
செய்தி:
இ-பாஸை ரத்துசெய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்கிற நடைமுறை இருந்து வருகிறது. ஆனால், அத்தியாவசிய தேவைகளுக்காக விண்ணப்பம் செய்பவர்களுக்கு இ-பாஸ் கிடைக்கவில்லை. டிராவல்ஸ் நிறுவனங்களுக்கும், பணம் அளிப்பவர்களுக்கும் தாராளமாக கிடைப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுத்துள்ளன. ஆனால், இ-பாஸ் நடைமுறையை இப்போதைக்கு ரத்து செய்ய வாய்ப்பு இல்லை என முதல்வர் கைவிரித்துவிட்டார்.
செய்தியின் பின்னே:
கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. மட்டுமல்லாமல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டும் வருகிறது. கொரோனா அச்சம் பரப்பட்டதிலிருந்து அரசின் நடவடிக்கைகள் இரண்டே மட்டும் தான். 1. அறிவிப்புகள், 2. கெடுபிடிகள். அதிலும் குறிப்பாக எங்கும் இல்லாத இ பாஸ் கெடுபிடிகளும் ஊழலும் மக்களை ஒரு முட்டுச் சந்தை நோக்கி நெருக்கி வருகிறது. அப்படி என்ன பிடிவாதம் இதில் அரசுக்கு?
இ-பாஸ் வழங்குவதில் முறைகேடு நடந்து காவல்துறையில் அது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் முறைகேடு செய்யும் அதிகாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று தமிழ்நாட்டு அரசாங்கமும் அறிவித்திருக்கிறது. இதன் பொருள் முறைகேடு நடக்கிறது என்று அரசாங்கம் ஒத்துக் கொண்டுள்ளது என்பது தான்.
அந்தந்த மாநிலத்திற்குள்ளோ, மாநிலம் விட்டு மாநிலம் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை, அதை கட்டாயப்படுத்தவும் கூடாது என மத்திய அரசாங்கம் தெளிவாக தனது உத்தரவு No.40-3/2020-DM-I(A) 2ஆம் பக்கம் 5வது பத்தியில் தெளிவாக கூறிவிட்டது.
நீதிமன்றம், மனித உரிமைகள் ஆணையம் என அனைத்தும் கண்டனம் செய்த பிறகும் பொதுப் போக்குவரத்தை முடக்கி வைத்திருப்பதன் காரணம் என்ன என தெரிவிக்க வேண்டும். இ பாஸ் முறையை ரத்து செய்யவும் வேண்டும், இவ்வளவு காலம் பொதுப் போக்குவரத்தை முடக்கியதன் காரணத்தை தெரிவிக்கவும் வேண்டும். இதற்கு மேலும் கொரோனா அச்சம் காட்டி ஒழிந்து கொள்ள முடியாது.
அதாகப்பட்டது, “ஆரியக் கூத்தாடுனாலும் காரியத்தில் கண்ணா இருடாண்ணு சொல்றானுங்கோ” அம்புட்டுதேன்.