
செய்தி:
ஏ.ஜி.ஆர் நிலுவைத் தொகை தொடர்பான வழக்கை நீதிபதிகள் அருண் மிஷ்ரா, எஸ்.அப்துல் நசீர் மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வு இன்று விசாரித்தது. விசாரணையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏ.ஜி.ஆர் நிலுவைத் தொகையைச் செலுத்த, சுமார் 10 ஆண்டுகள் அவகாசம் அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. கட்டணங்களைச் செலுத்தத் தவறினால் அபராதம் மற்றும் வட்டி வசூலிக்கப்படும் என்றும் நீதிமன்ற அவமதிப்பாக அது கருதப்படும் என்றும் நீதிபதிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குக் கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
செய்தியின் பின்னே:
ஏ.ஜி.ஆர் தொகை என்பது தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வருவாயில் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை. இந்தத் தொகை பல ஆண்டுகளாக செலுத்தப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. அதை செலுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கு பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபரில் ஒரு உத்தரவை வழங்கியது உச்ச நீதி மன்றம். 2020 ஜனவரி 23 தேதிக்குள் இந்த நிலுவைத் தொகை கட்டி முடிக்கப்பட வேண்டும் என்பது தான் அந்த உத்தரவு. இந்த உத்தரவை அளித்த நீதிபதியான அருண் மிஸ்ரா கடும் கோபமடைந்து, “இந்த நாட்டில் சட்டம் என்று ஒன்று இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் மத்திய அரசு, குறித்த கெடுவுக்குள் பணம் செலுத்தப்படவில்லை என்றாலும் நடவடிக்கை ஒன்றும் எடுக்கப்படாது என்று அறிவித்திருந்தது.
இந்த வழக்கில் அதே அருண் மிஸ்ரா இன்று வழங்கிய உத்தரவில் 10 ஆண்டுகள் காலக்கெடு வழங்கியுள்ளார். அதாவது பாக்கி இருக்கும் தொகையை 2030 மார்ச் மாதத்துக்குள் கண்டிப்பாக கட்டிவிட வேண்டும் என்று கடுமையான(!) உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.
இதில் இன்னோரு வேடிக்கை என்ன தெரியுமா? மத்திய அரசு தன்னுடைய வாதத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 20 ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தது. கொரோனா முடக்கத்தால் அன்றாடம் உண்ண வழியில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் மக்களின் கடன்களுக்கு ஒரு மாத தவணையைக் கூட விட்டுத் தர மறுக்கும் அரசுகள், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 20 ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோருகின்றன. பாவம் கஞ்சிக்கு இல்லாத புள்ளிங்கோ கஷ்டப்படக் கூடாதுல்ல.
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்ட வேண்டிய தொகை: வோடபோன் ஐடியா நிறுவனம் 49,538 கோடி ரூபாய் நிலுவையும், ஏர்டெல் நிறுவனம் 27,740 கோடி ரூபாய் நிலுவைத் தொகையையும், டாடா நிறுவனம் 11,625 கோடி ரூபாய் நிலுவைத் தொகையையும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் 21,135.6 கோடி ரூபாய். இந்த நிறுவனங்களின் சொத்து மதிப்பு மற்றும் லாப மதிப்புகளோடு ஒப்பீட்டால், இந்த நிலௌவைத் தொகைகள் கொசுவுக்குச் சமம். இதைக் கட்ட முடியாமல் தான் 20 ஆண்டு அவகாசம் கொடுங்கள் என்று மத்திய அரசு கோருகிறது. 10 ஆண்டுகள் தான் தருவேன் என்று நீதி மன்றம் கண்ண்ண்ண்ண்ண்டிப்புடன் உத்தரவு போடுகிறது. பாத்துங்கடா .. .. .. ரெம்ப வலிக்கப் போகுது.
அதாகப்பட்டது, “பாம்புக்கு அடி விழுந்த மாதிரியும் இருக்கணும், கம்பையும் முறியாம பாத்துக்கணும்” அம்புட்டுதேன்.
செய்திகள் சுவாசிப்பது: 12/2020