டார்க் வாட்டர்ஸ்: மக்களுக்கு மக்களே காவல்

“அவர்கள் போராடுவது இனி பயனற்றது என இந்த உலகிற்கு சொல்ல நினைக்கிறார்கள்(…) அதற்காகத்தான் இதைச் செய்கிறார்கள்.  இந்த சமூக அமைப்பு ஒரு மோசடி; நம்மை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்த சமூக அமைப்பு நம்மை  காப்பாற்றவில்லை; இந்த அரசு, இந்த விஞ்ஞானிகள் யாரும் நம்மை காப்பாற்றவில்லை. நாம்தான் நம்மை பாதுகாத்துள்ளோம். மக்கள்தான் மக்களைப் பாதுகாத்துள்ளோம்.”

டார்க் வாட்டர்ஸ் திரைப்படத்தின் இறுதிக் காட்சிக்கு முன்பாக வரும் காட்சியின் வசனங்கள் இவை.  சூழலியல் பற்றிய ஒரு திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது இந்த டார்க் வாட்டர்ஸ். டொட் ஹென்ஸ் (Todd Haynes) இயக்கத்தில்(இதற்கு முன்னர் ஃபர் ஃப்ரொம் ஹெவன்(Far From Heaven), கரொல்(Carol) திரைப்படங்கள்  வழியாக அறியப்பட்டவர்) மார்க் ரஃபெல்லோ(Mark Ruffalo), அனி ஹாத்தவே (Anne Hathaway) நடித்து கடந்த வருடம் நவம்பரில் வெளியானது  இந்தத் திரைப்படம்.

இந்தத் திரைப்படம்  “டுபாண்ட் நிறுவனத்தின் கொடுரக் கனவாகிய வழக்கறிஞர் (The Lawyer Who Became DuPont’s Worst Nightmare)” என்ற தலைப்பில் நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளிவந்த கட்டுரையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.            

டுபாண்ட்  1802–ம் ஆண்டு அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட வேதியியல்(chemical ) நிறுவனம். இந்த நிறுவனம் 1940–களின் இராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் டாங்கிகளில் நீர் புகா தன்மைக்காக மனிதனால் உருவாக்கப்பட்ட பெர்ஃப்ளூரோ ஆக்டானிக் அமிலம் {Perfluorooctanoic acid (PFOA)} என்ற வேதிப்பொருளைக் கொண்டு  எண்ணெய் ஒட்டாத சமையல் பத்திரங்கள் (நான் – ஸ்டிக்) தயாரிப்பை அமெரிக்காவின்  வெஸ்ட் வெர்ஜினியா மாகாணத்தில்  தனது தொழிற்சாலையில் ஆரம்பிக்கின்றது. அந்தப் பகுதியில் இருக்கும் வில் டென்னட் என்ற விவசாயி தனது கால்நடைகள் மர்மமான முறையில் இறப்பதாகவும், அதற்கு டுபாண்ட் நிறுவனம் காரணம் எனக் கூறி,  பெருநிறுவனங்களுக்கு வழக்காடும் ரோபர்ட் பில்லொட்டை  (Robert Bilott ),  பில்லொட்டின் பாட்டியின் ஆலோசனையின் பெயரில் சந்திக்கிறார். அதுவரை பெருநிறுவனங்களுக்கு வழக்காடிய பில்லெட் இந்த வழக்கை சுமார் 30 ஆண்டுகள் நடத்தி, கால்நடைகள் இறந்ததற்கும், அங்கு இருக்கும் மனிதர்களுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைப்பாடுகளுக்கும் பெர்ஃப்ளூரோ ஆக்டானிக் அமிலம் டுபாண்ட் தொழிற்சாலையில் பயன்படுத்தியதுதான் காரணம் எனக் கண்டறிந்து, வில் டென்னட்டுக்கு மட்டும் அல்லாமல் அந்தப் பகுதியில் வாழும் சுமார் 6500 பேருக்கு  ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்டறிந்து அவர்களுக்கு சுமார் 650 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு டுபாண்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்கித் தருகிறார்.

அதோடு பெர்ஃப்ளூரோ ஆக்டானிக் அமிலம் அமெரிக்காவில் தடைசெய்யப்படுகின்றது. இன்றளவும்  போராடிக் கொண்டிருக்கும் ரோப் பில்லெட்டின் வாழ்க்கை டுபாண்ட் நிறுவனத்திற்கு எதிரான  வழக்கிற்கு நுழைந்த பிறகு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டமாக மாறிவிடுகின்றது. இருந்தாலும் திரைப்படம் டுபாண்ட் நிறுவானத்திற்கு எதிரான வழக்கினை மட்டும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் கூறியது போல பெரு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம் என்பது பயனற்றது என்பதகைக் காட்ட நிறுவனங்கள் வன்முறையைத் தவிர இன்னொரு வழியைப் பயன்படுத்தும். அது எப்படிப்பட்டது என்பதற்கு இந்தத் திரைப்படம் ஒரு எடுத்துக் காட்டு.   

திரைப்படம் மிக சாதாரணமான நிகழ்வுகளைக் கொண்டு நகரும்; இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு தீவிரத் தன்மையை கடத்திக் கொண்டே இருக்கின்றது. இன்றைய எதார்த்த வாழ்க்கையும் அப்படியானதும் கூட.

இடதுசாரி அமைப்புகள் வலுவிழந்துபோன அமெரிக்காவில் மக்களுக்கான போராட்டத்தை நடத்துவது என்பது எத்தனை பெரியது, முப்பது வருடம் தொடர்ந்து போராட்டம் நடத்துவது என்பது எத்தகையது, அதன் பயன் எத்தகையது என்பதை காட்சிகள் கண் முன் நிறுத்துகின்றன.

படத்தின் உருவாக்கம் அது எடுத்துக் கொண்ட கருவை மிக சரியாகப் பார்வையாளர்களிடம் சேர்ப்பதில் வெற்றியடைகிறது. படம் பார்த்த பிறகு எங்கள் வீட்டில் இருந்த ஒரே ஒரு நான் – ஸ்டிக் தோசைக் கல்லை பயன்படுத்த வேண்டாம் என்று எடுத்து வைக்கும் அளவுக்கு தாக்கம் உள்ளது.

திரைப்படம் பார்த்த பிறகு இந்த பெர்ஃப்ளூரோ ஆக்டானிக் அமிலம் பற்றி சில தேடுதல்களில் ஈடுபட்டேன். மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த அமிலம் C-8 என்ற பெயரில் நிறுவனங்களால் அழைக்கப்படுகின்றது. நான்–ஸ்டிக் வகை பாத்திரங்களில், உணவு சுற்றப்படும் பாலித்தின் பொருட்கள், பீட்ஸா பெட்டிகள், நீர் புகா பொருட்களில் இவை பயன்படுத்தப் படுகின்றது.

இருந்தாலும் இது முக்கியமாக நான்–ஸ்டிக் பாத்திரங்களில்  நீர்புகா, எண்ணெய் ஒட்டாத தன்மைக்கு இந்த டெஃப்லான்(Teflon) என்ற வேதிப்பொருள் பூச்சு பயன்படுத்தப்படுகின்றது. இந்த பூச்சுக்கு முக்கிய பொருளாக பெர்ஃப்ளூரோ ஆக்டானிக் அமிலம் பயன்படுத்தப் படுகின்றது.

உங்கள் வீட்டில் இந்த நச்சுப் பாத்திரங்கள் உண்டா ? எச்சரிக்கை

உலக அளவில் அமெரிகாவிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும் இதைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனால் மற்ற பெரும்பான்மையான நாடுகளில் இது இன்னும் பயன்பாட்டில் உள்ளது. இந்த அமில பயன்பாட்டின் மூலம் பல்வேறுவகையான புற்றுநோய் (நுரையீரல், சிறுநீரகம், விதைப் பை புற்றுநோய்கள்) வர வாய்ப்புள்ளது, குழந்தைகள் பிறவிக் குறைபாடுகளோடு பிறப்பதற்கும், குழந்தை பேறு இன்மை உருவாவதற்கும் வாய்புள்ளது. டெஃப்லான் புளு என்று சொல்லப்படும் நோயும் வருவதாக ஆய்வுகள் சொல்லப்படுகின்றது. இந்தப் பாத்திரங்கள் சூடாகும் போது வரும் வாயுக்களால் நோய் உருவாகிறது என்கிறார்கள்.

உலகில் இருக்கும் மனிதர்களில் 99% பேரின் இரத்தத்தில் இந்த பெர்ஃப்ளூரோ ஆக்டானிக் அமிலம் கூறுகள் கலந்து இருப்பதாக கூறப்படுகின்றது. இதில் வருத்தப்படக் கூடிய விசயம் என்ன வென்றால், இது பற்றிய பெரிய ஆய்வுகளோ தரவுகளோ இல்லை என்பதுதான்.

இந்தியாவைப் பொருத்தவரையில் அமெரிக்காவில் நடந்த வழக்கு பற்றி எந்த வித சலனமும் இல்லை. இத்தனைக்கும் டுபாண்ட் நிறுவனம் இந்தியாவில் செயல்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் மூன்று கிளைகள் இயங்குகின்றன. இவை என்ன விதமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பது பற்றியும், இந்த பெர்ஃப்ளூரோ ஆக்டானிக் அமிலம் பற்றிய  கட்டுப்பாடுகள் குறித்தும் இங்கு தகவல்கள் இருப்பதாக தெரியவில்லை.

இந்த அமிலத்தினைப் வரைமுறையற்று பயன்படுத்தி, அதன் கழிவுகளை வரைமுறையின்றி வெளியிட்டதற்கு டுபாண்ட் நிறுவனத்தின் மீது அமெரிக்க சுற்றுச்சூழல் அமைச்சகமும், நீதிமன்றமும்  அபராதம் வித்தித்துள்ளன. தமிழக, இந்திய சூழலில் இயங்கும் டுபாண்ட் நிறுவனத்திடம் இது தொடர்பாக என்ன ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது எனத் தெரியவில்லை. அவை என்ன விதமான தாக்கங்களை ஏற்படுத்துக் கொண்டு இருக்கின்றன என்பது பற்றியும் எந்தக் தகவல்களும் இல்லை.

இந்திய பாத்திர தயாரிப்பு நிறுவனங்களும்(பிரஸ்டிஜ் – Prestige) இந்த டெஃப்லன் மேற்பூச்சைப் பயன்படுத்துகின்றன. அதில் பெர்ஃப்ளூரோ ஆக்டானிக் அமிலம்  இவர்கள் பயன்படுத்துவது பற்றியும், அதன் தாக்கங்கள் பற்றியும் எந்த தகவலும் இல்லை. இணைய பொருள் விற்பனை முகவர்களான அமேசான், ஃபிளிப்காட் போன்றவை பெர்ஃப்ளூரோ ஆக்டானிக் அமிலம் இல்லாத பாத்திரங்கள் விற்பனை என விளம்பரம் போட்டு இருப்பதை நாம் கவனிக்கலாம். அந்த அளவுக்கு உலக அளவில் இது சிக்கலாக மாறி உள்ளது.

தற்போது பெர்ஃப்ளூரோ ஆக்டானிக் அமிலம் தடைப் பிரச்சனையால், அதைப் பயன்படுத்திவிட்டு அது பயன்படுத்தியது தெரியாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுதலும் நடைபெறுகின்றது.

நான்– ஸ்டிக் பாத்திர வகைகளைப் பயன்படுத்துவது தொடர்பில் இந்த ஆய்வுகளில் ஈடுபடுவர்கள் கூறுவது என்ன வென்றால், உங்கள் வீட்டு அலுமினியப் பாத்திரத்தை விடுத்து நான்–ஸ்டின் பாத்திரம் வாங்கப் போகிறீர்கள் என்றால் ஒன்றுக்கு இரண்டு தடவை யோசியுங்கள் என்பதுதான். ஏன் என்றால் அவற்றின் மீதான எந்த விதமான ஆய்வுகள், தரவுகள் இல்லாத சூழலில் இந்தப் பாத்திரங்கள் பயண்படுத்துவது பற்றி நாம் யோசிக்க வேண்டும்.

இந்தப் பாத்திரங்களில் உலோக அகப்பைகள்(கரண்டிகள்) பயன்படுத்தக் கூடாது. அது அந்த பாத்திரங்களை காயப்படுத்தி அதில் இருக்கும் மேல் பூச்சுகளை சுரண்டி உடலுக்குள் செல்லும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.  இது தொடர்பில் பெரிய விழிப்புணர்வு இருப்பதாக தெரியவில்லை. சில நிறுவனங்கள் கீறல் விழுவதைக்கூட சிக்கல் இல்லை என விளம்பரப்படுத்துகிறார்கள்

இன்னும் என்ன, என்ன இருக்கின்றன என எதுவும் தெரியவில்லை. பல பத்தாண்டுகளாக வருடத்திற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் லாபமாக சம்பாரித்த டுபாண்ட் நிறுவனத்திடம் முப்பது வருட போராட்டத்திற்கு பிறகு 650 மில்லியன் டாலர்கள் தண்டத் தொகை பெறப்பட்டுள்ளது. டுபாண்டைப் பொருத்த வரையிலும் அதற்கு இந்த தண்டத் தொகை ஒரு பொருட்டாக இருக்கப்போவதில்லை. இன்றளவும் அதன் சந்தை மதிப்பு வருடத்திற்கு மூன்று பில்லியன் டாலர்கள்.

 இந்த நிறுவனத்தினால் நோய்கள் வந்து இறந்தவர்கள், வாழ்வைத் தொலைத்தவர்கள் மதிப்பில் வழங்கப்பட்ட இழப்பிடு ஒன்றும் இல்லை. லாபம் மட்டும் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் இந்த முதலாளித்துவ சமூகத்தில் மக்கள் வாழ்வை பற்றி மக்கள்தான் யோசிக்கவும், போராடவும் வேண்டியுள்ளது. 

முதற்பதிவு: ஊடாட்டம்

2 thoughts on “டார்க் வாட்டர்ஸ்: மக்களுக்கு மக்களே காவல்

  1. நண்பருக்கு… வணக்கம்.. உங்கள் வலை தளம் சிறப்பாக உள்ளது…இதில் நாங்கள் நடத்தும் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கர்
    கருத்துகளை பற்றிய 1000 காணொளிகள் உள்ளது… வாய்ப்பு இருப்பின் அறிமுகம் அல்லது இதை உங்கள் வலைதளத்துடன் இணைக்க முடியுமா?https://www.youtube.com/c/UnwrittenHistoryofTamilnadu/videos

  2. கண்டிப்பாக‌ நண்பர்களே. ஓரிரு நாட்களில் என்ன செய்யலாம் எனப் பார்த்து முயல்கிறேன்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s