
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 12
குழந்தைகளுடைய உண்மையான தந்தை யார் என்பது முன்பு போலவே இப்பொழுதும், அதிகபட்சமாகப் பார்த்தால், ஒரு தார்மீக நம்பிக்கையை ஆதாரமாக்க் கொண்டிருக்கின்ற விஷயமாகி விட்டது. தீர்வு காண முடியாத இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக Code Napoleon இன் 312வது ஷரத்து பின்வருமாறு உத்தரவிட்டது: ”மண வாழ்க்கையில் கருவுற்ற குழந்தைகளுக்குக் கணவனே தந்தை ஆவார்”. மூவாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்திருக்கின்ற ஒருதார மணத்தின் இறுதி விளைவு இதுதான்.
ஆக, தனிப்பட்ட குடும்பத்தில், அதன் வரலாற்று ரீதியான தோற்றத்தை உண்மையாகப் பிரதிபலிக்கின்ற சமயங்களிலும் ஆணுடைய தனியாதிக்கத்தின் விளைவாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் சச்சரவைத் தெளிவாக வெளிப்படுத்தும் சமயங்களிலும் நமக்கு ஒரு சிற்றுருவ ஓவியம் கிடைக்கிறது. அதில் சமுதாயத்திலுள்ள பகைமைகளும் முரண்பாடுகளும் தெரிகின்றன. நாகரிகம் தொடங்கிய காலத்திலிருந்து வர்க்கங்களாகப் பிரிந்த சமுதாயம் அந்தப் பகைமைகளிலும் முரண்பாடுகளிலும் இயங்கி வருகிறது. சமுதாயத்தினால் அவற்றுக்குத் தீர்வு கண்டுபிடித்துத் தோற்கடிக்க முடியவில்லை. தனது முழு உறவுமுறையின் ஆதித் தன்மையை நிர்ணயிக்கின்ற விதிகளின்படி எங்கே மண வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறதோ, அவ்வகைப்பட்ட ஒருதார மணத்தின் உதாரணங்களை – ஆனால் கணவனுடைய ஆதிக்கத்தை எதிர்த்து மனைவி கலகம் செய்கின்ற உதாரணங்களை – நான் இங்கு குறிப்பிடுகிறேன் என்பது இயற்கையே. எல்லாத் திருமணங்களும் இப்படிப்பட்டவை அல்ல என்பது ஜெர்மானிய அற்பவாதிக்கு நன்றாகத் தெரிந்திருப்பதைப் போல வேறு எவருக்கும் தெரியாது. அவருக்கு அரசை ஆட்சி செய்யத் திறனில்லை என்பதைப் போல வீட்டையும் ஆட்சி செய்யத் திறனில்லை. எனவே நியாயமாகவே அவருடைய மனைவிதான் முழு உரிமையோடு ஆட்சி செய்கிறாள். அவர் ஆட்சி செயவதற்குத் தகுதியற்றவர். ஆனால் அவர் துரதிர்ஷ்டத்தில் சிக்கிய தனது தோழராகிய பிரஞ்சுக்காரரைக் காட்டிலும் தான் எவ்வளவோ மேல் என்று கற்பனை செய்து கொள்கிறார்; ஜெர்மானிய அற்பவாதியை விட பிரஞ்சுக்காரர் பல சமயங்களில் இன்னும் மோசமான நிலையில் இருக்கிறார்.
எனினும் கிரேக்கர்களிடையே மூலச்சிறப்பான, கடுமையான வடிவத்தில் நிலவிய தனிப்பட்ட குடும்பம் எல்லா இடங்கள்லும் எப்பொழுதும் தோன்றவில்லை. எதிர்காலத்தில் உலகை வெல்லப் போகிறவர்கள் என்ற முறையில் ரோமானியர்கள் கிரேக்கர்களை விட நயத்தில் குறைவாக இருந்தாலும் நெடு நோக்குக் கொண்டிருந்தார்கள். அவர்களிடையில் பெண்ணுக்கு அதிகமான சுதந்திரமும் மரியாதையும் அளிக்கப்பட்டன. மனைவியின் மேல் ஜீவமரண அதிகாரம் தனக்கு இருந்த்தனால் தனது மனைவியின் மண வாழ்க்கை விசுவாசத்துக்குப் போதிய பாதுகாப்புகள் இருப்பதாக ரோமானியன் நம்பினான். மேலும், கணவனைப் போலவே மனைவியும் சுயமாகத் திருமணத்தை ரத்து செய்ய முடியும். ஆனால், ஜெர்மானியர்கள் வரலாற்றில் பிரவேசித்த பிறகுதான் ஒருதார மணத்தின் வளர்ச்சியில் மிகவும் பெரிய முன்னேற்றம் உறுதியாக நடைபெற்றது. ஒருவேளை, அவர்களுடைய வறுமையின் காரணமாக இணைக் குடும்பத்திலிருந்து ஒருதார மண முறை முழுமையாக வளர்ச்சியடைந்து தோன்றியதாகத் தெரியவில்லை. டாசிட்டஸ் கூறிய மூன்று சந்தர்ப்பங்களைக் கொண்டு நாம் இந்த முடிவுக்கு வருகிறோம். முதலாவதாக, திருமணத்தின் புனிதத் தன்மையில் அவர்களுக்கு உறுதியான நம்பிக்கை இருந்தாலும் – ”ஒவ்வொரு மனிதனும் ஒரு மனைவியுடன் திருப்தி கொண்டவனாக இருந்தான்; பெண் கற்பு என்னும் அறம் சூழ வாழ்ந்தாள்” – அந்தஸ்துள்ள ஆண்கள் மற்றும் இனக்குழுத் தலைவர்கள் மத்தியில் பலதாரமணம் நிலவியது. இது இணை மண முறை நிலவிய அமெரிக்கர்களின் நிலையை ஒத்திருந்த்து. இரண்டாவதாக, தாயுரிமையிலிருந்து தந்தையுரிமைக்குச் சிறிது காலத்துக்கு முன்னரே மாறியிருக்க முடியும். ஏனென்றால் தாயின் சகோதரன் – தாயுரிமைப்படி, குலத்தில் மிகவும் நெருங்கிய ஆண் உறவினன் – சொந்தத் தந்தையை விட அநேகமாக நெருங்கிய உறவினனாக இனியும் கருதப்பட்டான். இதுவும் அமெரிக்க செவ்விந்தியர்களின் கருத்துடன் பொருந்துகிறது. மார்க்ஸ் அடிக்கடி கூறியபடி, நமது ஏடறிந்த வரலாற்றுக்கு முந்தைய இறந்த காலத்தைப் புரிந்து கொள்வதற்குரிய திறவுகோல் அமெரிக்க செவ்விந்தியர்கள் மத்தியிலிருந்துதான் கிடைத்தது. மூன்றாவதாக, ஜெர்மானியர்கள் மத்தியில் பெண்கள் உயர்வாக மதிக்கப்பட்டார்கள். அவர்கள் பொது விவகாரங்களிலும் செல்வாக்கு பெற்றிருந்தார்கள். இவை ஒருதார மணத்தின் குணாம்சியமாகிய ஆணின் ஆதிக்கத்துடன் நேரடியாக முரண்படுகின்றன. இந்த அம்சங்களில் எல்லாம் ஸ்பார்ட்டா மக்களிடையில் அதே போல இணை மண முறை முழுமையாக மறைந்துவிடவில்லை என்பதை நாம் ஏற்கெனவே பார்த்தோம். ஆக, இதன் தொடர்பாகவும் கூட, ஜெர்மானியர்கள் வந்த பிறகு ஒரு புத்தம் புதிய அம்சம் உலக ஆதிக்கத்தை பெற்றது. ரோமானிய உலகின் அழிவுக் குவியல் மீது இனங்கள் கலந்ததிருந்தது வளர்ச்சியடைந்த புதிய ஒருதார மண முறை ஆணின் ஆதிக்கத்தை மென்மையான வடிவங்களைக் கொண்டு மறைத்தது; குறைந்தபட்சம் வெளித் தோற்றத்திலாவது, மூலச்சிறப்பான பண்டைக்காலம் அறிந்திருந்ததை விட மிகவும் சுதந்திரமான, மதிப்புள்ள நிலையைப் பெண்கள் வகிப்பதற்கு அனுமதித்தது. முதல் தடவையாக, மிகவும் பெரிய தார்மிக முன்னேற்றத்திற்க் குரிய சாத்தியத்தைப் படைத்தது. இதை நாம் ஒருதார மணமுறையிலிருந்து தான் பெறுகிறோம்; அதற்கு நாம் ஒருதார மணமுறைக்குக் கடமைப்பட்டுள்ளோம். இதற்கு முன்னர் உலகெங்குமே அறியப்படாத நவீன காலத்தின் தனிப்பட்ட காதல் என்னும் முன்னேற்றம் சந்தர்ப்பத்தைப் பொறுத்து ஒருதார மணத்துக்குள்ளேயோ அதற்கு இணைகரமாகவோ அல்லது அதற்கு எதிராகவோ நடைபெற்றிருக்கலாம்.
எனினும், ஜெர்மானியர்கள் இன்னமும் இணைக் குடும்பத்தில் வாழ்ந்து வந்தார்கள்; மேலும், அவர்கள் இயன்றவரை அதற்குப் பொருத்தமான பெண் நிலையை ஒருதார மணத்துடன் ஒட்ட வைத்து விட்டார்கள் என்ற சூழ்நிலையிலிருந்துதான் இந்த முன்னேற்றம் நிச்சயமாகத் தோன்றியது. ஜெர்மானியர்களின் கட்டுக்கதையான, அதிசயமான, தார்மிகத் தூய்மையுள்ள மனப்போக்கின் விளைவாக அது தோன்றவில்லை. ஒருதார மணத்தில் தோன்றிய வெளிப்படையான அதே தார்மிக முரண்பாடுகளை இணைக் குடும்பம் நடைமுறையில் வெளிப்படுத்தவில்லை என்பதுடன் அந்த மனப்போக்கு நின்றுவிடுகிறது. இதற்கு மாறாக, ஜெர்மானியர்கள் குடிபெயர்ந்து சென்றதில், குறிப்பாகத் தென்கிழக்கில் கருங்கடலின் ஓரத்திலுள்ள சமவெளிகளிலுள்ள நாடோடிகளை நோக்கிச் சென்றதில் கணிசமான ஒழுக்கக் குறைவுக்கு ஆளானார்கள்; குதிரைச் சவாரியைக் கற்றதை ஒதுக்கிவிட்டால் மற்றபடி அவர்களிடமிருந்து மோசமான, இயறகைக்கு விரோதமான கெட்ட பழக்கங்களைக் கற்றுக் கொண்டார்கள்: டாய்ஃபால்களைப் பற்றி அம்மியானசும் ஹெரூல்களைப் பற்றி புரோகோபியசும் இதற்கு வெளிப்படையான சான்றுகளை அளித்துள்ளனர்.
நாமறிந்தவற்றுள் ஒருதார மணமுறை என்ற ஒரே குடும்ப வடிவத்திலிருந்துதான் நவீன காலக் காதல் வளர்ந்திருக்க முடியும் என்ற போதிலும் இந்தக் காதல் அதற்குள் கணவன், மனைவியின் பரஸ்பரக் காதலாக மட்டுமே அல்லது பெரும்பாலும் கணவன், மனைவியின் காதலாக வளர்ந்த்து என்று கூற முடியாது. ஆணின் ஆதிக்கத்தின் கீழுள்ள கண்டிப்பான ஒருதார மணத்தின் தன்மை முழுவதுமே இதை அனுமதிப்பதில்லை. வரலாற்று ரீதியில் சுறுசுறுப்பான எல்லா வர்க்கங்களிடையிலும், அதாவது எல்லா ஆழும் வர்க்கங்களிடையிலும் திருமணம் என்பது இணை மணமுறை காலத்திலிருந்து பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, சௌகரியத்துக்கான திருமணமாகவே இருந்து வந்தது. வரலாற்று ரீதியில் பாலிணை விழைவாக, (குறைந்தபட்சம் ஆளும் வர்க்கங்களைச் சேர்ந்த) எந்த நபரும் ஈடுபட உரிமை பெற்றிருந்த பாலிணை விழைவாக காதல் பெற்றிருந்த முதல் வடிவம், புணர்ச்சி வேட்கையின் – காதலின் துல்லிய குணாம்சம் இதுதான் – மிகவும் சிறந்த வடிவமாக காதல் பெற்றிருந்த முதல்வடிவம், மத்திய காலத்தைச் சேர்ந்த வீரக் காதல், கணவன், மனைவியின் காதல் அல்ல. அதற்கு மாறாக, அதன் மூலச்சிறப்பான வடிவத்தில், புரோவான்ஸல் மக்களிடையே, அது பிறன் மனைவியைக் கூடுவதை நோக்கி நேராக, முழு வேகத்துடன் போகிறது. அதன் பெருமைகளைப் பற்றி அவர்களுடைய கவிஞர்கள் அதிகமாக பாடியிருக்கிறார்கள். “ஆல்பாக்கள்” (albas) என்று சொல்லப்படுபவை, ஜெர்மன் மொழியில் Tagelieder (அருணோதய கீதங்கள்) என்று சொல்லப்படுபவை புரோவான்ஸல் காதல் கவிதைகளிலேயே தலைசிறந்த கவிதைகளாம். போர்வீரன் எப்படி தனது காதலியுடன், அதாவது அடுத்தவனுடைய மனைவியுடன் படுத்திருக்கிறான், காவற்காரன் எப்படி வெளியே காவல் காத்திருக்கிறான் அருணோதயத்தின் முதற் கிரணங்கள் தோன்றியதும் போர்வீரன் யாருக்கும் தெரியாமல் தப்பிவிடக் காவற்காரன் எப்படி அழைக்கிறான் என்பவற்றை அந்தக் கவிதைகள் ஒளிமையமான வர்ணங்களில் வர்ணிக்கின்றன. காதலன் பிரிகின்ற காட்சி கவிதையின் உச்ச நிலையாக அமைந்திருக்கிறது. வடக்கு பிரஞ்சுக்காரர்களைப் போல மதிப்புக்குரிய ஜெர்மானியர்களும் இந்தக் கவிதை பாணியை மேற்கொண்டார்கள்; மேலும், அதனுடன் பொருந்தி நின்ற வீரக் காதலின் நட்த்தை முறைகளையும் மேற்கொண்டனர். இதே கருத்துக் குறிப்புள்ள தலைப்பில் நமது பழைய வோல்ஃப்ராம்வான் எஷென்பாஹ் மிகவும் அழகான மூன்று அருணோதய கீதங்களை நமக்கு விட்டுச் சென்றுள்ளார். அவர் எழுதியுள்ள மூன்று நீளமான வீரக் கவிதைகளை விட இவை சிறந்தவை என்பது என்னுடைய கருத்தாகும்.
நம் காலத்திய முதலாளித்துவத் திருமணம் இரு வகைப்பட்ட்து. கத்தோலிக்க நாடுகளில், அதற்கு முன்பு நடைபெற்றுள்ளதைப் போல, பெற்றோர்கள் தம் இளம் முதலாளித்துவ மகனுக்கு தகுந்த மனைவியைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். அதன் இயற்கையான விளைவு இதுதான்: ஒருதார மணத்திலுள்ள முரண்பாடு முழுமையாக மலர்ந்து வெளிப்படுகிறது – கணவன் தரப்பில் செழித்தோங்கும் பொது மகளிர் முறை, மனைவியின் தரப்பில் செழித்தோங்கும் கள்ளக் காதலன் முறை. மரணத்துக்கு மருந்து எதுவுமில்லை என்பதைப் போல, திருமணமான பெண்ணின் பரிகாரம் எதுவும் இல்லை என்னும் ஒரே காரணத்திற்காத்தான் கத்தோலிக்க திருச்சபை திருமண ரத்துரிமையை ஒழித்தது என்பதில் சந்தேகமில்லை. மறு பக்கத்தில், புரோடஸ்டேண்ட் நாடுகளில் முதலாளித்துவ இளைஞன் தனது வர்க்கத்துக்குள்ளாகவே அநேகமாக சுதந்திரமாகவே மனைவியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறான் என்பதே விதி. இதன் விளைவாக, ஓரளவுக்கு காதல் அடிப்படையில் திருமணம் இருக்க முடியும். ஒழுக்க முறையை முன்னிட்டு, புரோடஸ்டேண்ட் போலி ஆசாரத்துக்கு ஏற்ப, அத்திருமணத்தில் காதல் இருப்பதாக்வே எப்பொழுதும் அனுமானிக்கப்படுகிறது. இதில், ஆண்கள் பொதுமகளிரைத் தீவிரமாகத் தேடுவதில்லை, பெண் கள்ளக் காதலனுடன் கூடா ஒழுக்கத்தில் ஈடுபடுவதும் அவ்வளவுக்கு விதியாக இல்லை. எனினும் ஒவ்வொரு திருமண ரகத்திலும் மக்கள் திருமணம் புரிவதற்கு முன்பிருந்த நிலையிலேயெ இருப்பதனாலும், புரோடஸ்டேண்ட் நாடுகளின் குடிமக்கள் பெரும்பாலும் அற்பவாதிகளாகவே இருப்பதனாலும் இந்த புரோடஸ்டேண்ட் ஒருதார மணம் என்பது – சிறந்த உதாரணங்களை சராசரியாக எடுத்துக் கொண்டு பார்த்தால் – சலிப்பு நிறைந்த மண வாழ்க்கைக்கே இட்டுச் செல்கிறது. இதுவே இல்லற இன்பம் என வர்ணிக்கப்படுகிறது. திருமணத்தின் இவ்விரண்டு வடிவங்களையும் நாவல் சிறப்பாக பிரதிபலிக்கிறது: கத்தோலிக்க பாணிக்கு பிரெஞ்சு நாவல், புரோடஸ்டேண்ட் பாணிக்கு ஜெர்மன் நாவல். இரண்டு ரகங்களிலும் “ஆணுக்கு கிடைக்கிறது”: ஜெர்மன் நாவலில் இளைஞனுக்கு இளம்பெண் கிடைக்கிறாள், பிரெஞ்சு நாவலில் மனைவியினால் ஏமாற்ப்பட்டவன் என்ற பட்டம் கணவனுக்கு கிடைக்கிறது. இருவரில் யாருடைய நிலைமை மிகவும் மோசமானது என்று காண்பது எப்பொழுது சுலபமல்ல. எனவேதான் பிரெஞ்சு முதலாளி வர்க்கத்துக்கு, ஜெர்மன் நாவலின் தூங்கி வழிகிற தன்மையைக் கண்டால் பயமேற்படுகிறது. ஜெர்மானிய அற்பவாதிக்கோ, பிரெஞ்சு நாவலின் “ஒழுக்கக் கேட்டைக்” கண்டால் அதே போன்ற பயமேற்படுகிறது. எனினும் “பெர்லின் தலைநகரமாகிக் கொண்டிருப்பதால்” ஜெர்மன் நாவல்கள் சிறிதளவு தைரியத்துடன் பொதுமகளிர் முறை, கள்ளக் காதல் நாயகன் ஆகியவற்றைப் பற்றி சமீப காலத்தில் எழுதத் தொடங்கியுள்ளன. அங்கே அவை இருப்பது நெடுங்காலமாகத் தெரிந்ததே.
எனினும் இந்த இரண்டு உதாரணங்களிலும் சம்பந்தப்பட்டவர்களுடைய வர்க்க நிலைதான் திருமணத்தை நிர்ணயிக்கிறது; அந்த அளவுக்கு அது வசதிக்காக செய்யப்பட்ட திருமணமாகவே என்றும் இருக்கிறது. இவ்விரு உதாரணங்களிலும் இந்த வசதித் திருமணம் பெரும்பாலும் படு மோசமான விபசாரமாகிவிடுகிறது. இது சில சம்யங்களில் கணவன், மனைவி இருவர் தரப்பிலும் நடக்கும்; ஆனால் மனைவியின் தரப்பில் மிகவும் பொதுவாக நடைபெறுகிறது. அவளுக்கும் சாதாரண விலைமகளுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் அவள், ஒரு கூலித் தொழிலாளி தனது உழைப்பை விற்பதைப் போலன்றி நிரந்தர அடிமைத்தனத்துக்குத் தன்னுடைய உடலை விற்பனை செய்கிறாள் என்பதே. வசதித் திருமணங்கள் எல்லாவற்றிற்கும் ஃபூரியேயின் பின்வரும் சொற்கள் பொருத்தமானவை:
“இலக்கணத்தில் இரண்டு எதிர்மறைகள் உடன்பாட்டுப் பொருள் ஆவதைப் போல, திருமண ஒழுக்கங்களில் இரண்டு விபசாரங்கள் ஒரு நன்னடத்தை ஆகின்றன.”
ஒடுக்கப்பட்ட வர்க்கங்களிடையே, அதாவது தற்காலத்தில் பாட்டாளிவர்க்கத்திடையேதான் கணவன், மனைவி உறவுக்கு இடையில் காதல் என்பது விதியாக முடியும்; அப்படி விதியாக இருக்கிறது. இந்த உறவு அதிகார முறைப்படி அனுமதிக்கப்பட்ட்தா, இல்லையா என்பது முக்கியமில்லை. ஆனால் இங்கே மூலச்சிறப்பான ஒருதார மணத்துக்குரிய எல்லா அடிப்படைகளும் நீக்கப்படுகின்றன. இங்கே உடைமை என்பது அறவே கிடையாது. இந்த உடைமையைப் பாதுகாத்து வாரிசிடம் விட்டுச் செல்வதற்காகவே ஒருதார மண முறையும் ஆண் ஆதிக்கமும் நிலைநாட்டப்பட்டன. ஆகவே, இங்கே ஆண் அதிக்கத்தை வலியுறுத்துவதற்குத் தூண்டுகோல் எதுவும் கிடையாது. இன்னும் அதிகமென்னவென்றால், அதற்கு வழி வகைகளும் கிடையாது. இந்த ஆண் ஆதிக்கத்தைப் பாதுகாப்பது முதலாளி வர்க்கச் சட்டமே. அந்த சட்டம் உடைமை வர்க்கத்தினருக்கும் பாட்டாளி வர்க்கதுதுடன் அவர்களுடைய உறவுகளுக்காகவும் தான் இருக்கிறது. அதனால் பணச் செலவு ஏற்படும், ஆகவே தொழிலாளியின் வறுமை காரணமாக, மனைவியின் பால் அவனுடைய அணுகுமுறையில் இந்த சட்டத்துக்கு முக்கியத்துவம் இல்லை. இங்கே முற்றிலும் வேறான தனிப்பட்ட உறவுகளும் சமூக உறவுகளும் நிர்ணயமான காரணப் பொருட்களாக இருக்கின்றன. இது தவிர, பெரிய அளவு தொழில் துறை பெண்களை வீட்டிலிருந்து தொழிற் சந்தைக்கும் பாக்டரிக்கும் மாற்றி விட்டிருப்பதாலும் அவளை குடும்பத்தின் உணவுக்கு வேலை செய்பவளாக பெரும்பாலும் ஆக்கி விடுவதாலும் பாட்டாளியின் இல்லத்தில் ஆணின் ஆதிக்கத்தின் கடைசி எச்சங்கள் அடிப்படை இழந்து விட்டன. ஒருதார மணமுறை நிலைத்த பிறகு உறுதியாக வேரூன்றிய பெண்களைக் கொடுமைப்படுத்துகின்ற போக்கு மட்டும் ஒருவேளை இங்கே சிறிதளவு இருக்கலாம். எனவே பாட்டாளிக் குடும்பம் அதன் கறாரான் அர்த்தத்தில் இனியும் ஒருதார மணத்திம் ரகத்தைச் சேர்ந்ததல்ல – மிகவும் தீவிரமான காதல் மற்றும் இரு தரப்பினரது பரஸ்பர விசுவாசம் இருந்தாலும் சரி, எவ்விதமான சமய அல்லது லௌகீக ஆசிகளைப் பெற்றிருந்தாலும் சரி. எனவே ஒருதார மண முறையுடன் நிரந்தரமாக ஒட்டிக்கொண்டுள்ள பொதுமகளிர் முறையும் கள்ளக் காதல் நாயக முறையும் இங்கே அநேகமாக அற்பமான பாத்திரத்தையே வகிக்கின்றன. திருமணத்தை ரத்து செய்கின்ற உரிமையைப் பெண் நடைமுறையில் திரும்பப் பெற்றுவிட்டாள்; கணவனும் மனைவியும் இணைந்து வாழ முடியவில்லை என்றால் இருவரும் பிரிந்து செல்லவே விரும்புகிறார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால், சொல்லிலக்கணத்தின் அர்த்தத்தில்தான் பாட்டாளித் திருமணம் ஒருதார மணமாகுமே தவிர அந்தச் சொல்லின் வரலாற்றிற்குரிய அர்த்தத்தில் ஆகாது.
இந்நூலின் முந்தைய பகுதிகள்