கறுப்பர் கூட்டமும் குண்டர் சட்டமும்

தேசப் பாதுகாப்புச் சட்டம் (NSA), குண்டர் சட்டம் உள்ளிட்ட தடுப்புக் காவல் சட்டங்களுக்கான அறிவுரைக் கழகத்தில் (Advisory Board) நேர்நின்று வாதிடுவது எனக்குப் புதிதன்று. நேற்று கறுப்பர் கூட்டம் தோழர்கள் நாத்திகன் சுரேந்திரனுக்காகவும், செந்தில்வாசனுக்காகவும் வாதிடச் சென்றேன். அவர்களைப் புழல் சிறையிலிருந்து அழைத்து வருவார்கள் என்று வழக்கறிஞர் துரை அருண் சொல்லியிருந்தார். ஆனால் கொரோனா அச்சத்தைக் காட்டி அவர்களைக் கொண்டுவரவில்லை. காணொலி வாயிலாக அவர்கள் முறையிட்டிருக்கக் கூடும். சிறையில் அவர்களிடம் கடுமையான கெடுபிடி காட்டப்படுவதாகத் தெரிந்து கொண்டேன். குடும்பத்தினர் உட்பட யாரையும் நேர்காண அனுமதிப்பதில்லையாம். இங்காவது பார்க்கலாமே என்று வந்திருந்த சுரேந்திரனின் துணைவியார் கார்த்திகாவுக்கு ஏமாற்றமாகி விட்டது.

வழக்கு ஆவணங்களையெல்லாம் வழக்கறிஞர் துரை அருண் என் கையில் தந்து வாதிடுவதற்கான குறிப்புகளையும் கொடுத்தார். அறிவுரைக் கழக நெறிமுறைகளின் படி வழக்கறிஞர்கள் வாதிட முடியாது. வழக்கறிஞன் அல்லேன் என்பதால்தான் என்னை அனுமதிக்கின்றார்கள்.

அறிவுரைக் கழகத்தில் இடம் பெறுவோர் ஓய்வுபெற்ற மூத்த நீதியர் மூவர். அடிக்கடி வாதிடச் செல்வதால் அவர்களுக்கு என்னை நன்கு தெரியும். இந்த முறை புதிதாக ஒருவர் உட்கார்ந்திருந்தார், அவர் பெயர் ஏ, இராமன் என்றும், அவர்தான் குழுவின் தலைவர் என்றும் பிறகு தெரிந்து கொண்டேன். மற்றவர்கள் டி.வி. மாசிலாமணியும் ஆர். இரகுபதியும். இந்த வழக்கில் குண்டர் சட்டத்தை ஏவும் அளவுக்கு அடிப்படை ஏதுமில்லை என்பதால், நீதியரிடம் ஆதரவான எதிர்வினை இருக்கும் என்று எதிர்பார்த்துச் சென்ற எனக்குத் தொடக்கமே ஏமாற்றமாக இருந்தது.

’கந்த சஷ்டிக் கவசத்தைக் கொச்சைப்படுத்திப் பதிவேற்றிய குற்றவாளிகளுக்காகப் பரிந்து பேச நீங்கள் வரலாமா?” என்று மூவரும் ஒரே குரலில் கேட்டார்கள். நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள் என்று வலியுறுத்திக் கேட்டேன். நீதியர் ரகுபதி குறுக்கிட்டு ”தியாகு, நீங்கள் கம்யூனிஸ்டு ஆயிற்றே, திராவிடர் கழகத்துக்காக நீங்கள் ஏன் வாதிடுகின்றீர்கள்?” என்று கேட்டார்.

“கருத்துரிமைக்காக வாதிடுவதில் நான் கட்சி பார்ப்பதில்லை. நான் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்துக்காரன். ஆனால் எந்தக் கட்சி எந்த இயக்கம் என்றாலும் கருத்துரிமைக்காக வாதிட வருவேன்.”

”குண்டர் சட்டத்தில் யாரை போட்டாலும் நீங்கள் வருகின்றீர்களே?”

”குண்டர் சட்டம், என்எஸ்ஏ யார் மீது போட்டாலும் அவர்களுக்கு நான் உதவுவேன். தடுப்புக் காவல் சட்டங்களே கூடாது என்பது எம் கொள்கை நிலைப்பாடு.”

“நீங்கள் எத்தனையோ வழக்குகளுக்காக இங்கு வந்து வாதிட்டுள்ளீர்கள் பல வழக்குகளில் நாங்களும் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளோம்.”

தர்மபுரி மாவட்டத்தில் இளவரசன் ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் மீது தேசப் பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டது. அவர்கள் துடி என்ற அமைப்பில் சேர்ந்து ஆய்தப் பயிற்சி பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. துடி என்பது தலித் கல்விக்காக கிறிஸ்துதாஸ் காந்தி தொடங்கிய அமைப்பு. தலித் இளைஞர்கள் அரசியலுக்குப் போகாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் துடியின் கொள்கை என்பதை சான்றுகளுடன் எடுத்துக்காட்டி வாதிட்டேன். அறிவுரைக் கழகம் அதை ஏற்று அவர்களை விடுதலை செய்யப் பரிந்துரைத்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட்டு எதிர்ப்புப் போராட்டத்தை ஒட்டி மக்களதிகாரம் அமைப்புத் தோழர்கள் மீதான குண்டர் சட்டக் காவலுக்கு எதிராக நான் வாதிட்ட போதும் அந்த நியாயத்தை ஏற்றுக் கொண்டார்கள். என்ன பரிந்துரை வழங்கினார்கள் என்பது தெரியாது. இப்படி இன்னும் சில வழக்குகளிலும் தடுப்புக் காவலுக்கு எதிராக அறிவுரைக் கழகத்தில் ஒரு தாக்கம் ஏற்படுத்த முடிந்தது.

ஆனால் இந்த கந்த சஷ்டிக் கவசம் வழக்கில் அவர்கள் தீவிர எதிர்நிலை எடுப்பது போல் இருந்தது. ஆனால் அவர்களை மறுதலிப்பதில் நான் உறுதியாக இருந்தேன்,

”கந்த சஷ்டிக் கவசம் பற்றி இந்த எதிரிகள் ஆபாசமாகப் பேசியிருப்பதை மறுக்கின்றீர்களா?”

“பேசியதை அவர்களே மறுக்கவில்லை. ஆனால் ஆபசமாகப் பேசியதாகச் சொல்வதைத்தான் மறுக்கிறார்கள். கந்த சஷ்டிக் கவசத்தில் இருப்பதைத்தான்  பேசியிருப்பதாகச் சொல்கிறார்கள். எளிய பொழிப்புரை என்று வேண்டுமானால் சொல்லலாம். கந்த சஷ்டிக் கவசத்தில் இல்லாத எதையாவது இட்டுக்கட்டிக் கூறியுள்ளார்களா என்று பார்க்க வேண்டும்.”

இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் குற்றம் நிகழ்ந்த நாள் குறிப்பிடப்படவில்லை என்றும், அதன் ஆங்கிலப் படியில் மட்டும் 12/7/20 முதல் என்று கூறி, அதிலும் எது வரை என்று குறிப்பிடவில்லை என்றும் ஆவணங்களை எடுத்துக்காட்டிய போது காதில் போட்டுக் கொள்ளவே மறுத்தார்கள். நீதியர் இராமனும் நீதியர் கனகவேலும் இப்படி மதவுணர்வுகளைப் புண்படுத்தலாமா? என்றே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள் என்று குரலுயர்த்திச் சொன்னேன்.

குற்றம் நிகழ்ந்த நாள் என்றால் காணொளியை வலையொளியில் பதிவேற்றிய நாளைத்தான் சொல்ல வேண்டும். அது 2020 சனவரி முதல் நாள். அதன் பிறகு சற்றொப்ப 190 நாள் கழித்து 2020 ஜூலை 12 குற்றம் நிகழ்ந்த நாள் என்று காட்டுகின்றார்கள். ஆறு மாதத்துக்கு மேற்பட்ட காலத்தில் யாரும் இந்தக் காணொலி குறித்து முறைப்பாடு செய்யவில்லை. இவ்வளவு காலம் கழித்து இது குறித்துக் கூச்சலிட்டவர்கள், முறைப்பாடு செய்தவர்கள், மாநில அரசை நடவடிக்கை எடுக்கச் செய்தவர்கள் பாரதிய சனதா கட்சியினர். எல்லாவற்றுக்கும் அரசியல் உள்நோக்கம் இருந்தது. சுற்றுச் சூழல் தாக்க மதிப்பாய்வு – 2020, புதிய மின்சாரச் சட்டம், தேசியக் கல்விக் கொள்கை – 2020 என்று மத்திய அரசின் திட்டங்களுக்கெல்லாம் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு. மக்கள் கவனத்தைத் திசைதிருப்ப கறுப்பர் கூட்டத்தின் காணொலியைப் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த உண்மையை மறைக்கத்தான் முதல் தகவல் அறிக்கையில் குற்றம் நடந்த நாள் என்று எதையும் திட்டவட்டமாகச் சொல்லாமல் காவல்துறை நழுவுகிறது.

நீதிபதிகள் மாறி மாறிக் கேள்வி கேட்டார்கள். ஒவ்வொன்றுக்கும் விடை சொன்னேன்.

’இந்துக் கடவுள் முருகனை இழிவுபடுத்தலாமா?”

“முருகன் இந்துக் கடவுளா? கந்த சஷ்டிக் கவசம் முருகனைப் பற்றியதா? என்பதெல்லாம் விவாதத்துக்குரியது. ஆதிசங்கரரின் ஷண்மதத்தில் சிவன் விஷ்ணு, சக்தி, கணபதி, சூரியன், பசு இவையெல்லாம்தான் வழிபாட்டுக்குரியவை. முருக வழிபாடு என்ற குறிப்பே இல்லை. சைவம் , வைணவம், சாக்தம், காணபத்யம், சௌரபம், கௌமாரம் இந்த ஆறும் சேர்ந்ததே இந்து மதம். தமிழர்களின் குறிஞ்சித் தலைவன் முருகனை சிவன் பார்வதிக்கு மகனாக்கி, கணபதிக்குத் தம்பியாக்கி, தெய்வயானைக்கு மணாளனாக்கி இந்துக் கடவுள் என்று உரிமை கொண்டாடுவது எப்படி?”

“உங்களுக்குத் தெரிந்ததையெல்லாம் எங்களுக்குச் சொல்ல வேண்டாம்” என்றார் நீதியர் இராமன்.

நான் சொன்னேன்: “எனக்கு அந்தத் தேவை இல்லை. நீங்கள் முருகனை இந்துக் கடவுள் என்றதாலும், இந்தக் காவல் ஆணையிலும் அப்படிக் குறிப்பிட்டிருப்பதாலும் இந்த விளக்கத்தை சொல்ல வேண்டியதாயிற்று. இங்கு நாம் விவாதிக்க வேண்டியது சுரேந்திரனையும் செந்தில்வாசனையும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க வேண்டிய தேவை என்ன என்பதுதான்.”

”நாட்டில் மதச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டுமல்லவா?’

“ஆம். மதச் சுதந்திரம் என்பதில் மத்த்தை மறுக்கும் சுதந்திரமும் அடங்கும். சமயப் பரப்புரை செய்யும் உரிமை போலவே நாத்திகப் பரப்புரை செய்யவும் உரிமை உண்டு.”

“நீங்கள் இப்படித்தான் செய்வீர்களா? மற்ற மதங்களுக்கு எதிராக இப்படிச் செய்ய முடியுமா?”

“குறிப்பிட்ட கந்த சஷ்டிக் கவசத்தில் ஆபாசம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. உடல் உறுப்புகளின் பெயரைச் சொல்லி ஒவ்வொன்றையும் காக்குமாறு இறைவனை நம்பி வேண்டுகிறவர் வேண்டி விட்டுப் போகட்டும். எனக்கு நம்பிக்கையில்லை, நான் நாத்திகன், வேண்ட மாட்டேன். அந்த வரிகளில் ஆபாசம் இருப்பதாக சுரேந்திரன் கருதினால் அது அவரது கருத்துரிமை. அதற்காக அவரைச் சிறையிலடைப்பதை ஏற்க முடியாது. கறுப்பர் கூட்டத்தின் மீதான அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்”

நான் கம்யூனிஸ்டு ஆவதற்கு முன்பே நாத்திகன் ஆகி விட்டேன். ஆனால் எனது தமிழ்த் தேசிய அரசியல் என்பது நாத்திகமோ ஆத்திகமோ அன்று. ஆனால் சுரேந்திரன் போன்றவர்களுக்கு நாத்திகப் பரப்புரை செய்யும் உரிமை உண்டு என்பதுதான் என் நிலைப்பாடு.

சுரேந்திரனுக்கு இந்த உரிமை உண்டு என்பது மட்டுமன்று. அவருக்கொரு கடமையும் உண்டு. அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் கடமை! இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பகுதி IV-A அடிப்படைக் கடமைகள், 51-A உறுப்பை எடுத்துக் காட்டினேன்.

நீதியர் இராமன் “பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை” என்று ஆரம்பித்தார்.

நான் சொன்னேன்: “அறிவியலும் பகுத்தறிவும் எப்போதுமே பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பை மீறியே வளர்ந்துள்ளன. சாக்ரட்டீசுக்கு நஞ்சூட்டிக் கொன்றார்கள். பெரும்பான்மை யூத மக்கள் விரும்பிய படிதான் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். இயேசு மதத்தாரே புருனோவை உயிரோடு எரித்தார்கள். கலிலியோ கலிலியைச் சிறை வைத்தார்கள். இப்போது சுரேந்திரனையும் செந்தில்வாசனையும் குண்டர் சட்டத்தில் அடைத்து வைக்கவும் அதே பெரும்பான்மைவாதம் பேசுகின்றீர்கள். சாக்ரட்டீஸ், இயேசு, புருனோ, கலிலியைத் தண்டித்தவர்கள்தாம் இழிவைத் தேடிக் கொண்டார்கள். இப்போது அதற்காக மன்னிப்புக் கேட்கிறார்கள். அதெல்லாம் அந்தக் காலம். இந்தக் காலத்தில் இப்படிச் செய்வது இந்த அரசுக்கும் இந்த அரசமைப்புக்கும் இந்த வழக்கைத் தொடுத்தவர்களுக்கும்தான் இழிவு. நீதிபதிகளாகிய நீங்கள் இந்த இழிவில் பங்காளியாகி விடாதீர்கள் என்று வேண்டிக் கொள்கிறேன். இவர்களை விடுதலை செய்ய அரசுக்கு அறிவுரை சொல்லிப் பெருமை தேடிக் கொள்ளுங்கள்.”

”மற்றவர்கள் மனம் புண்பட இதைச் செய்தது சரிதானா?”

“மனம் புண்பட்டதா? இல்லையா? என்பதற்கு என்ன அளவுகோல்? ஒருவர் அப்படிச் சொல்லிக் கொள்வதாலேயே அதை ஏற்றுக் கொள்ள முடியாதல்லவா? மனம் புண்படும் என்றால் அந்தக் காணொலிகளைப் பார்க்காமல் இருக்கலாமே? மனம் புண்பட்டதாகச் சொன்னவர்களே அதைப் பரவலாகப் பகிர வேண்டிய தேவை என்ன? மதப் பற்றாளர்கள் மத நம்பிக்கையற்றவர்களைக் கேவலமாகப் பேசுவதில்லையா? அதனால்  அவர்களின் மனம் புண்படாதா?”

தந்தை பெரியார் சிலையின் பீடத்தில் எழுதி வைத்துள்ள கடவுள் மறுப்பு வாசகத்தை நீக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் அப்படி நீக்கத் தேவையில்லை என்று 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் 4ஆம் நாள் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எடுத்துக் காட்டினேன்.

நான் சார்லி எப்தோ தொடர்பாக நடந்ததை எடுத்துக் காட்டினேன். சார்லி எப்தோ என்பது பாரிஸ் நகரிலிருந்து வெளிவரும் கார்ட்டூன் ஏடு. அதில் ஒரு கருத்துப்படம்: இசுலாமியத் திகிலியர்கள் நபிகள் நாயகத்தைச் சுட்டுக் கொல்வதாக! இதற்காகவே அந்த இதழ் அலுவலகத்தில் நுழைந்து பத்துப் பேரைச் சுட்டுகொன்றார்கள் ஐ.எஸ். அமைப்பினர். அப்போதும் இது போன்ற கருத்துப் படங்களைத் தொடர்ந்து வெளியிடுவோம் என்று சார்லி எப்தோ ஆசிரியர் குழுவினர் அறிவித்தார்கள். அவர்கள் வெளியிட்ட கருத்துப்படம் ஒன்றில் போப்பரசர் கையில் ஆணுறை வைத்திருந்தார். ஒரு வரை மனமாற்றம் அடையச் செய்வதற்காக அவர் மனத்தைப் புண்படுத்தவும் உரிமையுண்டு என்று வாதிட்டனர்.

கந்த சஷ்டிக் கவசம் பற்றி சுரேந்திரன் பேசியதைக் கேட்டு யார் எங்கே கலகம் செய்தார்கள்? பொது அமைதி எங்கே கெட்டது? அரசியல் உள்நோக்கத்தோடு சிலர் இதனைத் தோண்டியெடுத்து சிக்கலாகக் கிளப்பினார்கள். இதற்குப் போய் குண்டர் சட்டமா? என்று நீதிபதிகள் கே:வி எழுப்ப வேண்டும்.

கறுப்பர் கூட்டம் வெளியிட்ட மற்றக் காணொலிகளில் ஒன்று: இடஒதுக்கீடு  தேவையா? இன்னொன்று பிப்ரவரி 14 காதலைக் கொண்டாடுவோம்! இவர்கள் சமூகப் பொறுப்புள்ள இளைஞர்கள், தன்னலங்கருதாத பெரியார் தொண்டர்கள். எளிய மக்களே தங்களது காணொலி குறித்து வருத்தபப்டுவது தெரிந்த்து அதைப் பொது வெளியிலிருந்து எடுத்து விட்டார்கள். பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வுகளை மதித்து சமூக ஊடகங்களில் வருத்தமும் தெரிவித்துள்ளார்கள்.

வருத்தம் தெரிவித்த பிறகு குண்டர் சட்டத்தில் அடைக்கத் தேவை இல்லையே என்று நீதியர் இரகுபதி சொன்னார்.

அறிவுரைக் கழக நீதியர்க்கு இது வரலாற்று வாய்ப்பு. ”நீங்கள் இந்த வாய்ப்பைத் தவற விட்டு விடாதீர்கள்” என்று சொல்லி விட்டு நன்றி சொல்லிப் புறப்பட்டேன்.     

தியாகு. – பகிரி (வாட்ஸ் ஆப்) வழியாக

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s