
குறிப்பு 1 : சினிமாவில் அடிக்கடி நாம் பார்க்கும் விஷயம் facial recognizition. அதுவும் ஹாலிவுட்டுக்கே சவால் விடும் விவேகம் மாதிரியான டெக்னாலஜி த்ரில்லர் படங்களில் அதிகம் பார்த்திருப்போம். சிசிடிவி ஃபுட்டேஜில் ஒருவரின் முகத்தை ஃப்ரீஸ் செய்து, அதை கணினியில் இருக்கும் ஒட்டுமொத்த மக்களின் டேட்டாபேஸில் பொருத்திப் பார்ப்பார்கள். சில விநாடிகளில், இவர்தான் அவர் என கணிணி குற்றவாளியைக் கண்டுபிடித்துவிடும். இந்த முறையில் கடந்த 15 ஆண்டுகளாக உலகில் பல்வேறு நபர்களைக் கைது செய்து நீதியை நிலைநாட்டி சிறையில் அடைத்து, அதில் சிலரை எலக்ட்ரிக் கம்பிகள் வரை கடிக்க வைத்திருக்கிறது காவல்துறை.
குறிப்பு 2 : சீனா கடந்த இரு ஆண்டுகளாக அங்கிருக்கும் 140 கோடி மக்களையும் 24×7 உளவு பார்க்க பெரும் பொருட்செலவுடன் தயாராகி வருகிறது. அமெரிக்க நிறுவனத்தின் உதவியுடன், சுமார் 70 கோடி ஆண்களின் DNA ரத்த மாதிரிகளைச் சேகரித்து வைக்கத் தொடங்கியிருக்கிறது. ரத்த மாதிரிகளைக் கொடுக்க மறுப்பவர்களுக்குச் சீன அரசாங்கம் தரும் அன்புப் பரிசு பயணத் தடையும், மருத்துவத் தடையும். இந்த மாதிரிகளின் மூலம் ஒரு நபரின் அனைத்து சொந்தங்களையும் ஒரு கூட்டுக்குள் கொண்டு வந்து அவர்களைக் கண்காணிக்க முடியும். கைதும் செய்ய முடியும். இந்திய சீன எல்லைப் பிரச்னையில்; மத்திய அரசின் நிலைப்பாட்டை விமர்சிக்க நமக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனால், சீனா போன்ற அரச பயங்கரவாத தேசத்தை விமர்சிக்க வேண்டியது நமது தலையாய கடமை.
செய்தி : கடந்த ஜனவரி மாதம், வழக்கம் போல் அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ராபர்ட் வில்லியம்ஸுக்கு, டெட்ராய்ட் காவல் நிலையத்துக்கு வருமாறும், அவரைக் கைது செய்ய உள்ளதாகவும் அலைபேசியில் தெரிவிக்கப்படுகிறது. யாரோ விளையாடுகிறார்கள் என நினைத்த வில்லியம்ஸ், அதைப் பற்றி பெரிதாய் கண்டுகொள்ளாது வேலையில் மூழ்கிவிடுகிறார். மாலை மனைவி, மகள்களுடன் காரில் சென்றுகொண்டிருந்த வில்லியம்ஸை சுற்றி வளைக்கிறது அமெரிக்கக் காவல்துறை. ஆஃப்ரோ அமெரிக்கரான வில்லியம்ஸ் பிரச்சினையின் வீரியத்தை உணர்ந்து பதறுகிறார். ஏன் கைது செய்கிறீர்கள் என வில்லியம்ஸின் மனைவி கேட்டதற்கு, வில்லியம்ஸின் உருவம் பொறித்த ஒரு புகைப்படத்தைக் காட்டி, அரெஸ்ட் வாரன்ட் எனக் கர்ஜிக்கிறது அமெரிக்கக் காவல்துறை.
வில்லியம்ஸின் புகைப்படம், கை ரேகை, DNA பதிவுகள் போன்றவற்றைப் பதிவு செய்யும் காவல்துறை, அவர் அன்று இரவு காவல்நிலையத்தில் வைக்கிறார்கள். அவரிடம் அப்போது வரை அவர் கைதுக்கான காரணமோ, தன் மனைவி, மகள் முன்னர் இப்படி இழிவாக நடத்தப்பட்டதற்கோ யாதொரு விளக்கமோ தரப்படவில்லை. ஆஃப்ரோ அமெரிக்கர்களுக்கு எல்லாம் விளக்கம் கொடுத்தால் சர்வ வல்லமை பொருந்திய காவல்துறையின் மதிப்பு குறைந்துவிடுமே.
அங்கிருக்கும் டிடெக்டிவ் அதிகாரிகள், ஒரு கடையின் பெயரைச் சொல்லி சமீபத்தில் அங்கு எப்போது சென்றீர்கள் என வினவுகிறார்கள். வில்லியம் எவ்வளவோ யோசித்தும், 2014-க்குப் பின்னர் அந்தக் கடைக்குச் சென்றதாய் அவருக்கு எந்த நினைவுமில்லை. அதையே பதிலாகவும் தெரிவிக்கிறார். அப்படியெனில் இந்த புகைப்படத்தில் இருப்பது நீ இல்லையா ? என மறு கேள்வி கேட்கப்படுகிறது. 3800 டாலருக்கு அந்தக் கடையில் களவு போயிருப்பதுதான் வில்லியம்ஸ் கைதுக்கான காரணம். திருடியவர் வில்லியம்ஸைப் போன்றதொரு ஆஃப்ரோ அமெரிக்கர். அது நான் இல்லை. உங்களுக்கு ஏன் எல்லா ஆஃப்ரோ அமெரிக்கர்களும் ஒரே மாதிரி தெரிகிறார்கள்? புகைப்படத்தைப் பார்த்த வில்லியம்ஸ் சொன்னது இதை மட்டும்தான். 30 மணி நேரச் சிறைவாசத்துக்குப் பின்னர் 1000 அமெரிக்க டாலர்கள் என்னும் ஸ்யூரிட்டியுடன் வில்லியம்ஸ் விடுவிக்கப்படுகிறார்.

டெக்னாலஜி குறைபாடுகள் : Facial recognition மூலம் வெள்ளை நிறத்தவர்களை சரியாகக் கண்டுபிடிப்பது போல், கறுப்பு நிறத்தவர்களை, ஆசிய நிலப்பரப்புகளில் இருக்கும் கோதுமை நிற மனிதர்களையோ சரியாகக் கண்டுபிடிக்க முடியாதென தெரிவிக்கிறது சமீபத்திய ஆய்வுகள். ஆனால், இந்த 20 ஆண்டுகளில் இப்படியாக வில்லியம் மாதிரி எத்தனை மனிதர்கள் இழிவாக, மேட்டடிமைத்தன அதிகாரிகளால் நடத்தப்பட்டிருப்பார்கள் என நினைத்தாலே, அச்சமுறச் செய்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தில் அதிகம் பாதிப்படைப்படையப்போவது அங்கிருக்கும் சிறுபான்மை ஆஃப்ரோ அமெரிக்கர்கள் என்பதால், தங்கள் நிறுவன கருவிகளை இனி காவல்துறை பயன்படுத்தக்கூடாது என்றும் இந்த நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டு இருக்கின்றன. ஆனால், காவல்துறை பெரும்பாலும் பயன்படுத்துவது சிறிய நிறுவனங்களிலிருந்து வாங்கும் கருவிகளைத் தான்.
போதிய தெளிவில்லாத வீடியோக்களில் இருந்து கிடைக்கப்பெறும் புகைப் படங்களை வைத்து எந்த முன்முடிவுகளும் எடுக்கக்கூடாது என்னும் சட்டத்தை எல்லாம் யாரும் அமெரிக்காவில் மதிப்பதில்லை. சொல்லப்போனால், எந்த நாட்டுக் காவல்துறையும் மதிப்பதில்லை. காரணம், அப்போதைக்கு வழக்கை முடிக்க ஒரு ஆதாரம் தேவை அவ்வளவே. சம்பவம் நடந்த அன்று குறிப்பிட்ட நபர் அணிந்திருந்த ஆடையை அவர் வைத்திருக்கிறாரா, இந்த சம்பவத்துக்கான நேரடி சாட்சியங்கள் யாரேனும் இருக்கிறார்களா, அவர் மொபைலில் அந்த இடத்துக்கு வந்ததற்கான லொக்கேஷன் ப்ரூஃப் ஏதேனும் இருக்கிறதா என எத்தனை விஷயங்களை ஊர்ஜிதம் செய்ய வேண்டும் என்கிறது சட்டம். ஆனால், எத்தனை வழக்குகளில் இதைச் செய்கிறோம் என்னும் கேள்வி எழாமல் இல்லை. புகைப்பட மாதிரிகளை வைத்து மட்டுமே குற்றம் சுமத்தப்பட்டும் சிறைக்குள் ஆண்டுக்கணக்கில் இருளை சம்பளமாய் அனுபவிக்கும் சாமான்யர்கள் ஏராளம்.
கருவிகள் ஒரு குறிப்பிட்ட அல்காரித்தத்தின்படி இயங்குபவை. சிசிடிவி ஃபுட்டேஜில் இருக்கும் படத்தை, ஏற்கெனவே இருக்கும் கோடிக்கணக்கான படங்களுடன் ஒப்பிட்டு, இவராக இருக்கலாம் எனக் கணிக்கும். ஆனால், அதில் எத்தனை சதவிகிதம் துல்லியமாக்கக் கணிக்கிறார்கள் என்பதெல்லாம் கேள்விக்குறியே. ஆஃப்ரோ அமெரிக்கர்களையும், ஆசிய மக்களையும் இந்தக் கருவிகள் சரியாகக் கணிப்பதில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு மட்டுமல்ல, நிரூபிக்கப்பட்ட உண்மையும்கூட. ஆனாலும், இன்றளவிலும், இதைத்தான் உலகின் மேன்மை பொருந்திய வளர்ந்த நாடுகள் பயன்படுத்துகிறார்கள்.
சமூகம் சார்ந்த பிரச்னைகள் : கொலைக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்படும் ஆஃப்ரோ அமெரிக்கர்களில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் அப்பாவிகள். கொலைக் குற்றங்களுக்கு அடுத்தபடியாக, போதை மருந்து குற்றங்களிலும் ஆஃப்ரோ அமெரிக்கர்கள் அதிகளவில் தவறுதலாக கைது செய்யப்படுகிறார்கள். தமிழ் சினிமாக்களில் வரும் `குப்பத்து’ பிஹேவியருக்கும், வட சென்னை மக்களுக்கும் தரப்படும் ட்ரீட்மென்ட்தான் உலகெங்கும் ஒடுக்கப்பட்டவர்களின் நிலை. வெள்ளையாய் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்பது எப்படி `உலக நியதி’யோ, அதே போல் திருடன், போதை மருந்து கடத்துபவன், கொலை, கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபடுகிறவன் கறுப்பாகவே இருப்பான் என்பதும் அங்கு `உலக நியதி’. நிலம் சார்ந்த சிறுபான்மையினர்கள் உலகம் முழுக்க விரவிக் கிடக்கிறார்கள். எப்போது எங்கு பிரச்னை என்றாலும், முதலில் தோல் உரியும் முதுகுகள் இவர்களுடையதுதான்.
Becoming புத்தகத்தில் மிச்சல் ஒபாமா சொல்லியிருக்கும் வரிகள் நினைவுக்கு வருகின்றன. மிச்சலின் அண்ணன் தன் சொந்த சம்பாத்யத்தில் விலையுயர்ந்த பைக் ஒன்றை வாங்கி சிகாகோ நகரத்து வீதியில் செல்கிறார். அங்கு அவரை தடுத்து நிறுத்தும் காவல்துறை, அது திருட்டு பைக் என உறுதியாய் நம்புகிறது. எப்படி ஒரு `கறுப்பனால்` விலையுயர்ந்த பைக் வாங்க முடியும் என்பதுதான் காவல்துறை அதிகாரியின் எண்ணம். அந்த காவல்துறை அதிகாரியும் ஒரு ஆஃப்ரோ அமெரிக்கர் என்பதுதான் இந்தச் செய்தியில் இருக்கும் நகை முரண்.

நியூயார்க் டைம்ஸில் வெளியான வில்லியம்ஸ் குறித்த செய்தியின் மூலம் facial recognitionல் தவறாக ஒரு நபரைக்கூடக் கைது செய்ய முடியும் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. இப்படித் தவறுதலாகக் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட முதல் நபர் வில்லியம்ஸ்தான். குற்றவாளிகளின் பட்டியலில் வைக்கப்பட்ட வில்லியம்ஸின் புகைப்பட, DNA, கை ரேகை மாதிரிகளை அந்தப் பட்டியலிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். `கணினி தவறு செய்துவிட்டது. Just a technical error’ என முடித்திருக்கிறார்கள். ஆனால், எத்தனை வில்லியம்ஸ்கள் சிறையிலிருந்து மீண்டு, வெளிச்சத்தைப் பார்த்திருப்பார்கள் என்பது சுதந்திர தேவிக்கே வெளிச்சம்.
இந்தியர்களாகிய நாம், சமீபத்தில் எப்போது நம் புகைப்படங்களை நமது பாதுகாப்பின் பெயரால் அரசாங்கத்துக்குக் கொடுத்தோம் என நினைவிருக்கிறதா? ஆம், ஆதார் தகவல்கள். கை ரேகை, கண் ரேகை, முகம் என அனைத்துத் தகவல்களையும் கொடுத்திருக்கிறோம். கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடந்த கலவரத்தின் போது, 1100 சாமான்யர்களை facial recognizition மூலம் கண்டறிந்து இருக்கிறது காவல்துறை, “இது வெறும் சாஃப்ட்வேர். இதற்கு ஒருவரின் நம்பிக்கை பற்றிக் கவலையில்லை. அவர்தம் உடை பற்றி கவலையில்லை. முகத்தை மட்டுமே வைத்து யார் எனக் கண்டுபிடிக்கும்” என நயம்பட அறிவித்தார் நம் உள்துறை அமைச்சர் அமித் ஷா.
நமது புகைப்படங்கள், டிரைவிங் லைசன்ஸ், ஆதார், ரேசன், வாக்காளர் அடையாள அட்டை என பல்வேறு இத்யாதிகளின் மூலம் நம் அரசிடம் இருக்கிறது. அது எல்லாம் பாதுகாப்பாக, நமது பாதுகாப்பைப் பேணிக் காப்பதற்காக என்பதால் நாம் நிம்மதியாக இருக்க முடிகிறது.
சீன அரசைப் போல், நம்மை மிரட்டி யாரும் நம் முகங்களின் மாதிரிகளை வாங்க வேண்டியதில்லை. FaceApp போல சில செயலிகளை உருவாக்கினாலே போதும், தாமாகவே முன்வந்து நமது புகைப்பட விவரங்களை அதில் கொடுத்து விடுவோம்.
காவல்துறையின் பயன்பாட்டுக்காக Automated Facial Recognition System (AFRS) என்னும் தொழில்நுட்பத்தை மத்திய அரசின் ஒப்புதலோடு கையிலெடுக்க இருக்கிறார்கள். தற்போது காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கவே பயன்படுத்துவதாக சொல்லப்படும் இந்த தொழில்நுட்பம், விஷயம் தெரிந்தவர்கள் மத்தியில் ஒரு வித கலக்கத்தை ஏற்படுத்தாமல் இல்லை. சமீபத்தில் CAA போராட்டங்களில் பங்குபெற்றவர்களை எல்லாம் கேமராக்கள் மூலம் பதிவுசெய்து வைத்தது டெல்லி காவல்துறை. பின்பு பிரதமர் கலந்துக்கொண்ட விழாவில் இந்த AFRS தொழில்நுட்பம் கொண்டு போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இந்த அரசு இன்னும் இதை எப்படியெல்லாம் பயன்படுத்தப்போகிறது என்பதுதான் பெரும் அச்சத்தை தரும் கேள்வியாகவே இருக்கிறது. Internet Freedom Foundation போன்ற அமைப்புகள் இது போன்ற facial recognition பயன்பாட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.
இந்த AFRS மூலம் சிசிடிவிக்கள், பிற வீடியோக்களில் இருந்து ஃப்ரீஸ் செய்து புகைப்படங்களை, தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் கீழ் இருக்கும் புகைப்படங்களுடன் ஒப்பீடு செய்யப்பட்டு குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்கவிருக்கிறார்கள். சிறப்பான தொழில்நுட்ப உதவியுடன், மிகச் சிறந்த கருவிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் மட்டற்ற மகிழ்ச்சி. `மேரா தேஷ் மகான்’ எனப் போலி செயலிகளை நம் தலையில் கட்டும் காலமிது என்பதால்தான் சற்று பீதியடைய வேண்டியதிருக்கிறது.
முதற்பதிவு: ஆனந்த விகடன்
பின்குறிப்பு: இது பொருத்தமான கட்டுரை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் சிறப்பான கருவிகள் மூலம் அரசு மக்களை உளவினால் அது குறித்து கவலை இல்லை. மட்டமான கருவிகள் மூலம் உளவுகிறதே என்பது விகடனின் கவலையாக இருக்கலாம். ஆனால் ஏன் மக்களை உளவ வேண்டும்? என்பதே பொருள் நிறைந்த, புரிந்து கொள்ளப்பட வேண்டிய கேள்வி.