பெங்களூரு வன்முறை: எதிலிருந்து புரிந்து கொள்வது?

நேற்று இரவு பெங்களூருவில் வன்முறை வெடித்தது, கடைகள், வண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறையை அடக்க கண்ணீர்புகை குண்டு வீசியும் அடங்காததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் மூன்று பேர் மரணமடைந்தனர். தற்போது நிலமை கட்டுக்குள் உள்ளது, என்றாலும் நகரின் பல இடங்களில் மக்கள் கூட தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்படித் தான் செய்திகள் தெரிவிக்கின்றன.

சில மாதங்களுக்கு முன் தில்லியில் சங்கிகள் வன்முறை செய்தார்கள். இப்போது பெங்களூருவில் முஸ்லீம்கள் வன்முறை செய்திருக்கிறார்கள். இரண்டுமே கண்டிக்கத் தக்கது என்று ஒப்பீட்டு அளவில் கூற முடியுமா? யார் வன்முறை செய்தாலும் தவறு தான் என்று கூறுவது பொதுவானது. குறிப்பான விதயங்கள் என்ன? காவல்துறையின், ஊடகங்களின் செய்திகளின் இடைவெளியின் வெற்றிடங்களில் சில புரிதல்கள் இருக்கின்றன. ஊடகங்களில், மாநில நிர்வாகத்தில், காவல்துறையில் பார்ப்பனியமாக்கம் என்பது புதிய செய்தியோ, யாருக்கும் தெரியாத ஒன்றோ அல்ல. முஸ்லீம்களுக்கு எதிராக ஒரு துரும்பு கிடைத்தாலும் அதை துல்லியமாக பயன்படுத்திக் கொள்ள முனையும் ஊடகங்களும் நிர்வாகமும், இந்த பெங்களூரு வன்முறை விதயத்தில் அடக்கி வாசிக்கின்றனவே ஏன்? எஸ்டிபிஐ எனும் கட்சிக்கு எதிராக சமூக ஊடகங்களில் சங்கிகள் செய்யும் பரப்புரைகள் கூட சுரத்தின்றியே இருக்கின்றன? இது ஏன்? அப்படியென்றால் நடந்தது என்ன?

புலிகேசி நகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச மூர்த்தியின் உறவினர் ஒருவரின் முகநூல் பதிவில் முகம்மது நபி குறித்து இழிவான, அவதூறான கேலிப்படம் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதனால் முஸ்லீம்கள் திரண்டு தொடர்புடைய காவல் நிலையத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றனர். அதன் பிறகு என்ன நடந்தது? என்பது குறித்த தெளிவான செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை. ஊகமாகத் தான் கூற முடியும். ஆனால், கோரிக்கைக்காக திரண்ட கூட்டம் காவல் நிலையத்தை தாக்கியதோடு மட்டுமல்லாமல் நகரின் பல இடங்களிலும் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறது. காவல் நிலையம் வரை அமைதியாக வந்த அந்தக் கூட்டம் எதற்காக காவல் நிலையத்தையும் பிற இடங்களையும் தாக்க வேண்டும்? அப்படி என்றால் காவல் நிலையத்தில் நடந்தது என்ன? தொடர்புடைய முகநூல் பதிவர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் கைது செய்யப்பட்டது எப்போது? வன்முறை தொடங்குவதற்கு முன்பா? வன்முறை தொடங்கிய பிறகா? இந்த முதன்மையான கேள்விக்கு எந்த ஊடகத்திலும், காவல் துறையிடமிருந்தும் பதில் இல்லையே, ஏன்? இதிலிருந்து தான் காவல் நிலையத்தில் என்ன நடந்திருக்கும் என ஊகிக்க வேண்டிய தேவை எழுகிறது.

வன்முறை தொடங்கியதும் நகரின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து காவல்துறை ஆணையர் கமல் பாண்ட் தெரிவிப்பது என்னவென்றால், “போலீசார் பெரிய பெரிய கற்களால் தாக்கப்பட்டுள்ளனர். திடீரென மின்சாரம் துண்டிக்கப் பட்டுவிட்டது. எனவே கூட்டத்தை கட்டுப்படுத்த எங்களுக்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. காவல் நிலையம் எல்லா திசைகளிலிருந்தும் தாக்கப்பட்டது எனவே எங்களுக்கு துப்பாக்கிச் சூட்டினைத் தவிர வேறு வழி தெரியவில்லை” துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது காவல் நிலையத்திலேயே என்பது தெரிகிறது. அதாவது, கலவரம் தொடங்குவதற்கு முன்பே. துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகே நகரின் பிற இடங்களுக்கு வன்முறை பரவுகிறது. அப்படி என்றால் காவல் நிலையத்தில் நடந்தது என்ன?

60க்கும் மேற்பட்ட காவல் துறையினர் காயமடைந்திருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர் முஸ்லீம்கள் கலவரத்தில் ஈடுபட வேண்டாம், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அமைதி காக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, அதை காணொளியாக பதிவு செய்து பரப்புகிறார்கள். இஸ்லாமிய இளைஞர்கள் ஒன்று கூடி ஆஞ்சநேயர் கோவிலுக்கு பாதுகாப்பாக மனித அரணாக நிற்கிறார்கள். சங்கிகள் எந்த எஸ்டிபிஐ கட்சியே கலவரத்துக்கு காரணம் என்று கூறுகிறார்களோ, அந்த எஸ்டிபிஐ கட்சி காவல் துறையினருடன் இணைந்து வன்முறையை கட்டுப்படுத்த உதவுகிறார்கள். பாஜக முதல்வரோ வன்முறை செய்பவர்கள் இஸ்லாமியர்கள் என்பதை அறிந்தும், இரும்புக்கரம் கொண்டு வன்முறையாளர்கள் ஒடுக்கப்படுவார்கள் என்பது போன்று இயல்பாக பேசாமல், யாரும் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம், தகுந்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று மென்மையாக பேட்டியளிக்கிறார். இவைகளிலிருந்து என்ன புரிந்து கொள்வது? காவல் நிலையத்தில் நடந்தது என்ன? என்பது தெளிவாக வெளிப்படாதவரை ஊகம் மட்டும் தான் செய்ய முடியும்.

அவதூறான முகநூல் பதிவை இட்ட நவீனின் தாயார் ஜெயந்தி முஸ்லீம் இளைஞர்கள் தான் எங்களைக் காப்பாற்றினார்கள் என்று தெரிவித்திருந்த செய்தி நாளிதழ்களில் வந்திருக்கிறது. ஆஞ்சநேயர் கோவிலை இஸ்லாமியர்களே திரண்டு நின்று பாதுகாத்திருக்கின்றனர். எளிய உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் தமிழர்கள் வசிக்கும் வீடுகளில் உள்ளே நுழைந்து தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி போன்றவைகளை அடித்து நொறுகி இருக்கிறார்கள். கலவரம் செய்தவர்கள் குடித்திருந்தார்கள், இங்கும் இந்தப் பகுதியில் இருக்கும் முஸ்லீம்கள் எங்களுடன் எங்களுக்கு பாதுகாப்பாக இருந்தார்கள் என்று தமிழ் சமூக ஆர்வலர்கள் தெரிவித்திருக்கிறார்கள். கலவரம் செய்த முஸ்லீம்களுக்கு பிற பொதுவான முஸ்லீம்கள் எந்த விதத்திலும் இசைவாக இல்லை என்பதுடன் எதிராக நின்றிருக்கிறார்கள் என்பதும் இதில் வெளிப்படுகிறது.

இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள, நிர்வாக அடிப்படையிலான அதிகாரத்துடன், காவல்துறை உள்ளிட்ட துறைகளின் ஒத்துழைப்புடன் சிறுபான்மையினர் மீது திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல் வன்முறைகளையும், இவை எதுவுமே இல்லாத சிறுபான்மையினர் ‘ஏதோ ஒரு’ தூண்டுதலினால் திடீர் வன்முறையில் இறங்குவதையும் ஒரே தட்டில் வைத்து மதிப்பிட வேண்டுமா?

எனவே, வன்முறை என்றதும் அவசரம் அவசரமாக அந்த வன்முறையை செய்த முஸ்லீம்களை கண்டித்து எழுத வேண்டும் என்று செக்கு மாட்டுத்தன்மையில் சிந்திக்க முடியவில்லை. பொதுவாக அல்ல, குறிப்பான விதயங்கள் கிடைக்கும் வரை நிர்வாகத்தின், காவல் துறையின் நடவடிக்கைகளை ஐயத்துடனே பார்க்க வேண்டிய தேவை எழுகிறது. ஏனென்றால் அந்தத்த துறைகளின் நடவடிக்கைகளில் ஐயம் தொனிக்கிறது.

கலவர வன்முறை இடங்களில் என்று மட்டும் அல்லாமல், பொதுவாகவே காவல்துறையில் செயல்பாடுகள் நாடெங்கும் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன. மத்தியப் பிரதேசத்தில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள், தமிழ்நாட்டில் துத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள், இப்போது இந்த வன்முறை கலவரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்திலும் காவல்துறை ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்துதல், வானத்தை னோக்கி சுடுதல், காலில் சுடுதல் என்பன போன்ற வகுத்து வைக்கப்பட்டிருக்கும் எந்த நெறிமுறைகளையும் பின்பற்றாமல் நேரடியாக சுட்டுக் கொல்லும் தீர்மானத்துடனேயே சூழல்களைக் கையாண்டிருக்கிறது. இது ஏன்? இது ஏன் அண்மைக் காலங்களில் விசாரிக்கப்படுவதில்லை. காவல் துறை இந்தப் போதுகளை வேறு மாதிரி கையாண்டிருந்தால் இது போன்ற நிலமைகள் ஏற்பட்டிருக்குமா எனும் சிந்தனை ஏன் இங்கு முன் வைக்கப்படுவதே இல்லை. ஏனென்றால் அரசின் முடிவுகள் – அது எவ்வளவு தவறாக இருந்தாலும், மக்களுக்கு இடையூறு விளைவிப்பதாக இருந்தாலும் – அதை எதிர்த்து மக்கள் ஒன்றுசேரவே கூடாது, ஒன்றுசேர விடக்கூடாது எனும் முடிவிலிருந்து தான் காவல்துறை இவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவைகளை முற்றாக ஒதுக்கி வைத்துவிட்டு நிகழ்வுகளை ஆய்வு செய்யக் கூடாது அல்லவா?

அதேநேரம் இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டது யார்? அனைத்துக்கும் சுமை தாங்கியாக இருக்கக்கூடிய உழைக்கும் வர்க்கம் தான் இந்த இழப்புகளையும் தாங்கி வதங்கிக் கொண்டிருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வண்டிகள் தீவைத்து, நொறுக்கப்பட்டிருக்கின்றன. இருசக்கர வண்டி என்பது உழைக்கும் மக்களைப் பொருத்தவரை தனிப் போக்குவரத்துக் கருவியல்ல, அவர்களின் உழைப்புக் கருவி. அது இல்லாமல் அவர்களின் உழைப்பு முழுமையடையாது. ஒவ்வொரு வண்டியும் அவர்களின் சில ஆண்டு சேமிப்பு. அதை சிலரின் வெறிச் செயலுக்காக இழப்பது என்பது எத்தனை கொடூரமானது. மத அவதூறு என்பது உழைக்கும் மக்களின் இந்த இழப்புக்குக் குறைந்ததா என்ன? இந்த இழப்பிலிருந்து தான் முஸ்லீம்களின் கொடூரச் செயலை மதிப்பிட வேண்டியிருக்கிறது.

அண்மையில் கருப்பர் கூட்டம் யூடியூப் அலைவரிசையில் சஷ்டி கவசம் கொச்சைப் படுத்தப்பட்டதாக திடீரென சங்கிகள் கூக்குரலிட்டதும் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டது. மட்டுமல்லாமல் அந்த யூடியூபில் இருந்த அனைத்து காணொளிகளும் சட்டத்துக்கு புறப்பாக அழிக்கப்பட்டது. இத்தனைக்கும் அந்த காணொளி வெளியிட்டு இரண்டு மாதங்களுக்கும் மேல் ஆகியிருந்தது. இது கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கை. கருத்தை கருத்தால் எதிர் கொள்ள வேண்டும் என்பதே சரியானது என முற்போக்காளர்கள் முழங்கினார்கள்.

தற்போது, முகம்மது நபி கொச்சைப் படுத்தப்பட்டார் என்று இஸ்லாமியர்கள் நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தை முற்றுகை இடுகின்றனர். இது முதல் முறையல்ல, முகம்மது நபியோ, அல்லது பிற புனித விதயங்களோ அவதூறு செய்யப்படும் போதெல்லாம் இஸ்லாமியர்கள் பொங்குவது வாடிக்கை. கருத்தை கருத்தால் எதிர் கொள்வது எனும் அடிப்படையில் இஸ்லாமியர்கள் குறித்த அந்த கேலிப்படம் எந்த அடிப்படையில் அவதூறாக இருக்கிறது என்று விளக்குவது அல்லது அதை புறக்கணிப்பது போன்ற வழிமுறைகளை விடுத்து ஏன் உணர்ச்சிவயப்பட்டு முடிவெடுக்கிறார்கள்? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, இது கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கையா? ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் இஸ்லாத்தின் ஒரு பிரிவினர் குரான் மொழிபெயர்ப்பை வெளியிட முன்வந்த போது, மற்றொரு பிரிவினர் திரளான மக்களைக் கூட்டி, அடாவடி செய்து அதை தடுத்து நிறுத்தினார்கள். இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான தடித்தனம்.

ஒரே மதத்தினர் விமர்சிப்பதற்கும், வேற்று மதத்தினர் விமர்சிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஏனென்றால் மதம் என்பது அனைத்தையும் தீர்மானிக்கும் ஒன்றாக, கேடான நிலையாக, இன்றும் இயங்கிக் கொண்டிருக்கையில் மாற்று மதத்தவர் அல்லது மறுப்பவர்களின் விமர்சனங்கள் எச்சரிக்கையாக, தகுந்த உள்ளீட்டுடன் முன் வைக்கப்பட வேண்டும். அவ்வாறு அல்லாதவைகளை கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வகைப்படுத்தக் கூடாது.

மதம் என்பது எவ்வளவு தீங்கானது, மக்களின் சிந்தனைகளை மழுங்கடிக்கக் கூடியது, மக்களின் சரியான கண்ணோட்டத்தையே செல்லரிக்க வைக்கக் கூடியது என்பது இந்து மதத்துக்கு மட்டுமல்ல, இஸ்லாமிய மதத்துக்கும் சேர்த்துத் தான். இதில் எந்த மதமும் விலக்கு அல்ல. அந்தந்த இடங்களில் யார் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே வன்முறைகள் வெறி கொண்ட வடிவம் பெறுகின்றன.

மதத் தலைவரின் கேலிப் படத்துக்கு கொடுக்கப்படும் மதிப்பு, அவர்களின் வாழ்வையே அரித்துக் கொண்டிருக்கும் அரசியல் கொள்கைக்காக கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் முற்போக்காளர்களின் எதிர்பார்ப்பு.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

13 thoughts on “பெங்களூரு வன்முறை: எதிலிருந்து புரிந்து கொள்வது?

  1. ஸ்ரீகிருஷ்ணா் குறித்து அரேபியமத அன்பா்ஒருவா் பதிவிட்டதற்கு பதிலடியாகத்தானே நவீன் பதிவிட்டாா். இது போன்று பதிலடிகள் வலைதளங்களில் நிறைய நடக்கின்றது. தமிழ்நாடு தௌகீத் ஜமாத்திற்கும் சுதாகா் என்ற கிறிஸ்தவர் குழு விற்கும் நடந்து விவாதங்கள் வீடியோவாக நிறைய உள்ளதே? அவைகள் எல்லாம் அவதூறா ? இரண்டு மதமும் கடுமையாக தாக்கப்படுகின்றது ? யாரும் பொங்கவில்லையே ? பழையன கழிய விவாதங்கள் பயன்படுமே. ஏன் அரேபிய மதத்தவர்கள் பொங்க வேண்டும்.

  2. அதைத்தான் நானும் கேட்டிருக்கிறேன்.

    \\மதத் தலைவரின் கேலிப் படத்துக்கு கொடுக்கப்படும் மதிப்பு, அவர்களின் வாழ்வையே அரித்துக் கொண்டிருக்கும் அரசியல் கொள்கைக்காக கொடுக்கப்பட வேண்டும்//

    இவர்கள் ஏன் பொங்குகிறார்கள்? ஆனால் கலவரத்துக்கு அது மட்டும் காரணமல்ல என்பது தான் என் கருத்து.

  3. மதம் என்பது எவ்வளவு தீங்கானது, மக்களின் சிந்தனைகளை மழுங்கடிக்கக் கூடியது, மக்களின் சரியான கண்ணோட்டத்தையே செல்லரிக்க வைக்கக் கூடியது என்பது இந்து மதத்துக்கு மட்டுமல்ல, இஸ்லாமிய மதத்துக்கும் சேர்த்துத் தான். இதில் எந்த மதமும் விலக்கு அல்ல.
    சரிதான்.ஆனால் நானும் ஒரு இந்துதான். சில சமய காரியங்களை கடைபிடிக்கின்றேன். குறிப்பாக யோகா.
    ஹிந்து மதம் ஒரு பெரிய சந்தைக் கடை. அவனவன் விரும்பியதை வாங்கிக் கொள்ளலாம். பிற மதங்களில் ….. இந்த சுதந்திரம் இல்லை. மேலும் இசுலாம் என்பது மதம் அல்ல. அது Arab imperialims- அரேபிய வல்லாதிக்கம்- ஒரு அரசியல் கட்சி. ஆகவேதான் அரேபிய வல்லாதிக்க அரசியல் கட்சி தலைவரை – திருவாளா். முஹம்மதை விமா்சனம் செய்ததை பொறுக்க முடியாத நிலை உருவாகின்றது. மத நூல்கள் சாலையில உள்ள திசை காட்சி மரங்கள் போல். ஊருக்கு வழி காட்டும்.ஆனால் ஊருக்கு நடந்து நாம்தான் போக வேண்டும். என்பது இந்து பண்பாட்டில் உள்ள முக்கியமான கருத்து. காபீர் சண்டாளன் மிலேச்சர்கள் சுத்திரன் சாத்தானின் பிள்ளைகள் போன்ற சொற்கள் பெரும் நாசத்தை விளைவித்து வருகின்றன். தக்க சட்ட நடவடிக்கை தேவை.

  4. நண்பர் சுகுமார்,

    உங்கள் கருத்தோடு நான் மாறுபடுகிறேன். இஸ்லாம் நிறுவனப்படுத்தப்பட்ட ஒரு மதம். இந்து மதம் மேலாதிக்க சட்டத் தொகுப்பு, அது மதமல்ல.

    மட்டுமல்லாமல், இந்து மதத்தில் இருப்பதாக நீங்கள் கூறுவது சுதந்திரமல்ல. பல்வேறு கலாச்சாரங்களை, வாழ்முறைகளை, வழிபாட்டு நெறிகளை தங்களின் மேலாதிக்கத்துக்காக ஒருங்கிணைத்த தேவையின் தவிர்க்க இயலாத வேறுபாடு.

  5. மட்டுமல்லாமல், இந்து மதத்தில் இருப்பதாக நீங்கள் கூறுவது சுதந்திரமல்ல. பல்வேறு கலாச்சாரங்களை, வாழ்முறைகளை, வழிபாட்டு நெறிகளை தங்களின் மேலாதிக்கத்துக்காக ஒருங்கிணைத்த தேவையின் தவிர்க்க இயலாத வேறுபாடு.
    ———————————————————
    தாங்கள் ஒரு முஸ்லீம் ஆகத்தான் செயல்படுகிறீர்கள். நிறுவனப்பட்ட அமைப்புதான் பல கொடுமைகளுக்கு காரணமாக இருக்கினறது. ஐஎஸ் அமைப்பினால் 13000 யெஸ்டிஇன பெண்கள் ஐஎஸ் ராணுவ முகாமில் வேசிகளாக பணியாற்ற துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருந்து செய்தி படிக்கவில்லையோ. குமுஸ் பெண்களை வைப்பாக வைத்துக் கொள்ள அனுமதிக்கும் குரானை நீங்கள் ஏன் விமா்சிக்கவில்லை ? வலக்கரம் கைபற்றிய பெண்கள் நபியே உமக்கு ஹலால் என்ற வசனம் ஆன்மீகமா ? அரசயிலா? அடாவடித்தனமா ? காலித்தனமா ? தான் போதிக்கும் கருத்திற்கு மாறுபட் கருத்தைநிறுவனப்பட்ட அமைப்ப எற்பதில்லை. 13000 குடும்ப பெண்களை வேசிகளாக்கிய பெருமை குரானைச் சாரும்.உடனே மனு என்று வாதிட முன் வருவீர்கள். மனு குப்பை தொட்டிக்குள் போய் பல வருடங்கள் …..கடந்து விட்டது. நாங்கள் அதை மறந்து விட்டோம். மறக்காதவர்கள் …..??? ஹிந்து சமூகம் மனித வளமிக்கதாக மாற என்ன செய்யலாம். தங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். தொடருவோம்.

  6. குரானில் உள்ள இது போன்ற காலித்தனமாக கருத்துக்களை நீக்க யாரால் முடியும் ? இலலையெனில் குரானை ……..போடு என்று யாா் சொல்லுவார்கள் ? தலை பிழைக்குமா ?

  7. நண்பர் சுகுமார்,

    குரானை …………….போடு என்று சொனாலே தலை பிழைக்காது என்று சோல்டரை ஏற்றும் முன்பு, குரானை முஸ்லீம்களே சாக்கடையில் போட்டிருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். அதனால் உங்கள் இறுபூறெய்தலெல்லாம் தேவையே இல்லை.

    மட்டுமல்லாது, இஸ்லாம் மதத்தை எதிர்த்து இந்த தளத்தில் நிறைய கட்டுரைகள் உள்ளன. பலரும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதாக நீங்களே கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.

    இந்து என்பது மதமே அல்ல, அது அடக்குமுறை சட்டத் தொகுப்பு. அதை வளம்மிக்கதாக மாற்ற முடியாது, கூடாது. அழிப்பது ஒன்றே மக்களுக்கு நன்மை பயக்கும்.

  8. நண்பர் சுகுமார்,

    இந்தக் கட்டுரை குறித்து உங்கள் கருத்தை கூறவே இல்லையே. அது தேவை இல்லை என நினைக்கிறீர்களா?

  9. இந்து என்பது மதமே அல்ல, அது அடக்குமுறை சட்டத் தொகுப்பு. அதை வளம்மிக்கதாக மாற்ற முடியாது, கூடாது. அழிப்பது ஒன்றே மக்களுக்கு நன்மை பயக்கும்.
    வேறு வேலைகள் நிறைய இருந்ததால்கணனி பக்கம் வரவில்லை.

    குரான் சீரழித்த 13000 யெஸ்டி பெண்களை பற்றி தாங்கள் எந்த குறிப்பையும் தரவில்லை. வருந்தத்தக்கது.

    நல்ல கனி தரும் மரம் நல்ல மரம்தான். இந்து மதம் சிறந்த கனிகளைத் தந்துள்ளது. No other religion other than Hinduism and no other country other than India could produced Mahatma Gandhi. இந்துமதத்தால் இந்தியாவால் மட்டுமே ஒரு மகாத்மா காந்தியை உருவாக்க முடியும் என்ற லண்டன் டைம்ஸ் தலையங்க கருத்து கவனிக்கத்தக்கது. இந்து சமயம் தன்னிடம் உள்ள பழையதை திருத்திக் கொள்ள தயங்குவது கிடையாது. சுவாமி விவேகானந்தா் ”பழைய இந்தியாவில் உள்ள சிறப்புக்களை தன்மய மாக்கிக் கொண்டு புதிய சிந்தனைகளுக்கு உனது மனதின் கதவுகளை திறந்து வை” என்கிறாா். அனைத்து துறைகளிலும் பரிணாமத்தை ஏற்றுக் கொள்கிறது. ளா்ச்சியை வரவேற்கிறது. ஸ்ரீநாராயணகுரு தீண்டாமையை ஒழித்து மக்களிடம் கலாச்சார புரட்சியை ஏற்படுத்தினாா். தங்களுக்கு ஸ்ரீநாராயணகுரு பற்றி போதிய ஞானம் இல்லை என்ற கருதுகின்றேன். அந்தணா் களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அளவிற்கு ஒரு சமூகம் மே்பாடு அடையும்.அந்தணா்களின் எண்ணிக்கை இன்று இந்து சமூகத்தில் போதிய அளவில் இல்லை.சற்று குறைந்தள்ளது.அதுதான் பிரச்சனை. இந்துமதத்தை அழிக்க வேண்டும் என்பது கடலை குடித்து வற்ற வைத்து விட லாம் என்பது போல்தான். செங்கொடி என்ன இவ்வளவு முட்டாளா ?

  10. தங்கள் தாய் நாட்டை மனித வளமிக்கதாக மாற்றிட தங்களிடம் எந்த திட்டமும் இல்லை. ரஷ்யாவின் அடிமையாக வாழ்வதுதான் தங்களின் திட்டம். சரியான வெத்து வேட்டு. போலியானவா் தாங்கள்.

  11. நண்பர் சுகுமார்,

    உங்களின் சான்றிதழ்களுக்கு நன்றி.
    உங்களின் கூற்று என்ன? இஸ்லாம் மதம் கெட்டது. இந்து மதம் நல்லது என்பதா? இதை நான் ஏற்கவில்லை. மறுக்கிறேன்.

    இஸ்லாம் உட்பட அனைத்து மதங்களுமே மக்களின் முன்னேற்றத்துக்கு தீங்கு விளைவிப்பவை தான். பின்னுக்கு இழுப்பவை தான். ஆனாலும், இந்த சுரண்டல் உலகில் அந்த மதங்கள் தருகின்ற போலியான ஆறுதலை மக்கள் நம்புகிறார்கள். அவ்வாறு நம்புவதற்கான அடிப்படை சூழல் உலகில் இருக்கும் வரை மதங்கள் நீடித்திருக்கவே செய்யும், சூழல்களுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொண்டு. மதங்கள் போன்ற பிற்போக்குத் தனங்களை இல்லாதாக்க வேண்டும் என்பது எங்களைப் போன்றோரின் நோக்கமாக இருந்தாலும் நாங்கள் விரும்புகிறோம் என்பதாலேயே அதை இல்லாமல் ஆகச் செய்ய முடியாது. அதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். அது எங்களின் பணி. அதை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

    ஆனால், இந்து என்பது மதமல்ல. அது அடக்குமுறைகளின் சட்டத் தொகுப்பு. மக்களுக்கு படிநிலை கற்பிக்கின்ற வக்கிரம். இந்த தொகுப்பினால் இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த, வாழும், வாழப் போகும் மக்கள் அனைவரும் அனுபவித்த கோடூரங்கள் கொஞ்சமல்ல. அனுபவித்துக் கொண்டிருக்கும் கோரங்கள் கொஞ்சமல்ல. அனுபவிக்கப் போவதும் அளவிட முடியாதது. இதைத் தவிர அந்த சட்டத் தொகுப்பில் வேறொன்றுமில்லை. எனவே, இந்த அடக்குமுறை சட்டத் தொகுப்பை அழித்தாக வேண்டும். அதையும் நாங்கள் பணியாக செய்து கொண்டிருக்கிறோம்.

    இதை நீங்கள் அனைத்தும் மதம் என்று சந்தடி சாக்கில் இந்துவும் மதம் என்று கொண்டு வந்தால் அதை ஏற்க முடியாது. இதற்காக லண்டன் டைம்ஸ், விவேகானந்தரை எல்லாம் இழுத்துவர வேண்டிய அவசியமில்லை. அதனோடு நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதன் கொடூரங்களை அனுபவிப்பவர்களும், அந்தக் கொடூரங்களை வழங்குபவர்களும் ஒன்றாகி விட முடியாதே.. அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

    நன்றி.

  12. அரேபிய கலாச்சாரம் அரேபியன் உலகை ஆள வேண்டும் என்று நினைத்து வாள் வழி சாதிக்க நினைத்தவா் முஹம்மது. அதுபோல குரான் இருக்குமிடங்கள் பயங்கரவாதப்பயிர்கள் செழித்து வளரும் இடமாக உள்ளது. இந்துமதம் என்றால் என்ற புரிதல் கூட தங்களுக்கு இல்லை. இந்துமதம் அழிக்கப்பட்டால் இந்தியா இருக்காது. தன் சிறப்புக்கள் அனைத்தையும் இழந்து மீண்டும் ஒருஅடிமைநாடாக மாறிவிடும்.
    எந்த வளா்ச்சியைக் காண இந்துமதம் யாருக்கும் தடையாக இல்லை.பழையன கழிய வேண்டும். அதற்கு நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆனால் கனிதரும் நல்ல மரத்தை காலிகள் வெட்ட நினத்தால் உயிரைக் கொடுத்தாவது தடுப்போம்.
    இந்திய சீன எல்லையில் நெருக்கடி உள்ளதே. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதா ? சீனனை கண்டித்து ஒரு கட்டுரை வெளியிடலாமே.

  13. நண்பர் சுகுமார்,

    கனவு காணும் உரிமை எல்லோருக்கும் உண்டு. உங்கள் கனவுகளோடு நான் குறுக்கிட விரும்பவில்லை.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s