தூத்துக்குடி மக்களால் தலைநிமிர்ந்த தமிழ்நாடு

மகிழ்ச்சி தரும் செய்திகளைக் கேட்பதே அரிதான இந்த இருண்ட நாட்களில், ஒரு சிறிய ஒளிக்கீற்று போல வந்திருக்கிறது ஸ்டெர்லைட்டுக்கு எதிரான சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு. உலகெங்கும் தனது குற்ற நடவடிக்கைகளால் இழிபுகழ் பெற்ற கார்ப்பரேட் நிறுவனமான வேதாந்தாவுக்கு எதிராகப் பெற்றிருக்கும் இந்த வெற்றிக்காக, தமிழகம் திமிருடன் தலை நிமிர்ந்து நிற்கலாம்.

போராட்டம் நடைபெற்ற அந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன.

அன்று மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் திளைத்திருந்தபோது,  தூத்துக்குடியில் மெரினாவைப் போன்ற ஒரு மக்கள் திரள் கூடி நிற்பது கண்டு தமிழகம் அதிசயத்து திரும்பிப் பார்த்தது.

அதை சாதித்தவர்கள் குமரெட்டியாபுரம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகாமை கிராமத்து மக்கள். நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்பதைப் போல, ஆலை விரிவாக்கத்துக்கு அகர்வால் அடிபோடத் தொடங்கியதை எதிர்த்துத்தான் அந்த மக்களின் போராட்டம் தொடங்கியது.

தூத்துக்குடியில் உண்ணாவிரதம் இருந்த கிராமத்து மக்களை போலீசு உட்காரவிடாமல் விரட்ட, இதைக் கேள்விப்பட்ட உள்ளூர் வழக்கறிஞரான அரிராகவன் (பி.ஆர்.பி.சி) மிகவும் இயல்பாக அந்த மக்களின் உரிமைக்காக போலீசை எதிர்த்துப் போராடினார். “வக்கீல் சாரை” அந்தப் போராட்டம் உள்ளே இழுத்துக் கொண்டது இப்படித்தான்.

பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுத்தார்கள். மதுரை உயர்நீதிமன்றத்தில் வாதாடி, அனுமதி பெற்றுக் கொடுத்தார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் (பி.ஆர்.பி.சி). அதன் விளைவுதான் அன்றைய பிரம்மாண்டமான பொதுக்கூட்டம்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. பெட்டி வாங்கியதற்கும் பெரிய வரலாறு உண்டு. போராட்டத்துக்கு தலைமை தாங்கும் அரசியல் தலைவர்கள் துரோகம் செய்யாமல் தடுப்பது எப்படி  என்பதுதான் அந்த கிராமத்து மக்களின் கேள்வி.

“உங்கள் பிரதிநிதிகளை நீங்கள் தேர்ந்தெடுங்கள். எல்லா முடிவுகளையும் அவர்கள் எடுக்கட்டும். வெளி ஆட்கள் தலைமை தாங்கவேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? அப்புறம் ஏமாந்து விட்டோம் என்று ஏன் வருந்துகிறீர்கள்” என்று வாஞ்சிநாதனும் அரி ராகவனும் கேட்ட கேள்விக்குக் கிடைத்த விடை – மக்கள் கமிட்டி. சுற்று வட்டார கிராமங்களில் மட்டுமல்ல,  தூத்துக்குடி நகரிலும் பல தெருக்களில் மக்கள் கமிட்டிகள் அமைக்கப்பட்டன.

சொந்த கிராமத்தில் ஒரு பந்தல் போட்டு அமர்ந்து உண்ணாவிரதமிருப்பதற்குக் கூட போலீஸ்  அந்த மக்களை அனுமதிக்கவில்லை. மரத்தடியிலேயே தொடர்ந்தது 100 நாள் உண்ணாவிரதம். இடையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு எதிரான பிரம்மாண்டமான பேரணி.

எதற்கும் அரசிடமிருந்து பதிலே இல்லை. பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியரை சந்திப்பது,  ஒரு முடிவு தெரியும் வரை சாப்பாடு, தூக்கம் எல்லாமே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாசலில்தான் என்று மக்கள் கமிட்டிகள் முடிவு செய்தன. தமிழகத்தின் தென்கோடியில் இன்னொரு ஜல்லிக்கட்டு உருவாவதை உளவுத்துறை புரிந்து கொண்டது.

உடனே போரட்டக்காரர்களைப் பிளவுபடுத்தும் வேலை தொடங்கியது. ஆட்சியர் அலுவலகத்துக்கு போகாமல், வேறு ஒரு இடத்தில் அடையாளப் போராட்டம் நடத்த அனுமதிக்கிறோம். ஒப்புக்கொள்ளுங்கள். இல்லையேல் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று முன்னணியாளர்கள் சிலரை அழைத்து மிரட்டியது அரசு. சிலர் பலியானார்கள்.

முதன் முறையாக அந்த அதிசயம் நிகழ்ந்தது. மக்கள் கமிட்டியில் எடுத்த முடிவை தன்னிச்சையாக சிலர் எப்படி மாற்ற முடியும் என்ற கேள்வியை சாதாரண மக்கள் எழுப்பினார்கள். தங்கள் உரிமையை மட்டுமல்ல, அதிகாரத்தையும் தமது சொந்த அனுபவத்தின் வாயிலாக மக்கள் உணர்ந்து கொண்ட தருணம் அது.

அதன் விளைவுதான் இந்தப் போராட்டம். தலைவர்களை ஒதுக்கி விட்டால் தலையற்ற முண்டம் போல மக்கள் சிதறிவிடுவார்கள் என்பதுதான் அதிகார வர்க்கத்தின் மதிப்பீடு.

லட்சம் மக்கள் கூடுவோம், ஸ்டெர்லைட்டை மூடுவோம் என்று கோவன் பாடிய பாடல் வைரல் ஆனது. 144 தடை போட்டிருக்கிறோம். நாலு பேரே கூட  முடியாது. லட்சம் பேர் கூடுவதாகவது என்று இறுமாந்திருந்தது அதிகார வர்க்கம்.

பனிமய மாதா கோயிலுக்கு முன்னே போலீஸ் வைத்திருந்த தடையரண்களை ஒரு தூசியைப் போலத் தள்ளியபடி மக்கள் பெருவெள்ளம் முன்னேறிய அந்தக் காட்சி மறக்கவொண்ணாத, கண்கொள்ளாக் காட்சி. தூத்துக்குடி நகரின் ஒவ்வொரு தெருவிலிருந்தும், ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் பெருமழை தோற்றுவித்த காட்டாறுகள், பள்ளம் நோக்கிப் பாய்வதைப் போல மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சீறிப் பாய்ந்தனர் மக்கள்.

உடனே ஸ்டெர்லைட் – போலீசு கூட்டணியின் பிளான் – பி அரங்கேறத்தொடங்கியது. தீ வைப்புகள் எப்படி அரங்கேற்றப்பட்டன என்பதை வீடியோ ஆதாரத்துடன் முகிலன் அம்பலமாக்கியிருக்கிறார். தீவைப்பு மட்டுமல்ல, துப்பாக்கிச் சூடும் குறிப்பிட்ட நபர்களைக் கொலை செய்வது என்ற திட்டத்துடன்தான் நடந்தது. ஸ்நோலின் கொல்லப்பட்டது அப்படித்தான்.

பி.ஆர்.பி.சி வழக்கறிஞர்களுக்கு வைத்த குறி தப்பி, மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன் பலியானார். வழக்கறிஞர் வாஞ்சிநாதனும், அரிராகவனும் கொல்லப்படாமல் தப்பியது ஒரு அதிசயம். போராட்டத்தின் முன்னணியாளர்களை,  தொலைவிலிருந்து சுடுகின்ற ஸ்னைப்பர்களுக்கு அடையாளம்  காட்டுவதற்காகவே ஆட்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.

அத்தனை உயிர்ப்பலிகளுக்குப் பிறகும், மறுநாள் மருத்துவமனை வளாகத்தில் போலீசை எதிர்த்துப் போரிட்ட வீரம் என்பது தூத்துக்குடிக்கே உள்ள தனிச்சிறப்பு என்றுதான் கூறவேண்டும்.

துப்பாக்கிச் சூடு நடந்த மறுகணமே, மக்கள் அதிகாரத்துக்கு எதிரான அவதூறு தொடங்கி விட்டது. அதை வழிமொழிவதற்கு ரஜினிகாந்த் களமிறக்கப்பட்டார். நீங்க யாரு என்று மாணவன் சந்தோஷ் கேட்ட கேள்வி, அதுகாறும் ஊடகங்கள் கட்டி வளர்த்திருந்த சூப்பர் ஸ்டார் பிம்பத்தை நொறுக்கித் தரைமட்டமாக்கியது மட்டுமல்ல, தமிழ்மக்களையும் தலைநிமிர வைத்தன.

அடுத்து வந்த நாட்களில் தூத்துக்குடி மக்கள் மீதும், தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் தோழர்கள் மீதும், வாஞ்சிநாதன், அரிராகவன் ஆகியோர் மீதும் போராட்ட முன்னணியாளர்கள் மீதும் போடப்பட்ட வழக்குகள், அடி – உதை சித்திரவதைகள் – ஆகியவற்றை எதிர்கொண்டு மீண்டதை இப்போது நினைத்தாலும் சற்று வியப்பாகவே இருக்கிறது.

துப்பாக்கிச் சூடு முடிந்த பின்னும், கையில் ரிவால்வருடன் தூத்துக்குடி தெருக்களில் போலீசார் அலைந்து கொண்டிருந்த அந்த நேரத்தில், பி.ஆர்.பி.சி வழக்கறிஞர்கள் ஆற்றிய பணி மகத்தானது. தூத்துக்குடி, மதுரை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் உதவியும் அர்ப்பணிப்பு மிக்க செயல்பாடும் நன்றியுடன் நினைவுகூரத்தக்கவை.

அது ஒரு அசாத்தியமான போராட்டம். வாஞ்சிநாதன், அரி ராகவன் ஆகியோர் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள். மக்கள் அதிகாரம் அமைப்பின் எளிய தோழர்கள், தோழர் கலிலுர் ரகுமான் அவரது மகன்கள் ஆகியோர் மீது ஏவப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டம்.. என அனைத்தையும் நீதிமன்றத்தில் முறியடிப்பதற்காக இரவு பகல் பாராமல் வழக்கறிஞர்கள் உழைத்தனர்.

ஒரு மக்கள் போராட்டத்துக்கு நீதிமன்றத்தை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்? அது மிகவும் வரம்புக்குட்பட்டதுதான். சட்டவாதத்தில் மூழ்கிவிடாமல், சட்ட பூர்வ வாய்ப்புகளின் பயனை கடைசி சொட்டு வரை பிழிந்து எடுப்பது ஒரு கலை. அதனை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் சாதித்தார்கள் என்பது இந்தப் போராட்ட அனுபவத்தின் தனிச்சிறப்பு.

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து போலீசால் சட்டவிரோதமாக கைது செய்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களை விடுதலை செய்த தூத்துக்குடி அமர்வு நீதிமன்றத்தின் பெண் நீதிபதி, தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பொய்வழக்குகளை ரத்து செய்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தற்போது இந்த தீர்ப்பினை வழங்கியிருக்கின்ற நீதிபதிகள் ஆகிய அனைவருமே நன்றியுடன் நினைவு கூரத்தக்கவர்கள். மற்றெல்லா காலங்களை விட, பாசிசம் நீதித்துறையை ஆக்கிரமித்து வரும் இந்தக் காலத்தில், முதுகெலும்புடன் நிமிர்ந்து நிற்கும் நீதிபதிகள் மதிப்புக்குரியவர்கள்.

பிணை எடுப்பதற்கும், அடக்குமுறையை எதிர்கொள்வதற்கும் மட்டுமல்ல,  அதன் பின்னர் பசுமைத் தீர்ப்பாயத்திலும் போராட்டம் தொடர்ந்தது. NGT வேதாந்தாவின் கையாளாக செயல்படுகிறது என்று தெரிந்தும் தளராமல் போராடியிருக்கிறார்கள் ம.உ.பா.மைய வழக்கறிஞர்கள். அதேபோல உயர்நீதி மன்றத்தில் மக்கள் அதிகாரம் சார்பிலும், தூத்துக்குடி மக்கள் கமிட்டியின் சார்பிலும் இம்பிளீட் செய்து வழக்காடியிருக்கின்றனர்.

மத்திய அரசைக் கையில் வைத்துக் கொண்டு மாநில அரசு முதல் உள்ளூர் போலீஸ் வரை அனைவரையும் ஆட்டிப்படைக்கும் அகர்வாலை, அவர் நுழைகின்ற ஒவ்வொரு சந்திலும் நுழைந்து எதிர்கொண்டிருக்கிறோம். பசுமைத்  தீர்ப்பாயத்தில் போராடியது முதல், கிராம மக்களைக் காசுக்கு விலைபேசுவதற்கு ஸ்டெர்லைட் எடுத்த முயற்சிகளை முறியடித்தது வரை  இது ஒரு நீண்ட பட்டியல்.

துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமன், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர், உசிலம்பட்டிக்காரர் என்ற செய்தி வந்தவுடனே, பாஜக மற்றும் உளவுத்துறையின் பிரச்சாரம் தொடங்கி விட்டது. இந்தப் போராட்டமே மக்கள் அதிகாரத்தின் சதி என்றும் வெளி ஆட்கள் தூத்துக்குடியில் இறங்கி கலவரம் செய்ததாகவும் கட்டுக்கதைகள் பரப்பப் பட்டன. மக்கள் அதிகாரம் அமைப்புக்குத் தடை விதிக்கப்படும் என்ற செய்தி திட்டமிட்டே ஊடகங்களில் பரப்பப் பட்டது. பாஜக, அதிமுக தவிர தமிழகத்தின் எல்லா கட்சியினரும் இதனை எதிர்த்துக் குரல் கொடுத்தனர் என்பது அரசியல் ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விசயம்.

இந்த நிகழ்வுகளின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், அப்போது பொன்னார் போன்ற பாஜக தலைவர்கள் அளித்த பேட்டிகளையும், துக்ளக்கில் திருவாளர் குருமூர்த்தி எழுதியிருக்கும்  கட்டுரைகளையும் படிக்க வேண்டும். அவற்றில் தமிழகத்தின் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கும், திமுக வுக்கும் அவர்கள் பல அறிவுரைகளைக் கூறியுள்ளனர். இது பற்றி அப்போதைய புதிய ஜனநாயகம் இதழில் எழுதியிருப்பதாக நினைவு.

குருமூர்த்தி அன்று கூறிய செய்தி இதுதான். “தேர்தல் அரசியலில் ஈடுபடாத மக்கள் அதிகாரம் போன்ற பல இயக்கங்கள்தான், ஜல்லிக்கட்டு, நெடுவாசல், கதிராமங்கலம், எட்டு வழிச்சாலை,  உயர் அழுத்த மின் கோபுரம், கூடங்குளம், தூத்துக்குடி உள்ளிட்ட பல பிரச்சனைகளிலும் போராட்டத்தை தூண்டுகின்றனர். திமுக உள்ளிட்ட மைய நீரோட்ட கட்சிகள், ஓட்டு வாங்குவதற்காக இதற்கெல்லாம் வால் பிடிக்கிறீர்கள். தீவிரவாத சக்திகளை ஆதரிக்கிறீர்கள். இது தேசத்துக்கும் ஆபத்து. உங்களுக்கும் ஆபத்து”

இந்த உபதேசத்தை கட்சிகள் யாரும் அன்று காதில் போட்டுக் கொள்ளவில்லை. பாஜகவை எதிர்த்தார்கள். இன்று கந்த சஷ்டி விவகாரத்திலும் சங்கிகள் இதைத்தான் செய்தார்கள். ஆனால்,  கட்சிகளுக்கு அன்றிருந்த தைரியம் இன்று இல்லை. அது மக்கள் பிரச்சனை, இது மதப்பிரச்சனை என்ற சமாளிப்புகளால் பயனில்லை. பாசிஸ்டுகளிடம் அரசியல் ரீதியில் பின்வாங்குவது நம் அழிவுக்கான வழி.

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் தூத்துக்குடி மக்களின் உயிர்த்தியாகம் பிரச்சனையை உலகறியச் செய்தது என்பது உண்மை. ஆனால் சாதி ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் மத ரீதியாகவும் மக்களைப் பிளவு படுத்துவதற்கு எதிரி செய்த முயற்சிகள் அனைத்தையும் முறியடிக்க முடிந்ததற்கு முதன்மையான காரணம், மக்கள் கமிட்டி என்ற அமைப்புதான். முரண்பாடுகளையும் பிளவுகளையும் ஏற்படுத்த எதிரிகளும் அரசும் எவ்வளவு முயற்சித்த போதும், அவர்கள் வெற்றியடைய முடியாமைக்கு மிக முக்கியமான காரணம், இந்த அமைப்புதான்.

ஒரு போராட்டத்திலாகட்டும், சமூக மாற்றத்திலாகட்டும் “நமது” பாத்திரம் என்ன?  கிரியா ஊக்கியா, முன்னணிப்படையா (Catalyst or Vanguard) என்ற கேள்வி  மார்க்சியர்கள் மத்தியிலான ஒரு விவாதப்பொருள். “கிரியா ஊக்கி” என்ற அணுகுமுறையின் வெற்றிதான் தூத்துக்குடி போராட்டம் என்பது என் கருத்து.

ஸ்டெர்லைட் போராட்டமும் ஜல்லிக்கட்டு போராட்டமும் நடைபெற்ற அந்த நாட்கள் தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

“தமிழ்ச் சமூகத்தின் உடல் முழுவதிலும் அட்ரீனலின் பொங்கிப் பாய்ந்ததைப் போன்றதொரு எழுச்சி! அடிமைத்தளையில் புழுங்கிக் கொண்டிருந்த சமூகம், தானே அறிந்திராத ஒரு கணத்தில் அதனை அறுத்தெறிந்து மேலெழும்பியது போன்றதொரு நிகழ்வு. தன்னிடம் இப்படி ஒரு உள்ளுறை ஆற்றல் இருப்பது கண்டு வியப்புற்ற சமூகம், “இது நனவுதானா” என்று தன்னைத்தானே கிள்ளிப்பார்த்து உறுதி செய்து கொண்ட ஒரு தருணம்.  ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தின் ஒரு மனநிலை” என்று மெரினா எழுச்சி அப்போது புதிய ஜனநாயகம் இதழில் எழுதிய  கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தேன்.

அத்தகைய எழுச்சியூட்டும் மனநிலை ஒரு சமூகத்தில் தொடர்ந்து நிலவுவது சாத்தியமில்லை. ஆனால் அதற்கான உள்ளுறை ஆற்றல் நம் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறது. பாஜக வுக்கு எதிராக தமிழ்மக்களின் மனதில் நிலவும் உள்ளுறை கோபமும் வெறுப்பும்தான் அவர்களை இன்னமும் தமிழகத்தில் நுழைய விடாமல் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கும் தடையரண்கள். அதனைத் தகர்க்கும் முயற்சியில் அவர்கள் தமக்குத் தோதான நிகழ்ச்சி நிரல்களை உருவாக்குகிறார்கள். நாம் தடுத்தாடிக் கொண்டிருக்கிறோம்.

நிகழ்ச்சி நிரலை நாம் தீர்மானிக்க வேண்டும். அப்படித் தீர்மானிப்பதற்கான வாய்ப்பை கொரோனா உலக மக்கள் அனைவருக்கும் வழங்கிய போதிலும், அந்த தருணத்தை அமெரிக்க மக்கள்தான் கைப்பற்றிக் கொண்டனர். நம்மால் முடியவில்லை.

வேலை இல்லாமல் பல இலட்சம் மக்கள் பட்டினியில் மடிந்தாலும், நெடுஞ்சாலையில் நடந்து சுருண்டு விழுந்து செத்தாலும், நிவாரணமில்லை என்று கூறும் மோடி அரசின் பார்ப்பன பாசிசக் கொடுங்கோன்மைக்கு எதிரானதொரு நிகழ்ச்சி நிரலில் மக்களைத் திரட்டுவதற்கு நம்மால் இயலவில்லை. அதனால்தான், கந்த சஷ்டி “கவசத்துக்குள்” ஒளிந்து கொள்ள எதிரிகளால் முடிகிறது.

பிரசாந்த் பூஷணுக்கு எதிரான அவமதிப்பு வழக்கையும் தமிழக வழக்கறிஞர் போராட்டத்தையும் ஒப்பிட்டு நேற்று எழுதியிருந்தேன். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 1800 வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்திருப்பதாக இன்று செய்தி. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது கோரிக்கையாம்.

இதுதான் டில்லிக்கும் தமிழகத்துக்கும் உள்ள வேறுபாடு. தமிழக வழக்கறிஞர்கள் நீதிமன்ற பாசிசத்தை வீதியில் எதிர்கொண்டார்கள். வென்றார்கள். பிரசாந்த் பூஷணுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டவுடனேயே டில்லி வழக்கறிஞர்கள் வீதியில் போராட்டத்தை தொடங்கியிருக்க வேண்டும். அப்படியொரு போராட்டம் நடந்திருந்தால், தீர்ப்பு வேறுவிதமாக இருந்திருக்க வாய்ப்புண்டு.

ஸ்டெர்லைட் போராட்டத்தின் படிப்பினையும் அதுதான். அரசாங்கம் வகுத்துக் கொடுத்த சட்டகத்துக்குள் போராட்டம் நடத்த மறுத்து, 144 தடையை மீறி ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் செல்லாமல் அன்று முடங்கியிருந்தால்? இன்று ஸ்டெர்லைட்டின் இரண்டாவது யூனிட்டுக்கான கட்டுமானப்பணிகள் நடக்கத் தொடங்கியிருக்கும்.

இரண்டாவது யூனிட்டுக்கு நிலம் கொடுத்த தமிழக அரசு,  முதல் யூனிட்டையே மூடவேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதாட நேர்ந்தமைக்குக் காரணம் – அன்றைய போராட்டம்.

நேற்றைய தீர்ப்புக்குப் பின்னரும், தூத்துக்குடி போராட்டத்தின் பின்னணியில் சீனாவும் பாகிஸ்தானும் இருப்பதாகப் பேசுகின்ற தைரியம் இன்றைக்கும் பாஜக வினருக்கு இருக்கிறது. இந்த தீர்ப்பினை உச்ச நீதிமன்றத்தில் முறியடித்து விடலாம் என்ற தைரியம் வேதாந்தாவுக்கு இருக்கிறது. ஏனென்றால், மோடியின் அரசு அம்பானி-அதானி-அகர்வாலின் சட்டைப் பைக்குள் இருக்கிறது.

நாம் தூத்துக்குடி தீர்ப்பின் வெற்றியைக் கொண்டாடுவதைக் காட்டிலும், அந்த வெற்றி எப்படி சாத்தியமானது என்பதைப் பரிசீலிப்பதே இன்றைய தேவை. பார்ப்பன பாசிசத்துக்கு எதிராக விரிந்த அளவில் தமிழக கட்சிகள், இயக்கங்களிடையேயான ஒரு ஒற்றுமையைக் கட்டுவதற்கு அந்தப் பரிசீலனை நிச்சயம் பயன்படும்.

முதற்பதிவு: தோழர்.மருதையன் – இடைவெளி

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s