அரண் ஊடகம்

சமீப காலமாக நியூஸ் 18, நியூஸ் 7, புதிய தலைமுறை போன்ற தொலைக்காட்சிகளில் பணி புரியும் நெறியாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருவதை கவனித்திருப்பீர்கள். அவர்கள் ஏன் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள்? ஒரு சார்பாக கேள்வி கேட்கிறார்களாம்.

அந்த ஒரு சார்பான கேள்விகள்தான் என்ன?

-> ஏன் இந்தியை திணிக்கிறீர்கள்?
-> பிற்படுத்தப்பட்ட/பட்டியல் சாதிகளுக்கான இட ஒதுக்கீட்டிற்கு ஏன் வேட்டு வைக்கிறீர்கள்?
-> பணமதிப்பிழப்பு என்ற பெயரில் ஏன் மக்களை துன்புறுத்துனீர்கள்?
-> ஜி.எஸ்.டி என்ற பெயரில் உள்நாட்டு தொழில்களை ஏன் அழிக்கிறீர்கள்?
-> அரசுத்துறையை, நாட்டை ஏன் மொத்தமாக தனியாருக்கு விற்கிறீர்கள்?
-> விவசாயிகளை கைவிட்டுவிட்டு, பெரும் பண முதலைகளுக்கு மட்டும் கடனை ஏன் ரத்து செய்கிறீர்கள்?
-> ஏன் பெட்ரோல் விலையை அன்றாடம் அதிகரிக்கிறீர்கள்?
-> ஏன் பெனிக்ஸ், ஜெயராஜை கொன்றீர்கள்?
-> மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்று கொலை செய்யும் கும்பலை ஏன் ஆதரிக்கிறீர்கள்?
-> கொரோனாவை ஏன் கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை?
-> தொழிலாளர்கள் நடந்தே ஊருக்கு செல்லும் வழியில் சாகும் நிலைக்கு ஏன் தள்ளினீர்கள்?

நெறியாளர்கள் இந்த கேள்விகளை கேட்கக் கூடாதா?

ஆம், கேட்கக் கூடாது என்கிறார்கள் அதிகாரத்திலிருக்கும் சக்திகள். கேட்காமல் இருக்க முடியுமா?
ஜனநாயக நாட்டின் குடிமக்கள் என்று சொல்லப்படும் நமக்கு இந்த உரிமைகள் கிடையாதா?
மக்களே நீங்களே கூறுங்கள், மக்கள் நலன் சார்பான கேள்விகளை கேட்பதே குற்றமாகுமா?
மக்கள் நலன் என்பதே அறம் மீறுவதாகுமா? ஆம் என்கிறார்கள் இந்த மிரட்டல் பேர்வழிகள்.

“அறம் மீறலாம், ஆனால், மக்கள் நலனுக்கு நிற்காதே” என்று கட்டளையிடுகிறார்கள். “வளைந்து கொடுக்கவில்லை யெனில், உங்கள் நிறுவனங்களை மிரட்டி வேலையைவிட்டு நீக்கச் செய்வோம்” என்கிறார்கள்.
ஔவை பாட்டியே ஆனாலும், சமகால ஊடகத்தில் பணி புரிந்திருந்தால், அறம் செய்ய விரும்பு என்று பாடுவதை தவிர்த்திருக்க வேண்டிய நிலைமையை சங் பரிவார அமைப்புகள் உருவாக்கியுள்ளன. அறம் பாடிய திருவள்ளுவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பார். கொரோனா பேரிடர் காலத்தில் சுகாதாரத்துறைக்கு போதுமான நிதி ஏன் ஒதுக்கவில்லை என்று வேலோடு முருகன் வந்திருந்தாலும், தேசவிரோதி என்று முத்திரை குத்தப்பட்டிருப்பார்.

பத்திரிகைத் துறையை சாராத, குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் நேரடி பின்புலம் இல்லாத நிறுவனங்கள், அரசியல் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து போவது தவிர்க்க இயலாதது. நிறுவனங்கள் அடிபணிந்து போகும் போது, மக்களுக்காக குரல் எழுப்பும் ஊடகவியலாளர்கள் மௌனிக்கப்படுகிறார்கள் அல்லது வேலையை விட்டு அனுப்பப் படுகிறார்கள். மாத சம்பளத்தில் வாழ்வை பேணும் சூழலில், அறத்தை கோரும் மனசாட்சியை ஆழமாக புதைத்து, மௌனித்திருப்பதையே பெரும்பாலான ஊடகவியலாளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள்.

கேள்வி கேட்பது, அறிவோடு சிந்திப்பது, மனிதாபிமானம்/மொழி உணர்வு கொண்டிருப்பது, சமூகநீதி உணர்வை, சமத்துவத்தை நேசிப்பது ஆகியவற்றை தீட்டாக கருதும் இந்த சங் பரிவாரத்தின் அடாவடியின் காரணமாக 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஊடகவியலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறர்கள்.

சன் தொலைக்காட்சியிலிருந்து வீரபாண்டியன், ஆங்கில இந்து நாளிதழிலிருந்து சித்தார்த் வரதராஜன், புதிய தலைமுறையிலிருந்து ஜென்ராம் மற்றும் அணியினர், ஆசிப், குணசேகரன் என்று நீளும் இந்த பட்டியல் இன்னும் முடிந்தபாடில்லை என்றுதான் சங்பரிவாரத்தின் சமிக்ஞைகள் தெரிவிக்கின்றன.

தங்கள் பணியையோ, பணியிட மாண்பையோ பாதுகாக்க முயற்சி செய்தாலே கிரிமினல் குற்றம் போல பார்க்கப்படும் நிலைமையில், தமிழ் தொலைக்காட்சி ஊடகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட நவீன அடிமைகள் போன்ற நிலைமை. அதையும் மீறி ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காக பேசினால் ஊடகவியலாளர் ஆசிப் போன்று வெளியேற்றப்படும் நிலைமை.

இத்தகைய ஜனநாயகமில்லாத சூழலில், இருக்கும் கொஞ்ச நஞ்ச உரிமைகளும் பறிக்கப்படும் சூழலில், ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க முடியுமா? முடியாது என்பதே எதார்த்தமாக இருக்கிறது. ஆகவே, ஊடக நலன், ஊடகவியலாளர் நலன், மக்கள் நலன்கருதி மாற்றை குறித்து யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இணைந்து மக்கள் பங்கேற்போடு ஒரு மாற்று ஊடகத்தை கண்டிப்பாக சாதிப்போம்

மாற்று ஊடகத்திற்கான அணி
அரண் ஊடகம்,
தமிழகத்தின் அரணாக, In Defence of Tamil Nadu

Web portal, செய்தி இணையதளம் மற்றும் யூட்யூப் சேனலாக இயங்கும்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s