
செய்தி:
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு ஜெர்மனி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். தலைநகர் பெர்லினில் திரண்ட 20,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்திய படி ஊர்வலமாக சென்றனர். கூட்டத்தில் ஒரு சிலர் தவிர யாரும் மாஸ்க் அணியவில்லை. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், ‘எங்கள் சுதந்திரம் பறிக்கப்படுகிறது’ என்று முழக்கமிட்டனர். இந்த ஊர்வலத்தில் அரசியல்வாதிகள் உட்பட, ஜெர்மனியின் பல பகுதிகளில் இருந்து வந்த மக்கள் பெருந்திரளாக போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
செய்தியின் பின்னே:
ஜெர்மனியின் போராட்டக்காரர்களின் முதன்மையான முழக்கம் எங்கள் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்பது தான். அதாவது, அங்கு வாழ்வாதாரம் எந்த அளவுக்கு பாதிக்கப் பட்டிருக்கிறது என்பது தெரியவில்லை. இதனுடன் இந்திய நிலையை ஒப்பிட்டுப் பாருங்கள். தொடக்கம் முதலே இங்கு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது தான் அனைத்தையும் விட முதன்மையான சிக்கலாக இருக்கிறது. ஊரடங்கு செயல்பாட்டில் இருக்கும் இந்த நான்கு மாத காலத்தில் எத்தனை பட்டினிச் சாவுகள் நிகழ்ந்திருக்கின்றன எனும் கணக்கு இங்கு யாரிடமும் இல்லை, எடுக்கப்படவில்லை. ஊடகங்களில் அது செய்தியாக வருவது கூட தடுக்கப்பட்டிருக்கிறது.
மக்களின் சுதந்திரமோ முழுமையாக அழிக்கப்பட்டிருக்கிறது. சாலையில் போவோரை காவல்துறையினர் கடுமையாக தாக்குவதில் தொடங்கி, தினமும் இத்தனை கோடி தண்டத் தொகை பெறப்பட்டிருக்கிறது, இத்தனை ஆயிரம் இருசக்கர வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்று நாளிதழ்களில் அறிவிப்பது வரை சென்றிருக்கிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான அனுமதி (இ பாஸ்) எந்த அளவுக்கு முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது – தேவை இருப்பவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதும், பணம் கொடுப்பவர்களுக்கு தாராள அனுமதியும் – அம்பலப்பட்டிருக்கிறது. தங்களுக்கு உடன்படாத கடைகளை பூட்டி சீல் வைப்பது தொடங்கி எளிய மக்களின் வண்டிக் கடைகளை சாலையில் கொட்டிக் கவிழ்ப்பது வரை நடந்திருக்கிறது. பறக்கும் காமிராக்கள் எனும் சிறந்த தொழில்நுட்பத்தை, கிராமங்களில் வேலையில்லாததால் விளையாடிக் கொண்டிருப்பவர்களை துரத்துவதற்கு பயன்படுத்தி இருப்பது, உலகின் வேறெந்த நாட்டிலும் நடந்திருக்க முடியாத குறுக வைக்கும் உண்மை. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இவையெல்லாம் விட கொடுமையாக, ஒட்டிக் கொண்டிருக்கும் குறைந்த அளவு உரிமைகளான தொழிலாளர் சட்டங்களை திருத்துவது, தொழிற்சாலைகள் சூழல் அனுமதி பெற வேண்டியதில்லை என்று சட்டம் கொண்டு வருவது, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது, என்று மக்களை நோய் பயத்தில் அமுக்கி விட்டு தொடர்ச்சியாக மக்களை பாதிக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது அரசு.
இவைகளையெல்லாம் கண்டு பொருமிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். மக்களின் இந்த பொருமலுக்கு ஜெர்மனி மக்கள் பச்சைக் கொடி அசைத்திருக்கிறார்கள்.
அதாகப்பட்டது, “கோட மழ கொட்டும்போது துணிக் கொட தாங்காதுங்கோ” அம்புட்டுதேன்.
செய்திகள் சுவாசிப்பது: 3/2020