செய்தி:
இஸ்லாமிய நாடுகளில் மதச்சட்டங்கள் கடுமையாக இருக்கும் என்பது உலகம் அறிந்ததே. காலம் மாறினாலும், நவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொண்டாலும் மதச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வர எந்தவொரு இஸ்லாமிய நாடும் தயக்கம் காட்டும். தற்போது ஐக்கிய அரசு அமீரகம் நவீன காலத்திற்கு ஏற்ப என்று சொல்லும் விதத்தில் இல்லையென்றாலும் மிகவும் புராதனமான இஸ்லாமிய சட்டங்களில் இருந்து சற்று விலக முடிவு செய்திருக்கிறது. தனிநபர் சுதந்திரம் தொடர்பான சட்டங்களில் நவம்பர் ஏழாம் தேதியன்று ஐக்கிய அரபு அமீரகம் சீர்திருத்தங்களை அறிவித்தது. அந்நாட்டு அரசின் எமிரேட்ஸ் நியூஸ் ஏஜென்ஸி (Emirates News Agency) இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. திருமணம் செய்துக் கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது சட்டப்படி செல்லும் என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. இது மிகப் பெரிய சீர்திருத்தமாக இருக்கும். திருமணம் செய்துக் கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதும், எந்தவித தொடர்பும் இல்லாதவர்கள் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வதும் குற்றம் என்று சொல்லப்பட்டது. தற்போது, இந்த சீர்திருத்தம் இஸ்லாமிய நாட்டு சீர்திருத்தத்தின் மைல்கல் என்றே சொல்லலாம்.
செய்தியின் பின்னே:
மாறாத எதுவும் நிலைக்க முடியாது என்பது அறிவியல். எக்காலத்துக்கும் மாறவே மாறாது என்பது மதம். அறிவியல் என்பது யதார்த்தம், மதம் என்பது கற்பனை. யதார்த்தத்துடன் கற்பனை பொருத முடியாது. எனவே, கற்பனை நெகிழ்ந்தே ஆக வேண்டும். இதற்கு இஸ்லாம் மதமும் விதி விலக்கல்ல.
ஏற்கனவே, வட்டிக் கணக்கு எழுதுவது ஹராம் என்றிருந்த மத நிலைப்பாட்டில் வங்கியில் வேலை செய்வது ஹராம் ஆகாது என நெகிழ்வு செய்யப்பட்டிருக்கிறது. இப்போது ஐக்கிய அமீரகத்தில் திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழ முடியும் என சட்ட ஏற்பு வழங்கி இருப்பது மாற்றம் எனும் அடிப்படையில் வரவேற்கத் தக்கது.
அதேநேரம், லிவிங் டுகதர் எனும் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்வது எனும் கலாச்சாரம் சரியா? என்றால் அது ஏற்புடையதல்ல. காரணம்,
லிவிங் டுகதர் எனும் சேர்ந்து வாழ்தல் கலாச்சாரம் மாநகர்களில் பரவிவருகிறது. இது தோற்றத்தில் முற்போக்கானதாக தோன்றினாலும் உள்ளீட்டில் விகாரங்கள் இருக்கின்றன. ஆகவே இது ஏற்கத்தக்கதல்ல.
நாம் திருமணம் செய்து உறவு கொள்ளும் காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். திருமணம் என்பது ஆணாதிக்க வடிவமே என்றாலும், ஆணாதிக்கத்தை எதிர்த்து ஏற்பட்ட சமரசம் எனலாம். சமூகத்தில் பெண்களின் பங்களிப்பும், முதன்மைத்தனமும் பறிக்கப்பட்டு பெண் அடிமைப்படுத்தப்பட்ட போது, ஆண்களின் பலதார வேட்கையினால் பெண்கள் சிதைக்கப்பட்டனர். இந்த பலதார வேட்கை ஒவ்வொரு சமூக மாற்றத்திலும் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இதை எதிர்த்து போராடிய பெண்களின் தெரிவாகத்தான் காதலும், திருமணமும் வருகின்றன. ஆணாதிக்க வடிவமாக இருந்தாலும் பெண்களின் தெரிவாக இருப்பதால் அது மீறப்பட்டே வந்திருக்கிறது, மீறும் வாய்ப்பை தொடர்ந்து எதிர்நோக்கிக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சேர்ந்து வாழ்தல் என்பது பலதார வேட்கையை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. அதேநேரம் முதலாளித்துவ ஜனநாயகத்தன்மையின் தாக்கம், சேர்ந்து வாழ்தலில் பெண்களுக்கும் அந்த உரிமையை வழங்குவதுபோல் தோற்றம் காட்டுகிறது. இந்த அடிப்படையிலேயே ஆணுக்கும் பெண்ணுக்கும் சமவாய்ப்பை வழங்குவதுபோல உருவகித்துக்கொண்டு முற்போக்காக முன்தள்ளுகிறார்கள்.
நடப்பு ஆணாதிக்க உலகில் பெண்களுக்கென்று எந்தப் பாதுகாப்பும் இல்லாத நிலையில் சேர்ந்து வாழ்தல் எனும் வடிவம் பெண்களுக்கு எந்த பயனையும் தந்துவிடாது, மாறாக பாதிப்புகளையே ஏற்படுத்தும். ஆண் பெண் ஈர்ப்பு என்பது ஆணாதிக்க, முதலாளித்துவ விழுமியங்களிலேயே இன்னும் தங்கியிருக்கிறது. சமூகமும், சூழலும் ஆணும் பெண்ணும் சமம் எனும் மதிப்பிற்கு வந்துவிடவில்லை. இத்தகைய சூழலில் பெண்ணுக்கு சற்று பாதுகாப்பை வழங்கும் திருமண வடிவத்தை உதறுவது ஆண்களுக்கே சாதகமான ஒன்றாக அமையும்.
அதேநேரம், ஆணாதிக்க வடிவமாகிய திருமண முறை அப்படியே தொடர்ந்து நீடித்துக்கொண்டிருக்கவும் முடியாது. உள்ளீடுகளை நீக்கிவிட்டு வடிவத்தை மட்டும் கணக்கிலெடுத்துக் கொண்டால் ஒப்பீட்டளவில் திருமண முறையை விட சேர்ந்து வாழ்தல் முறை முற்போக்கானதுதான். ஆனால் சேர்ந்து வாழ்தல் முறை சாராம்சத்தில் இருபாலருக்கும் சரியான பலனில் நடப்பிற்கு வரவேண்டுமென்றால் குறைந்தபட்சம் இரண்டு அம்சங்கள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.
1) ஆணாதிக்கம் நீக்கப்பட்டு ஆணும் பெண்ணும் சமம் எனும் நிலை ஏற்பட்டிருக்க வேண்டும்,
2) குழந்தைகளை வளர்ப்பதும், பராமரிப்பதும் பெற்றோரின் கடமை என்பதிலிருந்து விடுபட்டு அரசின் கடமை என்றாக வேண்டும்.
இந்த இரண்டும் முதலாளித்துவ அமைப்பான இன்றைய உலகில் சாத்தியமில்லை என்பதால் லிவிங் டுகதர் எனும் சேர்ந்து வாழ்தல் ஏற்கத்தக்கதல்ல.
அதாகப்பட்டது, “அடிமேல் அடி விழுந்தால் அம்மியும் நகரும்” அம்புட்டுதேன்