குடும்பம் 6

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 11

4. ஒருதார மணக் குடும்பம். அநாகரிக நிலையின் இடைக் கட்டம் தலைக்கட்டத்துக்கு மாறிச் செல்லும் காலப் பகுதியில் இணைக் குடும்பத்திலிருந்து இது தோன்றுகிறது என்பதை ஏற்கெனவே சுட்டிக் காட்டினோம். அதன் இறுதி வெற்றி நாகரிகம் தொடங்குவதற்குரிய அடையாளக் குறிகளில் ஒன்று. அது ஆணின் மேலாதிக்கத்தை அடிப்படையாக்க் கொண்டது. அதன் தெளிவான நோக்கம் விவாதத்திற்கு இடமில்லாத தந்தைமுறையுள்ள குழந்தைகளைப் பெறுவதுதான். இக்குழந்தைகள் உரிய காலத்தில் தமது தகப்பனாரின் இயற்கையான வாரிசுகள் என்ற முறையில் அவருடைய சொத்தைச் சுவீகரிக்கலாம் என்பதற்காக இந்தத் தந்தைமுறை அவசியமாயிற்று. திருமண உறவின் அதிகமான இறுக்கத்தில்தான் இணை மணத்திலிருந்து ஒருதார மணக் குடும்பம் வேறுபட்டிருக்கிறது. இப்பொழுது இரு தரப்பினரும் விரும்புகின்ற பொழுது இதை ரத்து செய்யமுடியாது. இப்பொழுது ஆண் மட்டுமே அதை ரத்து செய்து தன்னுடைய மனைவியைத் தள்ளி வைக்கலாம் என்பது விதியாகி விட்டது. மண வாழ்வில் உண்மையாக நடந்து கொள்ளாதிருக்கின்ற உரிமை இப்பொழுதும் கூட ஆணுக்கே உண்டு. குறைந்தபட்சம், வழக்கம் அதை அனுமதிக்கிறது (காமக்கிழத்தியை வீட்டில் கொண்டுவந்து வைத்துக் கொள்ளாத வரையில் கணவனுக்கு இந்த உரிமையை Code Napoleon [நெப்போலியன் சட்டம்] தெளிவாகவே வழங்குகிறது) [1804இல் முதலாவது நெப்போலியனின் கீழ் அமுல் செய்யப்பட்டிருந்த Code civil என்னும் சிவில் சட்டத் தொகுப்பின் 230ஆம் சரத்து இங்கு குறிப்பிடப்படுகிறது]. சமுதாயம் மேலும் வளர்ச்சியடைகின்ற பொழுது இந்த உரிமை மேன்மேலும் பிரயோகிக்கப்படுகிறது. பெண் பண்டைக்காலப் பாலியல் நடைமுறையை நினைவுபடுத்திக் கொண்டு அதை மீண்டும் உயிர்ப்பிக்க விரும்பினால் அவள் முன்னெப்போதையும் விடக் கடுமையாக தண்டிக்கப்படுகிறாள்.

     கிரேக்கர்களிடையில் இந்தப் புதிய குடும்ப வடிவத்தை அதன் முழுக் கடுமையுடன் நாம் பார்க்கிறோம். மார்க்ஸ் குறிப்பிட்டபடி, புராணத்தில் பெண் தெய்வங்கள் வகிக்கின்ற நிலை ஆரம்பக் காலத்தைக் காட்டுகிறது; அப்பொழுது பெண்கள் பிற்காலத்தைக் காட்டிலும் சுதந்திரமான, மதிப்புள்ள நிலையில் இருந்தனர். ஆனால் வீர யுகத்தில் ஆண்களின் மேலாதிக்கம், பெண்ணடிமைகளின் போட்டி ஆகியவற்றினால் பெண்கள் ஏற்கெனவே கீழ்நிலைக்குத் தாழ்த்தப்பட்டு விட்டதைப் பார்க்கிறோம். டெலிமாக்ஸ் தன் தாயாரின் பேச்சில் குறுக்கிட்டுவாய் மூடும்படி அவளைக் கட்டளையிடுவதை நாம் ஒடிஸி என்னும் காவியத்தில் படிக்கலாம் [ஹோமர், ஒடிஸி, முதல் பாடல்]. ஹோமரின் காவியத்தில் சிறைபிடிக்கப்பட்ட இளம் பெண்கள் வெற்றியாளர்களுடைய காமவெறிக்கு இலக்காகின்றனர். இராணுவத் தலைவர்கள் பதவி வரிசைப்படி ஒருவர் பின் ஒருவராக அழகான பெண்களைத் தமக்குப் பொறுக்கிக் கொள்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு பெண்ணடிமைக்காக அஹில்லசும் அகமெம்னானும் சண்டை போட்டுக் கொள்வதைச் சுற்றி இலியாத் என்னும் காவியம் சுழல்கிறது என்பதை நாம் அறிவோம். ஹோமரின் ஒவ்வொரு முக்கியமான வீரனுடன் சேர்த்து ஓர் அடிமைப் பெண் குறிப்பிடப்படுகிறாள்; அவள் அந்த வீரனுடைய கூடாரத்தில் வசிக்கிறாள், அவன் படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறாள். நாட்டுக்குத் திரும்புகின்ற பொழுது இந்தப் பெண்கள் கணவன்மார்களுடைய வீடுகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். எஸ்கிலஸ் எழுதிய நாடகத்தில் அகமெம்னான் கஸ்ஸாண்டிராவை அப்படித்தான் வீட்டுக்குக் கொண்டு செல்கிறான் [எஸ்கிலஸ், ஒரஸ்தெயா, அகமெம்னான்]. இந்தப் பெண்ணடிமைகளுக்குப் பிறக்கும் புத்திரர்கள் தகப்பனாருடைய சொத்தில் ஒரு சிறு பகுதியை பெருகிறார்கள்; அவர்கள் சுதந்திர மனிதர்களாக்க் கருதப்படுகிறார்கள். இப்படி டெலமானுக்கு முறைகேடாகப் பிறந்த மகனே டியூகுரோஸ் என்பவன்; அவன் தன் தகப்பனாருடைய பெயரை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டான். திருமணம் செய்து கொண்ட மனைவி இதையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டும், ஆனால் தன்னைப் பொறுத்தமட்டில், கற்புடனும் தாம்பத்திய ஒழுக்கத்துடனும் இருக்க வேண்டும். நாகரிகக் காலத்தில் இருந்ததை விட வீர யுகத்தில் கிரேக்க மனைவி அதிக மரியாதையுடன் நடத்தப்பட்டாள் என்பது உண்மையே. ஆனால் அவளுடைய கணவனைப் பொறுத்தமட்டில், அவள் அவனுடைய சட்டபூர்வமான வாரிசிகளுக்கு தாயாகவும் அவனுடைய முக்கியமான வீட்டு வேலைக்காரியாகவும் பெண்ணடிமைகளை மேற்பார்வை செய்பவளாகவும் இருந்தாள். அவன் விரும்புகின்ற பொழுது இந்தப் பெண்ணடிமைகளைத் தன் காமக்கிழத்திகளாக வைத்துக் கொள்ளலாம், அவ்விதமே வைத்துக் கொள்ளவும் செய்தான். ஒருதார மணத்துக்குப் பக்கத்திலேயே அடிமை முறையும் இருந்ததனால்தான், ஆணுக்கு முற்றிலும் சொந்தமாக அழகிய இளம் பெண்ணடிமைகள் இருந்ததனால் தான் ஆரம்பத்திலிருந்தே ஒருதார மணம் என்பது பெண்களுக்கு மட்டுமே என்னும் பிரத்யேகமான தன்மையை முத்திரையாக கொண்டிருந்தது, அத் தன்மை இன்றும் கூட இருக்கிறது.

பிற்காலத்தைச் சேர்ந்த கிரேக்கர்களைப் பொறுத்தமட்டில், நாம் டோரியர்களையும் அயோனியர்களையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். முந்தியவர்கள் ஹோமர் குறிப்பிடுவதை விடப் பல அம்சங்களில் மிகவும் பழமையான மண உறவுமுறைகளைக் கொண்டிருந்தார்கள்; அதற்கு ஸ்பார்டா மூலச்சிறப்பான உதாரணமாக இருந்தது. ஸ்பார்டாவில் இணை மண வடிவத்தை நாம் காண்கிறோம். அது அங்கே அரசைப் பற்றி நிலவிய கருத்தோட்டங்களுக்கு ஏற்ப திருத்தி அமைக்கப்பட்டிருந்தது. அந்த மண வடிவம் குழு மணத்தின் பல அம்சங்களைத் தன்னிடம் இன்னும் கொண்டிருந்தது. குழந்தைகள் பிறக்கவில்லை என்றால் திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன. அனாக்சன்டிரிடஸ் என்னும் அரசன் (கி.மு. சுமார் 560) முதலாவது மலட்டு மனைவியைத் தவிர இரண்டாவது மனைவியையும் கொண்டிருந்தான்; இரண்டு குடும்பங்களை நட்த்தினான். இதே காலத்தைச் சேர்ந்த அரிஸ்டோனஸ் என்னும் அரசனுடைய இரண்டு மனைவியரும் மலடிகள். அவன் ஒரு மனைவியைப் போக விட்டுவிட்டு மூன்றாவது மனைவியாக ஒரு பெண்ணைக் கைக்கொண்டான். மறுபக்கத்தில், சில சகோதரர்கள் ஒரே மனைவியைப் பொதுவில் வைத்துக் கொள்ளலாம். நண்பனுடைய மனைவியை விரும்புகின்ற நபர் அவளை அவனுடன் பகிர்ந்து கொள்ளலாம். ஒருவன் தன் மனைவியை “பொலிகாளை” என்று பிஸ்மார்க் வர்ணிக்கக்கூடிய நபருக்கு – அவன் குடிமகனாக இல்லாவிட்டாலும் கூட – தருவது முறையானதாகக் கருதப்பட்டது. ப்ளுடார்கின் நூலில் பின்வரும் சம்பவம் வர்ணிக்கப்படுகிறது: ஸ்பார்டாவைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் ஒருவன் அவளைத் தான் காதலிப்பதாகச் சொல்லிப் பிந்தொடர்கிறான். அவள் தன் கணவனைப் போய்ப் பார்க்குமாறு அவனை அனுப்பி வைக்கிறாள். இது அதிகமான பாலியல் சுதந்திரத்தைக் குறிப்பதாக ஷோமான் கூறுகிறார். ஆகவே, மெய்யான கூடா ஒழுக்கம், அதாவது கணவனுக்குத் தெரியாமல் மனைவி சோரம் போவது கேள்விப்படாத விஷயமாகவே இருந்தது. மறுபக்கத்தில், ஸ்பார்டாவில், அதன் உச்ச நிலையிலாவது, வீட்டுச் சேவக அடிமை முறை என்பது கேள்விப்படாததாகும். பண்ணையடிமை ஹெலட்டுகள் எனப்பட்டோர் பண்ணைகளில் ஒதுக்கப்பட்டுத் தனியாக வாழ்ந்து வந்தனர். எனவே ஸ்பார்டியாட்டுகள் எனப்பட்டோர்

[ஸ்பார்டியாட்டுகள் – பண்டைக்கால ஸ்பார்டாவில் முழு உரிமைகள் கொண்டிருந்த குடிமக்கள். ஹெல்ட்டுகள் – பண்டைக்கால ஸ்பார்டாவில் உரிமைகள் இல்லாத மக்கள்; இவர்கள் நிலத்துடன் பிணைக்கப்பட்டு ஸ்பார்டாவின் நிலவுடைமையாளர்களாகிய ஸ்பார்டியாட்டுகளுக்குக் குறிப்பிட்ட கட்டணங்களைத் தருமாறு விதிக்கப்பட்டிருந்தார்கள்.]

அந்தப் பெண்களுடன் உடலுறவு கொள்வதற்குச் சபலம் குறைவாக இருந்தது. இத்தகைய சூழ்நிலையில், ஸ்பார்டாவைச் சேர்ந்த பெண்கள் மற்ற கிரேக்கப் பெண்கள் எல்லோரையும் விட மிகவும் அதிக கௌரவமான நிலையில் இருந்தார்கள் என்பது முற்றிலும் இயற்கையே. பண்டைக்காலத்தவர்கள் கிரேக்கப் பெண்களிடையில் ஸ்பார்டாவின் பெண்களையும் அதீனியப் பொதுமகளிரில் பொறுக்கியெடுத்த பகுதியனரையும் பற்றி மட்டுமே மரியாதையுடன் பேசினார்கள். அந்தப் பெண்களின் பேச்சுக்களை ஏட்டில் பதிவு செய்யத் தக்கவையாக கருதினார்கள்

அயோனியர்களிடையில் – இவர்களுக்கு ஏதன்ஸ் குறியடையாளமாக இருந்தது – விஷயங்கள் முற்றிலும் வேறுவிதமாக இருந்தன. இளம் பெண்கள் நூல் நூற்றல், நெசவு செய்தல், துணி தைத்தல் ஆகியவற்றையே கற்றார்கள்; அதிகமாகப் போனால், சிறிதளவு படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டார்கள். அவர்கள் அநேகமாக முற்றிலும் தனிமையில் வைக்கப்பட்டார்கள்; பெண்களுடன் மட்டுமே உறவாடினார்கள். வீட்டில் பெண்கள் வசிக்கும் பகுதி தனிப் பகுதியாக இருந்தது. அது மேல் மாடியிலோ, வீட்டின் பினப்குதியிலோ இருந்தது. அங்கே ஆண்கள் சுலபமாகப் போக முடியாது. ஆண்கள் வீட்டுக்கு வந்தால் பெண்கள் இத்தனிப் பகுதிக்குப் போய் விடுவார்கள். பெண்ணடிமைகள் உடன் வந்தாலொழிய பெண்கள் வெளியே போவதில்லை. வீட்டில் அவர்கள் அநேகமாகக் காவலில்தான் வைக்கப்பட்டிருந்தார்கள். பிறன்மனைவியைக் கூடுபவர்களுக்கு அச்சமூட்டுவதற்காக மோலோசிய வேட்டைநாய்கள் வைக்கப்பட்டிருந்தன என்று அரிஸ்டஃபானஸ் கூறுகிறார்[அரிஸ்டஃபானஸ், ஃபெஸ்மஃபோரியர்களின் திருவிழாவில் பெண்கள்.]. குறைந்தபட்சமாகப் பார்த்தால், ஆசிய நகரங்களில், பெண்களைக் காவல் செய்வதற்கு அலிகள் உற்பத்தி செய்யப்பட்டார்கள். அந்த அலிகள் அநாகரிகர்களுக்காக மட்டுமல்ல என்று வாக்ஸ்முத் கூறுகிறார். யூரிபிடிசின் நாடகத்தில் மனைவி oikurema [யூரிபிடிஸ், ஒரெஸ்தஸ்], அதாவது வீட்டைக் கவனித்துக்கொள்வதற்குரிய பொருள் (இச்சொல் அஃறிணையில் உள்ளது) என்று வர்ணிக்கப்படுகிறாள். உண்மையிலேயே குழந்தையைப் பெற்றெடுக்கின்ற வேலை தவிர அதினியனுக்கு அவள் வீட்டின் தலைமை வேலைக்காரிதான், மற்றபடி அதிகமல்ல. கணவனுக்கு அவனுடைய உடற்பயிற்சியும் பொது விவகாரங்களும் இருந்தன. அவற்றிலிருந்து மனைவி விலக்கப்பட்டிருந்தாள். இவற்றுடன் கூடுதலாக, அவனுடைய விருப்பத்துக்குப் பெண்ணடிமைகளும் இருந்தார்கள். மேலும், ஏதன்சின் உச்ச கட்டத்தில் விபச்சாரம் ஒன்றின் அடிப்படையில் மட்டுமே பிரபலமான கிரேக்கப் பெண்கள் வளர்ச்சியடைந்தார்கள். ஸ்பார்டாவின் பெண்கள் தமது குணச்சிறப்பால் உயர்ந்ததைப் போல கிரேக்கப் பெண்கள் தம்முடைய மதிநுட்பத்தாலும் கலாரசனையாலும் பண்டைக்காலப் பெண்களின் பொதுவான தரத்துக்கு மேலே உயர்ந்து நின்றார்கள். ஒருத்தி பெண்ணாக இருக்க வேண்டுமென்றால் அவள் முதலில் பொதுமகளாக இருக்க வேண்டும் என்ற நிலை அதீனியக் குடும்பத்தைப் பற்றிய மிகக் கடுமையான கண்டனமாகும்.

காலப் போக்கில் மற்ற அயோனியர்கள் மட்டுமன்றி, மூல நாட்டிலும் காலனிகளிலும் இருந்த கிரேக்கர்கள் அனைவருமே இந்த அதீனியக் குடும்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு தமது குடும்ப உறவுகளை மேன்மேலும் உருவாக்கினார்கள். எனினும் எவ்வளவுதான் தனிமைப் படுத்தலும் காவலும் இருந்த போதிலும் கணவன்மார்களை வஞ்சிப்பதற்கு கிரேக்கப் பெண்களுக்கு அடிக்கடி வாய்ப்புகள் கிடைத்தன. சொந்த மனைவியருடன் காதல் செய்வதற்கு வெட்கப்பட்ட அந்தக் கணவர்கள் பொது மகளிருடன் பலவிதமான காதல் லீலைகளில் ஈடுபட்டார்கள். ஆனால் பெண்களைத் தாழ்வுபடுத்தியது ஆண்களுக்கு எதிராகவே திரும்பியது, அவர்களையும் தாழ்வுபடுத்தியது. கடைசியில், அவர்கள் சிறுவர்களுடன் முறைகேடான உடலுறவு கொள்கின்ற நிலைக்குக் கீழிறங்கினார்கள்; கானிமீடு பற்றிய கட்டுக்கதையை வைத்துக் கொண்டு அவர்கள் தம்மையும் தமது தெய்வங்களையும் தாழ்வுபடுத்திக் கொண்டார்கள்.

பண்டைக்காலத்தில் மிகவும் நாகரிகமுள்ள, உயர்ந்த வளர்ச்சி பெற்ற மக்களினத்தில் நாம் அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய அளவில் ஒருதார மண முறையின் தோற்றம் இப்படித்தான் இருந்தது. அது தனிநபர் பாலியல் காதலினால் ஏற்படவில்லை, அத்துடன் அதற்கு சிறிதும் சம்பந்தமில்லை. ஏனென்றால் முன்போலவே திருமணங்கள் வசதிக்காகச் செய்து கொண்ட திருமணங்களாகவே இருந்தன. இயற்கையான நிலைமைகளை அடிப்படையாகக் கொள்ளாமல் பொருளாதார நிலைமைகளை – அதாவது, ஆதிகால, இயற்கையாக வளர்ந்த பொதுச் சொத்தின் மீது தனியுடைமை வெற்றி பெற்றிருந்த நிலைமைகளை – அடிப்படையாகக் கொண்டு தோன்றிய முதல் குடும்ப வடிவம் அது. குடும்பத்தை ஆண் ஆட்சி செய்தல், தன்னுடையது எனக் கூடிய குழந்தைகளைப் பெறுதல், தன்னுடைய செல்வத்துக்கு வாரிசுகளைப் பெறுதல் ஆகியவை மட்டுமே ஒருதார மணத்தின் இலட்சியங்கள் என்று கிரேக்கர்கள் ஒளிவுமறைவு இல்லாமல் ஒத்துக் கொண்டார்கள். மற்றபடி, அது ஒரு சுமை. தெய்வங்களுக்கும் அரசுக்கும் மூதாதையர்களுக்கும் நிறைவேற்றித் தீர வேண்டிய கடமை. ஏதன்சில் சட்டம் திருமணத்தைக் கட்டாயமாக்கியது மட்டுமன்றி, திருமணக் கடமைகள் என்று சொல்லப்பட்டவற்றில் குறைந்தபட்சக் கடமைகளை ஆண் நிறைவேற்றுவதையும் கட்டாயமாக்கியது.

ஆக, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சமரசமாக ஒருதார மண முறை வரலாற்றில் தோன்றவில்லை; அத்தகைய சமரசத்தின் உச்ச வடிவமாக அது தோன்றவில்லை என்பது நிச்சயம். அதற்கு மாறாக, ஒரு பால் மற்றொரு பாலை அடிமைபடுத்துதலாக அது தோன்றுகிறது; ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய காலங்களில் அறவே அறிந்திராத இரு பால் சச்சரவைப் பற்றிய பிரகடனமாகவே அது தோன்றுகிறது; ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய காலங்களில் அறவே அறிந்திராத இரு பால் சச்சரவைப் பற்றிய பிரகடனமாகவே அது தோன்றுகிறது. மார்க்சும் நானும் 1846 இல் எழுதிய, பிரசுரிக்கப்படாத பழைய கையெழுத்துப் பிரதியில் [ஜெர்மன் சித்தாந்தம் என்னும் நூல் இங்கு குறிப்பிடப்படுகிறது] பின்வருமாறு எழுதினோம்: “குழந்தை பெறுவதற்காக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான வேலைப் பிரிவினைதான் முதல் வேலைப் பிரிவினை ஆகும்”. இன்று இத்துடன் நான் பின்வருமாறு சேர்த்துக் கூறுவேன்: வரலாற்றில் தோன்றிய முதல் வர்க்கப் பகைமை ஒருதார மணத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பகைமை வளர்வதுடன் பொருந்துகிறது. ஒருதார மணமுறை வரலாற்று ரீதியில் மகத்தான முன்னேற்றமாகும். ஆனால் அதே சமயத்தில், அது அடிமைமுறையுடனும் தனிச்சொத்துடனும் சேர்ந்தாற்போலவே இன்றளவும் நீடிக்கின்ற ஒரு யுகத்தைத் துவக்கியது. அந்த யுகத்தில் ஒவ்வொரு முன்னேற்றமும் அதே போல் சார்புநிலையில் ஒரு பின்னடைவாகவும் இருக்கிறது; அதில் ஒரு குழுவின் துன்பத்தையும் ஒடுக்கப்படுதலையும் ஆதாரமாகக் கொண்டு மற்றொரு குழு நல்வாழ்க்கையும் வளர்ச்சியும் அடைகிறது. அது நாகரிக சமுதாயத்தின் உயிரணு வடிவமாகும். அதன் மூலமாக, அந்தச் சமுதாயத்தில் முழு வளர்ச்சி அடைகின்ற பகைமைகளின், முரண்பாடுகளின் தன்மையை நாம் ஏற்கெனவே ஆராய முடியும்.

இணைக் குடும்பத்தின் வெற்றியுடனோ, ஒருதார மண முறையின் வெற்றியுடனோ கூட உடலுறவுக்கு இருந்த பழைய, சார்புரீதியான சுதந்திரம் நிச்சயமாக மறையவில்லை.

“பழைய திருமண வாழ்க்கை முறை பூனலுவா குழுக்கள் படிப்படியாக மறைந்ததன் மூலம் இப்பொழுது மேலும் குறுகலான வரம்புகளுக்குள் குறுக்கப்பட்டு, முன்னேறி வரும் குடும்பத்தை இன்னும் சூழ்ந்து நின்றது, அது நாகரிக நிலையின் எல்லை வரைக்கும் அதைப் பின்தொடரும்…. கடைசியில் பொதுமகளிர் முறையின் புதிய வடிவத்தில் அது மறைந்த்து. இந்த வடிவம் குடும்பத்தின் மீது விழுகின்ற கரிய நிழல் போல நாகரிகச் சமூகத்தில் மனிதகுலத்தைப் பின்தொடர்கிறது.”

பொதுமகளிர் முறை என்பதை ஒருதார மணத்துக்கு உடனுடனாக ஆண்களுக்கும் மணமாகாத பெண்களுக்கும் மண நிலைக்குப் புறம்பான உடலுறவு என்று மார்கன் பொருள் கொள்கிறார். இது நாகரிக காலம் முழுவதிலும் பல்வேறு வடிவங்களில் செழித்து வளர்கிறது என்பது எல்லோரும் அறிந்த்தே. அது பகிரங்க விபச்சாரமாகத் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் இந்தப் பொதுமகளிர் முறை நேரடியாகக் குழு மணத்திலிருந்து வந்ததாக, கற்புரிமையை வாங்குவதற்குச் செலுத்தும் காணிக்கை என்ற முறையில் பெண்கள் உடலுறவுக்குத் தம்மை ஒப்படைத்ததிலிருந்து வந்ததாக அடையாளம் கண்டு கொள்ள முடியும். பணத்துக்காக உடலுறவுக்கு உடன்படுதல் முதலில் ஒரு மதச் சடங்காக இருந்தது. அந்தச் சடங்கு காதல் தெய்வத்தின் ஆலயத்தில் நடைபெற்றது. அந்தப் பணமும் முதலில் ஆலயத்தின் கருவூலப் பெட்டிகளுக்குச் சென்றது. அர்மீனியாவிலுள்ள அனெய்டிசின் ஹாய்ரொடியூல்களும் கோரிந்திலுள்ள அஃப்ரோடைடின் ஹாய்ரொடியூல்களும் [ஹாய்ரொடியூல்கள் – பண்டைக்கால கிரீசிலும் கிரேக்கக் காலனிகளிலும் இருந்த கோயில் அடிமைகள், இரு பாலையும் சேர்ந்தவர்கள். ஆசியா மைனர் மற்றும் கோரிந்த் உட்பட பல இடங்களில் பெண் அடிமைகள் தேவதாசிகளாக இருந்தார்கள்] இந்தியாவில் ஆலயங்களுடன் பிணைக்கப்பட்டுள்ள தேவதாசிகளும் (அவர்கள் பாயதேர்கள் என்று சொல்லப்பட்டனர் – இது போர்த்துகீசிய bailadeira, அதாவது நடனமங்கை என்ற சொல்லின் திரிபாகும்) முதன்முதலில் வந்த விபச்சாரிகள். இப்படிக் காணிக்கைக்காகத் தம்மை ஒப்படைக்கின்ற முறை ஆதியில் எல்லாப் பெண்களுக்கும் உரிய கடைமையாகும். பின்னர் அவர்கள் எல்லோருடைய சார்பிலும் பெண் பூசாரிகள் மட்டும் அதைக் கடைபிடித்தார்கள். மற்ற மக்களினங்களிடையில் திருமணத்துக்கு முன்பு இளம் பெண்களுக்குத் தரப்பட்டிருந்த உடலுறவுச் சுதந்திரத்திலிருந்து பொதுமகளிர் முறை தோன்றி வளர்ந்துள்ளது – ஆகவே இதுவும் குழு மணத்தின் எச்சம்தான் – இன்னொருவழியாக நம்மிடம் வந்திருக்கிறது. மிகவும் முந்திய காலமாகிய அநாகரிக நிலையின் தலைக்கட்டத்திலேயே சொத்து வேறுபாடு ஏற்பட்ட பொழுது அடிமையுழைப்புக்குப் பக்கத்திலேயே இங்குமங்குமாக்க் கூலியுழைப்பும் தோன்றுகிறது. அதே சமயத்தில், அதன் அவசியமான தொடர்ச்சியாக, பெண்ணடிமையைப் பலவந்தம் செய்வதற்குப் பக்கத்தில் சுதந்திரமான பெண்கள் விபச்சாரத்தைத் தொழிலாகக் கொள்வதும் தோன்றுகிறது. இப்படி, குழு மணம் நாகரிகத்துக்கு அளித்திருக்கின்ற பரம்பரைச் சொத்து இரு தரப்புள்ளது. நாகரிகம் படைத்தவை அனைத்தும் எப்படி இரு தரப்பும், இரு பேச்சும், சுய முரண்பாடும் பகைமையும் கொண்டிருக்கின்றனவோ, அப்படிப்பட்டதே இதுவும்; ஒரு பக்கத்தில் ஒருதார மண முறை, மறு பக்கத்தில் பொதுமகளிர் முறை – இதனுள் விபசாரம் என்ற அதன் மிகத் தீவிரமான வடிவமும் அடங்கும். மற்ற எந்த சமுதாய உறவுமுறையையும் போலப் பொதுமகளிர் முறையும் ஒரு சமுதாய உறவு முறையே. அது பழைய புணர்ச்சி சுதந்திரத்தின் தொடர்ச்சியே – ஆண்களுக்குச் சாதகமான தொடர்ச்சி. குறிப்பாக ஆளும் வர்க்கத்தினர் எதார்த்ததில் இதை சகித்துக் கொள்வது மட்டுமின்றி ஆர்வத்துடன் கடைப் பிடித்தாலும் அதைப் பேச்சளவில் கண்டிக்கிறார்கள். ஆனால் எதார்த்தத்தில்  இந்தக் கண்டனம் விபசாரத்தில் ஈடுபடுகின்ற ஆண்களைத் தாக்கவில்லை, பெண்களைத்தான் தாக்குகிறது. பெண்பால் மீது ஆண்பால் செலுத்தும் சர்வ ஆதிக்கம் சமூகத்தின் அடிப்படையான விதி என்று மீண்டும் பிரகடனம் செய்வதற்காகப் பெண்கள் பகிஷ்காரம் செய்யப்பட்டு, சமூகத்துக்கு வெளியே தள்ளப்படுகிறார்கள்.

எனினும் இதனால் ஒருதார மண முறைக்குள்ளேயே இரண்டாவது முரண்பாடு வளர்கிறது. பொதுமகளிர் முறையின் மூலம் சொகுசான வாழ்க்கை நடத்துகின்ற கணவனுக்குப் பக்கத்திலேயே புறக்கணிக்கப்பட்ட மனைவியும் நிற்கிறாள். ஆப்பிளில் ஒரு பாதியைத் தின்றுவிட்ட பிறகு முழு ஆப்பிளைக் கையில் வைத்திருக்க முடியாது என்பதை போல முரண்பாட்டில் ஒரு பாதி இல்லாமல் மறு பாதியை மட்டும் கொள்வது சாத்தியமில்லை. எனினும் ஆண்கள் வேறுவிதமாக நினைத்துக் கொண்டதாகத் தோன்றுகிறது – மனைவியர்கள் அவர்களுக்குப் பாடம் புகட்டுகின்ற வரை. ஒருதார மண முறையுடன் அதற்கு முன்பு இல்லாத இரண்டு நிரந்திரமான சமுதாயப் பிரமுகர்கள் காட்சியில் தோன்றுகிறார்கள் – மனைவியின் கள்ளக் காதலனும் மனைவியால் வஞ்சிக்கப்பட்ட கணவனும்.. பெண்கள் மீது ஆண்கள் வெற்றி பெற்று விட்டார்கள், ஆனால் வெற்றியாளர்களுக்கு முடி சூட்டுகின்ற வேலையை தோற்றவர்கள் பெருந்தன்மையுடன் மேற்கொண்டார்கள். மனைவியின் கூடா ஒழுக்கம் – அது தடை செய்யப்பட்டது, கடுமையாகத் தண்டிக்கப்பட்டது, ஆனால் அதை ஒழிக்க முடியவில்லை – ஒருதார மண முறைக்கும் பொதுமகளிர் முறைக்கும் பக்கத்தில் தவிர்க்க முடியாத சமுதாய உறவுமுறையாகி விட்டது.

இந்நூலின் முந்தைய பகுதிகள்

  1. மாமேதை ஏங்கல்ஸ்.
  2. 1884 ல் எழுதிய முன்னுரை
  3. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி
  4. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2
  5. ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய கலாச்சாரக் கட்டங்கள்
  6. குடும்பம் – 1
  7. குடும்பம் – 2
  8. குடும்பம் – 3
  9. குடும்பம் – 4
  10. குடும்பம் – 5

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s