
செய்தி:
வேளாண் மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் பீகாரில் உரையாற்றிய பிரதமர், “பல்வேறு தடைகளில் இருந்து விவசாயிகளுக்கு விடுதலை பெற்றுத் தருவதற்கு இந்தச் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. தங்கள் விளைப்பொருட்களை எந்த ஊரில் உள்ள, எந்த ஒரு நபருக்கும் விவசாயி நிர்ணயிக்கும் விலைக்கு விற்பதில் அவர்களுக்கு இனி எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்காது” “அதிக லாபம் கிடைக்கும் இடத்தில் விவசாயி தனது விளை பொருளை விற்க முடியும்” குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறை முன்பிருந்ததைப் போல தொடரும். “அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் சில விதிமுறைகள் விவசாயிகளின் சுதந்திரத்திற்குத் தடையாக இருந்தன. பருப்புகள், எண்ணெய் வித்துகள், உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவை கட்டுப்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இப்போது விவசாயிகள் பெருமளவில் தங்கள் விளைப்பொருட்களை குளிர்பதனக் கிடங்கில் சேமித்து வைக்க முடியும். விவசாயிகளுக்கு நவீன சிந்தனையுடன், புதிய நடைமுறைகளை உருவாக்கித் தருவது தான் 21ஆவது நூற்றாண்டு இந்தியாவின் பொறுப்பாக இருக்கிறது” என்று பிரதமர் கூறினார்.
செய்தியின் பின்னே:
மோடி பீகார் தேர்தலுக்காக பேசியிருக்கும் இந்தப் பேச்சில் எந்த அம்சமாவது அந்த புதிய வேளாண் சட்டத்தில் இடம் பெற்றிருக்கிறதா? எந்த ஊரில் எந்த இடத்திலும் தங்கள் விலை பொருட்களை விவசாயிகள் விற்கலாம் என்கிறார். எந்த விவசாயி தன் ஊரில் விளைந்ததை குறைந்த பட்சம் 25 கிமீக்கு அப்பால் சென்று விற்றிருக்கிறான்? எந்த விவசாயி எங்கும் சென்று விற்பதற்கு தனக்கு உரிமை வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி இருக்கிறான்? அல்லது எந்த இடத்திற்கும் சென்று விற்கும் உரிமை இதுவரை இல்லாமல் இருந்ததா? விவசாயிகளால் அவ்வாறு நீண்ட தூரம் சென்று விற்க முடியாது என்பது தான் உண்மை. விவசாய விளை பொருட்களும் நீண்ட தூரம் கொண்டு சென்றால் அதை பாதுகாக்கும் சுமையை விவசாயிக்கு ஏற்படுத்தும். என்றால் இதை யார் செய்ய முடியும் அம்பானி, அதானி போன்ற ஏழை விவசாயிகளைத் தவிர?
விவசாயி தன்னுடைய விளை பொருளை விரும்பும் விலைக்கு விற்க முடியுமா? குறைந்தபட்ச ஆதாரவிலை தொடரும் என்பதன் பொருள் அத்தியாவசியப் பொருட்களுக்கு அரசுதான் விலை நிர்ணயம் செய்யும் என்பது தான் பொருள். பிற பொருட்களின் விலையை விவசாயி நிர்ணயித்து விட முடியுமா? சந்தையும், விளை பொருட்கள் வீணாகாமல் போவதை தடுக்கும் வசதியும் யாரிடம் இருக்கிறதோ அவர்களால் தான் விலையை நிர்ணயம் செய்ய முடியும். இந்த வசதியும் வாய்ப்பும் யாரிடம் இருக்கிறது, அம்பானி, அதானி போன்ற ஏழை விவசாயிகளைத் தவிர?
விவசாயிகளுக்கு நவீன சிந்தனையுடன், புதிய நடைமுறைகளை உருவாக்கித் தருவது தான் தன் பொறுப்பு என்று கூறியிருக்கும் பிரதமர், விவசாயிகளுக்காக ஒவ்வொரு ஊரிலும் குளிர்பதன கிடங்கு கட்டித் தரப் போகிறாரா? தமிழ்நாட்டு விவசாயி தக்காளியை டில்லியில் சென்று விற்பதற்கு விமான வசதி ஏற்பாடு செய்து தரப் போகிறாரா? என்ன செய்து தரப் போகிறார்? அம்பானி அதானி போன்ற ஏழை விவசாயிகளுக்கு விவசாயப் பொருட்களை விவசாயிகளிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கி கொள்ளை லாபம் வைத்து விற்க, பதுக்கி வைத்து விலையை ஏற்ற, மூலை முடுக்குகளிலிருந்து வாங்கி பெரு நகரங்களுக்கு கொண்டு செல்ல இதுவரையில் நடைமுறையில் இருந்த கொஞ்சநஞ்ச தடைகளையும் நீக்கி இருக்கிறார். உலகத்துல எந்த பிரதமருக்காகவாது பிரதமர் சொன்ன பொய்கள் என்று புஸ்தகமாவே தொகுத்து போட்டிருக்காங்களா? மோடிக்கு அப்படி ஒரு புகழ் இருப்பதை சங்கிகள் ஏன் விளம்பரம் செய்ய மறுக்கிறார்கள்.
ம்ம் .. ம்ம் .. ம்ம் .. (இதையும் நம்பியார் ஸ்டைலிலேயே உச்சரிக்கவும்)
அதாகப்பட்டது, “ஊதுற சங்க நான் ஊதுறேன், நீ அடிச்சுட்டு போய்டே இரு ராசா” அம்புட்டுதேன்
செய்திகள் சுவாசிப்பது: 17/2020