குடும்பம் 5

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 10

இந்தப் புதிய செல்வம் யாருடைய உடைமையாக இருந்தது? சந்தேகமின்றி, ஆரம்பத்தில் அது குலத்தின் உடைமையாக இருந்த்து. ஆனால் மந்தைகளின் மீது தனியுடைமை என்பது மிகவும் ஆரம்பக் கட்ட்த்திலேயே வளர்ந்திருக்க வேண்டும். மோஸசின் முதல் நூல் என்று கூறப்படுகின்ற புத்தகத்தில் தந்தை ஆப்ரஹாம் ஒரு குடும்பச் சமூகத்தின் தலைவர் என்ற முறையில் கால்நடை மந்தைக்கு உடைமையாளராக இருந்தாரா அல்லது ஒரு குலத்தின் உண்மையான பரம்பரைத் தலைவர் என்ற அந்தஸ்தினால் அவற்றுக்கு உடைமையாளராக இருந்தாரா என்பதை அப்புத்தகத்தின் ஆசிரியருடைய நோக்கிலிருந்து கண்டுபிடிப்பது கடினம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அதாவது, நவீன கால அர்த்தத்தில் அவரைச் சொத்துடைமையாளர் என்று கருதக் கூடாது. அதே போல் நிச்சயமான விஷயம் என்னவென்றால், உண்மையான வராலாற்றின் தொடக்கக் கட்டத்தில் மந்தைகள் குடும்பத் தலைவர்களுக்குத் தனியாகப் பிரிக்கப்பட்ட உடைமையாக எங்குமே இருக்க்க் காண்கிறோம்; அநாகரிக நிலைக் காலத்துக் கலைப் பொருட்களும் உலோகச் சாமான்களும் சுகவாழ்க்கைப் பொருட்களும், கடைசியாக மனிதக் கால்நடைகளான அடிமைகளும் இருந்த்தைப் போலவே அவையும் இருந்தன.

ஏனென்றால் இப்பொழுது அடிமை முறையும் தோற்றுவிக்கப்பட்டது. அநாகரிக நிலையின் கடைக்கட்டத்தில் அடிமையினால் எந்தப் பயனுமில்லை. இக்காரணத்திற்காகவே அமெரிக்க செவ்விந்தியர்கள் தாம் தோற்கடித்த எதிரிகளை அதற்கு மேலான கட்டத்தில் நடத்தியதற்கு முற்றிலும் வேறாக நடத்தினார்கள். ஆண்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது வெற்றி பெற்ற இனக்குழு அவர்களை சகோதரர்களாக சுவீகரித்துக் கொண்டது. பெண்களை திருமணம் செய்து கொண்டார்கள் அல்லது அவர்களையும் உயிர் பிழைத்த அவர்களுடைய குழந்தைகளையும் அதே போல் சுவீகரித்துக் கொண்டார்கள். இந்தக் கட்டத்தில் மனித உழைப்புச் சக்தி தன்னைப் பராமரிப்பதற்குரிய செலவுக்கு மேலாகக் கணிசமான உபரியைத் தரவில்லை. கால்நடை வளர்ப்பு, உலோகங்களைப் பண்படுத்தல், துணி நெசவுத் தொழில், கடைசியாக, வயல் விவசாயம் செய்தல் ஆகியவை புகுத்தப்பட்ட பின் இது மாறியது. முன்பு சுலபமாக்க் கிடைத்துவந்த மனைவிமார்களுக்கு எப்படி இப்பொழுது ஒரு பரிவர்த்தனை மதிப்பு ஏற்பட்டு விலைக்கு வாங்கப்பட்டார்களோ, அதே போல்தான் உழைப்புச் சக்தி விஷயத்திலும் நடைபெற்றது. அதிலும் குறிப்பாக கால்நடைகள் பெருகிய வேகத்தில் குடும்பம் வளர்ச்சியடையவில்லை. கால்நடைகளைப் பராமரிப்பதற்கு அதிகமான ஆட்கள் தேவைப்பட்டனர். போரில் சிறைப்பிடிக்கப்பட்ட கைதிகள் இந்த வேலைக்குப் பயன்பட்டனர். மேலும், அவர்களைக் கால்நடைகளைப் போலவே பெருகச் செய்ய முடிந்தது.

இச்செல்வங்கள் குடும்பங்களின் தனியுடைமையாக மாறி அங்கே வேகமாகப் பெருகத் தொடங்கியதுமே அவை இணை மண முறை மற்றும் தாயுரிமைக் குலத்தின் மீது நிறுவப்பட்டிருந்த சமுதாயத்துக்குப் பலமான அடி கொடுத்தன. இணை மண முறை என்பது குடும்பத்தில் ஒரு புதிய அம்சத்தைப் புகுத்தியிருந்த்து. அது இயற்கையான தாயாருக்குப் பக்கத்தில் அத்தாட்சி பெற்ற இயற்கைத் தகப்பனாரை – இன்றைய “தகப்பனார்களில்” பலரை விட அவர் உண்மையான தகப்பனாராக இருக்கக்கூடும் – நிறுத்தியது. அன்று குடும்பத்தில் நிலவிய உழைப்புப் பிரிவினையின்படி, உணவையும் அதற்குத் தேவையான கருவிகளையும் பெறுவதும் அதன் விளைவாக, அவற்றின் உடைமையாளராக இருப்பதும் ஆணின் பொறுப்பாக இருந்தது. இருவரும் பிரிகின்ற பொழுது அவன் அவற்றைத் தன்னுடன் கொண்டு சென்றான்; பெண் வீட்டுச் சாமான்களைத் தன்னிடம் வைத்துக் கொண்டதைப் போன்றதே இது. ஆகவே, அந்தக் கால சமுதாய வழக்கப்படி, உணவுப் பொருட்களுக்குரிய புதிய மூலாதாரங்களாகிய கால்நடைகளுக்கும் ஆணே உடைமையாளனாக இருந்தான். பிற்காலத்தில் புதிய உழைப்புக் கருவியாகிய அடிமைக்கும் அவனே உடைமையாளனாக இருந்தான். ஆனால் அதே சமுதாயத்தின் வழக்கப்படி, குழந்தைகள் அவனுடைய உடைமைக்கு வாரிசாக முடியவில்லை. ஏனென்றால் இவ்விஷயத்தில் நிலைமை பின்வருமாறு இருந்தது:

தாயுரிமைப்படி, அதாவது பெண்வழியாக மட்டுமே மரபு வழி கணக்கிடப்பட்டு வந்த வரை, குலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட பரம்பரை வாரிசு முறையின்படி இறந்து விட்ட குலத்தின் உறுப்பினருடைய உடைமைக்குக் குல உறவினர்கள்தான் முதலில் வாரிசுகளாக இருந்தார்கள். உடைமை குலத்துக்குள்ளே தான் தங்கியிருக்க வேண்டும் முதலில், சம்பந்தப்பட்ட உடைமைகள் சொற்பம் என்பதனால் மிகவும் நெருங்கிய குல உறவினர்களிடம், அதாவது தாயாருடைய தரப்பைச் சேர்ந்த இரத்த உறவினர்களிடம் அவை சேர்ந்திருக்கக் கூடும். ஆனால் இறந்தவனுடைய குழந்தைகள் அவனுடைய குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, அவர்களுடைய தாயாருடைய குலத்தைச் சேர்ந்தவர்கள். ஆரம்பத்தில் அவர்கள் தாயாருடைய மற்ற இரத்த உறவினர்களோடு கூடவே தாயிடமிருந்து சுவீகரித்துக் கொண்டு வந்தார்கள்; பிற்காலத்தில் ஒருவேளை அவளுடைய உடைமையில் அவர்கள் முதல் உரிமை பெற்றிருந்திருக்கலாம். ஆனால் தந்தையிடமிருந்து அவர்கள் சுவீகரிக்க முடியாது, ஏனென்றால் அவர்கள் தகப்பனாருடைய குலத்தைச் சேர்ந்தவர்களல்ல. அந்த உடைமை அந்தக் குலத்துக்குள்ளேதான் தங்க வேண்டும். மந்தைகளின் உடைமையாளன் மரணமடைந்து விட்டால் அந்த மந்தைகள் முதலில் அவனுடைய சகோதரர், சகோதரிகளிடமும் சகோதரிகளின் குழந்தைகளிடமும் அல்லது அவனது தாயின் சகோதரிகளின் சந்ததியரிடம் போய்ச் சேர்ந்தன. ஆனால் அவனுடைய குழந்தைகளுக்கு வாரிசுரிமை கிடையாது.

இப்படி, செல்வம் பெருகிய பொழுது, அது ஒரு பக்கத்தில், குடும்பத்தில் பெண்ணை விட ஆணுக்கு முக்கியமான அந்தஸ்தைக் கொடுத்தது, மறுபக்கத்தில், தனது குழந்தைகளுக்குச் சாதகமான வழியில் பரம்பரை வாரிசு முறையை மாற்ற இந்த வலுப்பெற்ற நிலையைப் பயன்படுத்திக் கொள்ள ஆணுக்கு ஒரு தூண்டுதலை அளித்தது. ஆனால் தாயுரிமைப்படி மரபு வழி இருந்த வரை இப்படி நடக்க முடியாது. ஆகவே தாயுரிமையைத் தூக்கியெரிய வேண்டியதாயிற்று. அது தூக்கியெறியப்பட்டது. இப்பொழுது நமக்குத் தோன்றுவதைப் போல இது அவ்வளவு கஷ்டமானதல்ல. ஏனென்றால் இந்தப் புரட்சி – மனித குலம் சந்தித்த மிக நிர்ணயமான புரட்சிகளில் இதுவும் ஒன்றாகும் – ஒரு குலத்தின் எந்த உறுப்பினனையும் பாதிக்க வேண்டியதில்லை. எல்லா உறுப்பினர்களும் முன் போலவே இருந்துவர முடியும். இனிமேல் ஆண்களின் சந்ததிகள் குலத்துக்குள்ளேயே இருக்க வேண்டும். பெண்களின் சந்ததிகள் குலத்திலிருந்து விலக்கப்பட்டுத் தந்தையின் குலத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்று சாதாரணமாகத் தீர்மானம் செய்தால் போதும். பெண்வழியாக மரபு வழியைத் தீர்மானித்தல், தாய்வழியாக வாரிசுரிமையைத் தீர்மானித்தல் ஆகிய இரண்டும் தூக்கியெறியப்பட்டன. ஆண்வழி மரபுமுறையும் தந்தைவழியாக வாரிசுரிமை முறையும் அமைக்கப்பட்டன. நாகரிக மக்களின்ங்களிடையில் இந்தப் புரட்சி எப்படி, எப்பொழுது நிறைவேற்றப்பட்ட்து என்பதைப் பற்றி நமக்கு எதுவும் தெரியவில்லை. இது முழுவதும் ஏடறியா வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த நிகழ்ச்சியாகும். இது மெய்யாகவே நிறைவேற்றப்பட்டது என்பதற்குக் குறிப்பாக பாஹொஃபென் திரட்டியுள்ள, தாயுரிமைக்குரிய ஏராளமான எச்சங்கள் தேவைக்கும் அதிகமாகவே நிரூபித்துள்ளன. அது எவ்வளவு சுலபமாக நிறைவேற்றப்பட்டது என்பதற்குப் பல செவ்விந்திய இனக்குழுக்களைப் பார்த்தாலே போதும். செல்வப் பெருக்கத்தின் காரணமாகவும் மாறிப் போன வாழ்க்கை முறையின் (காடுகளிலிருந்து புல்வெளிப் பிரதேசங்களுக்கு இடம் மாறியது) காரணமாகவும் ஓரளவுக்கு நாகரிகம், மத போதகர்கள் ஆகியோரின் தார்மிக செல்வாக்கினாலேயும் அது அந்த இனக்குழுக்களில் சமீப காலத்தில்தான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது, இன்னும் நிறைவேறி வருகிறது. மிசூரியைச் சேர்ந்த எட்டு இனக்குழுக்களில் ஆறு ஆண்வழி மரபுமுறையும் வாரிசுரிமை முறையையும் கொண்டுள்ளன; எஞ்சிய இரண்டு இன்னும் பெண்வழி மரபுமுறையும் வாரிசுரிமை முறையையும் கொண்டுள்ளன. ஷானிக்கள், மாயாமிக்கள், டிலாவேக்கள் ஆகியோரிடையே குழந்தைகள் தகப்பனாரிடமிருந்து சொத்தை சுவீகரிக்கச் செய்வதற்கு குழந்தைகளுக்குத் தந்தையின் குலத்திலுள்ள பெயர்களில் ஒன்றைச் சூட்டி அவர்களைத் தந்தையின் குலத்துக்கு மாற்றிவிடுவது வழக்கமாகி விட்டது. “பெயர்களை மாற்றுவதன் மூலம் பொருட்களை மாற்ற முயல்வது மனிதனுடைய உள்ளார்ந்த தர்க்க முறையாகும்! நேரடி நலன் போதிய நோக்கத்தைப் படைக்கின்ற இடங்களிலெல்லாம் சம்பிரதாயத்தை ஊடுருவி உடைத்துக் கொண்டு வெளிவருவதற்கு சம்பிரதாயத்துக்குள்ளாகவே ஓட்டைகளைத் தேடுவதும் அப்படியே!” (மார்கஸ்.) அதன் விளைவாக, அதிகமான குழப்பம் ஏற்பட்டது. தந்தை உரிமைக்கு மாறியதன் மூலமாக மட்டுமே விஷயங்களை மறுபடியும் நேராக்க முடிந்த்து, அவை பகுதியளவுக்கு நேராக்கப்பட்டன. “மொத்தத்தில் இதுவே மிகவும் இயற்கையான மாற்றமாகத் தோன்றுகிறது.” (மார்கஸ்.) பழைய உலகத்தில் நாகரிக நிலையைச் சேர்ந்த மக்களினங்களிடையில் இந்த மாற்றத்தைக் கொண்டுவருவதற்குக் கையாண்ட வழிமுறைகளைப் பற்றி ஒப்புநோக்குச் சட்டவியல் நிபுணர்கள் நமக்கு என்ன சொல்லக் கூடும் – அவை பெரும்பாலும் ஊகங்களே – என்று அறிந்து கொள்வதற்கு ம. கலேவ்ஸ்கி எழுதிய குடும்பம், உடைமை ஆகியவற்றின் தோற்றமும் பரிணாமமும் பற்றிய சுருக்க வரலாறு (ஸ்டாக்ஹோம், 1890) என்னும் நூலைப் பார்க்க.

தாயுரிமை தூக்கியெறியப்பட்டது பெண்ணினம் உலக வரலாற்று ரீதியில் பெற்ற தோல்வி ஆகும். ஆண் வீட்டிலும் ஆட்சியின் கடிவாளத்தைக் கைப்பற்றினான். பெண் இழிநிலைக்குத் தள்ளப்பட்டாள், அடிமைப்படுத்தப்பட்டாள்; ஆணின் உடலின்ப வேட்கைக்குக் கருவியானாள், கேவலம் குழந்தைகளைப் பெறுகின்ற சாதனமாக ஆகி விட்டாள். இது பெண்களின் நிலையைக் கீழே இறக்கி விட்டது. இது வீர யுகத்தைச் சேர்ந்த கிரேக்க மக்களிடையில், இன்னும் அதிகமாக, மூலச்சிறப்பான யுகத்தைச் சேர்ந்த கிரேக்க மக்களிடையில் குறிப்பாக வெளிப்படுவதைக் காணலாம்; இந்தத் தாழ்வு நிலை படிப்படியாக முலாம் பூசப்பெற்றும் மாறு வேட்த்தில் மறைக்கப்பட்டும் ஓரளவுக்கு நயமான வடிவத்தில் காட்டப்பட்டும் வந்திருக்கிறது. ஆனால் அது ஒழிக்கப்படவில்லை.

இப்படி நிலைநாட்டப்பட்ட ஆணின் ஏகபோக ஆட்சியினால் ஏற்பட்ட முதல் விளைவு இப்பொழுது இடைக் காலக் குடும்ப வடிவமாகத் தோன்றிய தந்தைவழிக் குடும்பத்தில் எடுத்துக்காட்டப்படுகிறது. அதன் முக்கிய அடியாளம் பலதார மணமல்ல (பலதார மணத்தை பற்றிப் பின்னால் எழுதுவோம்); அதற்கு பதிலாக, ”சுதந்திரமில்லாதவர்களாகவும் சுதந்திரமானவர்களாகவும் இருக்கின்ற பல நபர்களை குடும்பத் தலைவனுடைய தந்தையதிகாரத்தின் கீழ் ஒரு குடும்பமாகத் திரட்டியமைப்பதுதான். செமைட்டு வடிவத்தில் இந்தக் குடும்பத் தலைவன் பலதார மண முறையில் வாழ்கிறான்; சுதந்திரமில்லாதவர்களுக்கு மனைவியும் குழந்தைகளும் உண்டு. அந்த அமைப்பு முழுவதின் நோக்கமெல்லாம் கால்நடை மந்தைகளை ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் பராமரித்து வளர்ப்பதாகும்.” [L. H. Morgan, Ancient Society, pp. 465-466]

சுதந்திரமில்லாதவர்களை உள்ளிணைத்துக் கொள்வது, தந்தையதிகாரம் ஆகியவைதான் முக்கியமான குணாம்சங்கள். இதன்படி, இந்த வகைக் குடும்ப வடிவத்துக்குத் தலைசிறந்த மாதிரியாக ரோமானியக் குடும்பம் இருக்கிறது. Familia என்ற சொல் ஆரம்பத்தில் நவீனகால அற்பவாதிகளின் இலட்சியத்தை, உணர்ச்சிப் பசப்பும் குடும்பச் சச்சரவும் சேர்ந்து கலவையான இலட்சியத்தைக் குறிக்கவில்லை. ஆரம்பத்தில் ரோமானியர்கள் மத்தியில் அது திருமணமானவர்களையும் அவர்களுடைய குழந்தைகளையும் குறிக்கவில்லை, அடிமைகளை மட்டுமே குறித்த்து. Famulus என்றால் வீட்டு அடிமை என்று பொருள். Familia என்பது ஒரு நபருக்குச் சொந்தமான அடிமைகளின் மொத்த எண்ணிக்கையைக் குறிக்கும். காயுஸ் காலத்தில் கூட familia, வாரிசுச் சொத்து சம்பந்தமாக உயில் எழுதப்பட்ட்து. ரோமானியர்கள் ஒரு புதிய சமுதாய அமைப்பை வர்ணிப்பதற்காக இந்தச் சொல்லை உருவாக்கினார்கள். இந்த அமைப்பின் தலைவன் தன் கீழ் மனைவியையும் குழந்தைகளையும் சில அடிமைகளையும் ரோமானியத் தந்தையதிகாரத்துக்கு உட்பட்டு அவர்களுடைய வாழ்வையோ, மரணத்தையோ முடிவு செய்கின்ற அதிகாரத்துடன் வைத்திருந்தான்.

”ஆகவே, இந்தச் சொல் லத்தீன் இனக்குழுக்களின் இரும்புக் கவசம் அணிந்த குடும்ப அமைப்பை விடப் பழமையானதல்ல; அது வயல் விவசாயத்துக்குப் பிறகும் சட்ட சம்மதமாக்கப்பட்ட அடிமை முறைக்குப் பின்னும் கிரேக்கர்களும் (ஆரிய) லத்தீனியர்களும் பிரிக்கப்பட்ட பிறகும் ஏற்பட்ட்து.” [L. H. Morgan, Ancient Society, pp. 470]

மார்க்ஸ் இதற்குக் கூடுதலாகப் பின்வருமாறு தெரிவிக்கிறார்: ”நவீன காலக் குடும்பம் அடிமை முறையை மட்டுமன்றி பண்ணையடிமை முறையையும் கரு அளவில் தன்னுள் கொண்டிருக்கிறது. ஏனென்றால் அது ஆரம்பத்திலிருந்து கட்டாய விவசாய வேலைகளுடன் சம்பந்தப்பட்டுள்ளது. சமுதாயத்திற்குள்ளும் அதன் அரசிற்குள்ளும் பின்னால் விரிவான அளவில் வளர்ச்சியடையப் போகின்ற எல்லா முரண்டுபாடுகளையும் அது தனக்குள் குறுவடிவத்தில் வைத்துக் கொண்டிருக்கிறது.”

இப்படிப்பட்ட குடும்ப வடிவம் இணை மணம் ஒருதார மணத்துக்கு மாறியதைக் காட்டுகிறது. மனைவியின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காக, எனவே குழந்தைகளின் தகப்பனார் இவர்தான் என்பதை உறுதி செய்வதற்காக ஆணின் பரிபூரண அதிகாரத்தின் கீழ் பெண் வைக்கப்படுகிறாள். அவளை அவன் கொலை செய்தால் அது உரிமையைப் பயன்படுத்துவதைத் தவிர வேறல்ல.

தந்தைவழிக் குடும்பத்துடன் நாம் ஏடறிந்த வரலாற்றுக்குள் நுழைகிறோம்; ஒப்புநோக்குச் சட்டவியல் என்ற விஞ்ஞானம் நமக்கு முக்கியமான உதவியளிக்கக் கூடிய களத்துக்கு வந்து விடுகிறோம். உண்மையாகவே, அது இங்கே நமக்குக் கணிசமான முன்னேற்றம் அளித்திருக்கிறது. Zadruga (நட்புறவுப் பாங்கு என்பதைப் போன்ற அர்த்தத்தைக் கொண்ட்து) என்ற பெயராலும் அல்லது Bratstvo (சகோதரத்துவம் என்று அர்த்தம்) என்ற பெயராலும் ஸெர்பியர்களிடையிலும் பல்கேரியர்களிடையிலும், சிறிது மாறிய வடிவத்தில் கிழக்கத்திய மக்களினங்களிடையிலும் இன்று கூட நாம் பார்க்கக் கூடிய தந்தைவழி வீட்டுச் சமூகம் என்பது, குழு மணத்திலிருந்து வளர்ச்சியடைந்த தனிப்பட்ட குடும்பத்திற்கும் நவீன உலகம் அறிந்துள்ள தனிப்பட்ட குடும்பத்திற்கும் இடையில் மாறிச் செல்லும் கட்டமாக அமைந்துள்ளது என்று மக்சீம் கவலேவ்ஸ்கி நிரூபித்த்தற்கு (குடும்பம், உடைமை ஆகியவற்றின் தோற்றமும் பரிணாமமும் பற்றிய சுருக்க வரலாறு, ஸ்டாக்ஹோம், 1890, பக்கங்கள் 60 – 100) நாம் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். பழைய உலகத்தின் நாகரிகமடைந்த மக்களினங்களான ஆரியர்கள், செமைட்டுகள் விஷயத்தில் மட்டுமாவது இது நிரூபிக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது.

இப்படிப்பட்ட குடும்பச் சமூகத்துக்கு இன்றுள்ள சிறப்பான உதாரணமாக தெற்கு ஸ்லாவ் Zadruga இருக்கிறது. அது ஒரு தந்தையின் பரம்பரையில் வந்த சில தலைமுறைகளைச் சேர்ந்த சந்ததியாரையும் அவர்களுடைய மனைவியரையும் கொண்டிருக்கிறது; அவர்கள் எல்லோரும் ஒரே குடும்பத்தில் வாழ்கிறார்கள், தமது வயல்களில் பொதுவில் விவசாயம் செய்கிறார்கள், பொதுச் சேமிப்பிலிருந்து உணவும் துணியும் பெற்று உபயோகிக்கிறார்கள், எல்லா உபரிப் பொருட்களையும் பொதுவில் வைத்துக் கொள்கிறார்கள். வீட்டு எசமானனின் தலைமை நிர்வாகத்தின் கீழ் அந்தக் குடும்பச் சமூகம் இருக்கிறது. வெளிவிவகாரங்களில் அந்தச் சமூகத்துக்கு அவனே பிரதிநிதி; சிறிய பொருட்களைப் பற்றி அவன் எப்படி வேண்டுமானாலும் முடிவு செய்யலாம்; நிதிகளை அவனே நிர்வகிக்கிறான். அவற்றுக்கும் வாடிக்கையான விவகாரங்களை நடத்துவதற்கும் அவனே பொறுப்பாளி. அவன் தேர்ந்தெடுக்கப்படுகிறான், வயதில் அவன் மூத்தவனாக இருக்க வேண்டும் என்பது சிறிதும் அவசியமில்லை. வீட்டு எசமானி பெண்களையும் அவர்களுடைய வேலைகளையும் ஒழுங்குபடுத்துகிறாள். அவள் அநேகமாக வீட்டு எசமானனின் மனைவியாகவே இருப்பாள். இளம் பெண்களுக்குக் கணவர்களைத் தேர்ந்தெடுப்பதில் அவள் முக்கியமான, பெரும்பாலும் தீர்மானமான பங்கு வகிக்கிறாள். எனினும் குடும்ப கவுன்சிலுக்குத்தான் தலைமையான அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கவுன்சிலில் வயதுவந்த ஆண்கள், பெண்கள் அனைவரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். வீட்டு எசமானன் இந்த மன்றத்திடம் தன்னுடைய செயல்களை விவரிக்கிறான். அந்த மன்றம் முக்கியமான முடிவுகளையெல்லாம் செய்கிறது, குடும்பச் சமூக உறுப்பினர்களிடையே நீதி வழங்குகிறது; முக்கியமான வாங்கல், விற்பனைகளை, குறிப்பாக நிலச் சொத்தை வாங்கல், விற்பனை பற்றி இதுவே முடிவு செய்கிறது.

ருஷ்யாவிலும் இப்படிப்பட்ட பெரிய குடும்பச் சமூகங்கள் இருக்கின்றன என்பது சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தான் நிரூபிக்கப்பட்டது.[ம. கவலேவ்ஸ்கி பூர்வீக சட்டமுறை, முதல் வெளியீடு, ”குலம்” (மாஸ்கோ, 1886) என்னும் நூல் இங்கே குறிப்பிடப்படுகிறது] அவை ஒப்ஷீனா, அதாவது கிராமச் சமூகத்தைப் போலவே ருஷ்ய மக்களுடைய வழக்கங்களில் அதே அளவுக்கு ஆழமாக வேரூன்றியுள்ளன என்பது இப்பொழுது பொதுவாகவே அங்கீகரிக்கப்படுகிறது. மிகவும் பழமையான ருஷ்யச் சட்டத் தொகுப்பாகிய யாரஸ்லாவின் பிராவ்தா என்பதில் டால்மேஷியச் சட்டங்களில் இருப்பதைப் போலவே “வெர்வ்” என்னும் பெயரில் அவை காணப்படுகின்றன. போலிஷ், செக் வரலாற்று மூலாதாரங்களிலும் அவற்றைப் பற்றிய குறிப்புகளைக் காணலாம்.

[யாரஸ்லாவின் பிராவ்தா என்பது “ருஷ்ய பிராவ்தாவின்” பழைய வாசகத்தின் முதல் பகுதி ஆகும்; அது பண்டைக்கால ருஷ்யாவின் சட்டத் தொகுப்பு. பண்டைய சட்டங்களை அடிப்படையாக கொண்டு 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளில் தயாரிக்கப்பட்ட்து; அக்காலத்தில் நிலவிய சமூக-பெருளாதார உறவுகளைப் பிரதிபலித்த்து. டால்மேஷியச் சட்டங்கள் 15 – 17 ஆம் நூற்றாண்டுகளில் போலிட்சில் (டால்மேஷியாவில் ஒரு பகுதி) அமுல் செய்யப்பட்டிருந்த சட்டத்தொகுப்பு; அது போலிட்ஸ் சட்டம் என்று சொல்லப்பட்டது.]

தனிப்பட்ட குடும்பம் (அதன் நவீன அர்த்ததில்) பொருளாதார அலகு என்ற முறையில் ஜெர்மானியர்களிடையிலும் ஆதியில் இருக்கவில்லை என்று ஹொய்ஸ்லர் எழுதினார் (ஜெர்மானியச் சட்டமுறையின் அடிப்படைகள்). “வீட்டுச் சமூகம்” தான் ஆதியில் இருந்தது. அதில் சில தலைமுறைகள் அல்லது தனித்தனிக் குடும்பங்கள் பலரும் அதில் இருந்தார்கள். ரோமானியக் குடும்பமும் கூட இந்த ரகத்தைச் சேர்ந்தது என்று இனங்கண்டு கொள்ளப்பட்டுள்ளது. எனவே அதன் விளைவாக, வீட்டு எசமானனின் பரிபூரண அதிகாரமும் சரி, அவனைப் பொறுத்தமட்டில் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கு உரிமைகள் எதுவும் இல்லாதிருப்பதும் சரி சமீப காலத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ளன. அதைப் போல, அயர்லாந்திலுள்ள கெல்ட் மக்களிடையிலும் இப்படிபட்ட குடும்பச் சமூகங்கள் இருந்ததாகக் கருதப்படுகிறது. பிரான்சிலும் நிவர்னேயில் அவை parconneries என்ற பெயரிலும் பிரஞ்சுப் புரட்சிக் காலம் வரை நீடித்திருந்தன. பிரான்ஷ்-கொந்தே பிரதேசத்தில் அவை இன்றளவும் கூட முழுவதும் அழியாமலிருக்கின்றன. லுவான் மாவட்டத்தில் (சவோன் மற்றும் லுவார் பகுதி) பல பெரிய விவசாயி வீடுகளைக் காணலாம். அவற்றில் கூரை வரைக்கும் உயரமுள்ள நடுப் பொது அறையும் அதைச் சுற்றிப் படுக்கையறைகளும் இந்தப் படுக்கையறைகளுக்குச் செல்வதற்கு ஆறிலிருந்து எட்டு வரையுள்ள மாடிப்படிகளும் இருக்கின்றன. இந்த வீடுகளில் ஒரே குடும்பத்தின் சில தலைமுறைகள் வசிக்கின்றன.

இந்தியாவில் நிலத்தைப் பொதுவில் விவசாயம் செய்து வந்த வீட்டுச் சமூகத்தைப் பற்றி மகா அலெக்சாந்தர் காலத்திலிருந்த நியார்கஸ் என்பவர் எழுதியிருக்கிறார். அந்த முறை இன்று கூட அதே வட்டாரத்தில், பஞ்சாபிலும் நாட்டின் வட மேற்குப் பகுதி முழுவதிலும் இருக்கிறது. காக்கஸசில் அது இருப்பதாக கவலேவ்ஸ்கியே சான்றளிக்க முடிந்தது. அல்ஜீரியாவில் கபீல்களிடையே அது இன்னும் இருக்கிறது. அமெரிக்காவில் கூட அது இருந்தது என்று சொல்லப்படுகிறது. சுரிடா விவரித்த, பண்டைக்கால மெக்சிகோவில் இருந்த calpullis போன்றதே இது என்று நிரூபிப்பதற்கு முயற்சிகள் செய்யப்படுகின்றன [Calpullis – ஸ்பானியர்கள் மெக்சிகோவைப் பிடித்த பொழுது மெக்சிகோவின் செவ்விந்தியர்கள் மத்தியில் நிலவிய குடும்பச் சமூகங்கள், ஒவ்வொரு குடும்பச் சமூகத்தின் (calpulli) உறுப்பினர்களும் பொதுவான முன்னோர்களைக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் நிலத்தைப் பொதுவில் வைத்திருந்தார்கள்; அதைப் பறிமுதல் செய்ய முடியாது, வாரிசுகளுக்குப் பிரித்துக் கொடுக்க முடியாது]. மறு பக்கத்தில், பெரு நாட்டில் ஒரு வகையான மார்க் அமைப்பு (பெருவில் இந்த மார்க்கை marca என்று கூறியது விந்தையே) ஸ்பானிஷ் நாடுபிடிப்பு நடந்த காலத்தில், அவ்வப்பொழுது விளைச்சல் நிலம் பங்கிடப்பட்டு வந்த நிலையில், அதாவது தனிநபர் வேளாண்மை நிலவிய காலத்தில் இருந்ததாக குனோவ் ஓரளவுக்குத் தெளிவாக நிரூபித்திருக்கிறார். (Ausland [Das Ausland (“அந்நிய நாடுகள்”)- பூகோளம், மனித இண இயல் மற்றும் இயற்கை விஞ்ஞானத்தைப் பற்றிய ஜெர்மன் சஞ்சிகை; 1828 முதல் 1893 முடிய வெளியிடப்பட்டது; 1873 முதல் ஷ்டுட்கார்ட்டிலிருந்து வெளியிடப்பட்ட்து.], 1890, இதழ்கள் 42-44)

எப்படியிருப்பினும், நிலத்தில் பொது உடைமையும் பொது விவசாயமும் கொண்டிருந்த தந்தை வழி வீட்டுச் சமூகம் என்பது இதுவரையில் இருந்ததை விட வேறுவிதமான முக்கியத்துவத்தை இன்று பெற்றுள்ளது. பழைய உலகத்தைச் சேர்ந்த நாகரிக மக்களினங்களிடையிலும் இதர சில மக்களினங்களிடையிலும் தாயுரிமைக் குடும்பத்துக்கும் தனிப்பட்ட குடும்பத்துக்கும் இடையே அது வகித்த முக்கியமான மாற்றக் காலப் பாத்திரத்தை நாம் இனிமேல் சந்தேகிப்பதில்லை. கவலேவ்ஸ்கி இதிலிருந்து மேலும் ஒரு முடிவுக்கு வருகிறார்; இந்த மாற்றக் காலகட்டத்திலிருந்துதான் கிராம அல்லது மார்க் சமூகம் தனிநபர் விவசாயத்துடன் முதலில் அவ்வப்பொழுதும் பிறகு நிரந்தரமாகவும் விளைச்சல் நிலங்களையும் மேய்ச்சல் நிலங்களையும் பங்கு பிரித்துத் தருவதுடனும் கூடியதாக வளர்ச்சி பெற்றெழுந்தது என்பது அவருடைய முடிவாகும். இதைப் பற்றிப் பிறகு எழுதுவோம்.

இந்த வீட்டுச் சமூகங்களுக்குள்ளே நிலவிய குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் ஒன்றைக் கவனித்தாக வேண்டும்: குறைந்தபட்சம் ருஷ்யாவில் மட்டுமாவது, வீட்டின் தலைவன் இளம் பெண்கள், குறிப்பாக தனது மருமகள்மார் விஷயத்தில் தனது பதவியை படுமோசமான முறையில் துர்ப்பிரயோகம் செய்து வந்தான், பெரும்பாலும் அவர்களைத் தன்னுடைய காமக்கிழத்திகளாக மாற்றியிருந்தான். இந்த நிலைமைகள் ருஷ்ய நாடோடிப் பாடல்களில் மிகவும் பச்சையாகவே பிரதிபலிக்கப்பட்டுள்ளன.

தாயுரிமை தூக்கியெறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஒருதார மண முறை வேகமாக வளர்ந்த்து. ஒருதார மண முறைக்கு வருமுன்னர் பலதார மண முறையைப் பற்றியும் பல கணவர் மண முறையைப் பற்றியும் இன்னும் சிறிது சொல்வேம். இவ்விரண்டு மண முறைக்கும் ஏதாவதொரு நாட்டில் அக்கம்பக்கமாக நிலவியிருந்தாலொழிய- அப்படி அவை எந்த ஒரு நாட்டிலும் இருக்கவில்லை என்பது எல்லோரும் அறிந்த்தே – அவை விதிவிலக்குகளாக, வரலாற்றில் அபூர்வமாக நிகழும் சம்பவமாகத்தான் இருக்க முடியும். பலதார மண முறையிலிருந்து விலக்கப்பட்ட ஆண்கள் பல கணவர் மண முறையில் எஞ்சிய பெண்களுடன் தங்களைத் திருப்தி செய்து கொள்ள முடியவில்லை; சமூக அமைப்புகள் எப்படி இருப்பினும் இருபாலாரின் எண்ணிக்கை இதுவரை ஓரளவுக்கு சமமாகவே இருந்து வந்தது; எனவே இந்த மண வடிவமோ, அந்த மண வடிவமோ பொது வழக்காக அமையப்பெற முடியவில்லை. ஓர் ஆண் பலதார மணத்தில் ஈடுபடுதல் என்பது அடிமை முறையின் ஒரு விளைவு என்பது மெய்யே. அதுவும் சில அசாதாரணமான உதாரணங்களுடன் நின்றுவிட்டது. செமைட்டுக் குடும்பத்தில் குடும்பத் தலைவன் மட்டுமே – அதிகமாகப் போனால், அவனுடைய இரண்டொரு புத்திரர்கள் மட்டுமே – பலதார மணத்தில் வாழ்ந்தார்கள். மற்றவர்கள் ஒரு ஆணுக்கு ஒரு மனைவியுடன் திருப்தி அடைய வேண்டியிருந்தது. கீழ்த்திசை நாடுகள் முழுவதிலும் இதே நிலைதான் நிலவுகிறது. பலதார மணம் என்பது செல்வர்களுக்கும் பிரபுக்களுக்கும் உரிய சலுகை ஆகும்; முக்கியமாக, பெண்ணடிமைகளை விலைக்கு வாங்குவதன் மூலம் இம்மனைவியர் சேகரிக்கப்பட்டார்கள். பெருந்திரளான மக்கள் ஒருதார மணத்திலேயே வாழ்கின்றனர். இதே போன்ற விதிவிலக்கைத்தான் இந்தியாவிலும் திபேத்திலும் உள்ள பல கணவர் மணமும் தருகிறது. அது குழு மணத்திலிருந்து தோன்றியது சந்தேகத்திற்கிடமின்றி சுவாரசியமான விஷயம் என்பதால் அதை இன்னும் நெருங்கி ஆராய்வது அவசியமே. எப்படி இருப்பினும், பல கணவர் மணம் நடைமுறையில் முகமதியர்களுடைய சந்தேகம் நிறைந்த அந்தப்புரங்களை விட மிகவும் சகிக்கக் கூடியதாகத் தோன்றுகிறது. இந்தியாவில், குறைந்தபட்சம் நாயர்கள் சமூகத்தில் ஆண்கள் மூன்று அல்லது நான்கு அல்லது அதற்கும் அதிகமானவர்கள் குழுக்களாக அமைந்து ஒரே மனைவியைப் பொதுவில் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதே சமயத்தில் அந்த ஆண்களில் ஒவ்வொருவரும் வேறு மூன்று அல்லது அதற்கும் அதிகமான நபர்களோ கொண்ட குழுக்களாக அமைந்து ஒரே மனைவியைப் பொதுவில் கொண்டிருக்கலாம்; அதே மாதிரி மூன்றாவது மனைவி, நான்காவது மனைவி என்று போய்க் கொண்டே இருக்கலாம். இந்தத் திருமணக் கிளப்களில் ஒரு புதிய மண வடிவத்தை – கிளப் மணத்தை – மாக்லென்னான் கண்டுபிக்காதது அதிசயமே.  ஆண்கள் ஒரே சமயத்தில் இப்படி சில கிளப்களில் சேர்ந்திருக்கலாம்; இதை அவரே வர்ணித்திருக்கிறார். எனினும் இந்தக் கிளப் திருமணம் என்பது அசலான பல கணவர் மணம் அல்ல; அதற்கு மாறாக, ஜிரோ-டெய்லோன் குறித்துள்ளபடி, இது குழு மணத்தின் ஒரு விசேஷமான வடிவமே. இதில் ஆண்கள் பலதார மணத்தில் வாழ்கிறார்கள், பெண்கள் பல கணவர் மணத்தில் வாழ்கிறார்கள்.

இந்நூலின் முந்தைய பகுதிகள்

  1. மாமேதை ஏங்கல்ஸ்.
  2. 1884 ல் எழுதிய முன்னுரை
  3. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி
  4. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2
  5. ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய கலாச்சாரக் கட்டங்கள்
  6. குடும்பம் – 1
  7. குடும்பம் – 2
  8. குடும்பம் – 3
  9. குடும்பம் – 4

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s