
செய்தி:
பயோ மெட்ரிக் முறை கடந்த 1-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், அதனால் சில சிக்கல்களும் ஏற்பட்டுள்ளது. அதாவது சிலரின் கைரேகைப் பதிவு ஆதார் அட்டையுடன் உள்ள கைரேகையுடன் ஒத்துப் போகாமல் பொருள்கள் மறுக்கப்படுகின்றன. பயோ மெட்ரிக் முறையில் கைரேகை ஒத்துப் போகாத நபா்களுக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தும் ரகசியக் குறியீடு எண் (ஓ.டி.பி.) அனுப்பப்படும். அதனைப் பயன்படுத்தி உணவுப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட எண்ணுக்கு ஓ.டி.பி. சரியாகச் சென்று சேரவில்லை என்றால், குடும்ப அட்டையுடன் (ஸ்மார்ட்கார்டு) இணைக்கப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு ஓ.டி.பி. அனுப்பப்பட்டு பொருள்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், இணையதள வேகம் குறைவாக இருப்பதால், ‘சா்வரில்’ இருந்து தகவல்களைப் பெறுவதற்கு காலதாமதம் ஆகிறது. சில நேரங்களில் ஒரு நபருக்கு 10 நிமிஷங்களுக்கு மேலாக காலதாமதம் ஆவதால் பொருள்கள் வாங்க வந்தவா்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்தப் பிரச்னை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நியாய விலைக் கடைகளில் கடந்த சில நாள்களாகவே நீடித்து வருகிறது. தருமபுரி, சென்னை, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பொருள்கள் வாங்க தாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் கடைகளின் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சா்வா் குளறுபடியால் மொத்தமாக பொருள்கள் வாங்குபவா்களின் எண்ணிக்கை குறைகிறது என்றும் கடை ஊழியா்கள் தெரிவித்தனா். எனவே, சா்வரின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று நியாய விலைக் கடை ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செய்தியின் பின்னே:
இந்த ஒரு நாடு ஒரு ரேஷன் திட்டம் சரியா? என்பதை இங்கு தவிர்த்து விடுவோம் (விரும்பினால் இந்த இணைப்பில் படிக்கலாம்) இப்படி ஒரு திட்டம் செயல்படுத்தப்படும் போது, 1. இணைய இணைப்பு இல்லாமல் போனால் என்ன செய்வது? 2. வழங்குனர்கள் (செர்வர்) இணைய இணைப்பு ஏற்படுத்த தாமதமானால் என்ன செய்வது? 3. உள்ளிடும் கருவி பழுதானால் என்ன செய்வது? போன்ற சிக்கல்களை எப்படி எதிர் கொள்வது என்பதற்கு எந்த மாற்றுத் திட்டத்தையும் அரசு முன் வைக்கவில்லை. நாட்டின் பல இடங்களில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு மக்களும் நியாயவிலைக் கடை ஊழியர்களும் திண்டாடி இருக்கிறார்கள்.
ஏன் இது குறித்து அரசு சிந்திக்கவில்லை? அரசு ஒருபோதும் மக்கள் குறித்து சிந்திப்பதே இல்லை. ஆனால் மக்களுக்காகவே திட்டங்கள் கொண்டுவரப்படுவதாக நடிப்பார்கள், பசப்புவார்கள். நியாவிலைக் கடைகளை ஒழிக்க வேண்டும் என்பது பன்னாட்டு நிறுவனங்கள் அளித்திருக்கும் கட்டளை, அதை சிறுகச் சிறுக உணவுப் பாதுகாப்புச் சட்டம், ரேசன் அட்டைகளை வகைப்படுத்தும் திட்டம், ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் என்று ஏமாற்றுப் பெயர்கள் மூலம் செயல்படுத்துகிறார்கள். இது தான் உண்மை எனும் போது மக்களின் சிக்கல்கள் எப்படி அரசின் செவிகளில் எப்படி ஏறும்?
ஒரு லிட்டர் எண்ணெய், ஒரு கிலோ பருப்பு வழங்குவதில் முறைகேடு நடந்து விடக்கூடாது என்று கண்காணீப்பதற்காக இது போன்ற திட்டங்கள் தேவைப்படுகிறது எனக் கூறும் அரசு, பல்லாயிரம் கோடிகளை கொள்லையடித்து விட்டு வெளிநாடுகளில் சென்று சொகுசாக வசிப்பவர்களை தடுக்க இது போன்ற ஏதேனும் திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறதா?
அதாகப்பட்டது, “சீப்ப காணோம்னு அலப்பரை பண்ணி தேட வச்சுட்டு, கல்யாணப் பொண்ண லவட்டிக்கிட்டு போறதுன்னு சொல்வாங்க” அம்புட்டுதேன்
செய்திகள் சுவாசிப்பது: 20/2020