
செய்தி:
பணியில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு உள்ள விதிகளில், அவர்கள் பொது வெளியில் வெளிப்படுத்தும் கருத்துக்கள் அரசியல் நோக்கம் கொண்டவையாக இருக்கக் கூடாது என்பதும் ஒன்றாகும். மேலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை பாதுகாப்பதே அவர்களுக்குள்ள கடமை. தமிழக அரசின் கீழ் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வரும் சந்தீப் மிட்டல் தனது டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ச்சியாக மத்திய ஆளும் கட்சி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஆளும் கட்சி சார்பு இயக்கங்களின் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அவருடைய பல பதிவுகள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சார்பு அமைப்புக்களை சார்ந்தவையாக இருக்கின்றன. ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பேச்சுக்களை பகிர்ந்துள்ளார். இந்தியக் குடிமக்களுக்கு அவரவர் விரும்பும் அரசியலை தேர்வு செய்திட, ஆதரிக்க உரிமை உண்டு. ஆனால் பதவியில் உள்ள அதிகாரி அதனை மேற்கொள்ளும்போது கடமை தவறியவராகிறார். சீருடைப் பணியாளர்களுக்கான நடத்தை விதிப்படியும், சட்டப்படியும் அவருடைய செயல்பாடுகள் தண்டனைக்குரியவையாகும். இவருடைய பதிவுகள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் எதிரானதாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாகவும் இருக்கின்றன. எனவே இவர் பதவியில் நீடிப்பதற்கு தகுதியற்றவராகிறார்.
செய்தியின் பின்னே:
சில நாட்களுக்கு முன்பு ஒரு அரசு அதிகாரி, இந்தி தெரியாத தன்னை வேண்டுமென்றே இந்தியை வளர்ப்பதற்கான துறையில் பணி ஒதுக்கி இருக்கிறார்கள் என்று வெதும்பியிருந்தார். மறு பக்கம் இந்த அதிகாரி வெளிப்படையாக தன்னை ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்புபடுத்திக் கொள்கிறார். சட்டம் இதை விதி மீறல் என்கிறது. ஆனால் இதை ஒழுங்குபடுத்துவது யார்?
அதாவது இப்படி சட்டத்தை மீறி செயல்படுகிறார் என்று முதல்வருக்கு புகார் சென்றிருக்கிறது. ஆனால் முதல்வர் அமைப்பு சார்ந்து இயங்குவதற்கு சட்டப்படியே அனுமதி அளிக்கப்பட்டிருப்பவர். இந்த இடியப்பச் சிக்கலை எப்படித் திர்ப்பது?
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணி அதிகாரிகளுக்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களுக்கு அந்தச் சட்டம் நடைமுறையில் பொருந்துகிறதா? மணல் கடத்தல் முதல் திருட்டு கொள்ளையில் பங்கு பெறுவது வரை; அடித்துக் கொல்வது தொடங்கி பெண்களை பலியல் வன்கொடுமை செய்வது வரை; விரும்புகிறவர்களுக்கு விதிகளை வளைத்து கடன் கொடுப்பது தொடங்கி ஐந்து பத்து வாங்கியவனை விரட்டி விரட்டி தூக்கு மாட்ட வைப்பது வரை அவர்கள் தெளிவாகச் சொல்வது ஒன்று தான். எந்தச் சட்டமும் எங்களை ஒன்றும் செய்யாது என்பது தான் அது.
இந்த புகாரை முதல்வருக்கு அனுப்பி இருப்பவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன். மிஸ்டர் பாலகிருஷ்ணன், குறைந்தபட்சம் இதை நீங்கள் முதல்வருக்கு அனுப்புவதற்குப் பதிலாக நீதி மன்றத்துக்கு அனுப்பி இருக்கலாமே. நீதி மன்றம் இன்னும் கொஞ்சம் அம்பலப்படுத்தப் பட்டிருக்குமே.
அதாகப்பட்டது, “தாமர தண்ணிலே கிடந்தாலும் இல வேற தண்ணி வேற தான்” அம்புட்டுதேன்
செய்திகள் சுவாசிப்பது: 15/2020