
செய்தி:
ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படாது என அரசு அறிவித்துள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கால் பெரும்பான்மையான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதத்திற்கு அரிசியோடு சர்க்கரை, பருப்பு, எண்ணெய் முதலிய அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்கி வந்தது. தற்போதைய ஊரடங்கை ஒரு சில தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “நியாய விலை கடைகளில் இனி இலவசப் பொருள்கள் கிடையாது. ஆகஸ்ட் மாதம் முதல் அத்தியாவசிய பொருள்களை பணம் கொடுத்துத் தான் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளது.
செய்தியின் பின்னே:
நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் இலவசப் பொருட்களா? என்று சிந்தித்தால் இல்லை என்பது தான் விடையாக கிடைக்கும். அரசு கொள்முதல் செய்யும் உணவு தானியப் பொருட்களுக்கான விலை, நாம் செலுத்தும் வரிகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் இருந்து தான் செலுத்தப்படுகிறது. அப்படி இருக்கும் போது நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை எப்படி இலவசப் பொருட்கள் என்று அழைப்பது? சரியாகச் சொன்னால் அவை மறைவிலை பொருட்கள். அதாவது நேரடியாக இல்லாமல் மறைமுகமாக விலை கொடுத்து வாங்கும் பொருட்கள்.
ஊரடங்கு அறிவித்த மார்ச் 25 லிருந்து எடுத்துக் கொண்டால், ஒரே ஒரு முறை ஆயிரம் ரூபாயும், கடந்த நான்கு மாதங்களில் மறைவிலையில் உணவு தானியங்களும் வழங்கப்பட்டு வந்ததன. இதில் தான் தற்போது, நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்தது போல நேரடி விலை கொடுத்து தான் பொருட்கள் வாங்க வேண்டும் என அறிவித்திருக்கிறது அரசு. ஆனால் நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்தது போல் வேலைக்கு போகவோ, அதனால் ஊதியம் பெறவோ, அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளவோ வாய்ப்பு இருக்கிறதா?
அதாகப்பட்டது, “ரேசன் பொருள துட்டு குடுத்து வாங்கு. வாங்க முடியாட்டி, பட்டினி கெடந்து சாகு” அம்புட்டுதேன்.
செய்திகள் சுவாசிப்பது: 1/2020