தில் இந்தியா தடுமாறுகிறது என்பது தெளிவு. காஷ்மீருக்கான 370 நீக்கப்பட்ட பிறகு பாராளுமன்றத்தில் பேசிய அமித்சா உயிரைக் கொடுத்தேனும் பாகிஸ்தான் சீனா விடமிருந்து காஷ்மீர் பகுதிகளை மீட்போம் என்றார். இது ஆர்.எஸ்.எஸ்சின் அகண்ட இந்தியக் கனவு என்று புறந்தள்ளப்பட்டது. இன்றைய எல்லை மோதலைத் தொடர்ந்து, என்ன நடந்திருக்கிறது என்று அரசின் பக்கமிருந்து எந்த விளக்கமும் வருவதற்கு முன்பே அமைச்சர்கள் வெறுப்பை உமிழும் பேச்சுக்களை தொடங்கினார்கள். இராணுவ அமைச்சரான ராம்நாத்சிங் ஒருபடி மேலே சென்று முப்படைகளும் ஆயத்த நிலையில் இருக்கின்றன என்று அறிவித்தார். இப்படி அனைவரும் மக்களை சீன வெறுப்பை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கும் போது தான் மோடி திடீரென்று எந்த ஆக்கிரமிப்பும் நடக்கவில்லை என்றார். இதை வைத்து சீன ஊடகங்கள் உலக அளவில் பரப்புரை செய்யத் தொடங்கிய பிறகே மறுப்பு வெளியிடப்பட்டது.

தேர்தல் நேரங்களிலும், மக்களின் வெறுப்பு அதிகமாகும் போதும் திசை திருப்புவதற்காக ஜாதி மத மோதல்களைத் தூண்டுவதும், தேச வெறியைக் கிளப்புவதும் பாஜகவின் வாடிக்கை, நாடாளுமன்ற தாக்குதல் தொடங்கி புல்வாமா வரை அதற்கு ஏராளம் எடுத்துக்காட்டுகள் உண்டு. கொரோனாவுக்கு எதிராக மிகவும் அறுவெறுக்கத்தக்க அளவில் தோல்வியடைந்திருப்பதும், பொருளாதாரத்தை மீட்க வழி தெரியாமல் இருப்பதுமான குழப்பத்தில் இருந்த போது, எல்லை மோதல் கிடைத்ததும் அதை மக்களை மடைமாற்ற பயன்படுத்தினார்கள். அதேநேரம் ஒரு எல்லைக்கு அப்பால் இந்த சீன வெறுப்பை கொண்டு செல்லவும் முடியாது.

எப்படி அமெரிக்காவின் அடியாளாக, பிராந்திய வல்லரசாக இருப்பதன் மூலம், (இராணுவ தளவாட உற்பத்தி தனியார்மயம் மூலம்) அம்பானி அதானி போன்ற தரகு முதலாளிகள் பலனடைகிறார்களோ, அதே போல உற்பத்திப் பொருட்களின் உலகச் சந்தையைக் கைப்பற்றுவதில் சீனாவின் ஆதிக்கம் தொடர்வதினால் அடுத்தகட்ட இந்திய முதலாளிகள் சீன முதலாளிகளுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருப்பதன் மூலம் பலனடைந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் சங்கிகளின் சீனப் பொருட்கள் புறக்கணிப்பு ‘கோ கொரோனா கோ’ போல சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

எனவே, போர் போர் என்று யார் முழங்கினாலும், சீன வெறுப்பை திட்டமிட்டுக் கட்டமைத்தாலும் எந்த முதன்மைத் தனமும் இல்லாமல் இந்த எல்லை மோதல் பிரச்சனை கடந்து செல்லும். ஆனால், இதில் இழக்கப்பட்டிருக்கும் இருபது உயிர்களுக்கு யார் பொறுப்பேற்பது? இந்தியா, சீனா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் ஆயுதங்கள் வாங்குவதில் தங்கள் பொருளாதாரத்தை பெருமளவில் செலவு செய்கின்றன. ஆனால் போர்களின் தேவை குறைந்து கொண்டே செல்கிறது. உலகச் சந்தையை கைப்பற்றுவதும், மறு பங்கீடு செய்வதும் போர்களின் மூலம் நடத்துவது என்பது பெரும் பொருட் செலவையும், வளங்கள் அழிக்கப்படுவதையும், உழைப்புச் சக்தியை குறைப்பதையும் கோரும் விதமாக மாறி இருக்கிறது. எனவே கார்ப்பரேட்டுகள் போர்களுக்குப் பதிலாக வேறு உத்திகளுக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அடைப்படையில் இராணுவத்தின் பயன் என்ன?

உள்நாட்டு இராணுவமான காவல்துறை, குற்றங்களைக் குறைப்பது, தடுப்பது என்ற பெயரில் அரசுக்கு எதிராக போராடுவோரை, செயல்படுவோரை, சிந்திப்போரை ஒடுக்குவது என்று வெளிப்படையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோல, நாட்டு எல்லையை பாதுகாப்பது என்ற பெயரில் அரசியல் தேவைகளுக்காக பலி கொடுக்கப்படும் பலியாடுகளாக இராணுவம் மாறிக் கொண்டிருக்கிறது. இதைப் புரிந்து கொள்வது தான் இது போல எல்லை மோதல்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். இதை ஏற்ற வழிகளில் மக்களுக்கு புரியவைப்பதே செய்ய வேண்டிய செயல். மாறாக, இராணுவ வீரர்கள் மரணத்தை நாட்டுப் பற்றாக மாற்றுவதும், தேசிய துக்க நாளாக கடைப்பிடிக்கிறோம் என்று கம்யூனிஸ்டுகள் என்று தங்களை அழைத்துக் கொள்வோரே அறிவிப்பதும் வெட்கக்கேடானவை.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s