போர் தொடங்கி விட்டது

இனி எந்த ஒளிவு மறைவும் இல்லை. பிற வட மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் இந்தப் போர் தொடங்குவதில் சிக்கல் இருப்பதான தோற்றம் இருந்தது. அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக எதையும், எதையும், .. எதையும் செய்யத் துணிந்த அந்தக் கூட்டம், தற்போது தமிழ்நாட்டில் தன் போரை மக்கள் மீது வெளிப்படையாக தொடுத்து விட்டது.

மோடி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக அச்சு, காட்சி ஊடகங்கள் எவ்வாறெல்லாம் முனைந்து வேலை செய்தன என்பது நாம் அறிந்தது தான். பொய் அது மட்டுமே மூலதனம். எந்த விதமான மரபுகளோ, ஒழுக்கங்களோ, கொஞ்சமே கொஞ்சமேனும் மக்கள் நலனோ இன்றி மோடியின் உழுத்துப் போன கட்டைய 56 இஞ்சு திட மார்பாக காட்ட எல்லா வித தகிடுதத்தங்களையும் செய்தன. இதை இதே அளவில் தமிழ்நாட்டில் செய்ய முடியவில்லை. காரணம், இங்கே இருக்கும் ஓரளவு மேம்பட்ட அரசியல் புரிதல், பகுத்தறிவுச் சிந்தனை போன்றவை. இந்தக் காரணங்களை நீக்குவதற்கு பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டன. சீமான் போன்ற முகத்தில் வாயை மட்டுமே கொண்ட உசுப்புராணிகளை உலவ விட்டதில் தொடங்கி அதிமுகவை கைப்பற்றியது வரை. ஆனாலும், அந்தக் காரணங்களை அழிக்க முடியவில்லை.

இதன் தொடர் முயற்சியாகத் தான் மாரிதாஸ் போன்ற பொய்மூட்டைகள் அறிமுகம் செய்யப்பட்டார்கள் (மாரிதாஸை மக்களுக்கு அறிமுகம் செய்ததில் ரஜினிக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு) ஏற்கனவே இங்கு மாலன், மாவு மோகன் போன்ற இலக்கிய கம்பு சுத்திகள் இருந்த போதிலும் மாரிதாஸ் மீது வெளிச்சம் பாய்ச்சப்பட்டது. (யூடியூபில் பல நல்ல பதிவுகள் ஆயிரங்களுக்கே தாளமிட்டுக் கொண்டிருக்கையில் மாரிதாஸ் எளிதாக லட்சங்களை கடந்தது தற்செயலானது இல்லை) மாரிதாஸ், கிஷோர் கேசாமி, சேகர் போன்றோருக்கெல்லாம் தமிழ்நாட்டு அறிவுத்துறை தரவுகளில் என்ன பங்கு இருக்கிறது? இவர்களை மக்கள் முன்னே கொண்டு சென்று சேர்த்ததில் சமூக ஊடகத்தின் போலிக் கணக்குகளின் பங்கு கொஞ்சமல்ல. இந்த போலிக் கணக்கு பேர்வழிகள் எல்லா இடங்களிலும் ஊடுருவி இருக்கிறார்கள்.

மறுபக்கம் யாரென்றே தெரியாத, என்னவென்றே புரியாத பலரும் பொருளாதார நிபுணர், அரசியல் ஆலோசகர், ஊடகவியலாளர், விமர்சகர், வெங்காயம், விளக்குமாறு என்று பல்வேறு பெயர்களில் வலதுசாரி, இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் விவாதங்களில் நிறைக்கப்பட்டார்கள். ஒரு விவாதம் என்றால் அரசின், மோடியின், பாஜக, ஆர்.எஸ்.எஸ்சின் மூடிகள் நான்கு பேரும், மக்கள் பிரச்சனைகளை பேச ஒருவரும் இருக்குமாறு பார்த்துக் கொண்டார்கள். அதிலும் அந்த ஒருவர் ஈடு கொடுத்து பேசும் அளவுக்கு தரவுகளோடு இருந்து விட்டால் அடுத்த முறை அவர் அப்புறப்படுத்தப்படுவார். மதிமாறன் பாரதி தொடங்கி பலர் இவ்வாறு இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் குணசேகரன், கார்த்திகைச் செல்வன், சேவியர் உள்ளிட்டவர்கள் – தற்போது மக்கள் ஊடகவியலாளர்களாக காட்டப்படும் – இயங்கி வந்த தொலைக்காட்சிகளும் அடக்கம்.

இவ்வளவு பின்னணிகளுடன் இணைத்துத் தான் இப்போது தொடுக்கப்பட்டிருக்கும் போரைப் பார்க்க வேண்டும். கழிப்பறை காகிதங்கள் அளவுக்குக் கூட மதிப்பளிக்க வேண்டிய தேவையில்லாத மாரிதாஸ் போன்றோரின் முறையீட்டுக்காக குணசேகரன்களின் பொறுப்புகள் குறைக்கப்படுகின்றன. இதன் பொருள் என்ன? ஊடகங்கள் அனைத்தும் பார்ப்பனமயமாகி இருக்கின்றன என்பதும், கார்ப்பரேட்டுகளே ஊடகங்களின் அனைத்தையும் தீர்மானிக்கின்றன என்பதும், அரசு இதில் பின்கையாக இருக்கிறது என்பதும் ஊகிக்கக் கடினமான விதயங்கள் அல்லவே.

ஊடகவியலாளர் ஒருவர் பொறுப்பு குறைக்கப்பட்டிருப்பது அல்லது வேலையை விட்டுப் போகுமாறு அழுத்தம் கொடுப்பது என்பதை போர் தொடங்குவது என்று ஏன் குறிக்க வேண்டும்? இது வெறுமனே ஒருவரை வேலையை விட்டு நீக்குவதோடு மட்டும் தொடர்புடையது அல்ல. அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இருக்கும் சின்னஞ்சிறு தடையையும் அடாவடியாக அகற்றுவது என்பதோடு தொடர்புடையது. ஆர்.எஸ்.எஸ்சின் நோக்கமான அகண்ட பாரதம், அதனுள் மனு வகுத்தபடி படிநிலையில் நான்கு ஜாதிகள், அவர்களுக்கு ஏவல் புரியவும் எந்த உரிமைகளும் இல்லாத அடிமைகளாக பஞ்சமர்களும் எனும் வகைப்பாட்டில் மக்களை வைத்திருப்பது. அதற்கேற்ப அரசியலமைப்பை திருத்துவது. அரசியலமைப்பைத் திருத்துவதற்காக அதிகாரத்தைக் கைப்பற்றுவது. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எந்த எல்லைக்கும் கீழிறங்கிச் செல்வது. இதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கடந்த தேர்தலில் வெற்றிபெறுவதற்காக ஆர்.எஸ்.எஸ்சின் அரசியல் கட்சியான பாஜக வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடிகளை செய்தது எனும் குற்றச்சாட்டை எளிதாக கடந்து விட முடியுமா? 300க்கும் மேற்பட்ட தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில் வேறுபாடு இருக்கிறது எனும் குற்றச்சாட்டுக்கு இதுவரை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக எந்த பதிலையும் அளிக்கவில்லை. நீதிமன்றம் தொடங்கி அனைத்து துறைகளிலும் தனக்கு ஆதரவானவர்களைக் கொண்டு நிறைத்திருக்கிறது, நிறைத்து வருகிறது என்பதற்கு சாத்தான்குளம் காவல்துறை நண்பர்கள் எனும் விதயம் சான்றாக இருக்கிறது.

இந்த வகையில், இந்த ஊடகவியலாளர்கள் நீக்கம் என்பது – எந்தவித தடங்கலும் இல்லாமல் ஊடகங்களின் மூலம் தனக்கு ஆதரவான, எதிரிகளுக்கு எதிரான செய்திகளை பார்ப்ப – இருக்கும் குறைந்த அளவிலான தடைகளைக் கூட நீக்குவது எனும் அடிப்படையிலானது. அதாவது, அவர்கள் விரும்பும் கருத்துகளை மட்டுமே மக்கள் தங்கள் கருத்துகளாக ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும் என்பதின் தொடக்கம். சிறுபான்மையினர் தாழ்த்தப்பட்டவர்கள் மீது கொடுந்தாக்குதல் தொடுத்து அதை கலவரம் என்று மடைமாற்றுவது, அவர்களுக்கு எதிராக இருப்பார்கள் என கருதப்படும் அனைவரின் மீதும், அறிவுத் துறையினர், மக்களுக்காக நிற்பவர்கள் என அனைவரின் மீதும் அவதூறு பரப்புவது, ஜாதி மோதல்களை திட்டமிட்டு உருவாக்கி அதன் மூலம் மக்களை பிளவுபடுத்துவது, கடவுள் நம்பிக்கையை சாக்காக வைத்து அவர்களுக்கு எதிரானவர்களை எல்லாம் மத விரோதிகள், தேச விரோதிகள் என்று பரப்புவது என்று தொடர்ந்து கொண்டே செல்லும். இவை அனைத்தும் கற்பனைகள் அல்ல. வடமாநிலங்களில் நடந்த அண்மைக்கால வரலாறு. எங்கெல்லாம் கலவரம் நடந்திருக்கிறதோ அங்கெல்லாம் பாஜக வலுவாக காலூன்றி இருக்கிறது.

இதை எப்படி எதிர் கொள்வது? என்பது தான் மக்கள் முன் இருக்கும் முதன்மையான கேள்வி. வழமையாக இங்கு நடப்பது என்ன? திமுக, இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் ‘கண்டிக்கிறோம்’ என்று ஒரு அறிக்கையை வெளியிட்டு விட்டு தூங்கச் சென்று விடும். புரட்சிகர அமைப்புகள் அதிக அளவாக சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தும், சுவரொட்டிகள் ஒட்டும், சில செயலிக் கூட்டங்களை நடத்தும். முகநூல் போராளிகள் பொங்கோ பொங்கென்று பொங்கி பதிவுகள் எழுதித் தள்ளுவார்கள். ஹேஷ்டேக்குகளை டிரெண்டாக்குவார்கள். ஆனால் எதுவுமே அவர்களின் திட்டத்தை தடுக்காது, தொடர்ந்து கொண்டிருக்கும்.

இப்போதும் கூட எச். ராஜா கோவில்களில் தாக்குதல் நடத்தியது பெரியார் திராவிடர் கழகத்தினர் தான். அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று டுவீட்டுகிறார். தொடர்ந்து இப்படி நடந்து கொண்டே இருக்கிறது. காவல்துறை ஏன் இவரை கைது செய்யவில்லை என்று முகநூலில் பதிவிட்ட எந்த அமைப்பும் காவல்துறையில் முறையீடு செய்யவில்லை. ஏன் பெரியார் திராவிட கழகத்தினர், அவர்கள் செயல்படும் பகுதிகள் அனைத்திலும் எச். ராஜா மீது அவதூறு வழக்கு தொடரக் கூடாது?. தொடுத்து என்ன ஆகப் போகிறது என்று கேட்கலாம். ஒன்றும் ஆக வேண்டாம் சில நூறு வழக்குகள் பதிவாகட்டுமே. எத்தனை வழக்குகளை கிடப்பில் போடுவார்கள்? இருக்கும் வாய்ப்புகளை ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது? ஒன்றுமே ஆகவில்லை என்றாலும் கூட, மக்களிடம் பரப்ப பயன்படுமே. இத்தனை நூறு வழக்குகளுக்குப் பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஆங்காங்கே கிரிக்கெட் ஸ்கோர் போல வழக்குகளின் எண்ணிக்கையைப் போட்டு தட்டி வையுங்கள். செய்ய முடியாதா? அந்த ஒன்றை செய்ய வைக்க முடியாதா?

இப்போது ஊடகங்களை கைப்பற்றும் இந்த போரில் நாம் எப்படி எதிர்வினை ஆற்றுவது? ஒட்டு மொத்தமாக அச்சு காட்சி ஊடகங்களை புறக்கணியுங்கள். நிச்சயமாக இவை தேவையில்லாத ஆணி தான். தற்போது அனைவர் கையிலும் இணைய இணைப்புடன் கூடிய திறன் பேசி இருக்கிறது. அவைகளில் உடனுக்குடன் செய்திகள் வந்து விடுகின்றன. எனவே, செய்தித்தாள்கள் வாங்குவது என்பது ஒரு கௌரவத்துக்காகத் தான் வாங்கப்படுகிறது. காட்சி ஊடகங்களை எடுத்துக் கொண்டால் முகநூல், பகிரி, பிற சமூக ஊடகங்கள் மூலம் நமக்கு கிடைக்கும் செய்திகளைவிட குறைந்த அளவில் தான் தொலைக்காட்சிகள் நமக்கு செய்திகளை தருகின்றன. அதிலும் அவர்களுக்கு தேவையான செய்திகள், அவர்களுக்கு தேவையான விதத்தில் மட்டுமே ஒளிபரப்பப்படும். அதிலும் பாதிக்கு மேல் தேவையற்ற விளம்பரங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக முன்பு மாதம் அறுபதிலிருந்து நூறு ரூபாய்க்குள் பார்த்த தொலைக்காட்சி இப்போது முன்னூறு ரூபாய்க்கு மேல் ஆகி விட்டது. இவைகளை புறக்கணிப்பதால் நமக்கு எந்த இழப்பும் ஏற்படப் போவதில்லை. நம் வீட்டுக்குள் அச்சு, காட்சி ஊடகங்களை தடுப்பதன் மூலம் மாதம் ஒன்றுக்கு ரூபாய் ஐநூறை சேமிக்கலாம்.

இதில் இருக்கும் பிரச்சனை தொலைக்காட்சி தொடர்களின் பார்வையாளர்களாக இருக்கும் பெண்களும் ஆண்களும் தான். இவர்களுக்கு தொலைக்காட்சி தொடர்கள் உளவியல் ரீதியாக என்ன செய்கின்றன என்று விளக்கலாம். நாம் அடைய விரும்பும் சமூக வாழ்வை எதிர்க்கும் மனோநிலையை தொலைக்காட்சித் தொடர்களை தொடர்ச்சியாக பார்க்க வைப்பதன் மூலம் பெரும்பாலான பெண்களிடம் ஏற்படுத்துகிறார்கள். வெறுப்புணர்ச்சியைத் தூண்டுகிறார்கள். குடும்பங்களுக்குள் சகிப்புத் தன்மையை கொல்வது. சிறுசிறு குற்றங்களை செய்யும், உறவுகளை நம்ப மறுக்கும் நிலையை ஏற்படுத்துகிறார்கள். வெகுசில இளைஞர்கள் சமூகத்தை நோக்கி சரியான திசையில் திரும்பும் போது, இந்த தொடர்களின் ரசிகர்கள் தாம் பெரும் தடையாக இருக்கிறார்கள். இதை புரிய வைக்க முடியாத போனாலும் தொலைக்காட்சி தொடர்களை மட்டும் பார்ப்பதற்கு மாற்று ஏற்பாடுகள் இருக்கின்றன.

இதை நாம் செய்தால், அச்சு, காட்சி ஊடகங்களை முற்றாக புறக்கணித்தால், நிச்சயமாக அரசின், ஆர்.எஸ்.எஸ்சின் திணிப்புகள் நம் சிந்தனையை தீர்மானிப்பதை நாம் தடை செய்கிறோம் என்று பொருள். இதை நாம் செய்யும் போது பார்ப்பன பாசிசங்களின் வழியை அடைக்கிறோம் என்று பொருள். அவர்கள் எல்லா வழியையும் பயன்படுத்துவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவர்கள் கண்டடையும் ஒவ்வொரு வழியையும் நாம் அடைத்தாக வேண்டும். அதற்கான வழிகளை தேட வேண்டும். அதற்கான ஆற்றல் நம்மிடம் இருக்கிறது, பயன்படுத்திக் கொள்வோம்.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s