தீயது ஆரியமா? பிராமணியமா?

வால்கா முதல் கங்கை வரை நூலை அடிப்படையாகக் கொண்டு யோகேஷ் என்பவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பேராசிரியர் அ. கருணானந்தன் அவர்கள் அளித்துள்ள பதில்கள் குலுக்கை வலைக்காட்சியில் வெளியாகியுள்ளது. ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்தும் வரலாற்று உரை. இதை வால்கா முதல் கங்கை வரை எனும் ராகுல சங்கிருத்தியாயனின் நூலுக்கான விமர்சனம் என்றும் கொள்ளலாம். தவறவிட்டு விடாதீர்கள். இதன் தொடர்ச்சியாக இன்னும் சில காணொளிப் பதிவுகளும் உள்ளன. அவைகளையும் சேர்த்துப் பாருங்கள்.

எழுப்பப்பட்ட கேள்விகள்,

1. ஆரியர்களிடையே ஏற்றத்தாழ்வுகள், பிரிவுகள் இருந்ததில்லை. அடிமைத்தனத்தை வெறுத்ததுடன் அதனை ஒழிக்க முயன்றனர். ஆனால், அசுரர்களிடையே (திராவிடர்களிடையே) தொழில் அடிப்படையில் பிரிவுகள், ஏற்றத்தாழ்வுகள், அடிமை வியாபாரம், வேசித் தொழில் அனைத்தும் இருந்தன. எனில், இன்றைய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அடிமைத்தனத்திற்கு ஆரியர்களை எங்ஙனம் குற்றப்படுத்த இயலும்?

2. ஏற்றத்தாழ்வுகளை வெறுத்த ஆரியர்கள் அடிமை வியாபாரமும், வேசித் தொழிலும் செய்யும் அசுரர்களை தங்களுக்கு கீழானவர்களாக நினைத்தது இயல்புதானே?

3. அசுரர்களிடைய பல்வேறு தொழில் செய்யும் திறமைசாலிகள் இருந்தாலும் அவர்கள் போர் வீரர்களை விட கீழானவர்களாக கருதப்பட்டதும், சிற்பிகளும், விவசாயிகளும்கூட பாதி அடிமைகளாக நடத்தப்பட்டதுமான அசுரர்களின் ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பே அவர்கள் ஆரியர்களிடம் வீழ காரணமாக இருந்தது. இந்த ஏற்றத்தாழ்வான சமூகம் ஆரியர்கள் அல்லாத ஒரு சமூகத்திடமும் வீழத்தானே செய்யும்?

4. தங்கள் தலைவனான இந்திரன் தங்களைவிட அதிகாரமிக்கவனாக ஆக விரும்பியதால் இந்திரப் பதிவியையே ரத்து செய்தார்கள் ஆரியர்கள். ஆனால், அசுரர்களோ அரசனை கடவுளைப் போல் போற்றினார்கள். சுயமரியாதை விஷயத்தில் அசுரர்களைவிட ஆரியர்கள் மேம்பட்டவர்கள் என்பதை இது உணர்த்தவில்லையா?

5. ஆரியர்கள் அசுரர்களுடன் நேரடியாகப் போரிட்டு அவர்களை கொன்றழிக்கிறார்கள். பெண்கள், வயதானவர்கள், குழந்தைகளுக்கு தீங்கு செய்யாமல் ஆண்களை மட்டும் அழிக்கிறார்கள். ஆரியர்கள் வஞ்சகத்தால் அசுரர்களை வென்றார்கள் என்ற வரலாறும், ஆரியர்கள் வெறும் புரோகிதர்கள், தொழில் செய்யவோ, போர் செய்யவோ லாயக்கற்றவர்கள், அதனால்தான் வஞ்சகத்தால் அசுரர்களை வீழ்த்தினார்கள் என்ற கதையும் இதன் மூலம் பொய்யாகிறதல்லவா?

6. ஆரியர்கள் அரசனை தங்களின் சேவகனாக கருதினர். அவனுக்கும் மக்களுக்குமிடையே எந்த வேறுபாடும் இருந்ததில்லை. ஆனால் அசுரத் தலைவன் புரோகிதர்களின் உதவியுடன் தன்னை கடவுளுக்கு நிகரானவனாக காட்டி, மக்களைவிட தன்னை மேம்பட்டவனாக ஆக்கிக் கொண்டான். தனது எல்லையற்ற அதிகாரத்துக்காக புரோகிதர்களையும், கடவுளையும் பயன்படுத்திக் கொண்டவர்கள் முதலில் அசுரர்களே என்பதை மறுக்க முடியுமா?

7. லிங்க பூஜையை அறிமுகப்படுத்தியவர்களும், அதனை வழிபட்டவர்களும் அசுரர்கள். ஆரியர்களின் வருகைக்கு முன்பே கடவுள் மீதான அசுரர்களின் கண்மூடித்தனமான முட்டாள்த்தனத்தின் சான்றுதானே இது?

8. ஆரியர்களின் வருகைக்கு முன்பே அசுர சமூகத்தில் புரோகிதர்கள் என்ற பிரிவினர் இருந்துள்ளனர். அவர்கள் அதிகாரமிக்கவர்களாகவும், வஞ்சகர்களாகவும் இருந்துள்ளனர். ஆரியர்களிடையே அப்படியான தனிப்பிரிவு இல்லை என்பதுடன் அசுரர்களின் புரோகிதர்களை அவர்களின் அதிகாரத்தை வெறுக்கவும் செய்தனர். எனில், இன்றைய புரோகித – புரோகிதர்களின் ஆதிக்கத்துக்கு ஆரியர்களை எப்படி குற்றப்படுத்த முடியும்?

9. அசுரர்களைப் பார்த்து ஆயுதங்கள் செய்யவும், படகு ஓட்டக் கற்றுக் கொண்டு கடல் கடந்து வியாபாரம் செய்யவும் ஆரியர்கள் விரும்பினர். அப்படியிருக்க, அ). ஆரியர்களை புரோகித கும்பல் எனவும், பிற தொழில் செய்ய தெரியாதவர்கள் எனவும், அதன் காரணமாக ஏய்த்து பிழைத்தவர்கள் என்பதும் பிழையல்லவா? ஆ). கடல் கடந்து வியாபாரம் செய்ய விளைந்தவர்கள் எங்ஙனம் காலப்போக்கில் கடல் கடந்து செல்வது குற்றம் என்று ஆகம விதி கொண்டு வந்தனர்? இதன் பின்னாலுள்ள அரசியல் என்ன?

10. அரசு அரசிகர்கள் மக்களிடையே தங்களின் அதிகாரத்தை பெருக்கிக் கொள்ள, அவர்களை அடிமைப்படுத்த புரோகிதர்களை பயன்படுத்திக் கொண்டார்கள். அரசனும், புரோகிதர்களும் மக்களைவிட மேலான அதிகாரம் கொண்டவர்களாக இருந்தனர். காலப்போக்கில் அரச வம்சம் ஷத்திரியர்களாகவும், புரோகித வம்சம் பிராமணர்களாகவும் அழைக்கப்பட்டனர். ஆக, அசுர அரச வம்சத்தின் அதிகார மோகமும், அசுர சமூகத்தின் முட்டாள்தனமும், அடிமைத்தனமுமே ஷத்திரிய, பிராமண பிரிவுகள் உருவாகக் காரணம். இதில் ஆரியர்களை எங்ஙனம் குற்றப்படுத்த இயலும்?

11. எந்தவொரு இனக்குழுவும் இன்னொரு இனக்குழுவுடன் சுமூகமாக வாழ விரும்புவதில்லை. பரஸ்பரம் ஒன்றையொன்று வெற்றிக் கொள்ளவே முயற்சி செய்யும். எதிர் இனக்குழுவின் பலவீனங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும். இது இயற்கை. ஆரியர்களும் அசுரர்களை வீழ்த்த அவர்களிடையே இருந்த அரசனை கடவுளாக பாவிக்கும் சுயமரியாதை இன்மையையும், புரோகிதர்களுக்கு தரும் கட்டற்ற அதிகாரத்தையும், அசுரர்களுக்கிடையே நிலைபெற்றிருந்த தொழில்ரீதியான படிநிலைகளையும், அடிமைத்தனத்தையும் பயன்படுத்திக் கொண்டனர். இது இயற்கையான ஒன்று. உலக வரலாறு அப்படித்தான் சொல்கிறது. எனில், ஆரியர்கள் வஞ்சகமாக அசுரர்களை வீழ்த்தினார்கள் என்பது இயற்கைக்கு மாறான குற்றச்சாட்டு அல்லவா? அசுரர்களை வீழ்த்தியது ஆரியர்களின் சூழ்ச்சியா இல்லை அசுரர்களிடையே நிலைபெற்றிருந்த அவர்களின் கீழான நடைமுறைகளா?

பாருங்கள், புரிந்து கொள்ளுங்கள், பரப்புங்கள்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s