இராகோஸ் குலம்

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 15

இப்பொழுது மார்கனுடைய மற்றொரு கண்டுபிடிப்புக்கு வருகிறோம். குறைந்தபட்சமாகச் சொல்வதென்றால், இரத்த உறவுமுறைகளிலிருந்து குடும்பத்தின் புராதன வடிவத்தைப் புனரமைத்ததைப் போன்ற முக்கியத்துவத்தைப் பெற்றது இது. அமெரிக்க செவ்விந்திய இனக்குழுவுக்குள் உள்ள குலக் குழுக்கள் – இவை மிருகங்களின் பெயர்களைக் கொண்டிருந்தன – கிரேக்கர்களின் genea உடனும் ரோமானியர்களின் gentes உடனும் ஒன்றானவை. இவற்றில் அமெரிக்க வடிவமே குலத்துக்குரிய ஆதி வடிவம்; கிரேக்க, ரோமானிய வடிவங்கள் பிற்காலத்தில் அதிலிருந்து தோன்றியவையே; குலம், பிராட்ரி, இனக்குழு ஆகியவையாக இருந்த புராதன கால கிரேக்க, ரோமானிய சமுதாய அமைப்பு முழுவதும் அமெரிக்க செவ்விந்திய சமுதாய அமைப்பை மிகவும் ஒத்திருக்கிறது. நமக்குத் தெரிந்திருக்கின்ற செய்திகள் காட்டுகின்ற அளவுக்கு குலம் என்பது அநாகரிகர்கள் நாகரிக நிலையில் நுழைகின்ற வரைக்கும் அதற்குப் பிறகும் பெற்றிருந்த அமைப்பு. இதை நிரூபித்தது புராதன கிரேக்க, ரோமானிய வரலாற்றின் மிகவும் புரிந்து கொள்ள இயலாத பகுதிகளை ஒரே அடியில் தெளிவாக்கியது; அதே சமயத்தில், அரசு அமைக்கப்படுவதற்கு முன்பாகப் பண்டைக் காலத்தின் சமுதாய அமைப்பின் அடிப்படையான அம்சங்கள் மீது எதிர்பாராத ஒளியைப் பாய்ச்சியது. இதைப் புரிந்து கொண்ட பிறகு அது மிகச் சுலபம் என்று தோன்றக் கூடும்; எனினும் மார்கன் அதை மிகச் சமீப காலத்தில் தான் கண்டுபிடித்தார். 1871இல் வெளியிடப்பட்ட தமது முந்திய நூலில் இந்த இரகசியத்தை இன்னும் அவர் புரிந்து கொள்ளவில்லை. அதை அவர் கண்டுபிடித்த பிறகு வழக்கமாகவே அதிகமான தன்னம்பிக்கையுள்ள, வரலாற்றுக்கு முந்திய காலத்தைப் பற்றிய ஆங்கில வரலாற்றாசிரியர்கள் சுண்டெலியைப் போல சிறிது காலத்துக்கு மௌனமாக இருக்க வேண்டியிருந்தது.

இரத்த உறவுமுறையைக் கொண்ட இந்தக் குலக் குழுவுக்கு மார்கன் gens என்னும் கிரேக்கச் சொல்லும் gan (ஜெர்மன் மொழியில் ஆரிய g யை k என்று வழங்குவது பொது விதியாகும், ஆகவே kan) என்ற பொதுவான ஆரியச் சொல்லிலிருந்து பெறப்பட்டவையாகும், அதற்கு “பெற்றெடுப்பது” என்று பொருள். Gens, genos, சமஸ்கிருத janas, கோதிக் மொழியில் kuni (மேற்கூரிய விதிப்படி அமைந்தது), பண்டைக்கால நோர்டிக், ஆங்கில-சாக்சன் kyn, ஆங்கில மொழியில் kin, மத்திய மேல் ஜெர்மன் மொழியில் kunne – இவையனைத்தும் ஒரே மாதிரியாக குலத்தை, மரபு வழியைக் குறிக்கின்றன. எனினும் லத்தீன் gens மற்றும் கிரேக்க genos ஒரு பொது முன்னோரின் (இங்கே ஓர் ஆண் முன்னோரின்) சந்ததியினர் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கின்ற குலக் குழுவைக் குறிப்பதற்கே விசேஷமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இக்குழு சில சமூக, மத உறவுமுறைகளின் மூலம் ஒரு தனிச் சமூகமாக, ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தச் சமூகத்தின் தோற்றமும் அதன் தன்மையும் நமது வரலாற்றாசிரியர்கள் அனைவருக்கும் புரிந்து கொள்ள இயலாதவையாக இருந்தன.

பூனலுவா குடும்பம் சம்பந்தமாக, ஒரு குலத்தின் ஆதி வடிவம் எப்படிப்பட்டது என்பதை நாம் ஏற்கெனவே மேலே பார்த்தோம். பூனலுவா திருமணத்தின் விசேஷத்தாலும் அதில் அவசியமாகவே ஆதிக்கம் வகித்த கருத்தோட்டங்களுக்குப் பொருத்தமாகவும், குலத்தின் ஸ்தாபகரான குறிப்பிட்ட ஒரு தனிப் பெண்ணை மூலமாகக் கொண்டு அடையாளங்கண்டு கொள்ளப்பட்ட சந்த்தியினராயுள்ள நபர்களே அதில் அடங்கியிருந்தனர். இந்தக் குடும்ப வடிவத்தில் தந்தை யார் என்பது நிச்சயமல்ல; ஆகவே பெண்வழிப் பரம்பரையே செல்லத்தக்கது. சகோதரர்கள் சகோதரிகளை மணக்கக் கூடாது, வேறு மரபு வழியைச் சேர்ந்த பெண்களையே மணக்கலாம் என்பதால் அந்தப் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் தாயுரிமைப்படி அந்தக் குலத்தைச் சேர்ந்தவர்களல்ல. எனவே ஒவ்வொரு தலைமுறையின் புதல்விகள் குழந்தைகள் மட்டுமே குலக்குழுவில் இருப்பார்கள்; புதல்வர்களின் குழந்தைகள் தங்கள் தாயின் குலத்துக்குச் சென்றுவிடுகின்றனர். இந்த இரத்த உறவுக் குழு அதே இனக்குழுவுக்குள் இருக்கும் அதே மாதிரியான குழுக்களிலிருந்து வேறாக, ஒரு தனிக் குழுவாகத் தன்னை அமைத்துக் கொண்ட பிறகு அது என்னவாகிறது?

மார்கன் இராகோஸ்களின் குலத்தை, குறிப்பாக செனீகா இனக்குழுவின் குலத்தை ஆதி குலத்தின் மூலச் சிறப்பான வடிவமாக எடுத்துக் கொள்கிறார். அவர்களிடையில் எட்டு குலங்கள் உள்ளன. அவை பின்வரும் மிருகங்களின் பெயர்களைத் தாங்கியுள்ளன: 1) ஓநாய், 2) கரடி, 3) ஆமை, 4) பீவர், 5) மான், 6) உள்ளான் குருவி, 7) நாரை, 8) பருந்து. ஒவ்வொரு குலத்திலும் பின்வரும் பழக்கங்கள் இருக்கின்றன:

1. அது தனது சாகெம் (சமாதான காலத்தில் தலைவன்) என்பவரையும் தனது தலைவனையும் (யுத்தத்தின் போது தலைவன்) தேர்ந்தெடுக்கிறது. குலத்திற்குள்ளிருந்துதான் சாகெம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; குலத்தில் அவனுடைய பதவி பரம்பரையானது; எப்பொழுது பதவி காலியானாலும் உடனே அது நிரப்பப் பட வேண்டும். யுத்தத் தலைவனைக் குலத்திற்கு வெளியிலிருந்தும் தேர்ந்தெடுக்கலாம், அந்தப் பதவி சில சமயம் காலியாகவும் இருக்கலாம். முந்திய சாகெமின் மகன் எப்போதும் சாகெம் பதவிக்கு வந்ததில்லை. ஏனென்றால் இராகோஸ்களிடையே தாயுரிமை நிலவியது. மகன் மற்றொரு குலத்தைச் சேர்ந்தவனாவான். ஆனால் சகோதரனோ, சகோதரியின் மகனோ பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்டான். ஆண், பெண் எல்லோரும் தேர்தலில் வாக்களித்தனர். தேர்தல் முடிவை எஞ்சிய ஏழு குலங்களும் உறுதிப்படுத்த வேண்டும். அதன் பிறகு தான் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் சடங்கு முறைப்படி பதிவியில் அமர்த்தப்பட்டான். இராகோஸ்களின் கூட்டு முழுவதன் பொதுக் கவுன்சில் இச்சடங்கை நடத்தி வைக்கும். இதன் முக்கியத்துவம் பின்னால் விளக்கப்படும். குலத்திற்குள் சாகெம் தந்தை முறையில், தார்மிக அதிகாரத்தைக் கொண்டிருந்தான். அவனிடம் பலாத்காரச் சாதனங்கள் எவையுமில்லை. அவன் தன்னுடைய பதவியின் காரணமாக செனீகா இனக்குழுவின் கவுன்சிலிலும் உறுப்பினனாக இருந்தான்; அதே போல் இராகோஸ்களின் கூட்டின் பொதுக் கவுன்சிலிலும் உறுப்பினனாக இருந்தான். யுத்தத் தலைவன் இராணுவப் படையெடுப்புகளின் போது மட்டுமே ஆணைகள் பிறப்பிக்க முடியும்.

2. சாகெமையும் யுத்தத் தலைவனையும் குலம் விருப்பப்பட்டால் நீக்கி விடமுடியும். இதையும் ஆண்கள், பெண்கள் சேர்ந்தே செய்தார்கள். அதன் பிறகு நீக்கப்பட்டவர்கள் சாதாரண வீரர்களாகவும் தனிப்பட்ட நபர்களாகவும் மற்றவர்களைப் போலவே இருந்தார்கள். இனக்குழுவின் கவுன்சில் குலத்தின் விருப்பங்களுக்கு எதிராகக் கூட சாகெம்களை நீக்க முடியும்.

3. எந்த உறுப்பினரும் குலத்துக்குள் திருமணம் செய்யக்கூடாது. இது குலத்தின் அடிப்படை விதி, அதை ஒன்று சேர்த்து வைத்திருக்கின்ற பிணைப்பு. நேரடியாகவுள்ள இரத்த உறவுமுறையின் எதிர்மறையான வெளியீடு இது. நேரடி இரத்த உறவுமுறையின் காரணமாகத்தான் அதற்குள் இருக்கின்ற தனிநபர்கள் உண்மையாகவே ஒரு குலம் ஆகிறார்கள். மார்கன் இந்தச் சாதரண விஷயத்தைக் கண்டுபிடித்ததன் மூலம் குலத்தின் தன்மையை முதல் தடவையாக வெளிப்படுத்தினார். அதுவரை யாரும் குலத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்பதற்குக் காட்டு மிராண்டிகள், அநாகரிகர்களைப் பற்றி முன்னர் எழுதப்பட்டவையே சான்றாகும். அவற்றில் குல அமைப்பில் உள்ள பல்வேறு ஸ்தாபனங்கள்: இனக்குழு, கிளான், தூம் முதலானபடி புரிந்து கொள்ளாமலும் வரைமுறையின்றியும் குறிக்கப்படுகின்றன. மேலும், இவற்றின் தொடர்பாக, இப்படிப்பட்ட எந்த ஸ்தாபனத்திலும் திருமணம் தடை செய்யப்பட்டிருந்தது என்று சில சமயங்களில் வற்புறுத்தப்பட்டது. இது மிகவும் அதிகமான குழப்பத்தை ஏற்படுத்தியது. திரு. மாக்லென்னான் நெப்போலியனைப் போல அதில் குறுக்கிட்டு இனக்குழுக்கள் தமக்குள் மணம் தடை செய்யப்பட்டுள்ள இனக்குழுக்கள் (புறமணமுறை), தமக்குள் மணம் அனுமதிக்கப்பட்டுள்ள இனக்குழுக்கள் (அகமண முறை) எனப் பிரிக்கப்பட்டுள்ளது என்று உத்தரவு போட்டார். இப்படி விஷயங்களை முழுவதும் குழப்பிய பிறகு தன்னுடைய அபத்தமான இரண்டு பிரிவுகளில் பழமையானது எது – புறமண முறையா, அகமண முறையா – என்ற மிகவும் அழமான ஆராய்ச்சியில் அவர் இறங்க முடிந்தது. இரத்த உறவுமுறையில் அமைந்த குலத்தையும் அதன் விளைவாக அதன் உறுப்பினர்களுக்கு இடையில் திருமணம் சாத்தியமில்லாதிருப்பதையும் கண்டுபிடித்த பிறகு இந்த முட்டாள்தனம் உடனே நின்று விட்டது. இராகோஸ்களை நாம் கண்டு கொள்ளும் காலத்தில் குலத்துக்குள்ளே திருமணம் செய்து கொள்வதைத் தடை செய்கின்ற விதி கண்டிப்பாகப் பின்பற்றப்பட்டிருக்கிறது என்பது வெளிப்படை.

4. இறந்து போனவர்களுடைய சொத்து குலத்தின் இதர உறுப்பினர்களுக்கு இடையில் வினியோகிக்கப்பட்டது. எப்படியும் அது குலத்துக்குள் இருக்க வேண்டும். இராகோஸ் விட்டுச் செல்லக்கூடிய சொத்து அற்பமானதே என்பதால் அது குலத்துக்குள் அவனுடைய மிகவும் நெருங்கிய உறவினர்களிடையில் பிரித்துக் கொடுக்கப்பட்டது; ஆண் இறந்தால், அவனுடைய உடன்பிறந்த சகோதரர், சகோதரிகள், தாய் மாமன் ஆகியோருக்கு; பெண் இறந்தால், அவளுடைய குழந்தைகளுக்கு, உடன் பிறந்த சகோதரிகளுக்கு, ஆனால் சகோதரர்களுக்கு இல்லை. கணவன், மனைவி ஒருவரிடமிருந்து ஒருவர் சொத்தைச் சுவீகரிக்க முடியாது, தகப்பனாரிடமிருந்து, தகப்பனாரிடமிருந்து குழந்தைகளும் சுவீகரிக்க முடியாது என்பதற்கு அதுதான் காரணம்.

5. குலத்தின் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் உதவி, பாதுகாப்பு, குறிப்பாக அந்நியர்கள் செய்யும் தீமைகளுக்குப் பழி வாங்குவதில் ஆதரவளிப்பது கடமை ஆகும். தனிநபர் தன்னுடைய பாதுகாப்புக்குக் குலத்தை நம்பியிருந்தான், நம்பியிருக்க முடிந்தது. அவனுக்கு யாராவது தீமை செய்தால், அது குலத்துக்குச் செய்த தீமையாகும். இதிலிருந்து – குலத்தின் இரத்த உறவுகளிலிருந்து – இரத்தப் பழி வாங்கும் கடமை எழுந்தது. இதை இராகோஸ்கள் நிபந்தனையின்றி அங்கீகரித்தார்கள். குலத்தில் உறுப்பினனாக இல்லாத ஒருவன் குல உறுப்பினனைக் கொன்றால், கொல்லப்பட்டவனுடைய குலம் முழுவதும் இரத்தப் பழி வாங்குவதாக சபதமெடுக்கும். முதலில் மத்தியஸ்த முயற்சி நடைபெறும். கொலை செய்தவனின் குலத்தின் கவுன்சில் கூட்டப்படும். விஷயத்தை சுமூகமாக முடிப்பதற்குரிய ஆலோசனைகள் – பெரும்பாலும் வருத்தம் தெரிவித்தல், அதிக மதிப்புடைய பரிசுகளைக் கொடுத்தல் – கொல்லப்பட்ட குலத்தின் கவுன்சிலுக்கு சமர்பிக்கப்படும். இவை ஏற்றுக் கொள்ளப்பட்டால், விவகாரம் முடிந்து விடும். இல்லையென்றால், பாதிக்கப்பட்டவனுடைய குலம் ஒரு நபரை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை இரத்தப் பழி வாங்குவதற்கு நியமிக்கும். கொலையாளியைத் துரத்திச் சென்று பழி வாங்குவது இவர்களுடைய கடமை. இது நடந்தால், கொலையாளியின் குலத்துக்குப் புகார் செய்ய உரிமை கிடையாது. விவகாரம் சரிசெய்யப்பட்டாதாகக் கருதப்படும்.

6. குலத்துக்கு திட்டவட்டமான பெயர்களும் பெயர் வரிசைகளும் உண்டு. இனக்குழு முழுவதிலும் அப்பெயரை உபயோகிப்பதற்கு அந்தக் குலத்துக்கு மட்டுமே உரிமையுண்டு. ஆகவே ஒரு தனிநபருடைய பெயர் அவனுடைய குலத்தையும் குறிக்கும். குலத்தின் பெயரைக் கொண்டவனுக்கு குல உரிமைகளும் இயல்பாகவே உண்டு.

7. குலம் அந்நியர்களைச் சேர்த்துக் கொள்ள முடியும், அதன் மூலம் அவர்களை மொத்த இனக்குழுக்குள் கொண்டுவர முடியும். கொல்லப்படாத யுத்தக் கைதிகள் குலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டதன் மூலமாக செனீகா இனக்குழுவில் உறுப்பினர்களானார்கள். அதன் மூலமாக அவர்கள் இனக்குழு, குலத்தின் எல்லா உரிமைகளையும் பெற்றார்கள். குலத்தின் தனிப்பட்ட உறுப்பினர்களின் கோரிக்கையின் பேரில் இந்த சுவீகாரம் நடைபெறும் – ஆண்கள் அந்நியனை சகோதரர் அல்லது சகோதரி உறவில் வைத்தார்கள்; பெண்கள் அவனைக் குழந்தை உறவில் வைத்தார்கள். இதை உறுதிப்படுத்த சடங்குமுறைப் படி குலத்திற்குள் ஏற்கப்படுதல் அவசியம். மிகக் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட குலங்கள் இன்னொரு குலத்திலிருந்து, அதன் ஒப்புதலின் பேரில், பெருந்திரளாகச் சுவீகாரம் செய்வதன் மூலம் பெரும்பாலும் பெருக்கப்பட்டன. இராகோஸ்களிடையில் சுவீகாரச் சடங்கு இனக்குழுவின் கவுன்சிலின் பொதுக் கூட்டத்தில் நடத்தப்பட்டது. அது நடைமுறையில் மதச் சடங்காகவே மாற்றப்பட்டது.

8. செவ்விந்தியக் குலங்களில் விசேஷமான மதச் சடங்குகள் இருந்ததாக நிரூபிப்பது கடினமே. எனினும் செவ்விந்தியர்கள் மதச் சடங்குகள் அநேகமாக குலங்களுடன் சம்பந்தப்பட்டவை. இராகோஸ்கள் ஆண்டு தோறும் ஆறு மதச் சடங்குகளை நட்த்தினார்கள். அவற்றின் போது சாகெம்களும் யுத்த தலைவர்களும் தம் முடைய பதவியின் காரணமாக “நம்பிக்கையின் காவலர்களாக” சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். அவர்கள் புரோகிதக் காரியங்களையும் நடத்தினார்கள்.

9. குலத்துக்கு ஒரு பொதுவான இடுகாடு உண்டு. நியூயார்க் மாநில இராகோஸ்கள் வெள்ளையர்களால் நெருக்கப்பட்டபடியால் அவர்களுடைய இடுகாடு மறைந்துவிட்ட்து. ஆனால் முன்பு அது இருந்தது. மற்ற செவ்விந்திய இனக்குழுக்களில், உதாரணமாக, டஸ்கரோராக்கள் மத்தியில், அது இன்னும் இருந்து வருகிறது. இந்த இனக்குழு இராகோஸ்களுடன் நெருங்கிய உறவு கொண்டது. டஸ்கரோராக்கள் கிறிஸ்துவர்கள் என்ற போதிலும் தமது இடுகாட்டில் ஒவ்வொரு குலத்துக்கும் ஒரு விசேஷமான வரிசை ஏற்பாடு செய்துள்ளனர். அகவே ஒரு தாயும் குழந்தைகளும் ஒரே வரிசையில் அடக்கம் செய்யப்படுகிறார்கள்; ஆனால் தகப்பனார் அந்த வரிசையில் அடக்கம் செய்யப்படுவதில்லை. இராகோஸ்களின் மத்தியில் சவ அடக்கத்தின் போது குலத்தின் உறுப்பினர்கள் அனைவரும் வந்திருப்பார்கள். அவர்கள் சமாதியைத் தயார் செய்தல், சவ அடக்கச் சொற்பொழிவாற்றுதல் முதலியவற்றைச் செய்வார்கள்.

10. குலத்துக்கு ஒரு கவுன்சில் உண்டு. அது குலத்திலுள்ள வயதுவந்த ஆண்கள், பெண்கள் அனைவரையும் கொண்ட ஜனநாயக சபை ஆகும். அக்கவுன்சிலில் எல்லோருக்கும் சம வாக்குரிமை உண்டு. இந்த கவுன்சில் சாகெம்களையும் யுத்தத் தலைவர்களையும் தேர்ந்தெடுக்கவோ, நீக்கவோ செய்தது; “நம்பிக்கையின் காவலர்களையும்” நியமித்தது அல்லது நீக்கியது. கொல்லப்பட்ட குலத்தின் உறுப்பினர்களுக்காக மன்னிப்புக் காணிக்கைகள் பெறுவதா அல்லது இரத்தப்பழி வாங்குவதா என்பதைப் பற்றியும் அது முடிவு செய்தது. அது அந்நியர்களைக் குலத்திற்குள் சுவீகரித்தது. சுருக்கமாகக் கூறினால், குலத்திற்குள் அதுவே முழு அதிகாரத்தைக் கொண்டிருந்தது.

குறியடையாளமான ஒரு செவ்விந்தியக் குலத்தின் செயற்பாடுகள் இவையே.

“இராகோஸ் குலத்தின் எல்லா உறுப்பினர்களும் தனிப்பட்ட முறையில் சுதந்திரமாக இருந்தார்கள். ஒருவன் அடுத்தவனுடைய சுதந்திரத்தைக் காக்க கடமைப்பட்டிருந்தான். அவர்கள் விசேஷ உரிமைகளிலும் தனிப்பட்ட உரிமைகளிலும் சமமாகவே இருந்தார்கள். சாகெம்களும் யுத்தத் தலைவர்களும் உயர்நிலை உரிமை கோரவில்லை; அவர்கள் இரத்த உறவினால் இணைக்கப்பட்டிருந்த ஒரு சகோதரக் குழுவாக அமைகிறார்கள். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் – இவை ஒருபோதும் வரையறுக்கப்படவில்லை என்றாலும் – குலத்தின் முக்கியமான கோட்பாடுகளாக இருந்தன. குலம் என்பது சமூக அமைப்பின் அலகு; செவ்விந்திய சமூக அமைப்புக்கு அதுவே அடிப்படை. செவ்விந்தியர்களின் குணாம்சத்தில் எங்கும் நிலவுகின்ற இயல்பாகிய சுதந்திர உணர்வையும் தன் மதிப்பையும் விளக்குவதற்கு இது உதவுகிறது.”

வட அமெரிக்க செவ்விந்தியர்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் அவர்கள் எல்லோரும் தாயுரிமைப்படிக் குலங்களில் திரட்டப்பட்டிருந்தார்கள். டகோடாக்களைப் போன்ற ஒரு சில இனக்குழுக்களில் மட்டுமே குலங்கள் நசித்துக் கொண்டிருந்தன; ஒஜிப்வாக்கள், ஒமாஹாக்கள் போன்ற வேறு சில இனக்குழுக்களில் தந்தையுரிமைப் படிக் குலங்கள் திரட்டப்பட்டிருந்தன.

ஐந்து, ஆறு அல்லது அதற்கும் அதிகமான குலங்களைக் கொண்ட செவ்விந்திய இனக்குழுக்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றில் மூன்று, நான்கு அல்லது அதற்கும் அதிகமான குலங்கள் ஒரு விசேஷமான குழுவில் ஒன்று சேர்க்கப்பட்டிருந்தன. இந்தக் குழுவை மார்கன் – செவ்விந்தியச் சொல்லுக்குச் சமமான கிரேக்கச் சொல்லை அப்படியே மொழிபெயர்த்து – பிராட்ரி (சகோதரக் குழு) என்று குறிப்பிடுகிறார். இவ்வாறாக, செனீகாக்களிடையில் இரண்டு பிராட்ரிகள் உள்ளன. முதல் பிராட்ரியில் 1 வது குலம் முதல் 4 வது குலம் வரை இருக்கின்றன. இரண்டாவது பிராட்ரியில் 5 வது குலம் முதல் 8 வது குலம் வரை இருக்கின்றன. நெருங்கி ஆராய்கின்ற பொழுது, மொத்தத்தில் இந்த பிராட்ரிகள் ஆரம்பத்தில் இனக்குழுவிலிருந்த ஆதிக் குலங்களையே குறிக்கின்றன. ஏனென்றால் குலத்துக்குள் மணம் செய்து கொள்வது தடை செய்யப்பட்ட பிறகு ஒவ்வொரு இனக்குழுவிலும் குறைந்தபட்சம் இரண்டு குலங்களாவது இருப்பது அவசியமாயிற்று, அப்பொழுதுதான் அது சுதந்திரமாக நிலைத்திருக்க முடியும். இனக்குழு வளர்ச்சியுற்ற பொழுது ஒவ்வொரு குலமும் மீண்டும் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட குலங்களாகப் பிரிக்கப்பட்டது. அவை இப்பொழுது தனித்தனிக் குலங்களாக இருக்கின்றன; இந்தச் சேய்க் குலங்களைத் தன்னுள் அனைத்துக் கொண்டிருக்கின்ற ஆதிக் குலம் பிராட்ரியாக வாழ்ந்து வருகிறது. செனீகாக்களிடையிலும் பெரும்பான்மையான இதர செவ்விந்திய இனக்குழுக்களிடையிலும் ஒரு பிராட்ரியிலுள்ள குலங்கள் சகோதர குலங்கள் ஆகும்; மற்ற பிராட்ரியில் இருக்கும் குலங்கள் அவற்றுக்கு பங்காளிக் குலங்கள் ஆகும். அமெரிக்க இரத்த உறவுமுறையில் இந்தப் பெயர்களுக்கு மிகவும் உண்மையான, அர்த்தமுள்ள முக்கியத்துவம் உண்டு என்பதை நாம் பார்த்தோம். ஆதியில் எந்த செனீகாவும் தனது பிராட்ரிக்குள் மணம் புரிய முடியாது என்பது மெய்யே, ஆனால் இந்தத் தடை நெடுங்காலத்துக்கு முன்பே செயலற்றுப் போய்விட்டது; அது இப்பொழுது குலத்துடன் நின்று விடுகிறது. “கரடியும்” “மானும்” தான் ஆதியிலிருந்த இரண்டு குலங்களாகும்; அவற்றிலிருந்துதான் மற்றவை தோன்றின என்று செனீகாக்களிடையே ஒரு பழைய மரபு உண்டு. இந்தப் புதிய அமைப்பு வேரூன்றியவுடன் அது அவசியத்துக்கேற்றபடி மாற்றியமைக்கப்பட்டது. ஒரு பிராட்ரியில் குலங்கள் செத்துப் போயிருந்த பொழுது, சமநிலை ஏற்படுத்துவதற்காக மற்ற பிராட்சிகளிலிருந்து மொத்த குலங்களே அதற்கு மாற்றப்பட்டன. ஒரே பெயரைக் கொண்டிருக்கின்ற குலங்கள் வெவ்வேறு இனக்குழுக்களின் பிராட்ரிகள் மத்தியில் பல்வேறு முறையாகச் சேர்க்கப்பட்டிருந்த்தை இது விளக்குகிறது.

இராகோஸ்களிடையில் பிராட்ரியின் செயற்பாடுகள் பகுதி சமூக ரீதியாகவும் மறு பகுதி மத ரீதியாகவும் இருக்கின்றன.

1) பிராட்ரிகள் ஒன்றுக்கு எதிராக மற்றொன்று நின்று கொண்டு பந்து விளையாட்டு விளையாடுகின்றன. ஒவ்வொரு பிராட்ரியும் தனது சிறந்த ஆட்டக்காரர்களை அனுப்புகிறது. பிராட்ரியின் மற்ற உறுப்பினர்கள் வரிசையாக நின்று ஆட்டத்தைப் பார்க்கிறார்கள், தத்தம் தரப்பினருடைய வெற்றி வாய்ப்பைப் பற்றி பந்தயம் வைத்துக் கொள்கிறார்கள்.

2) இனக்குழுவின் கவுன்சில் கூட்டத்தில் ஒவ்வொரு பிராட்ரியின் சாகெம்களும் யுத்தத் தலைவர்களும் சேர்ந்து அமர்கின்றன; இரண்டு குழுக்களும் எதிரெதிராக அமர்கின்றன. ஒவ்வொரு பேச்சாளனும் ஒவ்வொரு பிராட்ரியின் உறுப்பினர்களையும் தனி ஸ்தாபனம் என்ற வகையில் விளித்துப் பேசுகிறான்.

3) இனக்குழுவுக்குள் கொலை நடைபெற்றிருந்து, கொல்லப்பட்டவனும் கொலையாளியும் ஒரே பிராட்ரியைச் சேராதவர்களாக இருந்தால், பாதிக்கப்பட்ட குலம் பெரும்பாலும் தனது சகோதரக் குலங்களுக்கு வேண்டுகோள் அனுப்பும். இவை தம்முடைய பிராட்ரியின் கவுன்சிலைக் கூட்டி ஒரு அமைப்பு என்ற வகையில் மற்ற பிராட்ரிக்குச் சொல்லியனுப்பும்; இவ்விஷயத்தை சரிப்படுத்துவதற்கு அதன் கவுன்சிலைக் கூட்டுமாறு கேட்டுக் கொள்ளும். இங்கும் பிராட்ரிதான் ஆதிக் குலமாகத் தோற்றமளிக்கிறது; அதிலிருந்து தோன்றிய பலவீனமான, தனிப்பட்ட குலத்தை விட வெற்றி பெறுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக அது தோற்றமளிக்கிறது.

4) முக்கியமான நபர்கள் மரணமடைந்தால், எதிர் பிராட்ரி இறுதிச் சடங்குகளுக்கும் சவ அடக்கத்துக்கும் ஏற்பாடு செய்தது. மரணமடைந்தவனுடைய பிராட்ரி துக்கம் அனுஷ்டித்து சவ ஊர்வலத்தில் சென்றது. ஒரு சாகெம் மரணமடைந்தால், எதிர் பிராட்ரி இராகோஸ்களின் சமஷ்டி கவுன்சிலுக்குப் பதவி காலியாக இருப்பதைத் தெரிவித்தது.

5) ஒரு சாகெம் தேர்ந்தெடுக்கப்படுகின்ற பொழுது பிராட்ரியின் கவுன்சில் அரங்கில் மீண்டும் தலைகாட்டியது. சகோதரக் குலங்கள் தேர்தல் முடிவை உறுதி செய்வது சகஜமாகக் கருதப்பட்டது. ஆனால் மற்றொரு பிராட்ரியின் குலங்கள் அதற்கு எதிராக இருக்கலாம். அப்படி நேர்கின்ற பொழுது இந்த பிராட்ரியின் கவுன்சில் கூடி எதிர்ப்பை ஆதரித்தால், தேர்தல் ரத்து செய்யப்படும்.

6) முன்னர், இராகோஸ்களுக்கு விசேஷமான, மதவகைப்பட்ட இரகசியச் சடங்குகள் இருந்தன. இவற்றை வெள்ளையர்கள் medicine lodges [மாய மந்திரக் கூட்டங்கள்] என்று அழைத்தார்கள். செனீகாக்களிடையே ஒரு பிராட்ரிக்கு ஒன்று வீதம் இரண்டு மதக் குழுவினர் இவற்றைக் கொண்டாடினார்கள்; புதிதாகச் சேரும் உறுப்பினர்களுக்கு முறையான சேர்த்துக் கொள்ளும் சடங்கு இருந்தது.

7) நாடுபிடித்த காலத்தில் [ஸ்பானியக் காலனியாதிக்கவாதிகள் 1519 – 1521 இல் மெக்சிகோவின் மீது படையெடுத்து அதை பிடித்தது இங்கே குறிப்பிடப்படுகிறது] திளாஸ்கலாவின் நான்கு இடங்களில் வசித்த நான்கு lineages (இரத்த உறவுமுறைக் குழுக்கள்) நான்கு பிராட்ரிகளாக இருந்தால் – இது அநேகமாக நிச்சயமாக இருக்கும் – கிரேக்கர்களிடையே இருந்த பிராட்ரிகளைப் போல, ஜெர்மானியர்களிடையே இருந்த குலக் குழுக்களைப் போல இந்த பிராட்ரிகள் இராணுவப் பிரிவுகளாகப் பணியாற்றின என்பதை இது நிரூபிக்கிறது. ஒவ்வொன்றும் தனித்தனி அணியாக இந்த நான்கு lineages போருக்குச் சென்றன; ஒவ்வொன்றுக்கும் தனியான இராணுவ உடுப்பும் கொடியும் இருந்தன, தனித் தலைவனும் இருந்தான்.

இந்நூலின் முந்தைய பகுதிகள்

 1. மாமேதை ஏங்கல்ஸ்.
 2. 1884 ல் எழுதிய முன்னுரை
 3. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி
 4. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2
 5. ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய கலாச்சாரக் கட்டங்கள்
 6. குடும்பம் – 1
 7. குடும்பம் – 2
 8. குடும்பம் – 3
 9. குடும்பம் – 4
 10. குடும்பம் – 5
 11. குடும்பம் – 6
 12. குடும்பம் – 7
 13. குடும்பம் – 8
 14. குடும்பம் – 9

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s