குண்டர்களுக்காக மாணவர்களுக்குத் தடை ..?

2017 லிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் முதுகலை ஆங்கில பாடத் திட்டத்தில் இடம்பெற்றிருந்த, அருந்ததி ராய் எழுதிய “Walking with the Comrades” என்ற நூலின் பகுதிகள் தற்போது பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணமாய் இருந்தது ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவ குண்டர் படையான ஏபிவிபி எனும் அமைப்பின் மிரட்டல்.

இதை கண்காணிக்க வேண்டிய, சரி செய்வதற்காக தலையிட வேண்டிய அதிமுக அரசாங்கமோ மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை இந்த பாடம் நீக்கப்பட்டது குறித்து அரசாங்கத்தின் கருத்தோ, அதிமுகவின் கருத்தோ வெளியிடப்படவில்லை. என்றால் வேறென்ன சொல்வது? மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறு பொருத்தமான சொல் இருக்குமா?

இது குறித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் துணை வேந்தர் பிச்சுமணி, ஏபிவிபி புகார் செய்தது என்றும், வேறு சில அமைப்புகளும் பூகார் செய்தன என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஏபிவிபி தவிர வேறு எந்த அமைப்பு புகார் செய்தது என்று அவர் தெரிவிக்கவில்லை. இது குறித்து அந்த பல்கலையின் மாணவர்கள் சிலரோடு உரையாடிய போது, அப்படி வேறு எந்த அமைப்புகளும் புகார் தெரிவிக்கவில்லை என்றனர்.

துணைவேந்தர் பிச்சுமணி ஏபிவிபி புகார் தெரிவித்தது என்கிறார். ஆனால் ஏபிவிபியின் தமிழக இணைச் செயலாளர் விக்னேஷின் அறிக்கையோ அவர் மிரட்டி இருக்கிறார் என்பதை தெரிவிக்கிறது. முதலில் தமிழக இணைச் செயலாளராக இருக்கும் விக்னேஷ் பல்கலைக் கழகத்துக்கு கோரிக்கையோ, புகாரோ தெரிவிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது? பலகலைக் கழக பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய விரும்பினால், அல்லது பொருத்தமற்றது எனக் கருதினால் பல்கலையில் செயல்படும் அமைப்போ, மாணவர்களோ, மாணவர்களின் கூட்டோ தான் செய்ய வேண்டும். அவ்வாறல்லாது விக்னேஷ் புகார் தெரிவித்தது எந்த விதியின் அடிப்படையில்? இன்னும் அந்தப் புகாரை துணை வேந்தர் ஏற்றது எந்த விதியின் அடிப்படையில்?

அந்த அறிக்கையில், “கடந்த நான்கு ஆண்டுகளாக நக்சல் கருத்துகள் மாணவர்களின் மீது திணிக்கப்பட்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. பல்கலையின் பாடத்திட்டத்திலிருந்து அந்நூலின் பகுதிகளை நீக்குவதற்கு தாமதம் செய்தால் மத்திய கல்வி அமைச்சகத்தின் பார்வைக்கு கொண்டு செல்வோம், தொடர் போராட்டங்களைத் நடத்துவோம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது வேண்டுகோளா? மிரட்டலா?

தமிழகத்தில் செயல்படும் வேறு மாணவர் அமைப்புகளான எஸ்.எஃப்.ஐ, புமாஇமு அல்லது ஏதோ ஒரு மாணவர் அமைப்பு பாடத்திட்டம் குறித்து புகார் அளித்திருந்தால் இப்போதைப் போல் ஏற்கப்பட்டிருக்குமா? ஏபிவிபி ஒரு பயங்கரவாத குண்டர்படை அமைப்பு என்பது ஜாமியா மில்லியா பல்கலை விவகாரத்தில் அம்பலமான ஒன்று. அப்படியான ஒரு அமைப்பு புகார் தெரிவித்தது என்பதற்காக, ஒரு துணை வேந்தர் பாடத்திட்டத்தை நீக்கும் முடிவை எடுக்க முடியுமா?

தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புக்கு ஆதரவாக அந்தப் பாடம் இருக்கிறது. இதை நாங்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக கவனிக்கவில்லை. கடந்த வாரம் தான் என்னுடைய கவனத்துக்கு வந்தது என்கிறார் துணை வேந்தர். துணவேந்தர் எனும் பல்கலை தலைமைப்பணிக்கு உறிய தகுதியோடு அவரின் இந்த விளக்கம் இருக்கிறதா?

மாவோயிஸ்ட் கட்சி ஆந்திர அரசால் தடை செய்யப்பட்ட ஒரு கட்சி. ஒருவர் முதல்வராக வந்தால் தடை செய்வதும் அடுத்தவர் முதல்வராக வரும் போது தடையை நீக்குவதுமாக பலமுறை தடை விதிப்பதும், பின்னர் தடையை நீக்குவதுமாக அந்தத் தடை கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியிருக்கிறது. இதை வைத்துக் கொண்டு புக்கர் பரிசு உட்பட பல பன்னாட்டு விருதுகளை பெற்றிருக்கும் ஓர் எழுத்தாளரின் நூலை பாடத்திட்டத்திலிருந்து நீக்குவது சரியா? ஒரு வாதத்துக்கு சரி என்று கொண்டாலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு தான். மூன்று முறை தடை செய்யப்பட்டு பின் விலக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்ஸின் கிளை அமைப்பான ஏபிவிபி புகாரின் அடிப்படையில் இதைச் செய்வது எந்த விதத்தில் சரியானது? அந்த நூல் ஒன்றும் தடை செய்யப்பட்ட நூல் இல்லையே.

அடுத்து, பல்கலைக் கழக பாடத்திட்டத்திலிருந்து ஒரு பாடத்தை நீக்க வேண்டும் என்றால், பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக்குழு, கல்விக்கான நிலைக்குழு, ஆட்சிக்குழு ஆகிய மூன்று கூட்டங்களிலும் விவாதித்து ஒப்புதல் பெற்ற பிறகு தான் எந்த ஒரு பாடத்திட்டத்தையும் சேர்க்கவோ அல்லது நீக்கவோ முடியும். அப்படி இருக்கும் போது, துணைவேந்தர் கூறுகிறார், “இந்தப் புத்தகம் 2017 ஆம் ஆண்டு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. ஒரு வாரத்திற்கு முன்பு தான் இந்த புத்தகம் மாவோயிஸ்டுகளை நியாயப்படுத்தி எழுதியிருப்பது எங்களது கவனத்துக்கு வந்தது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ஒரு குழுவை அமைத்தோம். பாடத்திட்டத்தை திரும்பப் பெற அந்த குழு பரிந்துரைத்தது” என்று. முதலில் விதிமுறைகளின் படி மூன்று குழுக்களிலும் தனித்தனியே விவாதித்து எடுக்க வேண்டிய முடிவை, ஒரு குழுவை அமைத்து பரிந்துரைக்க வைத்தது ஏன்? அதுவும் கவனத்துக்கு வந்த ஒரே வாரத்தில் குழுவை அமைத்து, அந்தக் குழு கூடி விவாதித்து, பாடத்தை நீக்கலாம் என பரிந்துரைத்து, பல்கலைக்கு அனுப்பி, அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் அந்தப் பாடம் நீக்கப்பட்டும் விட்டது. இவ்வளவும் ஒரே வாரத்தில் நடந்து முடிந்திருக்கிறது. என்னே வேகம்.

மாவோயிச ஆதாரவு என்பதோ, எதிர்ப்பு வந்தது என்பதோ பொருட்டல்ல. அவை நடத்தப்பட்டிருக்கும் நாடகத்தின் பகுதிகள். மக்களுக்கோ, மாணவர்களுக்கோ இடதுசாரி சிந்தனைகள் அறிமுகம் ஆகக் கூடாது என்று பாஜக முடிவு செய்கிறது, பிச்சுமணி அதை செய்து முடிக்கிறார், அவ்வளவு தான். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் மாநில அரசின் பொறுப்பில் இருக்கும் பல்கலைக் கழகம், இதில் ஒன்றிய அரசு தன் மூக்கை நுழைக்கிறது என்பது தான் புரிந்து கொள்ள வேண்டியது.

மாவோயிச வேலைத் திட்டங்கள் சரியானவை என்று ஆதரிப்பதாக இதை மொழிபெயர்க்க முடியாது, அவை தனிப்பட்ட விவாதம். இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், மக்களை பொருளாதார ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் பின்னுக்கு இழுக்கும் திட்டத்தின் ஒரு முனை தான் இது என்பதே. தங்கள் சொற்கள் மூலமும், செயல்கள் மூலமும் இதை எதிர்க்க வேண்டிய முதற்கடமை அந்த மாணவர்களுக்கு மட்டுமல்லாது ஒட்டு மொத்த மாணவர்களுக்கும் இருக்கிறது.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s