நமக்குள் நாமே கேட்போம்!

அன்பார்ந்த தோழர்களே,

இன்று நவம்பர் 7. உலகெங்கிலுமுள்ள மக்களுக்கு – அவர்கள் அறிந்திருந்தாலும், அறியாதிருந்தாலும், – அதுவரையிலான வரலாற்றில் மக்களின் நல்வாழ்வுக்கான விதை ஊன்றப்பட்ட நாள். ரஷ்யப் புரட்சி நாளின் சிறப்பை இப்படி சொற்களுக்குள் சிறைப்படுத்தி விட முடியாது. என்றாலும், இந்த நாளை உணர்வு பொங்க கொண்டாடுவதற்கும், இங்கும் ஒரு புரட்சியைச் சமைப்போம் என்று சூளுரை ஏற்பதற்கும், இந்திய கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்கிற நமக்கு தகுதி இருக்கிறதா? என்பது மிகப் பெரிய, பொருள் பொதிந்த, எதிர்கொள்ள அஞ்சும் கேள்வியாக நம்முன் நின்று கொண்டிருக்கிறது.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் கடந்து விட்டது. இன்னமும் புரட்சியை நாம் அணைத்துக் கொள்ள இயலவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஏனென்றால், அது சமூக ஆய்வுகளிலிருந்து விரிவாக விடையளிக்கப்பட வேண்டிய கேள்வி. ஆனால் புரட்சியின் திசையை நோக்கி எத்தனை எட்டுகள் நாம் எடுத்து வைத்திருக்கிறோம். திரும்பிப் பார்த்து எண்ணிச் சொல்ல முடியுமா நம்மால்? வெறுமையாக பெருமூச்சு விட்டுக் கொண்டே, ஆண்டு தோறும் கொண்டாடுவதும், சூளுரை ஏற்பதும் மிகவும் நீர்த்துப் போன சடங்காகி விட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பிறகு தொடங்கப்பட்ட வலதுசாரி இயக்கங்கள் கூட இன்று வலுவான அடித்தளங்களைக் கொண்டிருக்கின்றன. ஆனால், இயங்கியல் ஏணியைப் பற்றிக் கொண்டு ஏறிச் சென்றிருக்க வேண்டிய இடதுசாரி இயக்கங்களோ பள்ளங்களில் படுத்துக் கொண்டு, பகல் கனவுகளுக்கு வண்ணமடிக்க முயன்று கொண்டிருக்கின்றன. இதற்கு பொறுப்பேற்றுக் கொள்ள, தன்னைத் தானே தன்னாய்வுக்கு உட்படுத்திக் கொள்ள, மக்களுக்கு விடை கூற, தங்களை கம்யூனிஸ்ட் என்று கருதிக் கொள்ளும் அத்தனை பேருக்கும் கடமை இருக்கிறது. வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம் என்பது, தான் வாழும் காலத்தில் சமூகம் எழுப்பும் கேள்விகளுக்கு சரியான, பொருத்தமான விடையளிப்பதில் தான் இருக்கிறது.

வசந்தத்தின் இடிமுழக்கம் என சீன கம்யூனிஸ்ட் கட்சியால் வரவேற்பு அளிக்கப்பட்ட விவசாயிகள் எழுச்சிக்குப் பிறகிலிருந்து இன்றைய மா.அ.க குழப்பங்கள் வரை எத்தனை பிளவுகள், எத்தனையெத்தனை பிரிவுகள். அத்தனையிலும் அடியூக்கியாக இருந்தது, இருப்பது, கோட்பாட்டு சாயம் பூசப்பட்ட அல்லது நேரடியாக வெளிப்பட்ட தனியாள் வாதங்கள், குறுங்குழு வாதங்கள். இவைகளுக்கு சிக்கெடுப்பதும், இனி நேராமல் இருப்பதற்கு சீயக்காய் போடுவதும் யாரோ செய்வர் என்று அமைதியடைவது, தனக்குத் தானே இழைத்துக் கொள்ளும் தீங்காகும்.

இரண்டு கேள்விகளுக்கு நாம் விடை தேட வேண்டியதிருக்கிற்து.

1. இந்திய இடதுசாரி இயக்கங்கள் ஏன் கம்யூனிச இயக்கங்களாக செயல்பட முடியவில்லை?

2. இந்திய இடதுசாரி இயக்கங்கள் ஏன் மக்களிடம் செல்வாக்கு செலுத்த முடியவில்லை?

இரண்டும் வேறு வேறு கேள்விகளாக இருந்தாலும் ஒரே அடிப்படையிலிருந்து கிளைத்தவையே.

இந்திய அளவில் இருபெரும் இடதுசாரி இயக்கங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இகக, இகக(மா) ஆகிய இரண்டுக்குமே புரட்சியை நடத்துவது, உற்பத்தி முறையை மாற்றியமைப்பது என்பவை இலக்காகவும், நோக்கமாகவும் இல்லை என்பதால் அவைகளை விலக்கி விடலாம்.

மார்க்சிஸ்டு கட்சியிலிருந்து பிரிந்து, நக்சல்பாரியில் தொடங்கி இன்றைய மாஅக வரையில் தங்களை புரட்சிகர கம்யூனிஸ்டுகளாக கருதிக் கொள்ளும் அனைவராலும் ஏன் ஒரே அமைப்பாக செயல்பட முடியவில்லை? ஏன் உடைந்து உடைந்து நொருங்கிப் போனார்கள்? ஒவ்வொரு பிளவையும், அதன் காரணங்களாக கூறப்பட்டவைகளையும் ஆராய்ந்து பார்த்தால், தொகுத்துப் பார்த்தால், ஒரே ஒரு விடைக்குத் தான் நாம் வந்தடைய முடியும். அது இந்திய சமூகம் குறித்த புரிதல் இன்மை அதாவது, இந்திய சமூகம், உற்பத்தி முறை குறித்து முழுமையான, சரியான, பொருள்முதல்வாத கண்ணோட்டத்திலான ஆய்வுகள் செய்யப்படாமை என்பது தான். குறிப்பாக, இந்திய மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சாதிய அமைப்புமுறை குறித்து பருண்மையான ஆய்வுகள் செய்யப்படவில்லை. மாறாக, தனித்தனி தலைப்புகளில் தனிநபர்கள் செய்த ஆய்வுகளில் இருந்து பெறப்பட்ட முடிவுகள், மார்க்சியரல்லாதோரால், மார்க்சியக் கண்ணோட்டமின்றி செய்யப்பட்ட ஆய்வுகளின் பரப்பெல்லைகளை மீறமுடியாமல் சிக்குண்டு கிடந்தது, ஆசான்களின் நூல்களிலிருந்து கொஞ்சம் மேற்கோள்கள் என்று தொகுத்துக் கொண்டது ஆய்வுகளாக நம்பப்பட்டது. இந்த தொகுப்புகளின் அடிப்படையிலேயே போர்த்தந்திரமும், செயல்தந்திரமும் வகுக்கப்பட்டன. அவை மக்களை எதிரொலிக்காமல், மக்களால் எதிரொலிக்கப்படாமல் போனதன் விளைவுகள் தான் தனியாள் வாதங்களாக, குறுங்குழு வாதங்களாக அமைப்புகளில் வெளிப்பட்டது, வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்திய கம்யூனிச இயக்கம் நூறாண்டுகளை கடந்தும் வெறும் கல்லாக நின்று கொண்டிருக்கிறது என்றால் அதற்கு முழுமையான, முதன்மையான காரணம் இது தான். இதன் இருவேறு விளைவுகள் தான் கம்யூனிச இயக்கமாக செயல்பட முடியாமல் போனதும், மக்கள் மீது செல்வாக்கு செலுத்த முடியாமல் போனதும் ஆகும். எனவே, உடனடியாக இந்திய சமூகம் குறித்த ஆய்வுகள், தொல்லியல் அடிப்படையில், கல்வெட்டுகள் அடிப்படையில், புராணங்களிலிருந்து அல்ல, எளிய மக்களின் சொலவடை, கதைப்பாடல்கள் இருந்து தொகுக்கப்பட வேண்டும். அது முரண்பாடின்றி அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இதற்கு தன்னை கம்யூனிஸ்ட் என்று ஏற்றுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் இந்த ஆய்வுகளுக்கு தம்மாலான பங்களிப்பு என்ன என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

அடுத்து, இன்றைய நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன? எனும் கேள்வியும் இன்றியமையாதது.

1. இங்கு கைக் கொள்ளப்பட்டிருக்கும் போராட்ட வடிவங்கள் அனைத்துமே மக்களின் நிலைக்கு நேர் எதிரானதாக இருக்கிறது. மக்கள் விருப்பத்துடன் பங்கெடுக்கும் புதிய போராட்ட வடிவங்களை கண்டுபிடிக்க வேண்டும். இதற்கும் மக்களே வழிகாட்டி இருக்கிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில், வங்கிகளிலிருந்து கணக்கை முடித்து பணத்தை திரும்பப் பெற்றார்கள். இது குறிப்பிட்ட அளவில் அரசுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியது. மெரினா எழுச்சியின் போது (ஜல்லிக்கட்டு சரியானதா? என்.ஜி.ஓக்களின் பங்களிப்பு போன்றவைகளுக்கு அப்பாற்பட்டு) மக்கள் ஒரு சுற்றுலா போவது போல் கருதிக் கொண்டு போராட்டத்தில் பங்களித்தார்கள். இந்த மனோநிலையை குலைப்பதற்காகவே இறுதியில் காவல் துறை கலவரத்தில் ஈடுபட்டது. இப்படிப்பட்ட புதிய புதிய போராட்ட வடிவங்கள், மக்களுக்கு இழப்பையோ துன்பத்தையோ தராத அதேநேரம் அரசுக்கு நெருக்குதலை ஏற்படுத்தும் போராட்ட வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

2. அரசின், மக்களுக்கு எதிராக எதையும் எளிதாக செய்ய முடியும் எனும் இறுமாப்பை ஒடுக்க வேண்டும். குறிப்பாக, காவல் துறையும், நீதித் துறையும் கள்ளத்தனமாக கை கோர்த்துக் கொண்டு செய்யும் அநீதிகளுக்கு முடிவுகட்டியே ஆக வேண்டும். யாரை வேண்டுமானாலும், எந்த சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல், விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தி கொலை வரை செய்ய முடியும் என்ற நிலை இருக்கிறது. ரகசிய காவல் பிரிவினரைக் கொண்டு யாரையும் குற்றவாளியைப் போல் சித்தரிக்க முடியும் எனும் நிலை இருக்கிறது. நீதி மன்றங்களில் யாரைக் கொண்டுவந்து நிறுத்தினாலும், செய்த குற்றம் என்ன? அது பொய் வழக்கா இல்லையா? நீதிமன்றக் காவலுக்கு அனுப்பும் அளவுக்கு குற்றத்தின் தன்மை இருக்கிறதா? கைது செய்யும் போது விதி முறைகள் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறதா? இல்லையா? என்பது போன்ற எந்தக் கேள்விகளும் இல்லாமல் ஒரு சடங்கைப் போல் 15 நாட்கள் நீதி மன்றக் காவல் என்று உத்தரவிடும் நிலை இருக்கிறது. எந்த இயக்கங்களோடும் தொடர்பு கொள்ளாத, சமூகச் சிந்தனையுள்ள, போராட்டங்களில் பங்கெடுக்க வேண்டும் எனும் எண்ணமுள்ள பெரும்பாலானோரை போராட்டங்களிலிருந்து விலக்கி வைப்பது இந்தக் கள்ளக் கூட்டு தான். இந்தக் கூட்டை அடித்து நொறுக்காதவரை எந்தப் போராட்டங்களும் அதற்குறிய பலனை அளிக்காது. எனவே, முதலாளித்துவம் வழங்கியுள்ள போராடுவதற்கான சட்டரீதியான உரிமைகளை மீட்டெடுக்கும் வழிமுறைகளை ஆராய்ந்தாக வேண்டும்.

3. மக்களின் போராடும் குணத்தை நீறு பூக்கச் செய்யும் நிலமை என்ன? பலநூறு ஆண்டுகளாக இந்த சமூகத்தில் தொடர்ந்து வரும் சாதிய அடுக்குமுறை மனோநிலை இதில் முதன்மையான பங்கு வகிக்கிறது. இதை எதிர் கொள்வதற்கு தகுந்த வழிமுறைகளை உருவாக்கியே ஆக வேண்டும். சாதிய அடுக்குமுறை அடிக்கட்டுமானத்தில் இருக்கிறதா? மேல் கட்டுமானத்தில் இருக்கிறதா? சோசலிச உற்பத்தி முறை நிலைபெறும் காலம் வரை சாதி,மத அமைப்புகள் நீடிக்கவே செய்யும் என்பன போன்ற தத்துவம் சார்ந்த உண்மைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். யதார்த்தத்தில் இந்த ஒடுக்குமுறைகளை எதிர்ப்பதற்கும், தங்களை காத்துக் கொள்வதற்கும் மக்களுக்கு என்ன கருவி இருக்கிறது? அப்படி ஒரு கருவியை உருவாக்குவது கம்யூனிஸ்டுகளின் கடமை இல்லையா?

4. சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்ப்பதற்கும் காத்துக் கொள்வதற்குமான தனிப்பட்ட கருவி என்று எதுவும் இருக்க முடியாது. இது பொருளாதாரம் சார்ந்தே இருக்க முடியும். பொதுவாக இந்தியப் பொருளாதாரம் என்று அறியப்படுவது, வெகு நிச்சயமாக எளிய மக்களின் பொருளாதாரம் இல்லை. கார்ப்பரேட் பொருளாதாரத்தின் அடிப்படை அலகாக இருப்பது தான் வெகுமக்களின் பொருளாதாரம். இந்த அடிப்படை பொருளாதாரத்தை உருஞ்சி எடுக்கும் ஒட்டுண்ணியாக இருப்பது தான் கார்ப்பரேட் பொருளாதாரம். ஆனால் பொருளாதாரத்தின் அனைத்து வளங்களையும், சலுகைகளையும், வாய்ப்புகளையும் அபகரித்துக் கொண்டு எளிய மக்களை அல்லாட வைத்திருக்கிறது கார்ப்பரேட் பொருளாதாரம். இதை மாற்றி, உழைக்கும் மக்களுக்கு அவர்களின் பொருளாதார நிச்சயத் தன்மையை ஏற்படுத்தும் விதத்தில் அந்தந்த பகுதியளிவில் திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்த வேண்டும். தங்களுக்கான வேலை வாய்ப்பை தாங்களே உருவாக்கிக் கொள்ளும் விதத்தில் தங்களுக்குள்ளே அவர்கள் ஒருங்கிணைய வேண்டும். இதற்கான வேலைகளை கம்யூனிஸ்டுகளைத் தவிர வேறு யாராவது செய்ய முடியுமா?

5. மக்களை சந்திக்கும் முறையில் பெரும் மாற்றத்தை செய்ய வேண்டியதிருக்கிறது. இப்போதுள்ள இயக்கங்கள், – அது எந்த இயக்கமாக இருந்தாலும் – மக்களில் யார் விதி விலக்குகளாக இருக்கிறார்கள் என்று தேடிக் கொண்டிருக்கின்றன. நடப்பு சமூகத்தின் தாக்கத்துக்கு ஆட்படாமல் சிந்திப்பவர்கள் இன்றைய காலகட்டத்தில் விதி விலக்குகளே. இத்தகைய விதி விலக்குகளை தேடி அடைவது கடினமாக இருக்கிறது என்பது ஒருபுறம். இப்படியான விதிவிலக்குகளை தேடி கண்டடைந்து அமைப்பை கட்டி அதன் மூலம் சமூகத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தி விட முடியும்? பெருவாரியான மக்கள், அமைப்பு, கட்சி, போராட்டம், புரட்சி, சமூக முன்னேற்றம் போன்ற சொற்களைக் கேட்டாலே அது நம் வாழ்வோடு தொடர்பற்ற ஏதோ ஒன்று என்பதாகத் தான் புரிந்து கொள்கிறார்கள். எதிர்கால வாழ்வு அவர்களின் கழுத்தில் கத்தியை வைத்திருக்கும் போது அவர்கள் சமூக முன்னேற்றம் குறித்து சிந்திக்க வேண்டிய தேவையும் இல்லை. அவர்களின் பிரச்சனைக்கு தோள் கொடுக்கிறோம் என்று பிரச்சனைகளின் மூலம் அணி திரட்ட முனைவதும் பொருத்தமற்றது என்பதை காலம் வெளிப்படுத்தி இருக்கிறது. எனவே, பொருளாதார முயற்சிகளின் வழி மட்டுமே அவர்களை உவகையுடன் அணி திரட்ட முடியும். மட்டுமல்லாது, சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் இதை செயல்பட வைக்க முடியும்.

6. வங்கி என்பது கார்ப்பரேட் பொருளாதாரத்தின் அடிப்படைகளில் ஒன்றாக இருக்கிறது. ஆனால் அந்த வங்கிகளை வாழ வைத்துக் கொண்டிருப்பது உழைக்கும் மக்களின் சிறு சேமிப்பே. இந்த சிறுசேமிப்பை வெளியில் எடுத்து கூட்டு நிறுவனங்களை தொடங்க வேண்டும். இது சிக்கல் மிகுந்தது தான். என்றாலும் அதை சாத்தியப்படுத்தும் வழிமுறைகளை கண்டறிய வேண்டும். மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் பொருட்களின் விற்பனையில் தொடங்கி அவைகளை உற்பத்தி செய்வதன் வழியாக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும். இதை வளர்த்தெடுத்து முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள் இருக்கும் சோசலிச உற்பத்தி உறவுகளின் சமூகம் போல மாற்ற முடியும். இது கடினமானது என்பது மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என்று வழக்கமான சகதிக்குள் சுற்றிக் கொண்டிருப்பதை விட, அந்தந்தப் பகுதிகளில் ஓரளவுக்கு செல்வாக்குள்ள அமைப்புகள் இதை மிக மிகச் சிறிய அளவில் முயற்சித்தால் வெற்றியை நோக்கி நகர முடியும். இதன் மூலம் மக்களின் எதிர்காலம் குறித்த நிச்சயமின்மைக்கு ஓர் இளைப்பாறுதலை அளிக்க முடிவதுடன் வங்கிகளையும் நெருக்கடிக்குள் தள்ள முடியும்.

மேற்கண்டவைகள் போன்ற திட்டங்கள் சமூக ஆய்வுகளின் வழி நின்று எடுக்கப்பட வேண்டியவைகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் கடந்த நூறு ஆண்டுகளாக அவ்வாறான எந்த அடிப்படைகளுமின்றி யூகத்தில் செய்யப்பட்ட திட்டங்கள் பெருந்தோல்வியை பரிசளித்திருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. மாறுவோம், மாற்றுவோம். பிறருடன் முடி பிளக்கும் வாதங்களில் ஈடுபடுவதை விட நமக்கு நாமே உள்வசமாக கேள்விகளை எழுப்புவோம், மாற்றங்களைச் சிந்திப்போம். அது தான் புரட்சி நாளை கொண்டாடுவதற்கும் சூளுரைப்பதற்கும் நம்மை தகுதி உடையவர்கள் ஆக்கும்.

ஆயிரம் பூக்கள் மலரட்டும்.

2 thoughts on “நமக்குள் நாமே கேட்போம்!

  1. வணக்கம் தோழர் செங்கொடி

    புது இணையதளத்தின் வடிவமைப்பு சிறப்பு. படிக்கும் போது கண்களை உறுத்தவில்லை தோழர்.

    சனி, 7 நவ., 2020, முற்பகல் 11:49 அன்று, WordPress.com எழுதியது:

    > செங்கொடி posted: ” அன்பார்ந்த தோழர்களே, இன்று நவம்பர் 7. உலகெங்கிலுமுள்ள > மக்களுக்கு – அவர்கள் அறிந்திருந்தாலும், அறியாதிருந்தாலும், – அதுவரையிலான > வரலாற்றில் மக்களின் நல்வாழ்வுக்கான விதை ஊன்றப்பட்ட நாள். ரஷ்யப் புரட்சி > நாளின் சிறப்பை இப்படி சொற்களுக்குள் சிறைப்படுத்தி வி” >

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s