
செய்தி:
கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 90 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 74,383 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 70,53,807 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 918 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1,08,334 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 60,77,977 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 8,67,496 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செய்தியின் பின்னே:
எல்லா நாளிதழ்களும், எல்லா காட்சி ஊடகங்களும் இன்றைய கொரோனா நிலவரம், தற்போதைய கொரோனா நிலவரம் என்று கணக்கு காட்டுவதில் அதிக கவனம் எடுத்துக் கொள்கின்றன. அந்த அடிப்படையில், ‘70 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு’ என்பது இன்றைய தலைப்பு. இந்த செய்தியைப் படிக்கும் எளிய மக்கள், தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 70 லட்சத்துக்கும் அதிகமானோர் இருக்கிறார்கள் என்பதாக புரிந்து கொள்வார்கள். ஆனால் உண்மை என்ன?
இது வரையிலான மொத்த கொரோனா பாதிப்பு – 70,53,807
இது வரையில் மொத்த பலியானோர் – 01,08,334
இது வரையில் குணமடைந்தோர் – 60,77,977
தற்போது சிகிச்சை பெற்று வருவோர் – 08,67,496
அதாவது, தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்போரின் மொத்த எண்ணிக்கை எட்டரை லட்சம் பேர் தான். இதற்கு ஏன் இந்த அளவுக்கு அச்சமூட்டுகிறார்கள்? இந்த அச்சம் திட்டமிட்டு ஊட்டப்படுகிறது. இந்தியாவில் எந்த ஊடகமும், அது அச்சு ஊடகமாக இருந்தாலும் சரி, காட்சி ஊடகமாக இருந்தாலும் சரி ஒட்டு மொத்த எண்ணிக்கையைத் தான் சொல்லியிருக்கிறார்களே தவிர மறந்தும் கூட பாதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கையை சொன்னதே இல்லை. அது புள்ளிவிபரம் போல கடந்து செல்லும். தலைப்பில் கொட்டை எழுத்துகளில் 70 லட்சம் எனும் பிம்பம் தான் ஏற்படுத்தப்படும். இது ஏன்?
இந்தியாவின் மக்கள் தொகை என்ன? என்று கேட்டால் 130 கோடி என்று சொல்வீர்களா? அல்லது இதுவரை இந்த நாட்டில் பிறந்தவர்கள், இருந்தவர்கள், இறந்தவர்கள் அனைவரையும் கணக்கு கூட்டி மொத்தமாக சொல்வீர்களா?
மக்கள் மீதுள்ள அக்கரையால் தான் என்று நினைக்கலாமா? அதாவது இப்படி பீதியூட்டினால் தான் முடக்கத்தை மதித்து நடப்பார்கள் என்பதாக நினைக்கலா? மறந்தும் கூட அப்படி நினைத்து விட முடியாது. ஏனென்றால் தினம் தினம், கணத்துக்கு கணம் நாங்கள் மக்கள் விரோதிகளே என்று நீரூபித்துக் கொண்டிருப்பவை தான் அரசும், அரசாங்கமும். எனவே, ஏனைய காரணங்களைச் சிந்திப்போம்.
அதாகப்பட்டது, “பேய் உலாத்துன்னு பயங்காட்ணா தாண்டா புதயல தேட மாட்டாங்க” அம்புட்டுதேன்
செய்திகள் சுவாசிப்பது: 19/2020