
ஒவ்வொறு முறையும் அது மிக நிதானமாக, எல்லையில்லா வெறியுடன் பாய்ந்து குதறுவதும், பின் பதட்டமே இல்லாமல் தன் பற்களில் சொட்டும் குருதியை நாவால் தடவி ருசித்துக் கொண்டு கடந்து செல்வதும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதை அடக்க முடியாது, பாய்ந்து குதறுவதற்காகவே அதை பழக்கி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அது யார் மீது பாய்ந்து சிதைத்து துப்பி இருக்கிறது என்பதைக் கொண்டு (என்கவுண்டர்கள், கழிப்பறையில் வழுக்கி விழுவது போன்ற நிகழ்வுகளில்) பூப் போட்டு வாழ்த்துவதும் (ஜெயராஜ், பெனிக்ஸ் போன்ற நிகழ்வுகளில்) ஆற்றாமையுடன் சமூக வலைத் தளங்களில் கதறுவதும் நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு நடந்து கொண்டிருக்கும் வரை காவல் என்ற பெயரில் உலவும் அந்த கொன்றுண்ணி விலங்குகளை அடக்க முடியாது.
கடையை அடைக்கச் சொன்னதினால் ஏற்பட்ட பிரச்சனை கொலை வெறியை ஏற்படுத்துமா? என்று அப்பாவியாக கேட்பவர்கள் செவ்வாய் கோளிலிருந்து தான் வந்திருக்க வேண்டும். அது இங்கே அன்றாடம் நடந்து கொண்டிருக்கிறது. காக்கி உடை போட்டு விட்டால் தான் எந்த சட்டத்துக்கும் கட்டுப்பட வேண்டிய தேவை இல்லை என்பதே இங்கு தொடக்கப் பாடம். சாலையில் சென்று கொண்டிருக்கும் வயது முதிர்ந்த பெரியவரைக் கூட – அவர் எந்த தவறும் செய்யாதிக்கும் போது கூட – மரியாதைக் குறைவாக விழிப்பது தான் இங்கே வாடிக்கை. போராடிய மக்களை கார்ப்பரேட் முதலாளிக்காக துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு எந்த உருத்தலும் இல்லாமல், எந்தவித விசாரணையும் இல்லாமல், எள்ளளவு நடவடிக்கையும் இல்லாமல் இயல்பாக இருக்க முடியும். புகைப்படக் கருவிகள் காட்சிகளை பதிவு செய்கின்றன என்ற உணர்வு சிறிதும் இன்றி போக்குவரத்து வண்டிகளை அடித்து நொறுக்குவதையும், தீவைத்து எரிப்பதையும் செய்து விட்டு அதற்காக கொஞ்சமும் குற்ற உணர்வின்றி வேலையில் நீடிக்க முடியும். முறையீடு செய்ய வந்த பெண்ணை கும்பலாக பாலியல் வன்புணர்வு செய்து விட்டு பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதே திருட்டு வழக்கு பதிவு செய்து சிறையிலடைக்க முடியும். திருந்தி வாழ நினைக்கும் திருடர்களை மிரட்டி கொள்ளையடிக்க வைத்து அதில் பெரும்பகுதியை சுருட்டிக் கொள்ள முடியும். இன்னும் கற்பனைக்கு எட்டாத வடிவங்களில் எல்லாம் சட்டம் குறித்த உருத்தலே இல்லாமல் நடந்து கொண்டு, காவல்துறை உங்கள் நண்பன் என்று கூசாமல் விளம்பரம் செய்ய முடியும். எனவே, இரண்டு பேரை தாக்கி கொன்றுவிட்டு வெகு இயல்பாக கடந்து செல்வது என்பது இங்கு காவல் துறைக்கு கடினமானது இல்லை.
காவல்துறை மட்டும் தான் இப்படி உலவுகிறது என்று சுருக்கிவிட முடியாது. நீதித் துறை இதற்கு கொஞ்சமும் இளைத்ததல்ல. இதுவரை வழங்கியிருக்கும் தீர்ப்புகளில் எதையாவது மக்கள் நோக்கில் மதிப்பாய்வு செய்ய முடியுமா? வெளிப்படையாக கணக்குகளில் தவறு செய்து வெளியிட்ட தீர்ப்பை நீக்கம் செய்ய முடிந்திருக்கிறதா? அந்த தவறுகளுக்காக கேள்வி எழுப்ப முடிந்திருக்கிறதா? மக்கள் நோக்கில் என்பதெல்லாம் அதிகப்படியான நம்பிக்கை, குறைந்த அளவு சட்டப் படியாகவாவது தீர்ப்பு அமைந்திருக்கிது என்று அலச முடியுமா? வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்புகளெல்லாம் சட்டத்தின் விதி விலக்குகளை எவ்வளவு நுணுக்கமாக கையாளமுடியும் எனும் ஆய்வின் விளைவுகளாகவே இருக்கின்றன. தந்தை மகனான ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இந்த வழக்கையே எடுத்துக் கொள்ளலாம். காவல் நிலையத்தில் கொடுமையாக தாக்கப்பட்டு, உயிர் போகும் நிலையில், இரத்தம் சொட்டும் அளவில் கொண்டு வரப்பட்டிருப்பவர்களை குறிப்பிட்ட அந்த நீதிபதி (அல்லது நடுவர்) என்ன விசாரித்தார்? நீதிமன்றக் காவலில் வைக்கும் அளவுக்கு சாட்டப்பட்டிருக்கும் குற்றம் இருந்தால் மட்டுமே நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும். சாட்டப்பட்டிருக்கும் குற்றம் நிகழ்ந்ததற்கான வாய்ப்பு என்ன? என்று ஆராயப்பட வேண்டும். அவ்வாறான ஆதாரங்களை திரட்டுவதற்காகத் தான் 24 மணி நேரம் காவல்துறைக்கு நேரம் வழங்கப்படுகிறது. கைது செய்யப்படும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஒழுங்காக பின்பற்றப்பட்டிருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் எந்த நீதிபதியும் தன் முன்னால் நிறுத்தப்படும் எளிய மக்களிடம் மேற்கண்ட எதையும் உறுதிப்படுத்துவதில்லை. 15 நாட்கள் நீதிமன்றக் காவல் என்பதைத் தவிர வேறெந்தச் சொல்லையும் நீதிபதிகள் வீணாக உதிர்த்து விடுவதில்லை.
நீதிபதியிடம் நிறுத்தப்படுவதற்கு முன் ஒரு மருத்துவர் ஆய்வு செய்து உடலில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்று சான்றளிக்க வேண்டும். பிரச்சனை இருந்தால் அதற்கான காரணத்தை பதிவு செய்ய வேண்டும். ஆனால் பெரும்பாலும் குற்றம் சாட்டப்பட்டவரை மருத்துவர்கள் நேரில் பார்ப்பதே இல்லை. அல்லது, சடங்காக பார்ப்பது என்பது தான் நடப்பாக இருக்கிறது. இரத்தம் சொட்டும் நிலையில் கொண்டுவரப் பட்டவர்களுக்கு ‘நார்மல்’ என சான்றளித்தால் அந்தக் குற்றத்தில் மருத்துவரும் உடந்தை என்பது தானே பொருள்.
சிறைக்குள் கொண்டு வரப்படும் ஒருவருக்கு தாக்குதல் காயங்கள் இருந்தால் அவரை மருத்துவமனைக்குத் தான் அனுப்ப வேண்டும், சிறைக்குள் அனுமதிக்கவே கூடாது என்பது தான் விதி. ஆனால் நடப்பது என்ன? காவல்துறை கொன்றுண்ணி விலங்காக திரிவதற்கு இவை தான் அடிப்படையாக இருக்கின்றன. எனவே, நீதிபதி, மருத்துவர், காவல் அதிகாரிகள் என அனைவர் மீதும் கொலை, கொலைக்கு உடந்தையாக இருந்தது போன்ற பிரிவுகளில் வழக்கு தொடுத்து சிறையில் அடைக்க வேண்டும்.
இந்தப் படுகொலைகள் தமிழ்நாடு முழுவதும் விவாதத்தை கிளப்பி விட்டிருக்கும் இந்த நிலையிலும் கூட காவல்துறையும் அரசும் எப்படி நடந்து கொண்டிருக்கின்றன? பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், கொலை வழக்கு பதிவு செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்கிறார்கள். இது அவர்களின் நியாயமான கோரிக்கை. இந்தக் கோரிக்கைக்கு பதில் கூற மறுக்கும் காவல்துறையும் அரசும், செய்திருப்பது என்ன? காவல்துறை கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களை காவல் நிலையத்தில் பிடித்து வைத்து உடல்களை வாங்குமாறு கட்டாயப்படுத்துகிறது. இதை பெலிக்ஸின் சகோதரி கூறியிருக்கிறார். அரசோ, அந்த மாவட்டத்தின் அமைச்சரையும், கொலை செய்யப்பட்டவர்கள் கடை நடத்தியவர்கள் என்பதால் வணிகர் சங்கத் தலைவரையும் அனுப்பி உடல்களை வாங்கி அடக்கம் செய்யுமாறு சமாதானம் பேசுகிறது.
தொடர்புடைய ஒரு துணை ஆய்வாளரும், ஒரு தலைமைக் காவலரும் முதலில் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பதாக, அதையே தண்டனையாக முதலில் காட்டியது அரசு. எதிர்ப்புகள் வலுத்ததும் இடை நீக்கம் செய்திருக்கிறது. இடைநீக்கம் என்பது என்ன? ஊதியத்துடன் கூடிய விடுமுறை. இதன் பெயர் தான் தண்டனையா? அரசின் பக்கமிருந்து கொலையுண்ட ஒருவருக்கு பத்து லட்சம் வீதம் இருபது லட்ச ரூபாய் இழப்பீடும், ஒருவருக்கு அரசு வேலை என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால் இந்தப் பிரச்சனை பெரிதாகி அரசாங்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு வந்து விடக்கூடாது, போராட்டம் எதுவும் நடந்து விடக் கூடாது என்பது மட்டும் தான். மற்றப்படி குற்றம் செய்தவர்கள் மீது எந்தவித நெருக்குதலும் கிடையாது. தெளிவாகச் சொன்னால் காவல் துறை அப்படித் தான் நடந்து கொள்ளும், கொல்லும். அதற்கு இலக்காகாமல் நடந்து கொள்ள வேண்டியது மக்களின் பொறுப்பு. இது தான் அரசாங்க அறிவிப்பின் பொருள்.

காவல்துறை இப்படித்தான் நடந்து கொள்ளும், அரசும், அரசாங்கமும் இப்படித்தான் நடந்து கொள்ளும் என்பது அரசு குறித்த புரிதல் உள்ள யாவருக்கும் தெரிந்தது தான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இருவர் கொலை செய்யப்பட்ட இந்த நிகழ்வில் கருத்து கூறிய அனைவரும் இந்த எல்லையில் நின்று விடுகிறார்கள். ஆனால் இந்த எல்லையைக் கடந்து இன்னும் செல்ல வேண்டியிருக்கிறது. 1. காவல்துறையும் நீதிமன்றமும் இணைந்து செயல்படும் கள்ளக் கூட்டை உடைப்பது எப்படி? 2. இது போன்ற கொடூரங்கள் அன்றாடம் நடந்து கொண்டிருந்தும் ஏன் மக்கள் இதற்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடவில்லை? (அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டுக்காக மக்கள் போராடியதைப் போல் என்று ஒப்பீடாக கூறிக் கொள்ளலாம்) இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடுவது தான் மக்கள் மீது பற்றுதல் கொண்டிருப்பவர்களுக்கான கடமை.
இந்தியாவை பொருத்தவரை குறிப்பாக தமிழகத்தில் சிறைகள் நிரம்பி வழிகின்றன. இதில் பெரும்பாலானவர்கள் விசாரணைக் கைதிகளே. அதிலும் குறிப்பாக சிறுபான்மையினரும், தாழ்த்தப்பட்டவர்களுமே பெரும்பான்மையினர். தண்டனை பெற்று சிறையில் இருப்போர் மிகவும் குறைவே. தண்டனை பெற்றவர்களானாலும், விசாரணைக் கைதிகளானாலும் பொய் வழக்கு போடப்படாதவர்கள் என்று யாருமே இல்லை. அனைவர் மீதும் பொய் வழக்கு போடப்பட்டிருக்கிறது. மெய்யான குற்றவாளிகளுக்கு அவர்கள் செய்த குற்றங்களை விட மேலதிகமாக பொய் வழக்கு போடப்பட்டிருக்கும், விசாரணக் கைதிகள் மீதோ கற்பனையான வழக்குகள் புனையப்பட்டிருக்கும். இது காவல்துறை, நீதித்துறை கள்ளக் கூட்டினால் அரசு செய்திருக்கும் அத்துமீறல். அரசு அப்படித் தான் இருக்கும் என்பதற்கு அப்பாற்பட்டு அவர்களே கூறிக் கொள்ளும் உரிமைகளை மக்கள் அடையச் செய்ய வேண்டாமா? காவல் துறையும், நீதித்துறையும் அரசு மக்களுக்கு வழங்கியிருப்பதாக கூறப்படும் உரிமைகளை மக்கள் பெறுவதற்கு ஆவன செய்தால் மக்கள் போராட்டத்தின் பக்கம் அணி திரள்வார்கள். உரிமைகளுக்கு குரல் கொடுக்க அஞ்சும் மனோநிலையை ஏற்படுத்தியதில் காவல்துறை மீதான பயம் முதன்மையான பங்கு வகிக்கிறது. காவல்துறை நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்து விட முடியும் எனும் எண்ணம் மக்களிடம் படிந்திருக்கிறது. இதை உடைப்பது இன்றைய தேதியில் இடதுசாரிகளின் இன்றியமையாத கடமையாக இருக்கிறது.
மட்டுமல்லாது, இடதுசாரிகள் சிறுபான்மையினரோடும், தாழ்த்தப்பட்டவர்களோடும் ஒன்றைணைந்து நிற்பதற்கு இது மிகவும் தவிர்க்கவே முடியாத ஒரு விதயமும் ஆகும். ஊரூராக, சிற்றூர்களையும் விடாமல் விசாரணைக் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருப்போர், அவர்கள் மீதான பொய் வழக்குகள் உள்ளிட்ட அத்தனை தகவல்களையும் திரட்டி பொது வழக்காகவும், தனித்தனி வழக்குகளாகவும் தொடர்புடைய அத்தனை காவல்துறையினர் மீதும் வழக்கு தொடுக்க வேண்டும். பெரிதாக ஒன்றும் ஆகப் போவதில்லை என்பது மேலோட்டமான பதில். ஆயிரக் கணக்கில், லட்சக் கணக்கில் வழக்குகள் தொடுக்கப்படும் போது அது பொது விவாதமாக மாறும். பதில் கூறாமல் தள்ளிப்போட முடியாது. நீதி மன்றம் இவைகளை கணக்கில் எடுத்துக் கொண்டே ஆக வேண்டும் எனும் கட்டாய சூழல் உருவாகும். மட்டுமல்லாமல், காவல்துறையினர் மீது அத்தனை வழக்குகள் பதியப்பட்டு நிலுவையில் இருக்கும் போது அவர்களுக்கு பணி உயர்வு, ஊதியக் கொடை உள்ளிட்ட சலுகைகள் தள்ளிப்போகும். அதற்கு பயந்தாவது கொஞ்சமேனும் மனிதத் தன்மையின் பக்கம் மாறுவார்கள். இடதுசாரிகள் சிந்திக்கத் தொடங்கினால் இன்னும் அதிக வாய்ப்புகள் கதவுகளை திறக்கக் காத்திருக்கின்றன.
அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் எனும் இளைஞன் காவல்துறையால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பேதமில்லாமல் அமெரிக்க மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளை மாளிகையை கைப்பற்றும் அளவுக்கு அது சென்றிருக்கிறது. இங்கு அன்றாடம் நடக்கும் அது போன்ற கொலைகளுக்கு எதிராக அவ்வாறான போராட்டம் ஏன் நடப்பதில்லை? போராட்டம் என்பது மக்களின் அரசியல் வெளிப்பாடு. இது எனக்கான உரிமை என்று உணர்ந்திருப்பதன் வெளிப்பாடு. இது வெளிப்பட வேண்டுமென்றால் மக்களின் வாழ்நிலை அதை அனுமதிக்க வேண்டும். கோடிக்கணக்கான மக்களை உணவு, வேலை, குறைந்தபட்ச தேவை இவைகளைத் தாண்டி சிந்திக்க முடியாதபடி அவர்களின் வாழ்நிலை அவர்களை அழுத்திக் கொண்டிருக்கிறது. நாளை உணவுக்கு என்ன செய்வது என்று என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் யாராலும், மாநில அரசின் உரிமையை மைய அரசு பறிப்பது குறித்தோ, அதனால் தன் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது என்பது குறித்தோ சிந்திக்க முடியாது. பொருளாதார அடிப்படையில் மேம்பட்டு இருப்பவர்களை அவர்களின் வர்க்கம் காரணமாக ஒதுக்கி விடலாம். உழைக்கும் மக்களைப் பொருத்தவரை அடித்தட்டு மக்களும், சற்று மேம்பட்ட நிலையில் இருப்பவர்களும் இந்த வாழ்நிலையாலேயே பீடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கும் அரசுக்கும் இடையேயான மோதல் கருத்து வயப்பட்டதாகத் தான் இருக்கிறதே அன்றி பொருள்வயப்பட்டதாக இல்லை. ஒன்று உணவு குறித்த கவலை, அன்றி இருக்கும் உணவை மகனுக்கு வேலை கிடைப்பதன் மூலம், மகளுக்கு சிக்கல்களற்ற வாழ்வை அமைத்துக் கொடுப்பதன் மூலம் தக்க வைப்பது குறித்த கவலை. இதற்கு வெளியே கூறப்படும் அனைத்தும் கருத்தியல் குறிப்பாகத் தான் பதிகிறது. இளைஞர்களோ வேலை கிடைப்பது ஒன்றே தன் வாழ்வில் இறுதி இலக்கு என்பது போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் கவலை குறித்து கவலைப்படாமல் போராட்டம் குறித்து பேசும் எதுவும் இவர்களை அசைக்காது. அவர்களிடம் அரசியல் பேசலாம், அவர்களின் இந்த நிலைக்கு காரணத்தை புரிய வைக்க முயலலாம். அவ்வாறு புரியவைப்பதன் மூலம் புரிந்து கொண்டு யாரேனும் செயல்பட வந்தால் அது விதிவிலக்காக இருக்குமேயன்றி, பொதுவாக இருக்காது.
பலநூறு ஆண்டுகளாக இங்கே மக்களின் பொருளாதாரம் சுரண்டப்பட்டு வந்திருக்கிறது. சுரண்டல் எனும் சொல் இந்த இடத்தில் பொருந்தாது. முற்றிலுமாக அவர்களின் பொருளாதாரம் அடித்து நொறுக்கப்பட்டு, ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டு, அதன் மூலம் அவர்களின் கல்வியும், அறிவும் அழிக்கப்பட்டு, உணவையும் குறைந்த பட்ச மரியாதையும் இரந்து பெறும் நிலைக்கு, அரசும் அதன் அத்தனை உறுப்புகளும் அவர்களை ஒடுக்கி வைத்திருந்த சமூகம் இது. இது ஜாதியாக, மதநீதியாக, மநுநீதியாக படிந்து போயிருக்கும் சமூகம் இது. வாழ்வாதாரம் குறித்த பயம் அவர்களின் பலநுறு ஆண்டு வரலாறுகளில் படிந்திருக்கிறது. அந்த பயத்தை சிலமுறை அரசியல் பேசுவதன் மூலம், அதையும், அவர்களின் தற்போதைய நிலமைகளுக்கு ஏற்ப பேசுவதன் மூலம் போக்கிவிட முடியாது. உயிர்வாழ இதைவிட வேறு வழியில்லை என்ற நிலையில் இருத்தியிருக்கும் வாழ்வாதாரத்தை, இப்போதும் அரசு நினைத்தால் இல்லாமல் ஆக்க முடியும் எனும் யதார்த்தத்தை மாற்ற வேண்டும்.
நாட்டில் இன்னமும் பெரும்பாலானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கும் விவசாயம் அரசினால் அழிந்து போய்க் கொண்டிருக்கிறது. நம் வாழ்வாதாரத்தைக் காக்க அரசை எதிர்த்து போராட வேண்டும் எனும் உந்துதல் விவசாயிகளுக்கு வரவில்லை. காரணம், அரசின் தயவினால் வேறு வாய்ப்புகளின் மூலம் வாழ்ந்து விட முடியும் எனும் நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அரசு அவ்வாறான வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறதா? இல்லையா? என்பதல்ல. அரசின் மூலம் வாழ்ந்து விட முடியும் எனும் நம்பிக்கை தான் முதன்மையானதாக இருக்கிறது. இதை வேறொரு கோணத்திலிருந்து பார்த்தால், கார்ப்பரேட்டுகளுக்காக, முதலாளிகளுக்காக இயங்கும் அரசின் தயவு இல்லை என்றால் நம்மால் வாழ முடியாது எனும் எண்ணம் நுணுக்கமாக மக்களிடம் இருக்கிறது. இதில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் கருத்தளவில் மார்க்சியம் பேசுவதால் என்ன பயன் கிடைத்துவிடும்?
ஒவ்வொரு உற்பத்தி முறை சமூகத்துக்குள்ளிருந்தும் அதைவிட மேன்மையான உற்பத்தி முறை தோன்றி வளரும். இதை திட்டமிட்ட முறையில் முதலாளித்துவம் முடக்குகிறது. இந்தியாவில் உற்பத்தி முறையின் வளர்ச்சி இயல்பாக மாற்றமடையவில்லை. அது தேக்கப்பட்டு இருக்கிறது. இதில் இடதுசாரிகள் உடைப்பை ஏற்படுத்த வேண்டும். குழம்பிய குட்டையாக இருக்கும் இந்த உற்பத்தி முறையில் சோசலிச உற்பத்தி முறையையும், அந்த பண்பாட்டு உறவை பழக்கமாகவும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இதைச் செய்யாமல் எந்தப் போராட்டத்தையும் மக்கள் நடத்த மாட்டார்கள். இதற்கான வழிகளை ஆய்வு செய்யாமல், உருவாக்காமல் மக்களுக்கும், இடதுசாரிகளுக்கும் வாழ்வில்லை.