பசுக் குண்டர்களின் அடுத்த கட்டம்

செய்தி:

மத்திய அரசு இந்தியப் பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வு செய்வதற்கான ஒரு குழுவினை அமைத்துள்ளது. இக்குழு தற்காலத்திலிருந்து 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான இந்திய கலாச்சாரம் குறித்தும் அதன் தொடக்கம் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் என மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். இந்தக் குழுவில் பண்டைய கலாச்சாரம் பெருமை படைத்துள்ள தமிழகத்திலிருந்தோ, தென்னிந்தியாவிலிருந்தோ, வடகிழக்கு மாநிலங்களிலிருந்தோ ஒருவர் கூட இடம்பெறவில்லை. மேலும், இக்குழுவில் சிறுபான்மையினர், பட்டியிலினம் மற்றும் பெண் ஆய்வாளர்கள் யாரும் இடம்பெறவில்லை. அமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வுக்குழு வட இந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்து அதுமட்டுமே இந்தியாவின் ஒட்டுமொத்த கலாச்சாரம் என அறிக்கை சமர்ப்பிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன. இதன் மூலம் இந்தியாவினுடைய கலாச்சார பன்முகத்தன்மை, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் கலாச்சாரம் புறக்கணிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவர்கள் சமர்ப்பிக்கும் அந்த ஆய்வறிக்கையே இந்திய கலாச்சாரம் சம்பந்தமான அதிகாரபூர்வமான ஆய்வறிக்கை என்கிற அடிப்படையில் அது நாட்டின் வரலாற்று ஆவணமாகவும், பல்கலைக்கழக மற்றும் கல்வி நிலையங்களின் ஆராய்ச்சிக்கு ஆவணமாகவும் முன்னிறுத்தப்படும் நிலைமை ஏற்படும். இது இந்தியாவின் எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை உருவாக்கும். இந்தியாவின் பன்முக கலாச்சார அடையாளங்களை அழித்துவிடும் ஆபத்து உள்ளது. செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி மற்றும் கலாச்சாரங்கள் மறுக்கப்படுவதோடு வட இந்திய வேத கலாச்சாரமே இந்திய கலாச்சாரம் என தென்னிந்திய மக்கள் தலையில் திணிக்கப்படும் ஆபத்தும் ஏற்படும். எனவே, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மக்களின் அடையாளங்களை அழித்தொழிக்கும் மோசமான நோக்கோடு அமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வுக் குழுவினைச் செயல்படுத்தக் கூடாது என தமிழக அரசு மத்திய அரசை வற்புறுத்த வேண்டும். மேலும், உடனடியாக ஆய்வுக் குழுவின் பணிகளைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்

செய்தியின் பின்னே:

இந்தக் கடிதம், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணனால் தமிழ்நாட்டு முதல்வர் பழனிச்சாமிக்கு எழுதப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி, இதற்கு பதில் கடிதம் அனுப்பவோ அல்லது மத்திய அரசுக்கு இது குறித்தான குறிப்பு அனுப்பவோ, அல்லது ஊடகங்களில் இது குறித்து பேசவோ செய்வார் என எதிர்பார்க்க முடியாது.

முதலில் இந்தியப் பண்பாடு, இந்தியக் கலாச்சாரம் என்று ஒன்று இருக்கிறதா? இப்போது மட்டுமல்ல, வரலாற்றில் எப்போதும் அப்படி ஒன்று இருந்ததே இல்லை. அந்தந்த பகுதிகளுக்கான கலாச்சாரம் பண்பாடு என இருந்திருக்கிறதே தவிர இந்தியக் கலாச்சாரம் என்று ஒன்று இல்லை. ஏனென்றால் இந்தியா என்றொரு நாடு வரலாற்றில் இருந்ததே இல்லை. புவியியல் ரீதியாக மொகலாயர்களும், நிர்வாகவியல் ரீதியாக வெள்ளையர்களும் உருவாக்கிய நாடு தான் இந்தியா. இதைத்தான் வேற்றுமையில் ஒற்றுமை என்று இந்திய அரசியல் சாசனம் குறிப்பிடுகிறது. அரசியல் சாசனமே அப்படி ஒரு கலாசாரம் இல்லை என கோடிட்டுக் காட்டியிருக்கும் போது, இந்தியக் கலாச்சாரத்தின் தொடக்கம் குறித்து, அதுவும் 12,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஆய்வு செய்ய வேண்டிய தேவை என்ன வந்தது?

ஏற்கனவே, இங்கு பார்ப்பனிய புரட்டின் படி வேத கலாச்சாரம் என்று ஒன்று இருந்ததாக எந்த சான்றும் இல்லாமல் பசப்பித் திரிகிறார்கள். அதற்கு எதையாவது சான்றாக காட்ட வேண்டும் எனும் தேவையைத் தவிர இந்த ஆய்வுக் குழு அமைக்கப்பட்டதில் ஏதேனும் காரணம் இருக்கிறதா? மட்டுமல்லாமல், சிந்துச் சமவெளி நாகரீகம் ஆரிய நாகரீகம் என கதை கட்டிய கும்பல் இது என்பதை மறந்து விட முடியுமா?

இந்தியக் கலாச்சாரம் என்று சொல்லும் போதே, அது இங்கு நடைமுறையில் இருக்கும் பல்வேறு கலாச்சாரங்களை மறுக்கிறது. மாட்டிரைச்சி உண்ணாமை என்பதை பொது உணவுப் பழக்கமாக மாற்றுவதற்கு பார்ப்பனிய குண்டர் படையினர் எவ்வளவு கொடுராமன செயலையும் செய்வதற்கு ஆயத்தமாக இருக்கிறார்கள் என்பதும், அதற்கு பாஜக அரசாங்கமும், ஒட்டுமொத்த அரசு எந்திரமும் எந்த அளவுக்கு துணையாக இருந்து கொண்டிருக்கின்றன என்பது வெளிப்படையானது தான். அந்த பார்ப்பனிய குண்டர் படை செய்யும் அதே செயல்களை அறிவுத் தளத்தில் செய்யப் போகிறது இந்த ஆய்வுக் குழு.

ஆனால், இந்த கடிதமும், பாராளுமன்றத்தில் பேசிய பாஉ வெங்கடேசனும் இதில் தமிழறிஞர்கள், அதாவது தென்னிந்திய வடகிழக்கு இந்திய பிரதிநிதிகளோ, தலித்திய, பெண்ணிய பிரதிநிதிகளோ இடம்பெறவில்லை என்பதை முதன்மையானதாக சுட்டிக் காட்டுகிறார்கள். அவ்வாறான பிரதிநிதிகள் இடம்பெற்றுவிட்டால் இந்த ஆய்வுக்குழு ஏற்கத்தக்கதாய் ஆகிவிடுமா? பிரதிநிதிகளை இடம்பெறச் செய்வது ஒன்றும் பாஜகவுக்கு கடினமான செயல் அல்ல. எனவே, ஆய்வுக் குழுவை கலைக்க வேண்டும் என்பதே ஒற்றைக் கோரிக்கையாய் இருக்க வேண்டும்.

அதாகப்பட்டது, “பொணத்துக்கு புனுகு தடவுனா, அது எந்திருச்சு நடமாடுமா என்ன?” அம்புட்டுதேன்

செய்திகள் சுவாசிப்பது: 18/2020

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s