நடந்து முடிந்த பீகார் மாநில தேர்தல் முடிவுகள் பல முரண்பாடுகளை உள்ளடக்கி வந்திருக்கிறது. தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் மீண்டிருக்கிறது. கடந்த முறை முதல்வராக இருந்த, இந்த முறையும் முதல்வராகப் போகின்ற நிதீஷ் குமாரின் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கடும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. அதன் கூட்டணிக் கட்சியான பாஜக ஐக்கிய ஜனதா தளத்தை விட மிக அதிகமான இடத்தை பெற்றிருக்கிறது. ஆனாலும் நிதீஷ் தான் முதல்வர் என அறிவித்திருக்கிறது. இந்த முரண்பாடுகளை இணைத்துப் பார்த்தால் பீகார் மக்களின் புரிதல் குறித்து ஐயம் ஏற்பட ஏதுவாகிறது. சமூக ஊடகங்களில் அப்படித் தான் கருத்துகள் கொட்டப்படுகின்றன. ஆனால் அது சரிதானா?
முதலில் தேர்தல் என்பது மட்டும் தான் ஜனநாயகம் எனும் மூடநம்பிக்கையை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதை இந்திய தேர்தல்கள் தொடங்கி அமெரிக்க தேர்தல்கள் வரை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த பீகார் தேர்தலும் அதிலிருந்து மாறுபட்டது அல்ல. இங்கே வாக்குப் பதிவுக்கு மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வாக்குப்பதிவு முடிந்த ஒருசில மணி நேரத்திலேயே முடிவுகளை அறிவித்துவிட முடியும். அதற்கான வாய்ப்புகள் அந்த எந்திரங்களில் இருக்கின்றன. என்றாலும் மரபைப் போல், சடங்கைப் போல் நாள் குறித்து, தள்ளி வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக தவணை முறையில் தான் அறிவிக்கிறார்கள். அதிலும் இந்த பீகார் தேர்தல் முடிவுகளை அறிவிக்க இரண்டு நாட்கள் ஆகி இருக்கின்றன. இது ஏன் என்பது முதல் கேள்வி. இந்தக் கேள்விக்கு யாரும் பதிலளிக்கப் போவதில்லை. ஏனென்றால் 2019 நாடாளுமன்ற தேர்தலில் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்படும் முறைகேடுகளுக்கே எந்த விளக்கமும் இது வரை வரவில்லை.
வாக்கு எந்திரங்களில் முறைகேடு என்றதும் சிலர் அதை சதிக் கோட்பாடு என்பது போல் பார்க்கின்றனர். எந்திரங்களில் திருத்தம் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. தேர்தல் ஆணையம் மட்டுமல்ல, நாட்டின் எல்லாத் துறைகளுமே பார்ப்பனியத்துக்கும், ஆளும் வர்க்கங்களுக்கும் சாதகமாக மட்டுமே செயல்படுகின்றன என்பது ஒவ்வொரு முறையும் இங்கு நிரூபிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. வாக்குப்பதிவு இயந்திரங்களை உற்பத்தி செய்வதற்கும் நிரல் எழுதுவதற்கும் தனியார் தற்காலிக பணியாளர்களை பயன்படுத்தவில்லை என்று தேர்தல் ஆணையம் நீதி மன்றத்தில் கூறியது. ஆனால், அது பொய் என்றும் தனியார் ஒப்பந்தப் பணியாளர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது தி குயண்ட் இதழின் கமுக்க செய்தி சேகரிப்பில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒப்புகைச் சீட்டுக்கும், வாக்குப்பதிவு எந்திரத்தின் எண்ணிக்கைக்கும் 300 க்கும் அதிகமான தொகுதிகளில் எண்ணிக்கை வித்தியாசம் இருக்கிறது என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் இதை சதிக் கோட்பாடு என்பவர்களின் நேர்மையை ஐயப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. இவை அனைத்தும் ஒருங்கிணைந்த திட்டமிடலோடு பார்ப்பனிய அதிகாரத்தை தக்கவைப்பதில் தொடர்பு கொண்டிருக்கிறது என்பது ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
பீகார் தேர்தலுக்கு திரும்புவோம். கொரோனா முடக்கத்தின் போது தங்கள் சொந்த ஊர்களுக்கு கால்நடையாக நடந்து சென்றவர்களில் கணிசமான பங்கு தொழிலாளர்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள். இது தேர்தல் பிரச்சாரங்களின் போது எதிரொலித்தது. பல இடங்களில் பாஜக வேட்பாளர்களை ஊருக்குள் விடாமல் விரட்டியடித்திருக்கிறார்கள். இது வேறு எந்தக் கட்சிக்கும் நடக்கவில்லை. ஆனால் வந்திருக்கும் முடிவோ பாஜக அதிக இடங்களில் வென்றிருக்கிறது. இதை எப்படி புரிந்து கொள்வது? வாக்களிக்க பணம் கொடுப்பது, ஜாதியை பயன்படுத்துவது போன்றவைகள் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் செய்வது தான். இதில் புதுப்புது எல்லைகளை தொடவும், அதிகாரத்தில் இருக்கும் கட்சிகள், எதிர்க்கட்சிகளை இதைச் செய்யாமல் தடுப்பதற்கு தங்கள் அதிகரத்தை பயன்படுத்துவதும் உச்சத்தை தொட்டிருக்கிறது. மட்டுமல்லாது மக்களின் உடனடித் தேவையை தீர்த்து விட்டால் வேறு எது குறித்தும் கவலையற்று மதவாதப் பிடியில், தேசிய மயக்கத்தில் விழுவதற்கு தோதான நிலையிலேயே அனைத்துக் கட்சிகளும் மக்களை வைத்திருக்கின்றன. எனவே, இது ஒன்றும் வியப்பைத் தரும் முடிவு அல்ல.
பாஜகவின் தேர்தல் வெற்றி என்பது மூன்று விதங்களை உள்ளடக்கியது. 1. அதன் தேர்தல் உத்தி. முதன்மையாக தங்களுக்கு எதிரான வாக்குகளை ஒன்று சேர விடாமல் சிதறடிப்பது. 2. ஊடகங்களைக் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது. பாஜகவுக்கு மதிப்பை உருவாக்கும் செய்திகளுக்கும், அதற்கு எதிரான கட்சிகளின் மதிப்பை குறைக்கும் செய்திகளுக்குமே அனைத்து ஊடகங்களும் முதன்மைத்தனம் அளிக்கின்றன. 3. அதிகார வர்க்கத்தை பயன்படுத்துவது. காங்கிரஸ் அல்லது பிற மாநிலக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட அதிகார வார்க்கம் பார்ப்பனியத் தன்மையுடன் பாஜகவுக்கு ஆதரவாக நிற்கிறது என்பதை மறந்து விடக் கூடது. இதற்கு இணையான பலத்துடன் இந்தியாவில் வேறு எந்த ஓட்டுக் கட்சியும் இல்லை. எனவே, பாஜகவின் தேர்தல் வெற்றிகளை தடுப்பது என்பது அரிதான ஒன்றாகவே இருக்கும். அல்லது மேற்கண்ட மூன்று விதங்களையும் எதிர் கொள்வது எப்படி என்பதை பிற ஓட்டுக் கட்சிகள் திட்டமிட வேண்டும்.
அடுத்து, ஒவைசி, காங்கிரஸ் கட்சிகளின் நடவடிக்கைகள் வெகுவாக விமர்சிக்கப்படுகின்றன. குறிப்பாக ஒவைசியை எடுத்துக் கொண்டால், அவர் பாஜகவின் கமுக்க முகவர் என்பதாக விமர்சிக்கப்படுகிறார். அதாவது, எதிர்க்கட்சிகள் பலமாக இருக்கும் இடங்களில் முஸ்லீம் ஓட்டுக்களை பிரித்து வலுவிழக்கச் செய்வதன் மூலம் பாஜகவுக்கு உதவும் மறைமுக ஒப்பந்தத்துடன் ஒவைசி செயல்படுகிறார் என்று விமர்சிக்கப்படுகிறார். இந்த விளைவில் ஓரளவுக்கு உண்மை இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் ஒவைசி என்ன செய்ய வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? முதலில், பாஜகவைப் போல் ஒவைசியின் ஐஎம் கட்சியும் ஒரு மதவாதக் கட்சியே. ஆனால் பாஜகவின் பார்ப்பனிய ஆதிக்க நோக்கம் போன்று இஸ்லாமிய ஆதிக்க நோக்கம் ஐஎம் கட்சிக்கு இல்லை. பாஜகவின் பலத்தைப் புரிந்து கொண்டு தங்களுக்கு போதிய இடம் ஒதுக்கவில்லை என்றாலும் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளோடு வலிந்து கூட்டணி கட்டிக் கொள்ள வேண்டும் என்று விருப்புகிறார்களா? ஓர் ஓட்டுக் கட்சி தன்னைக் கரைத்துக் கொண்டு சூழலை உணர்ந்து நடந்து கொள்ளும் என எதிர்பார்க்க முடியாது. அதேநேரம் காங்கிரஸ் உட்பட எந்தக் கட்சியும் தங்களை கூட்டணிக்காக அணுகவில்லை என்று ஒவைசி செவ்வியளித்திருக்கிறார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது மாயாவதிக்கும் பொருந்தும். சிறுபான்மையினரும், ஒடுக்கப்பட்டவர்களும் ஒன்றிணைவது பாஜக போன்ற வலுவடைந்து கொண்டிருக்கும் கட்சிக்கு எதிரான காலத்தின் தேவையாகும்.
மாறாக, காங்கிரஸ் கட்சி இந்த சூழல்களை உணரவே இல்லை என்பதை கூறியாக வேண்டும். ஒரு நாடு தழுவிய கட்சியாக இருந்தாலும் இந்திரா காலத்தைப் போல வலுவான கட்சியாக தாம் இல்லை என்பதை இன்னமும் காங்கிரஸ் உணர்ந்ததாகவே தெரியவில்லை. வாழ்ந்து கெட்ட பண்ணையார் நிலையில் தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. இன்னும் குறிப்பாக பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ். போல துடிப்பான செயலூக்கம் மிக்க அமைப்பு எதுவும் காங்கிரஸுக்கு இல்லை. பாஜகவுக்கு எதிரான மாநிலக் கட்சிகளை அரவணைத்து சட்டசபை தேர்தல்களில் மாநிலக் கட்சிகளுக்கு அதிக இடம், நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸுக்கு அதிக இடம் என்பது போன்ற ஒப்பந்தங்களை அந்தந்த மாநிலங்களில் காங்கிரஸின் வாக்கு வங்கியைப் பொருத்து செய்து கொள்வது மட்டும் தான் காங்கிரஸின் மரணத்தை தள்ளிப் போட வாய்ப்புள்ள ஒரே வழி. .
இவை எதுவும் நடக்காதது தான் பாஜகவின் வெற்றியை சாத்தியப்படுத்தி இருக்கிறது. பாஜக அல்லாமல் காங்கிரஸோ அல்லது அதிசயமாய் கம்யூனிஸ்டுகளோ வந்தால் கூட இங்கு எதுவும் மாறி விடப் போவதில்லை. தேர்தலால் ஜனநாயகம் மலர்ந்துவிடப் போவதில்லை. என்றாலும், பாஜகவின் வெற்றி என்பது அந்த அழிவை கூடுதல் விரைவுடன் கொண்டுவரும் என்பதும் யதார்தமாக இருக்கிறது. அந்த அடிப்படையில் பாஜகவின் வெற்றியை விட எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையே மக்களுக்கு அதிக வலி தருவதாக இருக்கிறது.