செய்தி:
கடந்த திங்கள் அன்று தி மீடியா ஃபவுண்டேசன், பிஜி வர்கீஸ் நினைவு கருத்தரங்கு 2020 என்ற காணொலி நிகழ்வினை ஒருங்கிணைத்திருந்தது. உச்சநீதி மன்றத்தின் முன்னள் தலைமை நீதிபதி மதன் பி.லோக்கர் கருத்தரங்கில் கலந்துகொண்டு, ’பேச்சு மற்றும் கருத்து உரிமை, எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை உள்ளிட்ட நமது அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது’ என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளார். ”சட்டத்தை முழுவதுவாக துஷ்பிரயோகம் செய்யாவிட்டலும் கூட, சட்டத்தை திரித்துக் கையாள்வதால் நம்முடைய பேச்சு உரிமை படிப்படியாக அழிக்கப்பட்டு வருகிறது. வேறு எந்த ஜனநாயகத்திலும் இல்லாதவாறு, நீண்ட காலத்துக்கு இணையத்தைத் துண்டித்து அரசு பலமுறை பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை தடை செய்துள்ளது.”
ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிர் இழந்த வழக்கில், “ஹத்ராஸ் சம்பவம் குறித்து ஊடகங்கள் எந்தத் தகவலும் வெளியிடக் கூடாது என்ற கண்ணோட்டத்தில் அரசாங்கம் 144 தடை உத்தரவு பிறப்பித்து, சில நூறு காவலர்களைக் கொண்டு மொத்த இடத்தையும் முற்றுகையிட்டு தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது.”
”இதுபோன்ற அணுகுமுறை மூலம், அரசு சட்டத்தை தவறாக பயன்படுத்தி பத்திரிக்கைச் சுதந்திரத்தை மீறுகிறது. கருத்துக்கள் தெரிவிப்பதால் கைதும் நீதிமன்ற விசாரணையுமே மிஞ்சும் எனும்போது, பத்திரிக்கையாளர்கள் அச்சமின்றி செயல்பட முடியுமா?”
இந்தியாவில் ஏறத்தாழ அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், தேச துரோக வழக்கினை ஆயுதமாகக் கையாண்டு அரசாங்கத்தை விமர்சிப்பவர்களின் குரல்களை ஒடுக்குகிறதென்றும், இந்த ரீதியிலான வழக்குகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தனிநபர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்வது என்பது பேச்சு சுதந்திரத்தை அழிப்பதற்கான மிக மோசமான வழி எனவும் ஓய்வுபெற்ற நீதிபதி மதன் லோக்கர் குற்றம் சாட்டியுள்ளதாக ஃபர்ஸ்ட் போஸ்ட் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
செய்தியின் பின்னே:
தேசத் துரோக வழக்கு என்பது, இந்தியாவை தங்கள் காலனி நாடாக பிரிட்டீஸ் வைத்திருந்த போது, சுதந்திரப் போராட்டங்களை ஒடுக்குவதற்காக கொண்டு வந்த சட்டம். அதை இன்னும் வைத்துக் கொண்டிருப்பது, இந்தியா சுதந்திர நாடல்ல என்று கூறுவதற்கான சான்று அளித்துக் கொண்டிருக்கிறது.
காவல்துறையும் நீதித்துறையும் இணைந்து இந்த நாட்டின் கருத்துரிமையை, பேச்சுரிமையை மட்டுமல்ல, மக்களின் ஒட்டு மொத்த சுதந்திர உணர்வையும் பறித்துக் கொண்டு இருக்கிறது. மக்கள் பொதுப் பிரச்சனைக்காக மட்டுமல்ல தங்கள் சொந்தப் பிரச்சனைக்காகக் கூட சமூகமாக இணைவதை தடுக்கும் தடைக்கல்லாக அந்தக் கூட்டு மாறி இருக்கிறது.
மக்கள் தங்கள் இயல்பான சமூக உணர்வை போராட்ட உணர்வை வெளிப்படுத்தக் கூட காவல்துறை நீதித்துறை கூட்டை உடைப்பதும், காவல்துறையின் அதிகாரத் திமிரை அடக்குவதும் முன்நிபந்தனையாக இருக்கிறது. தேசத்துரோக வழக்கு என்பது அதில் ஒரு பகுதி அவ்வளவு தான். இப்படி இதை புரிந்து கொள்வது தான் சரியானது, பொருத்தமானது, தேவையானது.
அதாகப்பட்டது, “நரிய காவலுக்கு வச்சா கிடைக்கு ரெண்டாடு கேக்கத் தான் செய்யும்” அம்புட்டுதேன்.
செய்திகள் சுவாசிப்பது: 22/2020