
செய்தி:
திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர அனுமதி கேட்டு தமிழக அரசின் சார்பில் கோரிக்கை ஏதேனும் அனுப்பப்பட்டுள்ளதா? அவ்வாறு அனுப்பியிருந்தால் அதற்கு மத்திய அரசின் பதில் என்ன என்று மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள கல்வி அமைச்சகம், “தமிழக அரசு எழுதிய கடிதம் எங்களுக்கு கிடைத்தது. 1968ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மும்மொழிக் கொள்கையானது, பின்னா் 1986 மற்றும் 92ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின் போதும் தொடா்ந்தது. புதிய கல்விக் கொள்கையின்படி, நாட்டில் மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும். ஆனால், தற்போதைய புதிய கல்விக் கொள்கையில் எந்த மொழியும் கட்டாயமாக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளது.
செய்தியின் பின்னே:
முதலில், கேட்கப்பட்ட கேள்விக்கும் கூறப்பட்ட பதிலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? என்று பாருங்கள். இரு மொழிக் கொள்கை தமிழ் நாட்டில் நடப்பில் இருக்கிறது. புதிய கல்விக் கொள்கையின் படி இது தொடர்வதற்கு அனுமதி அளிக்கப்படுமா? என்பது தான் கேள்வி. ஆமால் பதிலில் இரு மொழிக் கொள்கை எனும் சொல்லே இடம்பெறவில்லை. மாறாக 1968 ம் ஆண்டிலிருந்து மும்மொழிக் கொள்கை தான் நடப்பில் இருக்கிறது அது தொடரும் என்று இருக்கிறது. என்றால் இரு மொழிக் கொள்கை என்று ஒன்று இல்லையா? அன்றைய பொழுது பிரதமராக இருந்த நேரு இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாக தொடரலாம் என்று அனுமதி அளித்திருந்தார். அதாவது இரு மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தலாம், இந்தி திணிக்கப்படாது என்று இதற்குப் பொருள். இப்போதைய பதிலின் பொருள் என்ன? இருமொழிக் கொள்கை கிடையாது, மூன்றாவது மொழி இந்தியா வேறெதுவுமா? என்று மாநிலங்கள் முடிவு செய்து கொள்ளலாம். ஆனால் மூன்றாவது மொழி உண்டு என்பது தான். அதாவது, எங்க வாயால இந்தி என்று நாங்கள் சொல்ல மாட்டோம் அதேநேரம் இந்தியை திணிக்காமல் விடவும் மாட்டோம் என்பது தான்.
இந்த பதில் மாநில அரசுக்கு கிடைத்திருக்கும். அவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்? புதிதாக சொல்வதற்கு என்ன இருக்கிறது? முதல்வர் எடப்பாடி ஏற்கனவே சொல்லி விட்டார், “இருமொழிக் கொள்கை தொடரும். அதேநேரம் மும்மொழிக் கொள்கை குறித்து ஆராய கமிட்டி அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும்” என்று.
ஒரே ஒரு கேள்வி, மூன்றாம் மொழி என்று ஒன்று வேண்டும் என்று யார் கேட்டது? யார் போராட்டம் நடத்தியது?
அதாகப்பட்டது, “ரசம் வச்சாலும் பரவாயில்ல, விளக்கெண்ண ஊத்தி வெண்டக்கா கொழம்பு வைக்காதண்ணே” அம்புட்டுதேன்
செய்திகள் சுவாசிப்பது: 16/2020