மீள் தொடக்கம்

மக்களியம் – பகுதி 2

வாழ வேண்டும். உயிர் வாழ வேண்டும் இது மட்டுமே அனைத்து உயிர்களையும் உந்தும் ஒரே உள்ளாற்றல். இன்னும் அதிக காலம் உயிர் வாழ்வது எப்படி எனும் கேள்வியே அனைத்து உயிர்களையும், குறிப்பாக மனிதர்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. மனிதன் கண்டுபிடித்த அனைத்துக்கும் இது தான் உள்ளடக்கமாக இருந்திருக்கிறது. மனிதனின் தொடக்க காலங்களை எடுத்துக் கொண்டால், ‘உண்ணு, உண்ணப்படாமலிரு’ என்பது தான் ஒரே இலக்கு. அந்த ஒற்றை இலக்கிலிருந்து மனிதன் வெகு தூரம் கடந்து வந்து விட்டான். என்றாலும், இன்னும் உண்ணப்படாமலிருக்க போராடிக் கொண்டிருக்கிறான். அன்று கொடிய கொன்றுண்ணி விலங்குகளிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டியிருந்தது. இன்றோ, எது தன்னைக் கொன்று தின்று கொண்டிருக்கிறது, கொன்று தின்னப் போகிறது? என்று தெரியாமலேயே போராடிக் கொண்டிருக்கிறான்.

இன்று மனிதன் பல்லாயிரம் சிக்கல்களுக்கு நடுவே நின்று கொண்டு, அந்தச் சிக்கல்களை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான். தன் சொந்த நடப்புகளிலிருந்து தெரிந்துணர்ந்த, பிறரிடமிருந்து அறிந்த, இன்னும் தான் ஊகித்த வழிகளின் ஊடாக அந்த சிக்கல்களை தீர்க்க முயல்கிறான். தெளிவாகச் சொன்னால், சிக்கல்களை தீர்த்துக் கொண்டானா அல்லது சிக்கல்களிலிருந்து தப்பித்துக் கொண்டானா என்பதே கேள்விக்குறி தான். எவ்வாறென்றால் உலகின் தொடக்க கால மனிதனுக்கு இருந்த பெரும் சிக்கல் உணவு கிடைப்பதும், தான் இன்னொன்றுக்கு உணவாகி விடாமல் தப்பி இருப்பதும் தான். மனிதன் இத்தனை தூரம் நகர்ந்து வந்து விட்ட பிறகும், இத்தனை காலம் கடந்து விட்ட பிறகும், இத்தனை முன்னேற்றங்களை அடைந்து விட்ட பிறகும் கூட கோடிக் கணக்கான மக்களுக்கு அடுத்த வேளை உணவு கிடைக்குமா? என்பது சிக்கலான விதயமாகத் தான் இன்றும் இருந்து கொண்டிருக்கிறது. அதாவது மனிதனின் முதல் சிக்கலே இன்னும் தீர்ந்து போகாமல் நீடித்துக் கொண்டிருக்கிறது. என்றால், சிக்கல்களிலிருந்து மனிதன் தப்பித்துக் கொண்டிருக்கிறான் என்பது தான் அதன் பொருளாக இருக்க முடியும். இன்னும் தெளிவாகச் சொன்னால், சிக்கல்களிலிருந்து தப்பித்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறான்.

ஏன் மனிதனால் தனக்கு ஏற்படுகின்ற சிக்கல்களை தீர்த்துக் கொள்ள முடியவில்லை. இயற்கையின் கணக்கற்ற வளங்கள் அவன் முன்னே கொட்டிக் கிடக்கின்றன. இதுவரை வாழ்ந்த மனிதர்களின் வாழ்விலிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள் இருக்கின்றன. அவைகளின் சாரங்களை வடிகட்டி, சுண்ட வைத்து, பிசைந்து பெற்ற தத்துவங்கள் இருக்கின்றன. அறிவியல் முன்னேற்றங்கள், கண்டுபிடிப்புகள், தேற்றங்கள் கிடைக்கின்றன. இருந்த போதிலும் தன்னுடைய சிக்கல்களை தீர்த்துக் கொள்ள முடியவில்லை என்றால் .. .. ..? அவனுடைய கண்ணோட்டத்தில், தீர்வைத் தேடும் அவனுடைய வழியில் ஏதோ ஓர் இடறல் இருக்கிறது என்பது தானே பொருளாக இருக்க முடியும்? சொல்லப் போனால், ஒருவனுடைய வாழ்வு என்பதே அவன் இந்தச் சிக்கலுக்கு என்ன மாதிரியான தீர்வைத் தேடுகிறான்? எந்த வழியில் பயணப்படுகிறான்? என்னென்ன வாய்ப்புகளை பயன்படுத்துகிறான்? எவற்றையெல்லாம் உதறித் தள்ளுகிறான்? எவற்றையெல்லாம் கைக் கொள்ளுகிறான்? என்பது தானே. அப்படி என்றால் மனிதன் வாழ்வில் ஏதோ ஓர் இடறல் இருக்கிறது என்பதாகத் தானே பொருள் கொள்ள முடியும்? அந்த இடறல் என்ன? எப்படி அதை அறிவது? எங்கிருந்து அதை தொடங்குவது?

தொடக்கத்திலிருந்தே தொடங்கலாம். இயற்கை என்றால் என்ன? அறிதல் என்றால் என்ன? அறிவு என்றால் என்ன? அறிவியல் என்றால் என்ன? சமூகம் என்றால் என்ன? தத்துவம் என்றால் என்ன?

இயற்கை என்றால் என்ன? நாம் காணும் இந்த உலகில் மனிதனைத் தவிர எண்ணற்ற பொருட்கள் இருக்கின்றன. விலங்கினங்கள், பறவைகள், பூச்சி இனங்கள் என உயிரினங்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றன. இயற்கையான, செயற்கையான பொருட்கள் இருக்கின்றன. வானத்தை நோக்கி பார்வையைத் திருப்பினால் கணக்கற்ற கோள்கள், விண்மீன்கள், நெபுலாக்கள், கருந்துளைகள், இன்னும் என்னென்னவோ இருக்கின்றன. அதேபோல புவிக்குள்ளும் கனிமங்கள், உலோகங்கள், நீர்ம வகைகள் என ஏராளம் உள்ளன. இவைகளில், மனிதனைத் தவிர ஏனைய அனைத்தையும் இயற்கை எனும் பொதுப் பெயரில் அழைக்கலாம். அவை திடப் பொருளாக இருக்கலாம், நீர் பொருளாக இருக்கலாம், காற்றுப் பொருளாக இருக்கலாம். மீப் பெரிய அளவிலும் இருக்கலாம், மிக மிக நுண்ணிய அளவில், வெளிப் பார்வைக்கு தெரியாத அளவிலும் இருக்கலாம். மனிதனும் இயற்கையின் ஒரு விளை பொருள் தான். மனிதனும் இயற்கையில் அடக்கம் தான். என்றாலும், மனிதன் மட்டுமே பிற உயிரினங்களை விட மிகத்தவனாக இருக்கிறான், மேம்பட்ட அறிவு கொண்டவனாக இருக்கிறான் என்பதாலும், நாம் மனிதனைப் பற்றிய கேள்விகளுக்குத் தான் விடை தேட வேண்டியிருக்கிறது என்பதாலும், மனிதனை மட்டும் பிரித்து தனியே வைத்து விட்டு பிற அனைத்தையும் இயற்கை என்பதாக பார்க்கிறோம்.

அறிதல் என்றால் என்ன? மனிதனுக்கு வெளியே இயற்கையில் இருக்கும் பொருட்கள் எதுவானாலும் அது மனிதனுக்கு தென்பட வேண்டும் என்றால், மனிதனுக்கு இருக்கும் ஐந்து உணர் திறன்களின் – கண், காது, மூக்கு, வாய், தோல் – வழியே மூளையைச் சென்றடைய வேண்டும். இந்த ஐந்து உணரிகள் வழியாக மூளைக்கு எட்டும் ஒரு பொருள் மூளையில் பதிவாகிறது. அந்தப் பொருளோடு மனிதனுக்கு இருக்கும் தேவை, நெருக்கம் ஆகியவற்றைப் பொருத்து அந்தப் பொருளின் தன்மை, இயக்கம், பயன் போன்றவை வெளிப்படுகின்றன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து இருப்பதே அறிதல் எனப்படுகிறது. ஒரு பொருளின் பெயரையோ, அல்லது அது தொடர்பான ஒரு குறிப்பையோ அறிய நேரும் போது அந்தப் பொருள் தொடர்பான அனைத்தும் ஒருவருக்கு நினைவில் வந்தால் அந்தப் பொருள் குறித்த அறிதல் அவருக்கு இருக்கிறது என்பது பொருள்.

அறிவு என்றால் என்ன? மனிதனுக்கு பல்வேறு பொருட்கள் குறித்த அறிதல் இருக்கிறது. அவை ஒவ்வொன்றைக் குறித்தும் தெளிவு இருக்கிறது. ஒரு பொருளின் தன்மை நேரடியாகவோ மறைமுகமாகவோ மனிதனுடன் ஏற்படுத்தும் தாக்கம் என்ன? அந்தப் பொருளின் இயல்பான இயக்கம் என்னென்ன போதுகளிலெல்லாம் மாறுபடும்? அந்தப் பொருள் என்ன மாதிரியாக இருந்தால் அல்லது செயல்பட்டால் மனிதனுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பன போன்ற தரவுகள் எல்லாம், அந்தப் பொருளோடு மனிதன் கொண்டிருக்கும் தொடர்ச்சியான உறவினால் கிடைக்கிறது. இப்படி கிடைக்கும் ஒரு பொருள் குறித்த அத்தனை தரவுகளையும் ஒருமுகப்படுத்தி, மனிதன் தனக்கு தேவையான போது தேவைப்படும் விதத்தில், பொருத்தமான வடிவத்தில் பயன்படுத்திக் கொள்வதை அறிவு என்று சொல்லலாம்.

அறிவியல் என்றால் என்ன? அறிவியல் என்பது ஓர் ஆய்வு முறை. ஓர் ஆய்வு முறை என்றால், வேறு ஆய்வு முறைகள் இருக்கின்றனவா? மனிதன் ஒரு பொருள் குறித்து அல்லது ஒரு கருத்தை குறித்து, அது சரியா? தவறா? என்று முடிவுக்கு வர வேண்டும் என்றால் அதற்கென இருக்கும் ஒரே ஆய்வு முறை அறிவியல் தான். அறிவியல் மட்டும் தான், வேறு ஆய்வு முறைகள் இல்லை. மனிதன் தன்னுடைய தேவைகளை அடைவதற்கு தொடர்ச்சியாக இயற்கையோடு பொருத வேண்டியிருக்கிறது. இதனால் இயற்கையை அறிந்து, அவை குறித்த தரவுகளுடன் தன் அறிவை வளர்த்துக் கொண்டு, அதை பிற மக்களுக்கு பயன்படும் விதத்தில் செதுக்கி பொதுமைப்படுத்திய முறை தான் அறிவியல். இன்னும் எளிமையாகச் சொன்னால், தனக்கு இருக்கும் அறிவை, அது சரிதானா என சோதனை செய்து பார்த்து, எல்லோருக்கும் அதே விளைவுகளைத் தான் ஏற்படுத்துகிறது என தெளிந்து கொண்டு, அதை முறைப்படுத்துவது தான் அறிவியல்.

சமூகம் என்றால் என்ன? சமூகம் என்பது மக்கள் திரள். மனிதன் தனக்குத் தேவையான எதையும் தனித்தே இருந்து பெற முடியாது. பிற மனிதர்களின் பங்களிப்பும் தேவையாக இருக்கிறது. இப்படியான பங்களிப்பின் வழியாக திரளும் மக்கள் கூட்டமே சமூகம் எனப்படுகிறது. அறிவியல் என்பது உடனிருக்கும் மனிதர்களுக்கு பயன்படும் விதத்தில் பொதுமைப் படுத்தப்படும் ஆய்வு முறை என்று கொண்டால், அந்த அறிவியலின் பயன்பாடு சமூகத்தை எதிரொலிப்பதாக இருக்க வேண்டும். வேறொரு கோணத்தில் பார்த்தால், குறிப்பிட்ட ஒன்று சரியா தவறா என அறிவதற்கு பயன்படும் ஆய்வு முறையான அறிவியல் சரியான திசையில் பயணிக்கிறதா என்பது, அது சமூகத்துக்கு பயன்படுகிறதா என்பதைப் பொருத்தே அமையும்.

தத்துவம் என்றால் என்ன? வாழ்வின் விடை காண முடியாத கேள்விகளுக்கு விடையளிப்பது தான் தத்துவம். தத்துவம் என்றால் எளிமைப்படுத்துவது என்பது தான் பொருள். ஆனால் அதைத் தான் மிகவும் குழப்பமான ஒன்றாக ஆக்கி வைத்திருக்கிறார்கள்.

சரி, நாம் ஏன் இயற்கை, அறிதல், அறிவு, அறிவியல், சமூகம், தத்துவம் இவைகளை தெரிந்து கொள்ள வேண்டும்? ஏனென்றால் இதன் வழியாகத் தான் நாம் வளந்து வந்தோம். எனவே, நம்முடைய மீள் தொடக்கத்தையும் அங்கிருந்து தான் தொடங்கியாக வேண்டும்.

இத்தொடரின் முந்திய பகுதிகள்

  1. மக்களியம்

மின்னூல் கோப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s