இராகோஸ் குலம் 2

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 16

பிராட்ரியில் சில குலங்கள் அமைந்திருந்தது போலவே மூலச்சிறப்பான வடிவத்தில் சில பிராட்ரிகளும் ஒரு இனக்குழுவாக அமைந்திருந்தன. சில சமயங்களில், மிகவும் பலவீனமான இனக்குழுக்களுக்குள் மத்திய கண்ணியாகிய பிராட்ரி இல்லாதிருந்தது. அமெரிக்காவிலுள்ள செவ்விந்திய இனக்குழுவின் தனித்தன்மையான குணாம்சங்கள் எவை?

1. அது சொந்த நிலப்பரப்பும் சொந்தப் பெயரும் கொண்டிருப்பது. ஒவ்வொரு இனக்குழுவும் எதார்த்தத்தில் குடியிருக்கின்ற பிரதேசத்துடன் கூடுதலாக வேட்டையாடுவதற்கும் மீன்பிடிப்பதற்கும் கணிசமான பிரதேசத்தைப் பெற்றிருந்தது. அதன் பிரதேசத்துக்கும் அடுத்த இனக்குழுவின் பிரதேசத்துக்கும் இடையில் பரந்த நடுநிலை பிரதேசம் இருந்தது. இரு இனக்குழுக்களின் மொழிகளும் தொடர்புடையவையாக இருந்த இடங்களில் இந்த நடுநிலை பிரதேசத்தின் அளவு சிறியதாக இருந்தது; அப்படி இல்லாத இடங்களில் விரிவாக இருந்தது. இப்படிப்பட்ட நடுநிலைப் பிரதேசம் தான் ஜெர்மானியர்களுடைய எல்லைக் காடு, சீஸரின் சுயேவிகள் தமது பிரதேசத்தைச் சுற்றிலும் அமைத்த பொட்டல் காடு, டேனிஷ்காரர்களுக்கும் ஜெர்மானியர்களுக்கும் இடையிலிருந்த isarnholt (டேனிஷ் மொழியில் jarnved, limes Danicus); ஜெர்மானியர்களுக்கும் ஸ்லாவ்களுக்கும் இடையிலிருந்த சாக்சன் காடு மற்றும் branilbor (ஸ்லாவ் மொழியில் தற்காப்புக் காடு) – இதிலிருந்து பிராண்டன்பர்க் தன் பெயரைப் பெறுகிறது. சரியாக வரையறுக்கப்படாத எல்லைகளைக் கொண்டு இப்படிக் குறிக்கப்பட்ட பிரதேசம்தான் இனக்குழுவின் பொது நிலம். அடுத்துள்ள இனக்குழுக்களும் இதை அப்படியே அங்கீகரித்தன. அதை ஆக்கிரமிக்காதபடி இனக்குழு பாதுகாத்தது. பெரும்பாலும், மக்கள் தொகை மிகவும் அதிகமாகப் பெருகிய பொழுது மட்டுமே எல்லைகளின் நிச்சயமற்ற தன்மை நடைமுறையில் சிக்கலேற்படுத்தியது. இனக்குழுவின் பெயர்கள் சிந்தித்து முடிவு செய்யப்படவில்லை, அவை தற்செயலாகவே அமைந்தன என்று தோன்றுகிறது. ஒரு இனக்குழு தனக்குப் பக்கத்திலுள்ள இனக்குழுவை அதன் சொந்தப் பெயரில் அல்லாமல் வேறு பெயரில் அழைப்பதும் காலப் போக்கில் அடிக்கடி நடந்தது. உதாரணமாக, ஜெர்மானியர்கள் (die Deutschen) விஷயத்தில் இப்படி நடைபெற்றது. அவர்களுடைய முதல் வரலாற்றுப் பொதுப் பெயரான ஜெர்மானியர்கள் (germanen) என்பது கெல்டுகளால் தரப்பட்ட பெயராகும்.

2. அந்தந்த இனக்குழுவுக்கு மட்டுமே உரித்தான ஒரு கிளைமொழி. உண்மையில் இனக்குழு, கிளைமொழி ஆகிய இரண்டும் சேர்ந்தே நிலவின. கிளைப் பகுப்பு மூலமாகப் புதிய இனக்குழுக்களையும் புதிய கிளைமொழிகளையும் நிலைநிறுத்துவது சமீப காலம் வரையில் அமெரிக்காவில் முன்னேறிக் கொண்டுதான் இருந்தது. இப்பொழுதும் கூட அது முற்றிலும் நின்று விடவில்லை. பலவீனமடைந்த இரண்டு இனக்குழுக்கள் ஒன்றிணைக்கின்ற சந்தர்ப்பத்தில், விதிவிலக்காக, நெருங்கிய உறவுள்ள இரண்டு கிளைமொழிகள் அந்த ஒரே இனக்குழுக்குள் பேசப்படுகின்றன. அமெரிக்க இனக்குழுக்களின் சராசரித் தொகை 2000. எனினும் சிரோக்கிகளின் தொகை 26,000 ஆகும்; அமெரிக்காவில் ஒரே கிளைமொழியைப் பேசுகின்ற செவ்விந்தியர்களின் மிகப் பெரிய தொகை இவர்களுடையதே.

3. குலங்கள் தேர்தெடுத்த சாகெம்களையும் யுத்தத் தலைவர்களையும் பதவியில் நியமித்தல்.

4. அவர்களுடைய குலத்தின் விருப்பத்துக்கு எதிராகக் கூட அவர்களை மீண்டும் பதவியிலிருந்து நீக்கும் உரிமை. சாகெம்களும் யுத்தத் தலைவர்களும் இனக்குழுவின் கவுன்சிலின் உறுப்பினர்கள் என்பதால் அவர்கள் சம்பந்தமாக இனக்குழுவின் உரிமைகள் சொல்லாமலே விளங்கும். எங்கெல்லாம் இனக்குழுக்களின் கூட்டு ஏற்படுத்தப்பட்டு, இக்கூட்டின் சமஷ்டி கவுன்சிலில் எல்லா இனக்குழுக்களும் பிரதிநிதித்துவம் பெற்றிருந்தனவோ, அங்கெல்லாம் அந்த அமைப்பிற்கு மேலே கூறப்பட்ட உரிமைகள் மாற்றப்பட்டிருந்தன.

5. பொதுவான மதக் கருத்துகள் (புராணங்கள்) மற்றும் வழிபாட்டுச் சடங்குகளைப் பெற்றிருத்தல்.

“அநாகரிகர்களுடைய வழக்கப்படி அமெரிக்க செவ்விந்தியர்கள் மதபக்தியுள்ள மக்களாக இருந்தார்கள்” [L. H. Morgan, Ancient Society, p. 115]

இன்னும் அவர்களுடைய புராணங்கள் எவ்விதத்திலும் விமர்சன ரீதியில் ஆராயப்படவில்லை. அவர்கள் தம்முடைய மதக் கருத்துகளுக்கு, பலவகைப்பட்ட ஆவிகளுக்கு மனித உருவம் கொடுத்திருந்தனர். எனினும் அவர்கள் வாழ்ந்த அநாகரிக நிலையின் கடைக்கட்டத்தில் அவற்றிற்கு உடம்பு வகைப்பட்ட உருவங்கள், அதாவது விக்கிரகங்கள் கிடையா. அது இயற்கை வழிபாடு, பஞ்சபூத வழிபாடு; அது பல தெய்வ வழிபாட்டை நோக்கி வளர்ச்சியடைந்தது. எல்லா இனக்குழுக்களுக்கும் திட்டவட்டமான வழிபாட்டு வடிவங்களுடன், அதாவது நடன்ங்கள், விளையாட்டுகளுடன் முறையான விழாக்கள் இருந்தன. குறிப்பாக, நடனமாடுதல் மதச் சடங்குகள் அனைத்திலும் முக்கியமான பகுதியாக இருந்தது; ஒவ்வொரு இனக்குழுவும் தனது மதச் சடங்குகளைத் தனித் தனியாக நடத்தியது.

6. பொது விவகாரங்களைக் கவனிப்பதற்கு ஒரு இனக்குழுவின் கவுன்சில் இருந்தது. அது தனித்தனிக் குலங்களின் எல்லா சாகெம்களையும் யுத்தத் தலைவர்களையும் கொண்டிருந்தது. அக்குலங்களின் உண்மையான பிரதிநிதிகள் அவர்களே, ஏனென்றால் அவர்களை எப்பொழுதும் நீக்க முடியும். இக்கவுன்சில் பகிரங்கமாகக் கூடியது. இனக்குழுவின் மற்ற உறுப்பினர்கள் அங்கே குழுமியிருந்தார்கள். விவாதத்தில் பங்கெடுப்பதற்கும் தமது கருத்துக்களைத் தெரிவிக்கவும் அவர்களுக்கு உரிமை இருந்தது. கவுன்சில் முடிவு செய்தது. கவுன்சிலில் முறையிடுவதற்கு அங்கேயிருந்த எல்லோருக்கும் உரிமை உண்டு. பெண்கள் கூட தமது கருத்தைத் தாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதியின் மூலமாகத் தெரிவிக்கலாம். இராகோஸ்களிடையே கடைசி முடிவுகளை ஏகமனதாகத்தான் செய்ய வேண்டும். ஜெர்மன் மார்க் சமூகத்திலும் பல முடிவுகள் இப்படித்தான் செய்யப்பட்டன. குறிப்பாக, மற்ற இனக்குழுக்களுடன் உறவுகளை முறைப்படுத்துகின்ற வேலை இனக்குழுக் கவுன்சிலின் பொறுப்பாகும். அது தூதர்களை வரவேற்றது, தானும் அனுப்பியது; யுத்தப் பிரகடனம் செய்தது, சமாதானத்தையும் நிறைவேற்றியது. யுத்தம் ஏற்பட்ட பொழுது பிரதானமாகத் தொண்டர்கள்தான் யுத்தத்தை நடத்தினார்கள். ஒரு இனக்குழு எந்தெந்த இனக்குழுக்களுடன் திட்டவட்டமாக சமாதான உடன்படிக்கையைச் செய்து கொள்ளவில்லையோ அவற்றுடன் கோட்பாட்டளவில் யுத்த நிலையில் இருந்தது. இப்படிப்பட்ட எதிரியின் மீது நட்த்தப்படுகின்ற இராணுவப் படையெடுப்புகளைப் பெரும்பாலும் ஒரு சில தலைசிறந்த வீரர்களே திட்டமிட்டு நடத்தினார்கள். அவர்கள் ஒரு யுத்த நடனம் ஆடுவார்கள். அந்த நடனத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் அதன் மூலம் படையெடுப்பில் கலந்து கொள்வதற்குத் தங்குளைடைய விருப்பத்தைத் தெரிவிப்பார்கள். உடனே ஒரு படையணி அமைக்கப்பட்டு யுத்தத்துக்குப் புறப்பட்டுச் சென்றது. இனக்குழுவின் பிரதேசம் தாக்கப்படுகின்ற பொழுது அதன் பாதுகாப்பும் பிரதனமாக தொண்டர்களைக் கொண்டு இதே மாதிரியாக நடத்தப்பட்டது. படைகள் புறப்படுகின்ற பொழுதும் திரும்புகின்ற பொழுதும் எப்பொழுதும் பொது விழாக்கள் நடத்தி கொண்டாடப்பட்டன. இம்மாதிரியான படையெடுப்புகளுக்கு இனக்க்குழுவின் கவுன்சிலின் அனுமதி அவசியமில்லை. யாரும் அனுமதி கோரவில்லை; அனுமதி அளிக்கப்படவுமில்லை. டாசிட்டஸ் வர்ணித்த ஜெர்மானிய பரிவாரங்கள் நடத்திய தனிப்பட்ட படையெடுப்புகளைப் போல அவை ஒரே மாதிரியாக இருந்தன. ஆனால் ஒரு வேறுபாடு இருந்தது: ஜெர்மானியர்களிடையே பரிவாரங்களின் கூட்டம் அதிக நிரந்தரமான தன்மையை ஏற்கெனவே பெற்றிருந்தது. சமாதான காலங்களிலும் அது ஒரு பலமான மூலக்கருவாக இருந்தது. போர் நடைபெறும் பொழுது அந்த மூலக்கருவைச் சுற்றி பாக்கியிருக்கும் தொண்டர்கள் குழுக்களாகத் திரண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட இராணுவப் பிரிவுகள் எண்ணிக்கையில் பலமாக இருந்தது அபூர்வமே. செவ்விந்தியர்களின் மிக முக்கியமான இராணுவப் படையெடுப்புகள் – வெகு தூரம் செல்ல வேண்டியிருந்த படையெடுப்புகள் கூட – மிகவும் குறைந்த எண்ணிக்கையுள்ள வீரர்களைக் கொண்டு நடத்தப்பட்டன. ஒரு முக்கியமான நடவடிக்கைக்கு இப்படிப்பட்ட சில படைகள் திரளும் பொழுது ஒவ்வொரு குழுவும் தன்னுடைய தலைவருக்கு மட்டுமே பணிந்தது. இத்தலைவர்களின் கவுன்சிலைக் கொண்டு படையெடுப்புத் திட்டத்தின் ஒற்றுமை அநேகமாக உத்தரவாதம் செய்யப்பட்டது. நான்காம் நூற்றாண்டில் மேல் ரைன் பிரதேசத்தைச் சேர்ந்த அலமான்னிகள் இப்போர்முறையை பின்பற்றினார்கள் என்று அம்மியானஸ் மார்ஸெலினஸ் வர்ணித்தார்.

7. சில இனக்குழுக்களில் ஒரு முதன்மைத் தலைவனைக் காண்கிறோம். ஆனால் அவனுடைய அதிகாரங்கள் குறைவுதான். சாகெம்களில் அவனும் ஒருவன். அவசரமான நடவடிக்கை எடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களில், கவுன்சிலைக் கூட்டி முடிவு செய்கின்ற வரை அவனே தற்காலிக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நிர்வாக அதிகாரத்தைக் கொண்டே ஓர் அதிகாரியை உருவாக்குவதற்கு இது பலவீனமான, ஆனால் மேற்கொண்டு ஏற்பட்ட வளர்ச்சி காட்டியதைப் போல, பொதுவாகவே பயனற்ற, நன்கு முதிராத முயற்சியே. எதார்த்தத்தில், தலைமைத் தளபதிதான் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் – எல்லாவற்றிலும் இல்லாவிடினும் கூட – இப்படிப்பட்ட அதிகாரியாக வளர்ச்சியடைந்தார் என்பதைக் காண முடியும்.

அமெரிக்க செவ்விந்தியர்களில் பெரும்பான்மையினர் இனக்குழு ஒருமைப்பாடு என்ற கட்டத்துக்கு மேலே என்றுமே போகவில்லை. எண்ணிக்கையில் சிறிய இனக்குழுக்கள், பரந்த எல்லைப் பிரதேசங்களினால் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்கப்பட்டும் நிரந்தரமான போர்களினால் பலவீனமாகவும் இருக்கின்ற இனக்குழுக்கள் பிரம்மாண்டமான பிரதேசத்தில் இருந்தன; ஆனால் அதில் வசித்த மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. அவ்வப்பொழுது ஏற்படுகின்ற அவசர நிலையின் விளைவாக அங்குமிங்கும் இரத்த உறவுமுறையுள்ள இனக்குழுக்களுக்கிடையில் உடன்படிக்கைகள் செய்யப்பட்டு அவசர நிலை மறைந்ததும் அவை ரத்து செய்யப்பட்டன. ஆனால் சில வட்டாரங்களில் ஆதியில் இரத்த உறவு கொண்டிருந்து பின்னால் வேற்றுமைப்பட்டுப் போன இனக்குழுக்கள் மீண்டும் நிரந்தரமான இனக்குழுக்களின் கூட்டுகளில் ஒன்றுபட்டன; ஆகவே தேசிய இனத்தின் உருவாக்கத்தில் முதல் நடவடிக்கையைச் செய்தன. அமெரிக்காவில் இத்தகைய இனக்குழுக்களின் கூட்டின் மிகவும் முன்னேறிய வடிவத்தை இராகோஸ்களிடையே காண்கிறோம். அவர்கள் மிஸிஸிப்பி நதிக்கு மேற்கேயுள்ள தமது ஆதி இருப்பிடங்களிலிருந்து குடிபெயர்ந்து – அங்கே அவர்கள் மாபெரும் டகோடா குடும்பத்தின் கிளையாக அநேகமாக இருந்திருக்கக் கூடும் – நீடித்து அலைந்து திரிந்த பிறகு இன்று நியூயார்க் மாநிலமாக இருக்கும் பிரதேசத்தில் தங்கினார்கள். அவர்கள் செனீகாக்கள், கயூகாக்கள், ஒனேர்ண்டகாக்கள், ஒனெய்டாக்கள், மோஹாக்கள் என்று ஐந்து இனக்குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் மீன், வேட்டையில் கிடைத்த மிருகங்கள், பண்படாத காய்கறித் தோட்டம் ஆகியவற்றைக் கொண்டு வாழ்ந்தார்கள். பெரும்பாலும் மரப்பலகை வேலிகளால் பாதுகாக்கப்பட்ட கிராமங்களில் அவர்கள் வசித்தார்கள். அவர்களுடைய மொத்த எண்ணிக்கை 20,000க்கு மேல் எப்பொழுதுமே இருக்கவில்லை; ஐந்து இனக்குழுக்களுக்கும் பொதுவான சில குலங்கள் அவர்களிடம் இருந்தன; ஒரே மொழியின் நெருங்கிய உறவு கொண்ட கிளைமொழிகளை அவர்கள் பேசினார்கள், தொடர்ச்சியாக இருந்த பிரதேசத்தில் வசித்தார்கள். அப்பிரதேசம் ஐந்து இனக்குழுக்களுக்கும் பிரித்துத் தரப்பட்டிருந்தது. அது புதிதாகப் பிடிக்கப்பட்ட பிரதேசம் என்பதால் தாங்கள் வெளியேற்றியவர்களை எதிர்த்து இந்த இனக்குழுக்கள் நெருக்கமான ஒத்துழைப்புக் கொள்வது இயற்கையே; அது பழக்கமாகி விட்ட்து. மிகவும் சமீபமாகச் சொன்னால், 15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு முறையான “நிரந்தரக் கூட்டு” , இனக்குழுக்களின் கூட்டு உருவாகியது; அது தனது புதிய பலத்தை உணர்ந்து உடனே ஆக்கிரமிப்புத் தன்மை கொண்டு தனது சக்தியின் உச்ச நிலையில், சுமார் 1675இல், சுற்றியிருந்த பரந்த பிரதேசங்களைக் கைப்பற்றியது; அங்கே வசித்தவர்களில் சிலரைத் துரத்தி விட்டு, மற்றவர்களைக் கப்பம் கட்டும்படி நிர்ப்பந்தித்தது. இராகோஸ் இனக்குழுக்களின் கூட்டுதான் செவ்விந்தியர்கள் எட்டிய அதிக முன்னேற்றமுள்ள சமூக அமைப்பாகும். அப்பொழுது செவ்விந்தியர்கள் (அதாவது, மெக்சிகர்கள், நியூமெக்சிகர்கள், பெருவியர்கள் நீங்கலாக) அநாகரிக நிலையின் கடைக்கட்டத்திலிருந்து வெளிவரவில்லை. இந்த இனக்குழுக்களின் கூட்டின் அடிப்படையான குணாம்சங்கள் பின்வருமாறு:

1. முழுமையான சமத்துவம் மற்றும் இனக்குழுவின் உள்விவகாரங்களில் சுதந்திரம் என்ற அடிப்படையில் ஐந்து இரத்த உறவுமுறையுள்ள இனக்குழுக்களிடையில் நிரந்தரமான கூட்டு உருவாகியது. இந்த இரத்த உறவு முறை இனக்குழுக்களின் கூட்டின் உண்மையான அடிப்படையாக இருந்தது. ஐந்து இனக்குழுக்களில் மூன்று தந்தை இனக்குழுக்கள் என்று அழைக்கப்பட்டன – அவை பரஸ்பரம் சகோதரர்களாக இருந்தன. மற்ற இரண்டு இனக்குழுக்களும் மகன் இனக்குழுக்கள் என்று அழைக்கப்பட்டன – அவையும் தம்மிடையே சகோதரர்களாக இருந்தன. மிகவும் பழமையான மூன்று குலங்களுக்கு இந்த ஐந்து இனக்குழுக்கள் எல்லாவற்றிலும் வாழ்கின்ற பிரதிநிதிகள் இன்னும் இருந்தார்கள். வேறு மூன்று குலங்களுக்கோ மூன்று இனக்குழுக்களில் பிரதிநிதிகள் இருந்தனர். இக்குலங்கள் ஒவ்வொன்றின் உறுப்பினர்களும் ஐந்து இனக்குழுக்கள் எல்லாவற்றிலும் சகோதரர்களாக இருந்தனர். கிளைமொழி வேறுபாடுகளைக் கொண்ட பொது மொழியே அவர்களுடைய பொது மரபு வழிக்கு வெளியீடாகவும் சான்றாகவும் இருந்தது.

2. இனக்குழுக்களின் கூட்டின் உறுப்பாக சமஷ்டி கவுன்சில் இருந்தது. இதில் ஐம்பது சாகெம்கள் இருப்பார்கள்; எல்லோரும் சம அந்தஸ்து, சம மரியாதை உடையவர்கள். இனக்குழுக்களின் கூட்டு சம்பந்தப்பட்ட எல்லா விவகாரங்களிலும் இக்கவுன்சில் கடைசி முடிவுகளைச் செய்யும்.

3. இனக்குழுக்களின் கூட்டு அமைக்கப்பட்ட காலத்தில் இந்த ஐம்பது சாகெம்களும் அதன் குறிக்கோள்களுக்குப் பொருத்தமாக விசேஷமாக உருவாக்கப்பட்ட புதிய பதவிகளை வகிப்பவர்கள் என்ற வகையில் இனக்குழுக்களுக்கும் குலங்களுக்குமிடையே வினியோகிக்கப்பட்டிருந்தனர். சாகெம்களின் பதிவிகள் காலியாகும் பொழுது சம்பந்தப்பட்ட குலங்கள் அவர்களைப் புதிதாகத் தேர்ந்தெடுத்தன; பதவியிலிருந்து நீக்குகின்ற உரிமையும் குலங்களிடம் இருந்தது. ஆனால் அவர்களைப் பதவியிலமர்த்துகின்ற உரிமை மட்டும் சமஷ்டி கவுன்சிலிடம் இருந்தது.

4. இந்தக் கூட்டு சாகெம்கள் தமது இனக்குழுக்களிலும் சாகெம்களாக இருந்தனர்; இனக்குழுக்களின் கவுன்சிலில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்தானமும் ஒரு வாக்கும் இருந்தன.

5. சமஷ்டி கவுன்சிலின் எல்லா முடிவுகளும் ஏகமனதாக முடிவுகளாகவே இருக்க வேண்டும்.

6. இனக்குழு ரீதியில்தான் வாக்களிப்பு நடைபெற்றது; கட்டுப்படுத்துகின்ற முடிவைச் செய்வதற்கு முன் ஒவ்வொரு இனக்குழுவும் ஒவ்வொரு இனக்குழுவையும் சேர்ந்த எல்லா கவுன்சில் உறுப்பினர்களும் அதை ஒத்துக் கொள்ள வேண்டும்.

7. ஐந்து இனக்குழுவின் கவுன்சில்களில் ஒவ்வொன்றும் சமஷ்டி கவுன்சிலைக் கூட்டலாம். ஆனால் சமஷ்டி கவுன்சிலுக்குத் தன்னைத் தானே கூட்டுவதற்கு அதிகாரம் கிடையாது.

8. கூடி இருக்கும் மக்களுக்கு முன்பாக அதன் கூட்டங்கள் நடைபெற்றன; ஒவ்வொரு இராகோசுக்கும் பேச உரிமை இருந்தது; ஆனால் கவுன்சில் ஒன்றே முடிவு செய்தது.

9. இனக்குழுக்களின் கூட்டுக்கு அதிகார பூர்வமான தலைவன் கிடையாது, தலைமையான நிர்வாக அதிகாரியும் கிடையாது.

10. எனினும் இனக்குழுக்களின் கூட்டில் இரண்டு உயர் யுத்தத் தலைவர்கள் இருந்தனர்; இருவருக்கும் சம உரிமைகளும் சம அதிகாரமும் உண்டு (ஸ்பார்டா மக்களின் இரண்டு “அரசர்கள்”, ரோமாபுரியில் இரண்டு கான்சல்கள்).

நானூறு ஆண்டுகளுக்கு மேலாக இராகோஸ்கள் இந்த சமுதாய அமைப்பின் கீழ்தான் வாழ்ந்தார்கள், இன்னும் வாழ்ந்து வருகிறார்கள். அதை பற்றி மார்கனுடைய வர்ணனையைச் சற்று விரிவாகவே நான் தந்திருக்கிறேன்; ஏனென்றால் இன்னும் அரசு பற்றித் தெரிந்து கொள்ளாத ஒரு சமுதாய அமைப்பை ஆராய்வதற்கு அது வாய்ப்பளிக்கிறது. அரசு ஏற்படுவதற்கு சம்பந்தப்பட்ட பொதுமக்கள் திரளிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கின்ற தனித்த ஒரு விசேஷமான சமூக அதிகாரம் முதலில் இருக்க வேண்டும். மேலும், ஜெர்மன் மார்க்கின் அமைப்பு அரசிலிருந்து சாராம்சத்தில் மாறுபட்டிருக்கின்ற ஒரு சுத்தமான சமுதாயத் தன்மையுள்ள அமைப்பே – அது பின்னால் அரசுக்கு அடிப்படையாக வெகுவாகப் பயன்பட்டது என்றாலும் கூட – என்று மௌரர் இயல்புணர்ச்சியுடன் அங்கீகரிக்கிறார்; எனவே மார்க்குகள், கிராமங்கள், மேனர்கள், நகரங்கள் ஆகியவற்றின் ஆதி அமைப்பிலிருந்தும் அதற்கு அக்கம்பக்கமாகவும் பொது அதிகாரம் படிப்படியாக எழுவதை மௌரர் தமது எல்லா நூல்களிலும் ஆராய்கிறார். ஆதியில் ஒன்றுபட்டிருந்த இனக்குழு படிப்படியாக ஒரு பிரம்மாண்டமான கண்டத்திலே பரவிப் படர்ந்தது எப்படி என்று வட அமெரிக்க செவ்விந்தியர்கள் எடுத்துக்காட்டுகின்றனர்; இனக்குழுக்கள் பிரிவினை மூலம் எப்படி மக்களினங்களாக, இனக்குழுக்களின் மொத்தக் குழுக்களாக ஆயின என்றும் காட்டுகின்றனர்; பரஸ்பரம் புரிந்து கொள்ள முடியாதவையாக அமையும் வரை மொழிகள் மாறி வந்தது மட்டுமன்றி, ஆதி ஒற்றுமையின் ஒவ்வொரு சுவடும் மறைகின்ற வரை அவை எப்படி பலவாகச் சிதறின என்றும் காட்டுகின்றனர்; பழைய தாய்வழிக் குலங்கள் எப்படி பிராட்ரிகளாக நீடித்தன என்றும் இந்த மிகப் பழமையான குலங்களின் பெயர்கள் மிகவும் தொலைவிலுள்ள, நெடுங்காலத்துக்கு முன்னரே பிரிந்துவிட்ட இனக்குழுக்களிலும் அதே போல எப்படி இருந்து வருகின்றன என்றும் காட்டுகின்றனர் – பெரும்பாலன செவ்விந்திய இனக்குழுக்களில் “ஓநாய்”, “கரடி” என்பவை இன்னும் குலப் பெயர்களாக இருக்கின்றன. பொதுவாகச் சொன்னால், மேலே வர்ணித்த சமூக அமைப்பு அவை எல்லாவற்றிற்கும் பொருந்தும் – அவற்றில் பல இரத்த உறவுமுறை இனக்குழுக்களுக்களின் கூட்டு என்ற அளவுக்கு வளர்ச்சியடையவில்லை என்பது நீங்கலாக.

ஆனால் குலம் ஒரு சமுதாய அலகாக அமைந்ததுமே அதிலிருந்து குலங்கள், பிராட்ரிகள், இனக்குழு ஆகியவற்றின் முழு அமைப்பும் அநேகமாக்க் கட்டாயமான அவசியத்தை முன்னிட்டு – ஏனென்றால் அது இயல்பே – வளர்வதைக் காண்கிறோம். அவை மூன்றும் இரத்த உறவுமுறையைப் பல்வேறு அளவுகளில் கொண்டிருந்த குழுக்களே; அவற்றில் ஒவ்வொன்றும் தன்னுள் முழுமையானது, தன் விவகாரங்களைத் தானே கவனித்துக் கொள்கிறது; அதே பொழுதில் ஒவ்வொன்றும் மற்றவற்றுக்குத் துணையாக இருக்கிறது. அவற்றின் பொறுப்பில் வருகின்ற விவகாரத் துறை கடைக்கட்டத்தில் இருக்கின்ற அநாகரிகர்களின் சமூக விவகாரங்கள் அனைத்தையும் உள்ளடக்கியிருந்தது. எனவே குலத்தை சமுதாய அலகாக நாம் பார்க்கின்ற இடங்களில் எல்லாம் மேலே வர்ணித்த மாதிரியான இனக்குழுவின் அமைப்பு ஒன்றும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். மேலும், போதிய மூலாதாரங்கள் இருக்கின்ற இடங்களில் – உதாரணமாக, கிரேக்கர்கள், ரோமானியர்களிடையில் இருந்த்தைப் போல – நாம் அதைக் கண்டுபிடிப்பது மட்டுமன்றி, எங்கே மூலாதாரங்கள் இல்லையே அங்கே அமெரிக்க சமுதாய அமைப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தல் நம்மை மிகவும் கடினமான சந்தேகங்களிலிருந்து புதிர்களிலுருந்தும் கரையேற்றி விடும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

மேலும், இந்தக் குல அமைப்பு அதன் குழந்தைத்தனமான எளிமையில் எவ்வளவு அற்பவுதமாக இருக்கிறது! போர்வீரர்கள், போலீஸ்காரர்கள் இல்லாமல், பிரபுக்கள், அரசர்கள், கவர்னர்கள், நீதிபதிகள் இல்லாமல், சிறைகள் இல்லாமல், வழக்கு விசாரணைகள் இல்லாமல் எல்லாமே ஒழுங்காக நடைபெறுகின்றன. எல்லா சண்டை, சச்சரவுகளும் சம்பந்தப்பட்ட எல்லோரும் பங்கு கொண்டு தீர்க்கப்படுகின்றன – குலம் அல்லது இனக்குழு அல்லது தனிப்பட்ட குலங்கள் தமக்குள்ளே அவற்றைத் தீர்த்துக் கொள்கின்றன. இரத்தப் பழிவாங்குதல் பயமுறுத்தக் கூடியது என்றாலும், அது மிகவும் தீவிரமான, அபூர்வமாகவே கடைப்பிடிக்கப்படுகின்ற நடவடிக்கையாகவே இருக்கிறது. அதன் நாகரிக வடிவமே நம் காலத்திய மரண தண்டனை; அதில் நாகரிகத்தின் எல்லா சாதகங்களும் குறைகளும் உள்ளன. இன்றிருப்பதை விடப் பல விவகாரங்கள் பொதுவில் இருந்த போதிலும் கூட – சில குடும்பங்கள் வீட்டு விவகாரங்களைப் பொதுவில், பொதுவுடைமை வழியில் நடத்துகின்றன; நிலம் இனக்குழுவின் உடைமை; சிறு தோட்டங்கள் மட்டுமே குடும்பங்களுக்குத் தற்காலிகமாகத் தரப்படுகின்றன – நம்முடைய விரிவான, சிக்கலான நிர்வாக இயந்திரத்தில் ஒரு துணுக்கு கூட அவசியப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் முடிவெடுக்கிறார்கள்; பெரும்பாலான விஷயங்களில் தொன்று தொட்டு வந்த பழக்கம் ஏற்கெனவே எல்லாவற்றையும் முறைப்படுத்தியிக்கிறது. ஏழை, தேவையுள்ளவன் என்று யாரும் இருக்க முடியாது – முதியோர்கள், நோயாளிகள் மற்றும் யுத்தத்தில் அங்கஹீனர்களானவர்கள் விஷயத்தில் பொதுவுடைமைக் குடும்பமும் குலமும் தமது கடைமைகளை உணர்ந்திருக்கின்றன. பெண்கள் உட்பட எல்லோரும் சுயேச்சையானவர்கள், சம்மானவர்கள். இன்னும் அடிமைகளுக்கு இடமில்லை; அந்நிய இனக்குழுக்களை அடிமைப்படுத்துதலுக்கும் இடமில்லை என்பது விதியாக இருந்தது. இராகோஸ்கள் ஏரீக்களையும் “நடுநிலை இனங்களையும்” [நடுநிலை இனங்கள் – 17ஆம் நூற்றாண்டில் செவ்விந்திய இனக்குழுக்கள் ஏற்படுத்திக் கொண்ட இராணுவக் கூட்டணி; இவை இராகோஸ்களுடன் உறவு உள்ளவை, எரி ஏரியின் வடக்குக் கரையில் வசித்தனர். இந்த இனக்குழுக்கள் இராகோஸ்களுக்கும் ஹுரான்களுக்கும் இடையில் நடைபெற்ற போரில் நடுநிலையைக் கடைப்பிடித்த காரணத்தால் பிரெஞ்சுக் காலனியாதிக்கவாதிகள் அவற்றுக்கு இப்பெயரைக் கொடுத்தனர்] உத்தேசமாக 1651 இல் வென்ற பொழுது அவர்களை இனக்குழுக்களின் கூட்டில் சமத்துவமுடைய உறுப்பினர்களாகச் சேருமாறு அழைத்தார்கள்; தோற்கடிக்கப்பட்டவர்கள் மறுத்த பிறகுதான் அவர்கள் தங்கள் பிரதேசத்திலிருந்து விரட்டப்பட்டார்கள். இத்தகைய சமுதாயத்தினால் உருவாக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை கெடுக்கப்படாத செவ்விந்தியர்களுடன் பழகிய எல்லா வெள்ளையர்களுக்கும் ஏற்பட்ட போற்றுதல் எடுத்துக் காட்டுகிறது. இந்த அநாகரிகர்களின் தன்மதிப்பு, நேர்மை, நற்குண வலிமை, துணிவு பற்றிய பாராட்டு அது.

இந்தத் துணிவுக்கு நாம் சமீபத்தில் ஆப்பிரிக்காவில் உதாரணங்களைக் கண்டோம். சில ஆண்டுகளுக்கு முன் ஸுலூ கஃபர்களும் – இந்த இரண்டு இனக்குழுக்களிலும் குல அமைப்புகள் இன்னும் அழிந்து விடவில்லை – எந்த ஐரோப்பிய இராணுவமும் செய்ய முடியாததைச் செய்துள்ளனர் [ஸுலூ இன மக்கள் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளை எதிர்த்து 1879 – 1887இல் நடத்திய தேசிய விடுதலைப் போராட்டம் இங்கே குறிப்பிடப்படுகிறது.

சூடானைச் சேர்ந்த நூபியர்கள், அராபியர்கள் மற்றும் இதர மக்களினங்களை 1881 – 1884இல் நடைபெற்ற தேசிய விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்தன. முஸ்லிம் சமயவாதியான முகம்மது அஹமதுவின் தலைமையில் நடைபெற்ற அந்த எழுச்சி வெற்றி பெற்று சுதந்திரமான, மத்தியப்படுத்தப்பட்ட அரசு நிறுவப்பட்ட்து. ஆங்கிலேயர்கள் 1899இல் தான் சூடானைப் பிடிப்பதில் வெற்றியடைந்தார்கள்]. அவர்களிடம் வெறும் தடிகளும் ஈட்டிகளுமே ஆயுதங்களாக இருந்தன; துப்பாக்கிகள் கிடையாது. மறுபுறமோ துப்பாக்கிகள் குண்டு மாரி பொழிந்தன. எனினும் இவர்கள், நெருக்கமாக அணிவகுத்துப் போராடுவதில் உலகிலேயே தலைசிறந்தவர்கள் என்று ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கின்ற ஆங்கிலக் காலாட்படையினருடைய துப்பாக்கி ஈட்டிகள் வரைக்கும் முன்னேறி அவர்கள் ஒழுங்கு குலைந்து சிதறிப் போகச் செய்தர்கள், சில சமயங்களில் பின்வாங்கும் படியும் செய்தார்கள். இவ்வளவுக்கும் இரு தரப்பினருக்கும் இடையில் ஆயுத பலத்தில் மாபெரும் வேறுபாடு இருந்தது, அவர்கள் இராணுவச் சேவை செய்யவில்லை, இராணுவப் பயிற்சியும் அவர்களுக்குக் கிடையாது. ஒரு கஃபர் 24 மணி நேரத்தில் குதிரையைக் காட்டிலும் அதிக வேகமாக அதிக தூரம் ஓடக் கூடியவன் என்று ஆங்கிலேயர்கள் குறைபட்டுக் கொண்டதே அவர்களுடைய திறமைக்கும் பலத்துக்கும் சிறந்த சான்றாகும். கஃபர்களுடைய மிகவும் சிறிய தசைநார் கூடக் கசைக் கயிறு போல உறுதியாகவும் உருக்கைப் போலவும் இருக்கிறது என்று ஓர் ஆங்கில ஓவியர் கூறினார்.

வர்க்கப் பிரிவினைகள் தோன்றுவதற்கு முன்பு மனிதர்களும் மனித சமுதாயமும் இருந்த நிலை இதுவே. அன்றைய மனிதர்களுடைய நிலையை இன்றைய நாகரிக மக்களின் மிகப் பெரும்பாலோருடைய நிலையுடன் ஒப்பிட்டால் இன்றைய பாட்டாளி, சிறு விவசாயி ஆகியவர்களுக்கும் பண்டைக்காலக் குலத்தின் சுதந்திரமான உறுப்பினனுக்கும் இடையில் மாபெரும் இடைவெளி இருப்பதைக் காண்போம்.

விஷயத்தின் ஒரு பக்கம் இது. எனினும் இந்த அமைப்பின் அழிவு தவிர்க்க முடியாதது என்பதை நாம் மறக்கக்கூடாது. அது இனக்குழுவுக்கு மேலே வளரவில்லை. இனக்குழுக்களின் கூட்டு அதன் வீழ்ச்சியின் ஆரம்பத்துக்குச் சமிக்கையாக இருந்தது என்பதை நாம் பின்னர் காண்போம். இராகோஸ்கள் மற்றவர்களை அடிமைப்படுத்துவதற்குச் செய்த முயற்சிகளும் இதை எடுத்துக்காட்டியுள்ளன. இனக்குழுவுக்கு வெளியே சட்டம் கிடையாது. வெளிப்படையான சமாதான உடன்படிக்கைகள் இல்லாத இடங்களில் இனக்குழுக்களிடையே யுத்தங்கள் நடைபெற்றன. மற்ற எல்லா மிருகங்களிடமிருந்தும் மனிதனை வேறுபடுத்திக் காட்டுகின்ற கொடூரத்துடன் யுத்தம் நடத்தப்பட்டது; சுயநலத்தின் காரணமாக இந்தக் கொடூரம் பின்னர் தணிக்கப்பட்டது. நாம் அமெரிக்காவில் பார்த்ததைப் போல குல அமைப்பு முழு மலர்ச்சி பெற்றிருக்க வேண்டுமானால் அதற்கு மிகவும் வளர்ச்சி குன்றிய உற்பத்தி வடிவம் இருக்க வேண்டும்; எனவே மிகவும் குறைவான எண்ணிக்கையிலுள்ள மக்கள் விரிவான நிலப்பரப்பில் பரவியிருந்ததன் காரணமாக, வெளி இயற்கை மனிதனிடமிருந்து வேறுபட்டதாக, எதிரியாக, புரியாததாக இருந்தது அவன் மீது அநேகமாக முழுமையான ஆதிக்கம் செலுத்த வேண்டும். இந்த ஆதிக்கம் மனிதனுடைய குழந்தைத்தனமான மதக் கருத்துகளில் பிரதிபலிக்கப்படுகிறது. இனக்குழு மனிதனுக்கு – அவன் சம்பந்தமாகவும் வெளியார் சம்பந்தமாகவும் – எல்லையாக இருந்தது. இனக்குழு, குலம், அவற்றின் அமைப்புகள் புனிதமானவை, மீறக்கூடாதவை; இயற்கையினால் அமைக்கப்பட்ட மேலான சக்தி; உணர்ச்சி, சிந்தனை, செயல் ஆகிய எல்லாவற்றிலும் மனிதன் அதற்கு முற்றிலும் கீழ்ப்பட்டவனாக இருந்தான். இந்த சகாப்தத்தின் மக்கள் கவர்ச்சிகரமாக நமக்குத் தோன்றினாலும், அவர்கள் ஒருவருக்கொருவர் வேறுபாடு இல்லாதவர்களாக இருந்தனர். மார்கஸ் கூறியபடி, அவர்கள் பூர்விகக் கூட்டு வாழ்க்கையின் தொப்பூழ்க் கொடியுடன் பிணைக்கப்பட்டிருந்தார்கள். இந்தப் பூர்விக்க் கூட்டு வாழ்கையின் பலத்தை உடைக்க வேண்டியிருந்தது, அது உடைக்கப்பட்டது. ஆனால் அதை உடைத்த செல்வாக்குடைய சக்திகள் பண்டைக்காலக் குல சமுதாயத்தின் எளிமையான, தார்மிக மேன்மையிலிருந்து இழிநிலையாகவும் வீழ்ச்சியாகவும் நமக்குத் தொடக்கத்திலிருந்தே தோன்றுகின்றன. கீழ்த்தரமான பேராசை, மிருகத்தனமான காமவெறி, பொருளாசை, பொதுச் சொத்துக்களை சுயநலத்துக்காக கொள்ளையடித்தல் ஆகிய இழிந்த நலன்களே புதிய நாகரிக சமுதாயத்தை, வர்க்க சமுதாயத்தை வரவேற்கின்றன. திருட்டு, கற்பழித்தல், ஏமாற்றுதல், நம்பிக்கைத் துரோகம் ஆகிய மிகவும் மோசமான வழிவகைகள் வர்க்கங்கள் இல்லாத பழைய குல சமுதாயத்தைக் குழிபறித்துக் குப்புறத் தள்ளி விடுகின்றன. மேலும், இந்தப் புதிய சமுதாயம் அதன் 2,500 ஆண்டுக் கால வாழ்கையில் சுரண்டப்படுகின்ற, ஒடுக்கப்படுகின்ற அதிகப் பெரும்பான்மையினருக்குப் பாதகமாக சொற்ப எண்ணிக்கையிலுள்ள சிறுபான்மையினருடைய வளர்ச்சியாக இருந்ததைத் தவிர ஒருபோதும் வேறுவிதமாக இருக்கவில்லை; இன்று அது முன்னைக் காட்டிலும் கூடுதலாக அப்படியே இருக்கிறது.

இந்நூலின் முந்தைய பகுதிகள்

 1. மாமேதை ஏங்கல்ஸ்.
 2. 1884 ல் எழுதிய முன்னுரை
 3. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி
 4. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2
 5. ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய கலாச்சாரக் கட்டங்கள்
 6. குடும்பம் – 1
 7. குடும்பம் – 2
 8. குடும்பம் – 3
 9. குடும்பம் – 4
 10. குடும்பம் – 5
 11. குடும்பம் – 6
 12. குடும்பம் – 7
 13. குடும்பம் – 8
 14. குடும்பம் – 9
 15. இராகோஸ் குலம் 1

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s