
செய்தி:
ரயில்வேயில் தனியாரை அனுமதிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, 109 தடங்களில், தனியார் இயக்குவதற்கு அனுமதி அளிக்க, ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில்களை இயக்கும் தடத்தில், எந்தெந்த ஸ்டேஷன்களில் ரயிலை நிறுத்துவது என்பதை, தனியாரே முடிவு செய்து கொள்ளலாம் என, ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், ரயில்வேயின் உள்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்துவதற்காக, கிலோமீட்டருக்கு, 512 ரூபாயை கட்டணமாக, தனியார் செலுத்த வேண்டும்.
செய்தியின் பின்னே:
தனியார்மயம் என்பதே அடித்தட்டு மக்களுக்கு எதிரானது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். தொடக்கத்திலேயே எங்கு நிறுத்துவது என்பதையும் எவ்வளவு விலையும் வைத்துக் கொள்ளலாம் என்பதையும் தனியார் முடிவு செய்ய அனுமதித்தால், அது மக்களை எந்த அளவுக்கு கசக்கிப் பிழியும்? தனக்கு பயனளிக்கும் இடத்தில் மட்டுமே நிறுத்துவது என்பது செலவை குறைக்கும் விதத்திலும், கட்டணம் நிர்ணயிக்கும் உரிமை என்பது கொள்ளை லாபம் ஈட்டும் விதத்திலும் பயன்படுத்தப்படும் என்பதில் யாருக்கேனும் ஐயம் இருக்கிறதா?
இயக்கும் இஞ்சின் அரசினுடையது, இணைக்கப்படும் பெட்டிகள் அரசினுடையது. அது ஓடும் தண்டவாளம் அரசினுடையது. தண்டவாளம் போடப்பட்டிருக்கும் நிலம் அரசினுடையது. எண்ணற்ற பாலங்கள், மலையைக் குடைந்த குகைகள் அத்தனையும் அரசினுடையது. நிற்கும் நிலையங்கள் அரசினுடையது. கழிப்பறை தொடங்கி அனைத்து வசதிகளும் சேவைகளும் அரசினுடையது. அதாவது, அனைத்தும் மக்களின் வரிப் பணத்திலிருந்து செய்யப்பட்டது எனும் அடிப்படையில் மக்களுடையது. இத்தனை ஆண்டுகளாக அதை பராமரிப்பதற்காக செலவிட்ட உழைப்பு மக்களுடையது, அரசினுடையது. நிலைய அதிகாரிகள் தொடங்கி துப்புறவு பணியாளர்கள் வரை அனைவருக்கும் சம்பளம் கொடுக்கப் போவது அரசு. அதாவது, மக்கள் வரிப்பணமே ஊதியமாக கொடுக்கப்படப் போகிறது. இவை அனைத்துக்கும் சேர்த்து அரசுக்கு கிடைக்கப் போகும் தொகை கி.மீ க்கு 512 ரூபாய் மட்டுமே. இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. அரசின் அறிவிப்பில் தெளிவான விளக்கம் எதுவும் கொடுக்கப்படவில்லை. அது என்னவென்றால் ஒரு தடத்தின் பயணத்தில் எத்தனை கிமீ வருகிறதோ அத்தனை 512 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்படுமா? அல்லது ஒரு தடத்தின் நீளம் எத்தனை கிமீ இருக்கிறதோ அதைக் கணக்கிட்டு ஆண்டுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதா? இதை சொல்லாமல் விட்டிருப்பதே ஐயத்தை எற்படுத்துகிறது.
லாபம் தந்து கொண்டிருக்கும் ரயில்வே துறையை இதை விட சல்லிசாக கொடுக்க முடியாது, இதற்கு மேல் என்றால் அது இலவசம் தான் எனும் நிலையில் தான் பயணிகள் கட்டணம் நிர்ணயிப்பதை தனியாருக்கு உரிமையாக்கி இருக்கிறது அரசு. இப்போதிருக்கும் கட்டணம் வாங்கினாலே அது கொள்ளை லாபமாக இருக்கும். ஆனால் இந்த கட்டணம் நிர்ணயிக்கும் உரிமையே பல மடங்கு கட்டணம் அதிகரிக்கப்படும் எனும் பொருளில் தான் அமைந்திருக்கிறது.
ஆக, அரசுக்கும் பயனில்லை, மக்களுக்கும் பயனில்லை என்பதோடு மட்டுமல்லாமல் பல மடங்கு கட்டணச் சுமையும் மக்கள் தலையில் என்பதே உண்மை.
அதாகப்பட்டது, “நீ அரிசி கொண்டு வா, நான் உமிகூட கொண்டுவர மாட்டேன். ரெண்டு பேரும் ஊதி ஊதி திம்போம்” அம்புட்டுதேன்.
செய்திகள் சுவாசிப்பது: 10/2020