குடும்பம் 9

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 14

குட்ரூன் [13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மானிய மகாகாவியம்] நூலிலும் இதேதான் நடக்கிறது. அதில் அயர்லாந்தின் ஸிகெ பாண்ட் நார்வே நட்டைச் சேர்ந்த உட்டேயை மணக்கவும், ஹெகெலிங்கன் நாட்டைச் சேர்ந்த ஹெடல் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹீல்தேயை மணக்கவும் முயல்கிறார்கள். கடைசியாக, மோர்லாந்து நாட்டு ஸிக்ஃபிரிடும் ஓர்மனியின் ஹார்ட்முதும் ஸீலாந்தின் ஹெர்விக்கும் குட்ரூனை மணக்க முயல்கின்றனர். இங்கேதான் முதல்தடவையாக, குட்ரூன் தன் சுயவிருப்பப்படி கடைசியாக சொல்லப்பட்ட நபரை மணக்க முடிவு செய்கிறாள். ஒரு இளவரசனுக்கு மணமகளைப் பெற்றோர்கள் தேர்ந்தெடுப்பது விதியாக இருந்தது. பெற்றோர்கள் இருந்திருந்தால் அவன் மிக முக்கியமான மானியக்காரர்களைக் கலந்து கொண்டு – எல்லா விஷயங்களிலும் அவர்களுடைய சொல்லுக்கு அதிகமான மதிப்பு உண்டு – தன் மணப் பெண்ணைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். இது வேறுவிதமாக இருக்க முடியாது. இளவரசன் விஷயம் போலவே, வீரப் பெருந்தகை, பாரன் விஷயத்திலும் திருமணம் என்பது ஒரு அரசியல் நடவடிகையாக, புதிய உறவுகளின் மூலம் அதிகாரத்தைப் பெருக்கிக் கொள்கின்ற வாய்ப்பாக இருந்தது. வம்சத்தின் நலன் – தனிநபருடைய நலன் அல்ல – நிர்ணயமான காரணியாகும். இங்கே, திருமண விஷயத்தில் காதலுக்கு எப்படி மதிப்பு ஏற்படும்?

மத்திய கால நகரங்களைச் சேர்ந்த கில்டு நபர் விஷயத்திலும் இப்படியேதான். அவனைப் பாதுகாத்த அதே சலுகைகள், விசேஷ நிபந்தனைகளுடன் கூடிய கில்டு உரிமைப் பத்திரங்கள், பிற கில்டுகளிடமிருந்தும் சக கில்டு நபர்களிடமிருந்தும் தன்னுடைய கையாட்களிடமிருந்தும் பயிற்சியாளர்களிடமிருந்தும் சட்டப்படி தன்னைப் பிரித்து வைக்கின்ற செயற்கையான வரையறைகள் ஆகியவை தனக்குத் தகுதியுள்ள மனைவியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள கூடிய வட்டத்தை அதிகமான அளவுக்குக் குறுக்கி விட்டிருந்தன. இந்தச் சிக்கலான அமைப்பின் கீழ் தனக்கு மிகவும் தகுதியுள்ள மணமகள் யார் என்ற பிரச்சனை தனிப்பட்ட விருப்பத்திற்குப் பதிலாக குடும்ப நலன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது.

எனவே, மத்திய காலத்தின் இறுதிக் கட்டம் வரையில் திருமணம் என்பது மிகப் பெரும்பாலும் ஆரம்பத்திலிருந்தபடியே தான் இருந்தது, அதாவது சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினரால் முடிவு செய்யப்படவில்லை. தொடக்கத்தில் ஒருவன் பிறக்கும் போதே மணந்து கொண்டே தான் பிறந்தான் – தனக்கு மாறுபட்ட பாலைச் சேர்ந்த முழுக் குழுவை மணந்திருந்தான். குழு மணத்தின் பிந்திய வடிவங்களிலும் இது போன்ற உறவு அநேகமாக இருந்திருக்கும்; ஆனால் குழு மேன்மேலும் அதிக மாகக் குறுக்கப்பட்டு வந்திருக்கும். இணை மணத்தில் குழந்தைகளின் திருமணத்துக்குத் தாயார்கள் ஏற்பாடு செய்வதே விதி. இங்கும் கூட புதிய உறவுமுறையின் பிணைப்புகள், குலத்திலும் இனக்குழுவிலும் இளம் தம்பதிகளுடைய நிலையை வலுப்படுத்த வேண்டும் என்ற யோசனைகளே நிர்ணயகரமான காரணியாக உள்ளன. மேலும், பொதுச் சொத்தைக் காட்டிலும் தனிச்சொத்து மேலோங்கிய பொழுது வாரிசுரிமையில் அக்கறை ஏற்பட்டதுடன் தந்தையுரிமையும் ஒருதார மணமும் மேல்நிலைக்கு வந்து விட்டன; திருமணம் முன்னை விட அதிகமாகப் பொருளதாரக் காரணங்களைச் சார்ந்திருக்க வேண்டியதாயிற்று. விலை கொடுத்துப் பெண்ணை வாங்கும் திருமணத்தின் வடிவம் மறைகிறது. ஆனால் பெண் மட்டுமன்றி ஆணும் சொந்த குணங்களைக் கொண்டு மதிக்கப்படாமல் சொத்துக்களைக் கொண்டு மதிக்கப்படும் வழியிலே அந்தப் பேரம் அதிகரிக்கின்ற முறையில் நடத்தி முடிக்கப்படுகிறது. திருமணத்துக்கு இரு தரப்பினரின் பரஸ்பர விருப்பம் மற்ற எல்லாவற்றையும் காட்டிலும் அதிமுக்கியமான காரணமாக இருக்க வேண்டும் என்ற கருத்து ஆளும் வர்க்கங்களின் நடைமுறையில் ஆரம் பத்திலிருந்து இடம் பெறவில்லை. அதிகமாகச் சொன்னால், புத்தார்வக் கற்பனைக் கதைகளில் அல்லது ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் மத்தியில் மட்டும்தான் இது நடைபெற்றது. ஆனால் அவைதான் முக்கியத்துவம் இல்லாதவையாயின.

பூகோளக் கண்டுபிடிப்புகள் என்ற யுகத்தைத் தொடர்ந்து முதலாளித்துவ உற்பத்தி உலக வர்த்தகம் மற்றும் பட்டறை உற்பத்தியின் மூலம் உலகத்தை வெற்றி கொள்ளப் புறப்பட்ட பொழுது இருந்த நிலைமை இதுதான். இப்படிப்பட்ட மண வடிவம் அதற்கு மிகவும் பொருத்தமாக இருந்திருக்க வேண்டும் என்று ஒருவர் நினைக்கலாம். ஆம், உண்மையில் அப்படித்தான் இருந்தது. எனினும் – உலக வரலாற்றின் முரண்நகை ஆழங்காண முடியாதது – முதலாளித்துவ உற்பத்தி முறைதான் அதில் தீர்மானகரமான உடைப்பை ஏற்படுத்தியது. அது எல்லாப் பொருட்களையும் பண்டங்களாக மாற்றி விட்டதன் மூலம் பண்டைக்கால பரம்பரை உறவுகள் எல்லாவற்றையும் கரைத்து விட்டது; மரபுவழிப்பட்ட பழக்கங்கள், வரலாற்று ரீதியான உரிமைகள் இருந்த இடத்தில் வாங்கி விற்பனை செய்யும் பேரத்தை “சுதந்திரமான” ஒப்பந்தத்தை கொண்டு வந்தது. முந்திய சகாப்தங்களுடன் ஒப்பிடுகின்ற பொழுது நாம் அடைந்துள்ள முன்னேற்றம் அனைத்தும், சுவீகரித்துக் கொண்ட நிலைமைகளிலிருந்து ஒப்பந்தம் செய்துகொண்ட நிலைமைகளுக்கு வளர்ச்சியடைந்ததில் அடங்கியுள்ளது என்று ஆங்கில சட்டநிபுணர் ஹெ.ஸா. மெயின் கூறிய பொழுது தாம் ஏதோ மாபெரும் கண்டுபிடிப்பைச் செய்துவிட்டதாக நம்பினார். இக்கூற்று – அது சரியாக இருக்கின்ற அளவுக்கு – நெடுங்காலத்துக்கு முன்பே கம்யூனிஸ்டு அறிக்கையில் உள்ளதே.

ஆனால் ஒப்பந்தங்களைச் செய்து முடிக்க வேண்டும் என்றால் தம்மையும் தமது செய்கைகளையும் உடைமைகளையும் சுதந்திரமாக கையாளக்கூடிய நபர்கள், ஒருவொருக்கொருவர் சமத்துவ நிலையில் உள்ள நபர்கள் முதலில் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட “சுதந்திரமான”, “சமத்துவமான” மனிதர்களைப் படைப்பதே முதலாளித்துவ உற்பத்தியின் முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். ஆரம்பத்தில் இது உணர்வுள்ள முறையில், மத வேடத்தில் நடைபெற்றாலும் லூதர் மற்றும் கால்வினுடைய மதச் சீர்திருத்தக் காலத்திலிருந்து [மதச் சீர்த்திருத்த இயக்கம் – 16ஆம் நூற்றாண்டில் ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் இதர நாடுகளில் விரிவாகப் பரவிய கத்தோலிக்க மதச் சீர்திருத்த இயக்கம். வெற்றியடைந்த நாடுகளில்(இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, ஜெர்மனியின் ஒரு பகுதி மற்றும் ஸ்காண்டிநேவிய நாடுகள்) புரோடஸ்டேண்ட்டு திருச்சபைகள் அமைக்கப்பட்டன] இது ஒரு கோட்பாடாக உறுதிப்பட்டது, அதாவது ஒரு நபர் தனது செயல்களை நிறைவேற்றுகின்ற பொழுது தன் சித்தத்தின் மீது முழு அதிகாரம் செலுத்தினால் மட்டுமே அவன் தன் செயல்களுக்கு முழுப் பொறுப்பாளி ஆகிறான் என்றும் ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்யுமாறு நிர்ப்பந்திக்கின்ற எல்லாக் கட்டாயங்களையும் எதிர்ப்பது ஒழுக்கத்தின் பாற்பட்ட கடமை என்றும் அக்கோட்பாடு வலியுறுத்தியது. ஆனால் இந்தக் கோட்பாடு திருமணத்தின் முந்திய நடைமுறையுடன் எப்படிப் பொருந்தும்? முதலாளி வர்க்க கருத்தோட்டங்களின் படி, திருமணம் என்பது ஒர் ஒப்பந்தம், ஒரு சட்ட விவகாரம், உண்மையிலேயே எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமான சட்ட விவகாரம், ஏனென்றால் அது இரண்டு நபர்களின் உடலையும் உள்ளத்தையும் வாழ்க்கை முழுவதற்குமே முடித்து விடுகிறது. உண்மைதான், அந்தப் பேரம் சம்பிரதாய முறையில் சுதந்திரமாகத்தான் முடிக்கப்பட்டது. இரு தரப்பினரின் ஒப்புதலைப் ஒப்புதலைப் பெறாமல் அது முடிக்கப்படவில்லை. ஆனால் இந்த ஒப்புதல் எப்படிப் பெறப்பட்டது, உண்மையாகவே திருமணத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் யார் என்பவை எல்லோரும் நன்கறிந்தவையே. ஆனால் மற்ற எல்லா ஒப்பந்தங்களுக்கும் முடிவெடுப்பதற்கு உண்மையான சுதந்திரம் இருக்க வேண்டுமென்று கோருகின்ற பொழுது இதற்கு ஏன் கோரக் கூடாது? திருமணம் செய்து கொள்ளப் போகின்ற இரு இளம் நபர்களுக்குத் தம்மை, தமது உடல்களையும் உறுப்புகளையும் சுதந்திரமாக ஒப்படைக்கின்ற உரிமை கிடையாதா? வீரப் பெருந்தன்மையின் விளைவாகக் காதல் ஒரு புதுப்பாணி ஆகவில்லையா? பிறர் மனைவியுடன் முறைக்கேடான உறவு கொள்ளும் வீரக் காதலுக்கு எதிராக கணவன், மனைவியரிடையே காதல் என்பது அதன் சரியான பூர்ஷ்வா வடிவமில்லையா? ஒருவரையொருவர் காதலிப்பது கணவன், மனைவியின் கடமையானால் காதலர்களும் பிறரையன்றி ஒருவரையொருவர் மணப்பதுதானே கடமையாகும். மேலும், பெற்றோர்கள், உறவினர்கள், கல்யாணத் தரகர்கள், திருமணம் முடிப்பவர்கள் ஆகியோருக்கு இருக்கும் உரிமையை விடக் காதலர்களின் உரிமை உயர்ந்திருக்கவில்லையா? சுதந்திரமாக, தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கின்ற உரிமை சிறிதும் தயங்காமல் திருச்சபைக்குள்ளும் மதத்துக்குள்ளும் பலவந்தமாக நுழைந்து விட்டதென்றால், இளைய தலைமுறையின் உடலையும் ஆன்மாவையும் உடைமையையும் மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் முடிவு செய்ய மூத்த தலைமுறை உரிமை கொண்டாடும் இடத்துக்கு வந்தவுடன் அது எப்படி நின்று விட முடியும்?

பழைய சமுதாய உறவுகளை எல்லாம் தளர்த்தி, சம்பிரதாய கருத்தோட்டங்களின் அடிப்படைகளை எல்லாம் குலுக்கிவிட்ட காலகட்டத்தில் இந்தக் கேள்விகள் தோன்றவே செய்யும். ஒரேயடியில் உலகத்தின் அளவு சுமார் பத்து மடங்கு பெரிதாகிவிட்டது. மேற்கு ஐரோப்பியர்கள் அரைக்கோளத்தின் நான்கில் ஒரு பகுதியை பார்த்ததற்கு மாறாக இப்பொழுது உலகம் முழுவதையுமே பார்க்க முடிந்தது. அவர்கள் உலகத்தின் மற்ற எல்லாப் பகுதிகளையும் கைப்பற்றுவதற்கு விரைந்தார்கள். நாட்டின் பழைய, குறுகிய தடைகள் மறைந்து விட்டதைப் போல மத்திய காலத்தின், வகுத்தளிக்கப்பட்ட சிந்தனா முறையினால் ஏற்பட்ட ஆயிரம் ஆண்டுக் காலத் தடைகளும் மறைந்தன. மனிதனுடைய புறக்கண்ணுக்கும் அகக்கண்ணுக்கும் எதிரே எல்லையற்ற அடிவானம் விரிந்து தோன்றியது. இந்தியாவின் செல்வத்தினால், மெக்சிகோ, பொடோஸியின் தங்க, வெள்ளிச் சுரங்கங்களினால் வசீகரிக்கப்பட்டுள்ள வாலிபனுக்குக் கெளரவத்தின் நல்ல நோக்கங்களாலும் பல தலைமுறைகளாகக் கைமாற்றித் தரப்பட்டிருக்கின்ற மதிப்புமிக்க கில்டுச் சலுகைகளாலும் என்ன லாபம்? அது முதலாளி வர்க்கத்தின் யாத்திரைத் தன்மையுள்ள வீரப் பெருந்தகைக் காலப் பகுதியாகும்; அதற்கும் புத்தார்வக் கற்பனையும் காதல் கனவுகளும் இருந்தன – ஆனால் அவை முதலாளி வர்க்க அடிப்படையில், முடிவாகப் பார்க்கும் பொழுது, முதலாளி வர்க்கக் குறிக்கோள்களைக் கொண்டிருந்தன.

வளர்ச்சியடைந்து கொண்டிருந்த முதலாளி வர்க்கம், குறிப்பாகப் புரோடஸ்டேண்ட் நாடுகளில் – மற்ற நாடுகளைக் காட்டிலும் அங்கேதான் இருக்கின்ற ஒழுங்கமைப்பு அதிகமாகக் குலுக்கப்பட்டது – திருமண விஷயத்திலும் ஒப்பந்த சுதந்திரத்தை மேன்மேலும் அங்கீகரித்து மேலே வர்ணித்தபடி நிறைவேற்றியது. திருமணம் வர்க்க வகைப்பட்ட திருமணமாகவே இருந்த்து; ஆனால் அந்த வர்க்க வரம்புகளுக்குள் இரு தரப்பினருக்கும் ஒரளவுக்குச் சுதந்திரமாகத் தேர்வு செய்கின்ற உரிமை இருந்தது. மேலும், பரஸ்பரக் காதல், கணவன், மனைவியின் உண்மையான, சுதந்திரமான ஒப்புதல் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டிராத ஒவ்வொரு திருமணமும் ஒழுக்கக் கேடானது என்று ஏட்டளவிலும் ஒழுக்கத் தத்துவத்திலும் கவிதா வர்ணனையிலும் அசைக்க முடியாதபடி நிலைநாட்டியதைப் போல் வேறெதுவும் நிலை நாட்டப்படவில்லை. சுருக்கமாகக் கூறினால், காதல் திருமணம் ஒரு மனித உரிமை என்று பிரகடனம் செய்யப்பட்டது. அது droit de l’homme [இது ஒரு சிலேடையாகும்; அதற்கு ஒரே சமயத்தில் “மனித உரிமை” மற்றும் “ஆணின் உரிமை” என்று பொருளாகும்.] மட்டுமல்ல, அத்துடன் விதிவிலக்காக, droit de la femme [பெண்ணின் உரிமை] ஆகும்.

ஆனால் இந்த மனித உரிமை மனித உரிமைகள் எனப்பட்ட மற்றெல்லாவற்றிலும் ஒர் அம்சத்தில் வேறுபட்டிருந்தது. இரண்டாவதாகச் சொல்லப்பட்டவை நடைமுறையில் ஆளும் வர்க்கத்துக்கு, முதலாளி வர்க்கத்துக்கு மட்டும் உரியவையாக இருந்த பொழுது, ஒடுக்கப்பட்ட வர்க்கத்திடமிருந்து, பாட்டாளி வர்க்கத்திடமிருந்து அவை நேரடியாக அல்லது மறைமுகமாகப் பறிக்கப்பட்டு விட்ட பொழுது வரலாற்றின் முரண்நகை மீண்டும் தன்னை இங்கே வலியுறுத்திக் காட்டிக் கொள்கிறது. வழக்கமான பொருளாதாரச் செல்வாக்குகள் ஆளும் வர்க்கத்தின் மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆகவே அது விதிவிலக்கான சந்தர்ப்பங்களில்தான் உண்மையிலேயே சுதந்திரமான திருமணங்களைக் காட்ட முடியும். ஆனால் ஒடுக்கப்பட்டிருக்கின்ற வர்க்கத்தில் இவை விதியாக இருக்கின்றன என்று நாம் அறிவோம்.

திருமணத்தில் முழு சுதந்திரம் என்பது முதலாளித்துவ உற்பத்தியையும் அது படைக்கின்ற சொத்து உறவுகளையும் ஒழிப்பதன் மூலம் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் இன்னும் இவ்வளவு பலமான தாக்கத்தைச் செலுத்துவதுகின்ற துணைப் பொருளாதாரக் காரணங்கள் எல்லாவற்றையும் அகற்றிய பிறகுதான் பொதுவாகச் செயல்பட முடியும். அப்பொழுதுதான் பரஸ்பர அன்பைத் தவிர வேறு எந்த நோக்கமும் இருக்காது.

ஒருவன் பால் அல்லது ஒருத்தியின் பால் அன்பு காட்டுவது காதலின் இயல்பு. எனினும் இன்று பெண் மட்டுமே அதை பூர்ணமாக நடைமுறையில் காட்டுகிறாள். எனவே காதல் திருமணம் அதன் இயல்பிலேயே ஒருதார மண மாகத்தான் இருக்கிறது. குழுமணத்திலிருந்து ஒருதாரமணத்துக்கு முன்னேற்றமடைந்தது முக்கியமாகப் பெண்களினால் ஏற்பட்டது என்று பார்த்தோம். இணை மணத்திலிருந்து ஒருதார மணத்துக்கு மாறியது மட்டுமே ஆண்களால் ஏற்பட்டது என்று கொள்ள முடியும். மேலும், வரலாற்று ரீதியாகப் பார்த்தால், இதன் விளைவாகப் பெண்களின் நிலை மேலும் மோசமடைந்தது, திருமணமான ஆண்களின் ஒழுக்கக் கேட்டுக்கு வழி கிடைத்தது. ஆண்களுடைய வழக்கமான ஒழுக்கக் கேட்டைப் பெண்கள் சகித்துக் கொண்டிருக்கும்படி கட்டாயப்படுத்துகின்ற பொருளாதார நோக்கங்கள் – தமது வாழ்க்கையைப் பற்றிய கவலை, அதற்கும் மேலாக, தமது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை – மறைகின்ற பொழுது ஏற்படுகின்ற ஆண், பெண் சமத்துவம் பெண்கள் பல கணவர் மண முறைக்குப் போய் விடுவதை விட ஆண்கள் உண்மையிலேயே ஒருதார மணத்தைக் கடைப்பிடிப்பதற்குப் பேருதவி செய்யும் என்று முந்திய அனுபவத்தின் அடிப்படையில் கூறலாம்.

எனினும் சொத்து உறவுகளிலிருந்து எழுந்ததன் விளைவாக ஒருதார மணத்தின் மீது முத்திரையாக விழுந்துள்ள எல்லா குணாம்சங்களும் உறுதியாக மறையும். அவை பின்வருவன: முதலாவதாக, ஆணின் ஆதிக்கம்; இரண்டாவதாக, திருமணத்தை ரத்து செய்ய முடியாமை. ஆணின் பொருளாதார ஆதிக்கத்தின் விளைவாகத்தான் அவன் மண வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துகிறான். அது மறைகின்ற பொழுது இதுவும் போய் விடும். திருமணத்தை ரத்து செய்ய முடியாமை என்பது ஓரளவுக்கு ஒருதார மணம் தோன்றியுள்ள பொருளாதார நிலைமைகளின் விளைவாகவும் ஓரளவுக்கு இந்த பொருளாதார நிலைமைகளுக்கும் ஒருதார மணத்துக்கும் உள்ள தொடர்பு இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாமலும் மதத்தினால் மிகைப்படுத்திக் கூறப்பட்டும் வந்த காலத்திலிருந்து ஏற்பட்ட மரபின் விளைவாகவும் இருக்கிறது. இன்று அது ஆயிரம் மடங்கு உடைந்து விட்டது. காதல் திருமணங்கள் மட்டுமே ஒழுக்கமானவை என்றால் பரஸ்பர அன்பு நீடிக்கின்ற மண வாழ்க்கைதான் ஒழுக்கமுடையதாகும். தனிப்பட்ட காதல் முனைப்பு எவ்வளவு காலம் இருக்கும் என்பது, குறிப்பாக ஆண்களிடம், நபருக்கு நபர் மிகவும் வேறுபடுகிறது. அந்தக் காதல் நிச்சயமாக முடிந்து விடுதல் அல்லது மற்றொரு நபர் மீது ஏற்படுகின்ற புதுக் காதல், பிரிந்து போதலை அந்தத் தம்பதிகளுக்கும் சமுதாயத்துக்கும் நன்மையாகச் செய்கின்றது. விவகாரத்து நடவடிக்கைகள் என்னும் பயனில்லாத சேற்றில் இறங்கி நடக்கின்ற அனுபவம் மக்களுக்கு நேராது.

முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு வந்து கொண்டிருக்கின்ற அழிவுக்குப் பிறகு பால் உறவுகளை ஒழுங்கு படுத்துவதைப் பற்றி நாம் ஊகமாக சொல்லக்கூடியது பெரும்பாலும் எதிர்மறையாகவே இருக்கிறது. இதைத் தவிர கூடுதலாக என்ன இருக்கும்? ஒரு புதிய தலைமுறை வளர்ச்சியடைந்த பிறகு அது முடிவு கட்டப்படும். அந்த தலைமுறையை சேர்ந்த ஆண்களுக்கு பணத்தைக் கொண்டு அல்லது சமூக ரீதியான இதர அதிகாரச் சாதனங்களைக் கொண்டு ஒரு பெண்ணை இணங்கச் செய்யும்படி தம் வாழ்க்கையில் என்றைக்குமே நேராது. பெண்கள் உண்மைக் காதலுக்காக மட்டுமின்றி வேறெந்த நோக்கத்துக்காகவும் எந்த ஆணுக்கும் என்றைக்குமே இணங்க மாட்டார்கள், அல்லது பொருளாதார விளைவுகளைப் பற்றி அஞ்சி தம்முடைய காதலனுக்கு தம்மைக் கொடுப்பதற்குத் தயங்க வேண்டிய நிலை அவர்களைக்கு ஏற்படாது. அப்படிப்பட்ட மக்கள் தோன்றியவுடனே, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நாம் இன்று நினைக்கிறோமோ, அதைச் சிறிதும் பொருட்படுத்த மாட்டார்கள். அவர்கள் ஒவ்வொரு நபருடைய நடைமுறையை ஒட்டி தமது சொந்த நடைமுறையையும் அதற்குப் பொருத்தமான தமது சொந்தப் பொதுமக்கள் அபிப்பிராயத்தையும் நிலைநாட்டுவார்கள். விஷயம் அத்துடன் முடிந்து விடும்.

நாம் மார்கனை விட்டு வெகு தூரம் வந்து விட்டபடியால், அவரிடம் திரும்பிச் செல்வோம். நாகரிக நிலைக் காலத்தில் வளர்ச்சியடைந்த சமுதாய அமைப்புகளைப் பற்றிய வரலாற்று ரீதியான ஆராய்ச்சி அவருடைய நூலின் விஷயத்துக்கு அப்பாற்பட்டதாகும். எனவே அவர் இக்காலப் பகுதியில் ஒருதார மணத்தின் கதியைப் பற்றி சுருக்கமாகத்தான் ஆராய்கிறார். அவர் ஒருதார மணக் குடும்பத்தின் வளர்ச்சியை ஒரு முன்னேற்றமாக, முழுமையான ஆண், பெண் சமத்துவத்துடனும் கிட்டதட்ட ஒட்டியிருப்பதாகக் கருதுகிறார். எனினும் இந்தக் குறிக்கோளை எட்டி விட்டதாக அவர் கருதவில்லை. அவர் பின்வருமாறு எழுதுகிறார்:

“குடும்பம் என்பது தொடர்ச்சியாக நான்கு வடிவங்களை கடந்து வந்திருக்கிறது, இப்பொழுது அது ஐந்தாவது வடிவத்தில் இருக்கிறது என்று உண்மையை ஒத்துக் கொண்டால், இந்த வடிவம் நிரந்தரமாக இருக்குமா என்ற கேள்வி உடனே எழுகிறது. அதற்குத் தரக்கூடிய பதில் இதுதான்: சென்றகாலத்தில் நடந்ததைப் போல, சமுதாயம் முன்னேற அதுவும் முன்னேறும்; சமுதாயம் மாற அதுவும் மாறும். அது சமுதாய அமைப்பின் படைப்பு; அதன் பண்பாட்டை அது பிரதிபலிக்கும். நாகரிகம் தொடங்கிய காலத்திலிருந்து ஒருதார மணக் குடும்பம் மிகவும் முன்னேற்றமடைந்திருக்கிறது, நவீன காலத்தில் கணிசமாக மேம்பட்டிருக்கிறது. எனவே ஆண் பெண் சமத்துவம் முழுமையாக சாதிக்கப்படுகின்ற வரை அது மேலும் மேம்பட முடியும் என்று குறைந்தபட்சமாகக் கருதிக் கொள்ளலாம். நெடுந்தூர எதிர்காலத்தில் ஒருதார மணக் குடும்பத்தினால் சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமற் போனால், அதற்குப் பின்னால் வரப் போகின்றவற்றின் இயல்பை ஆருடம் கூற முடியாது.”

இந்நூலின் முந்தைய பகுதிகள்

  1. மாமேதை ஏங்கல்ஸ்.
  2. 1884 ல் எழுதிய முன்னுரை
  3. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி
  4. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2
  5. ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய கலாச்சாரக் கட்டங்கள்
  6. குடும்பம் – 1
  7. குடும்பம் – 2
  8. குடும்பம் – 3
  9. குடும்பம் – 4
  10. குடும்பம் – 5
  11. குடும்பம் – 6
  12. குடும்பம் – 7
  13. குடும்பம் – 8

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s