பெனிக்ஸ் கொலையின் முடிச்சுகள்

சாத்தான்குளம் தந்தை மகனான ஜெயராஜ் பெனிக்ஸ் படுகொலையில் ஈடுபட்ட காவல் துறையினர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். எதிர்க்கட்சியும், மக்களும், சமூக ஊடகங்களின் பங்களிப்புமே இதை சாத்தியப்படுத்தி இருக்கிறது என்பது மிகையல்ல. என்றாலும் இது மகிழ்வை பகிர்ந்து விட்டு முடித்துக் கொள்ளும் நிலையில் இல்லை. காவலர்களை தவிர இந்தப் படுகொலைகளுக்கு உடந்தையாய் இருந்த மருத்துவர், நீதிமன்ற நடுவர் ஆகியோர் குறித்து எந்த விவாதமும் இல்லாமல், எந்தச் சாட்டும் இல்லாமல், அடக்கப்பட்டிருக்கிறது. இதை நீதி கிடைத்திருக்கிறது என்பதை விட காவல்துறையை முன்தள்ளிவிட்டு மருத்துவத்துறையும், நீதித்துறையும் மறைந்து கொண்டிருக்கிறது என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.

என்றாலும், காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்திருப்பதும் கைது செய்திருப்பதும் வழக்கத்தை மீறிய ஒன்று தான். காவல்துறையின் அத்து மீறல்களை அட்டியின்றி ஆதரிப்பது என்பது எம்ஜிஆர் ஆட்சியில் தொடங்கியது. தேவாரத்தின் கொலைகளை ஆதரித்துப் பேசியவர் எம்ஜிஆர். காவல் என்ற பெயரின் உலவும் விலங்குகள் வாச்சாத்தியில் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த போது, பணத்துக்காக அவ்வாறு புகார் கூறுவதாக சட்டமன்றத்திலேயே அறிவித்தவர் ஜெயலலிதா. எடப்பாடியும் கடைசி வரை சாத்தான்குளம் காவலர்களை காப்பாற்றுவதற்கு முடிந்தவரை முயன்றார்.

மறுபக்கம், நீதிமன்றம் தானாகவே முன்வந்து இந்த வழக்கை எடுத்துக் கொண்டு விசாரணை குழுவை அமைத்தது. விசாரணை நடுவரோ, காவலர்கள் எந்தவித ஒத்துழைப்பையும் தரவில்லை என்றும், ஆதாரங்களை, இரத்தக் கறைகளை அழைக்க முயன்றனர் என்றும், ‘உன்னால ஒண்ணும் புடுங்க முடியாது’ என்று மரியாதைக் குறைவாக நடத்தினார்கள் என்றும் முறையீடு செய்தார். இதனாலே நீதிமன்றம் வெகுண்டெழுந்து கொலை வழக்கில் கைது செய்ய முகாந்திரம் இருப்பதாக கூறியிருக்கிறது என்கிறார்கள். காவல்துறையும், நீதித்துறையும் இந்த வழக்கில் எதிரெதிராக நிற்பதாக, அதனாலேயே நீதி கிடைத்திருப்பதாக எழுதுவோரும் இருக்கின்றனர். அரசின் உறுப்புகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு அதனால் மக்களுக்கு பலன் கிடைக்கும் என நம்புவது மூட நம்பிக்கை போன்றது.

பெனிக்ஸ் ஜெயராஜ் கொலை உலகளாவிய கவனம் பெற்றது அதனால் தான் நீதி கிடைத்திருக்கிறது என்று கருதுவோரும் இருக்கிறார்கள். வரலாறை மறந்து விடக் கூடாது. வீரப்பன் தேடுதல் வேட்டை, வாச்சாத்தி நடப்புகளின் போது இதைவிட கூடுதலாக மக்கள் கவனம் இருந்தது. சற்றேறக்குறைய அன்றிருந்த எல்லா அமைப்புகளுமே இதற்காக போராடின, அந்த நிலையில் தான், ‘அவர்கள் பணத்துக்காக புகார் கூறுகிறார்கள். சட்டம் அவர்களை கவனித்துக் கொள்ளும்’ என்று அடாவடியாக அறிவித்தார் ஜெயலலிதா. அந்தத் திமிரும் பிடிவாதமும் ஜெயலலிதாவுக்கு இருந்தது, எடப்பட்டிக்கு இல்லை என்று நம்பினால் அதைவிட அசட்டுத்தன்மை வேறு இருக்க முடியாது.

பின் ஏன் அவசரம் அவசரமாக காவலர்கள் கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டனர்? அது வெளிவரத் தொடங்கி இருக்கிறது, முழுதும் வெளிவந்து விடக் கூடாது எனும் அச்ச உணர்வு தான். காவல்துறையில் குற்றக் கும்பல்களின் ஊடுருவல் அம்மணப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அதைத் தடுக்கும் நோக்கில் தான் காவலர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை முழுவதுமாக புரிந்து கொள்ள இரண்டு விதயங்களை அலச வேண்டும். 1. இன்றைய இளைஞர்களின் மனநிலை. 2. காவல்துறையின் எதிர்கால நடவடிக்கைகளின் நோக்கம்.

கொலையுண்ட பெனிக்ஸையே எடுத்துக் கொள்வோம். அவரின் முகநூல் பதிவுகளிலிருந்து திமுக காங்கிரஸ் கட்சிகளின் மீதான எதிர்ப்பு, பாஜக மோடியின் மீதான மெல்லிய ஆதரவு போன்றவை வெளிப்படுகின்றன. மட்டுமல்லாது அதிமுக, பாஜகவையும் எதிர்த்து ஓரிரு பதிவுகள் இருக்கின்றன. நாம் தமிழர் மீதான மெலிதான பற்றுதலும், அவர்களுக்கு ஓட்டுப்போடலாமா எனும் போது கேலியும் வந்திருக்கிறது. மட்டுமல்லாது, தூத்துக்குடியில் மக்கள் பெரிதும் பங்கு கொண்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கேலி செய்தார் என்றும், துப்பாகிச் சூட்டின் பிறகு அது அவர்களுக்கு தேவை தான் என்றும் கூறியதாக அறிய முடிகிறது. இந்த கலவையான தகவல்களிலிருந்து என்ன முடிவுக்கு வர முடிகிறது? அரசியல் போதாமை, அரசியல் குறித்த தேடல் இல்லாமை, ஓட்டுக் கட்சிகளைத் தாண்டி அரசியல் என்று எதுவுமில்லை எனும் அரைகுறை புரிதல், எதையும் தேடி ஊன்றி நிற்க முயலாமை, இதற்கு இசைந்தாற் போன்ற உடனடி சிக்கல்கள் ஏதுமில்லாத பொருளாதார சூழல். இது தான் பெனிக்ஸின் மனநிலை. பெனிக்ஸ் மட்டுமல்ல இன்றைய இளைஞர்கள் பெரும்பாலானோரின் மனநிலை இது தான்.

இதற்கு மறுபக்கமாக வேலையில்லாத் திண்டாட்டம். பெரும்பாலான இளைஞர்களுக்கு வேலை இல்லை. வேலை கிடைப்பதற்காக எதையும் செய்ய ஆயத்தமாக இவர்கள் இருக்கிறார்கள். இது அரசுக்கு, ஆளும் வர்க்கத்துக்கு மிக விருப்பமான, மிகவும் ஏற்ற ஒன்று. ஆளும் வர்க்கத்தின் கருத்துகள் மிக எளிதாக இவர்களைச் சென்று சேரும். இது அரசை, அதன் செயல்களை, அதன் திட்டமிடல்களை ஆழமாக புரிந்து கொள்வதை தடுத்து, தான் எனும் உணர்வை உருவாக்கி விடுகிறது. சமூகமாக இணையும் எண்ணத்தை மழுங்கடிப்பதும், சிறுசிறு குற்றங்களை தீரச் செயல்களாக (அட்வென்சர்) உணர்வதுமாக மாறுகிறது. காவல்துறையில் சேரும் இளஞர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள். ‘உன்னால ஒரு மயிரையும் புடுங்க முடியாதுடா’ என்று தன்னை விசாரிக்க வந்த நீதித்துறை நடுவரை கூறிய அந்த இளைஞனை இப்படித்தான் புரிந்து கொள்ள முடிகிறது. தூண்டி விட்டால் எதையும் செய்வார்கள்.

அடுத்து, காவல்துறையின் செயல்பாடுகள் திட்டங்களில் பல கேள்விகள் இருக்கின்றன. காவல்துறை என்பது மாநில கட்டமைப்புக்குள் இருக்கின்ற சட்ட ரீதியிலான ஒரு துறை. இதன் ஒரு பிரிவாக இருக்கின்ற உளவுத் துறைக்கு எவ்வளவு செலவாகிறது? என்னென்ன விதங்களில் செலவிடப்படுகிறது? என்பன போன்ற வரைமுறைகள் எதுவுமின்றி இரகசிய நிதியாக ஒதுக்கடுகிறது. இதேபோல ஃபிரென்ட்ஸ் ஆஃப் போலிஸ் எனப்படும் பிரிவும் ஏன் துவக்கப்பட்டது? அதன் செயல்பாடுகள் என்ன? எவ்வளவு நிதி இதற்காக ஒதுக்கப்படுகிறது? இதில் சேர்வதற்கான விதிமுறைகள் என்ன? தற்போது எவ்வளவு பேர் என்னென்ன பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்? அவர்களுக்கு ஊதியம் கொடுக்கப்படுகிறதா? என்ன அடிப்படையில்? என்பன போன்ற எந்த விவரங்களும் வெளிப்படையாக இல்லை.

தற்போது சிபிசிஐடி தலைவராக இருக்கும் பிரதீப் வி. பிலிப் என்பவர் இந்த அமைப்பை 1993ல் தோற்றுவித்திருக்கிறார். தோராயமாக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 20 பேர்வரை இந்த கா.ந (காவல்துறையின் நண்பர்கள்) இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கா.ந அமைப்பில் சேவா பாரதி எனும் ஆர்.எஸ்.எஸின் துணை அமைப்பு நிறைந்திருப்பதாக செய்திகள் கிடைக்கின்றன. இது உறுதி செய்யப்படாத தகவல் தான் என்றாலும் உறுதி செய்ய கடமைப்பட்டவர்களான அரசு இந்த விதயத்தில் தொடர்ந்து அமைதியாக இருப்பது, இதை ஒதுக்கி விட முடியாது எனும் நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் இது போல சல்வாஜூடும் எனும் அமைப்பு இயங்கி வந்தது. பின்னர் நீதி மன்றம், அந்த அமைப்புக்கு சட்ட மதிப்பு கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டபின் அந்த அமைப்பு கலைக்கப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாக அந்த அமைப்பு செய்து வந்த கொடூரச் செயல்கள் மீது எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. ஹிட்லரின் காவல்துறையும் சட்ட அனுமதியோடு தான் இயங்கியது என்றாலும் நூரம்பர்க் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. மேலதிகாரியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டோம் எனும் வாதம் அங்கு ஏற்கப்படவில்லை, தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் சல்வாஜூடும் அமைப்புக்கு அவ்வாறான எந்த நடவடிக்கையும் இன்றி வெறுமனே கலைக்கப்பட்டது. இன்னும் அவர்கள் வேறு பெயர்களில் இயங்கிக் கொண்டிருக்கலாம். இதே போன்று 2003ல் மத்திய பிரதேசத்தில் சேவா பாரதி அமைப்பு வெடிகுண்டி தயாரித்ததாகவும், கிருஸ்தவர்களுக்கு எதிராக கலவரம் செய்ததாகவும் ஆதாரபூர்வமாக வெளியிட்டு அந்த அமைப்பை தடை செய்யவிருந்தார் திக் விஜய் சிங். 1999ல் ஒரிஸ்ஸாவில் ஏற்பட்ட புயலின் போதும், 2001ல் குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போதும் சேவை செய்வதாக கூறிக் கொண்டு நன்கொடை திரட்டி அதை ஆர்.எஸ்.எஸ் மூலம் சிறுபான்மையினருக்கு எதிராக பயன்படுத்தினார்கள் என்பதையும் அப்போதைய பிரண்ட்லைன் இதழ் அம்பலப்படுத்தியது. இப்போது அதே போல் தமிழ்நாட்டிலும் கா.ந அமைக்கப் பட்டிருப்பது குறித்தும், அதில் சேவா பாரதி அமைப்பு பெரும்பங்கு வகிப்பது குறித்தும் கேள்விகள் எழுந்திருக்கின்றன. அதிலும் சமூக விரோதிகள், சாதிவெறியர்கள் கா.ந வில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.

காவல்துறைக்கு இதுபோன்ற சட்டத்துக்கு அப்பாற்பட்ட அமைப்புகள் ஏன் தேவைப்படுகின்றன? சட்ட்ம் ஒழுங்கை பராமரிக்க என்று காரணம் கூறப்பட்டாலும் காவல்துறையின் முதன்மையான வேலை அரசுக்கு எதிராக செயல்படுவோரை கண்டறிந்து ஒடுக்குவது தான். அரசின் உறுப்புகள் அனைத்தும் இப்படி முதன்மையான அதேநேரம் மறைமுகமான நோக்கத்துக்காகத் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. என்றாலும் வழமையான குறிப்பிட்ட சட்டவரைக்குள் இயங்கும் அமைப்புகளைக் கொண்டு முதன்மையான, மறைமுகமான நோக்கங்களை நிறைவேற்றுவதில் ஏற்படும் போதாமையை சரி செய்வதற்காகவே இது போன்ற சட்டத்துக்கு அப்பாற்பட்ட அமைப்புகள் தேவைப்படுகின்றன.

இதேபோன்ற தேவை வலது பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் இருக்கிறது. நாட்டை அகண்ட பாரதமாகவும், மநுநீதி அடிப்படையிலும் மாற்றியமைப்பது எனும் நோக்கத்துக்காக அரசு எந்திரத்துக்குள் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. அதன் அரசியல் வடிவமான பாஜக ஆட்சியில் இருப்பதை அதிலும் குறிப்பாக பெரும்பான்மையுடன் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு விரைவாக அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டு வருகிறது. உபியில் வெளிப்படையாக இயங்கி சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக வெறியாட்டம் ஆடிக் கொண்டிருப்பதும், அண்மையில் தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராடியவர்கள் மீதான வெறியாட்டத்திலும், இன்னும் பசுக்காவலர்கள் என்ற பெயரில் நடக்கும் கொடூரங்களிலும் இவர்கள் தான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதுபோலவே, அரசியல்வாதிகளுக்கு அந்தத் தேவை இருக்கிறது. மக்களிடம் எந்தச் செல்வாக்கும் இல்லாமல், தேர்தல் நேரத்தில் பணத்தைக் கொடுத்து ஓட்டு வாங்குவது, கீழ்த்தரமான உணர்ச்சிகளை, மதவெறியை, தேச பக்தியை தூண்டி விட்டு ஆட்சியில் அமர்ந்து கொள்கிறார்கள். இதனால் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்பதால் முழுக்க முழுக்க அவர்கள் காவல்துறையின் தயவிலேயே ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே, காவல்துறையை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாய் உலவவிட வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. இதை காவல்துறையும் தங்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்காக இயல்பாக பயன்படுத்திக் கொள்கிறது. காவல்துறைக்குத் தெரியாமல், நுணுக்கமாக சொல்லப் போனால் காவல்துறையின் பங்கு இல்லாமல் எந்தக் குற்றமும் இங்கு நடப்பதில்லை. பாலியல் குற்றங்கள் தொடங்கி திருட்டு வரை அனைத்திலும் காவல்துறையினரின் பங்கு இருப்பது அவ்வப்போது ஆதாரபூர்வமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

தற்போது எதிர்க்கட்சியினர் தொடங்கி பெரும்பாலான அமைப்புகள் கா.ந வையும், சேவா பாரதி அமைப்பையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இது வெளிப்படையாக மக்கள் கோரிக்கையாக மாறாமல் இருப்பதற்காகவும், இது குறித்த விவாதம் தொடங்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் காவல்துறையினரை கைது செய்து, நியாயம் கிடைத்திருப்பது போலவும், வழக்கு விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகவும் காட்டி இருக்கிறார்கள். சிறிது காலம் சென்றவுடன் இந்த வழக்கு நீர்த்துப் போக வைக்கப்படும் என்பதில் எந்த ஐயமும் யாருக்கும் வேண்டியதில்லை.

வாய்ப்புள்ள அனைவரும், வாய்ப்புள்ள அத்தனை வடிவங்களிலும் கா.ந, சேவா பாரதி அமைப்புகளை விசாரணைக்கு உட்படுத்தவும், இது வரையிலான அதன் செயல்பாடுகள், அதற்கு திட்டமிட்டவர்கள், ஆதரவளித்தவர்கள், அனுமதி அளித்தவர்கள் உள்ளிட்ட அனைத்தும் மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும், நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்பதையும் கோரிக்கையாக வைத்து, மக்களிடம் பரவலான விவாதமாக ஆக்க வேண்டும். காவல்துறையை மட்டுமல்ல, அரசின் அனைத்து துறைகளையும் மக்கள் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்பதில் அரசு குறித்த புரிதல் உள்ள யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை. ஆனால் இந்த முதலாளித்துவ கட்டமைப்பினுள் அந்தக் கோரிக்கை அதீதமானது. மாறாக, சட்டத்துக்கு அப்பாற்பட்டு இயங்கும் அமைப்புகளை கலைக்கவும், தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை கோருவதும் தான் உடனடியாக தேவையாக இருக்கிறது. தவிரவும் இது தான் மக்களிடம் அரசு குறித்த புரிதலை ஏற்படுத்தவும், இலக்கின்றி இருக்கும் இளைஞர்களை சரியான அரசியலின் பக்கம் திருப்பவும் தகுந்த வாய்ப்பளிக்கும்.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

3 thoughts on “பெனிக்ஸ் கொலையின் முடிச்சுகள்

  1. 2003ல் மத்திய பிரதேசத்தில் சேவா பாரதி அமைப்பு வெடிகுண்டி தயாரித்ததாகவும், கிருஸ்தவர்களுக்கு எதிராக கலவரம் செய்ததாகவும் ஆதாரபூர்வமாக வெளியிட்டு அந்த அமைப்பை தடை செய்தார் திக் விஜய் சிங். //// இது உண்மையா? ஒரு செய்திகளில் கூட இல்லையே.. எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்? ஆதாரம் இருக்கிறதா தோழர்?

  2. சேவா பாரதி தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதற்கு என்ன ஆதாரம்? இணையத்தில் நான் தேடிய வரை கிடைக்கவில்லை. நீங்கள் எதன் அடிப்படையில் சொல்லியிருக்கிறீர்கள்? தோழர்.

  3. வணக்கம், தோழன், இமய வரம்பன்,

    தடை செய்தார் என்பது தவறான தகவல் தான். தடை செய்யவிருந்தார் என்பது தான் சரியானது. சுட்டிக் காட்டியதற்கு நன்றி. திருத்தி விட்டேன்.

    இதற்கான ஆதாரம்,
    https://zeenews.india.com/news/nation/mp-govt-could-consider-banning-seva-bharati-singh_121153.html

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s