
கீழே சொல்லப்பட்டவை யாவும் ஏறத்தாழ 76 வருடங்களுக்கு முன்பு சொல்லப்பட்டவை என்றால் உங்களால் நம்ப முடியாது. இவை ஆருடம் அல்ல, ஏற்ற தாழ்வுடைய தன் சமூகத்தைப் பற்றி சதா காலமும் சிந்தித்த ஒரு கிழவனின் பெருங் கனவு அது..
“போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும், அதி வேக சாதனமுமாகவே இருக்கும்”
“கம்பியில்லா தந்தி சாதனம் ஒவ்வொரு சட்டைப் பையிலும் இருக்கும்”
“உருவத்தை தந்தியில் அனும்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்”
“மேற்கண்ட சாதனங்களால் ஓர் இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கச் சாத்தியப்படும்.உணவுகளுக்குப் பயன்படும்படியாகஉணவு, சத்துப் பொருள்களாகச் சுருக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு ஒரு சிறு குப்பியில் அடங்கக் கூடிய உணவு ஏற்பட்டு விடும்”
“மனிதனுடைய “ஆயுள் நூறு” வருஷமென்பது இரட்டிப்பு ஆனாலும் ஆகலாம். இன்னும் மேலே போனாலும் போகலாம்”
“ஒரு டன்னுள்ள மோட்டார் கார், ஓர் அந்தர் வெயிட்டுக்கு வரலாம். பெட்ரோல் செலவு குறையலாம்; பெட்ரோலுக்கு பதில் மின்சார சக்தியே உபயோகப்படுத்தப்படலாம் அல்லது விசை சேகரிப்பிலேயே ஓட்டப்படலாம்”

-(பெரியார் நாளைய உலகம், முதல் பதிப்பு 1944, பெரியார் புத்தக நிலையம்).
இதைப் படித்தவுடன் வியப்பாக உள்ளதா?
நாளைய உலகில் சமூக வளர்ச்சி எப்படி இருக்கும் என்று மேற்கண்ட கருத்துகளை தந்தை பெரியார் எழுதிய வருடம் 1944.
ஏறத்தாழ இன்றைய நவீன நுட்ப வளர்ச்சி பெற்ற 2017 ஆம் ஆண்டில் நமக்கு கிடைத்திருக்கும் செல் போன், இன்டர்நெட், டெலி கம்யூனிகேசன் மீடியா வளர்ச்சி, பேட்டரியில் இயங்கும் ஊர்திகள், நேனோ டெக்னாலஜி என இவைபற்றிய இந்திய சமூக வெளியில் யாருமே யோசித்திருக்காதகால கட்டங்களில் 73 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இந்த அரக்கரால் யோசிக்க முடிந்தது?
பெரியார் தான் வாழ்ந்த காலம் முழுவதும் நிரூபிக்கப்பட்ட அறிவியல் நுட்ப முறைகள் பற்றி மட்டுமே மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார். அது வரை நம்பப்பட்டு வந்த புராதன காலத்து பழங் கதைகளை தன் கைத்தடி கொண்டு உடைத்தார். நான் பேசாப் பொருளை பேசத் துணிந்தேன், என மக்களிடம் மண்டிக் கிடந்த மூட நம்பிக்கைகளை அகற்றவே ஊர் ஊராக சுற்றித் திரிந்தார்.
மேம்படுத்தப்பட்ட அறிவியல் நுட்பத்தின் வாயிலாக மட்டுமே நாளைய உலகம் அமையும் என்று நம்பினார். அது பணக்காரன், ஏழை என்ற பேதமில்லாமல் அனைவருக்குமான ஒரு நவீன உலகமாக இருக்கும் என்ற ஒரு காரணத்திற்காகவே பழமை வாதத்தை அறவே வெறுத்தார். அதனால் தான் 75 வருடங்களுக்கு பிறகு தம் சமூகத்திற்கு கிடைக்கப் போகும் அறிவியல் நுட்பங்களை அவரால் தன் காலத்தில் கணிக்க முடிந்திருக்கிறது.
எப்போதும் எளிய மக்களின் பக்கம் மட்டுமே நின்று தொடர்ந்து பேசிய அந்த மனிதரை நாங்கள் பகுத்தறிவு பகலவன் என்றும், ஈரோட்டு தீர்க்க தரிசி என்றழைக்கிறோம். இவரே எங்கள் சமூக நீதிக்கான விதை.
மக்களின் தீர்க்க தரிசி, எங்கள் ஈரோட்டு பேரரக்கன், தந்தை பெரியாரின் 142 வது பிறந்த தினம் இன்று.