CAA: முள்வேலி தடுப்பு கொட்டடிகள்

சட்டவிரோத குடியேறியவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக பெங்களூருக்கு வெளியே 40 கி.மீ தூரத்தில் கட்டப்பட்ட கர்நாடக அரசாங்கத்தின் தடுப்பு முகாம் இப்போது திறக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில் விசா காலாவதியான ஒரு சூடான் நாட்டவர் இங்கு தடுத்து வைக்கப்பட்ட முதல் நபராகிவிட்டார்.

பெங்களூரு கிராமப்புற மாவட்டத்தில் நெலமங்கலாவுக்கு அருகிலுள்ள சோண்டேகோப்பா கிராமத்தில் அமைந்துள்ளது இந்த தடுப்பு முகாம். இது இந்த மாநிலத்தில் திறக்கப்பட்ட முதல் தடுப்பு முகாமாகும். இதன் கட்டுமானம் முடிவடைந்து ஒரு வருடம் கழித்து, இந்த அக்டோபர் கடைசி வாரத்திலிருந்து இந்த முகாம் செயல்பட்டு வருகிறது. இது 30-40 பேரை தடுத்து வைக்கும் கட்டமைப்பு கொண்டது.

அக்டோபரில் TNM [The News Minute] தடுப்பு முகாமை பார்வையிட்ட போது, அங்கு போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தடுப்பு மையத்தில் ஆறு அறைகள் உள்ளன, அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தங்க வைக்கப்படுவார்கள், ஒரு பொதுவான சமையலறை மற்றும் ஒரு பொதுவான குளியலறையுடன், முள் கம்பிகள் நான்கு பக்கங்களிலும் கூட்டு சுவர்களில் ஓடுகின்றன. இந்த மையத்தில் இரண்டு மூலைகளிலும் இரண்டு காவற்கோபுரங்களும் நுழைவாயிலில் ஒரு பாதுகாப்பு அறையும் கட்டப்பட்டுள்ளன.

TNM அணுகிய தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கிடைத்த தகவல் படி கர்நாடக அரசின் சமூக நலத்துறை தடுப்பு மையத்தை நிர்வகிக்கும் மேலும் பாதுகாப்பு பெங்களூரு கிராமப்புற போலீசாரால் வழங்கப்படும் என்று தெரிந்தது. இந்த ட-வடிவ கட்டிடம் 1992 ஆம் ஆண்டில் அருகிலுள்ள பள்ளியின் எஸ்சி / எஸ்டி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுடைய (ஓபிசி) மாணவர்களுக்கான விடுதியாக கட்டப்பட்டது, ஆனால் விடுதியில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்ததால் 2008 இல் மூடப்பட்டது. கடந்த ஆண்டு தடுப்புக்காவல் முகாமாக பயன்படுத்த மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதன் தோற்றம் சிறை போல் இருந்த போதிலும், தடுப்புக்காவல் மையத்தை நிர்வகிக்கும் அதிகாரிகள் இது ஒரு சிறை இல்லை என்று கூறுகிறார்கள். “சிறை போன்ற நேர கட்டுப்பாடு இல்லை, இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் இந்த முகாமுக்குள் சுதந்திரமாக செல்ல முடியும். அனுமதியுடன் நண்பர்கள் மற்றும் உறவினர்களை தொடர்பு கொள்ளலாம். இந்த நேரத்தில் ஒரு சிக்கல் உள்ளது, ஆனால் கணினிகள், இணையம் மற்றும் தொலைபேசி போன்ற வசதிகள் சரியான நேரத்தில் சேர்க்கப்படும்போது அது தீர்க்கப்படும் ”என்று தடுப்பு மையத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.

இது வெறுமனே ஒரு கட்டுப்பாட்டு மையமாக இருக்கும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் நாடு கடத்தப்படும் வரை இங்கு தங்க முடியும். “சட்டவிரோதமாக இங்கு (இந்தியாவில்) தங்கியிருப்பவர்களுக்கு அச்சத்தைத் தூண்டுவதற்கு தடுப்பு மையம் உதவுகிறது. அவர்கள் வெளியேற முடியாததால் அது அவர்களின் சுதந்திரத்தை ஓரளவு பாதிக்கும், ஆனால் அவர்கள் மையத்திற்குள் சுதந்திரமாக இருக்கிறார்கள், ”என்று அவர் கூறினார். அத்தகைய வசதி இல்லாமல், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பெரும்பாலும் ஒழிந்து வாழ்ந்து கொண்டு நாடுகடத்தப்படுவதைத் தவிர்க்கிறார்கள் என்று அந்த அதிகாரி கூறினார்.

சட்டவிரோத குடியேறியவர்கள் என்போர் பாஸ்போர்ட் / விசா இல்லாமல் நாட்டில் நுழைந்தவர்கள் அல்லது விசாவில் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு அப்பால் நாட்டில் தங்கிய வெளிநாட்டவர்கள். உள்நாட்டு அலுவல்கள் அமைச்சகத்தால் (M.H.A) அமைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பிராந்திய பதிவு அலுவலகங்கள் (F.R.R.O), சட்டவிரோத வெளிநாட்டினரை கட்டுப்படுத்த வெளிநாட்டினர் சட்டத்தின் பிரிவு 3 ன் கீழ் அதிகாரங்களைக் கொண்டுள்ளது.

இது விசா அல்லது பாஸ்போர்ட் காலாவதியான FRRO இல் பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டினர், சுற்றுலா விசா போன்ற வேறு விசாவிற்கு வந்தபின் அதிகநாள் கர்நாடகாவில் தங்கியிருக்கும் FRRO இல் பதிவு செய்யப்படாதவர்கள், குற்றவியல் வழக்குகளில் தொடர்புடைய சட்டவிரோத வெளிநாட்டினர் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு நாடுகடத்தப்படுவதை எதிர்கொள்கின்றவர்கள் இவர்கள் அனைவரையும் உள்ளடக்கியது.

2019 MHA கையேட்டில் சட்டவிரோத குடியேறியவர்களை மாநில அரசுகள் அல்லது சட்ட அமலாக்க துறைகள் அடையாளம் காணலாம் என்று கூறுகிறது. அவர்கள் வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தால் வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்டவர்கள், மோசடி ஆவணங்களுடன் வந்த வெளிநாட்டவர்கள், எஃப்.ஆர்.ஆர்.ஓவால் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டினர் மற்றும் விசா விதிமுறைகளை மீறும் வெளிநாட்டவர்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான நடத்தைக்காக தடுத்து வைக்கப்பட்டவர்கள் ஆகியோரும் இருக்கலாம்.

இந்த மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முதல் நபர் ஒரு சூடான் நாட்டவர், அவர் 2016 இல் மாணவர் விசாவிற்கு வந்தபின் கால அளவுக்கு அதிகமாக பெங்களூரில் தங்கியிருந்தார். “அவர் எந்த ஒரு கல்வி நிறுவனத்தில் பதிவு செய்யப்படவில்லை அல்லது படிப்பைத் தேடவில்லை. பெங்களூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஒன்பது மாதங்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை, அதன் பின்னர் அவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகினார், வழக்கு விசாரணை முடியும் வரை அவரை பெங்களூருவுக்கு அருகில் உள்ள ஒரு தடுப்பு மையத்தில் வைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார், ”என்று அந்த அதிகாரி கூறினார்.

பீடார் மாவட்டத்தில் தனது சுற்றுலா விசாவின் நிபந்தனைகளை மீறிய கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த டொய்சுபெக் உலு பாக்கிட்பெக் என்ற மற்றொரு நபரும் அவரது வழக்கு தீர்த்து வைக்கப்படும் வரை பெங்களூருக்கு வெளியே உள்ள தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டார்.

நீதிமன்றங்களால் மட்டுமே சட்டவிரோத வெளிநாட்டவர்களை தடுப்பு மையங்களுக்கு அனுப்ப முடியும் என்பது இல்ல. “மத்திய அரசால் இங்கு மக்களை அணுப்ப முடியும். சட்டவிரோத வெளிநாட்டவர்கள் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களை நாட்டை விட்டு வெளியேற ஊக்குவிப்பதற்காக தடுப்பு மையங்களுக்கு அனுப்பலாம், ”என்று ஒரு நபர் தெரிவித்தார்.

தடுப்புக்காவல் மையத்தின் அதிகாரி கூறுகையில், சட்டவிரோத வெளிநாட்டவர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், நாடு கடத்தப்படுவதற்கு நேரம் எடுக்கும், ஏனெனில் அதிகாரிகள் பயண ஆவணங்களை ஏற்பாடு செய்து வெளிநாட்டவரின் நாட்டின் தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். சட்டவிரோத வெளிநாட்டவர்களை நாடு கடத்த நிதி ஒதுக்கப்பட நேரம் ஆகும். இந்த காலகட்டத்தில் அவர்களை தங்க வைக்கும் இடமாக தடுப்பு மையமும் இருக்கும்.

அந்த அதிகாரி கூறுகையில், வெளிநாட்டவர்கள் தங்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் வழக்குகள் முடிவடையும் வரை காத்திருக்கும்போது தலைமறைவாக செல்பவர்களும் உள்ளனர். “அவர்கள் வெளியேற நோட்டீஸ் வழங்கப்பட்டாலும், சிலர் தலைமறைவாக இருக்கக்கூடும். சில நேரங்களில், அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். நாடுகடத்தல் செயல்முறை முடிவடையும் வரை இதுபோன்ற சட்டவிரோத வெளிநாட்டவர்கள் இப்போது தடுப்பு மையத்தில் வைக்கப்படலாம், ”என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

மே 2020 இல், பங்களாதேஷில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர் என்ற சந்தேகத்தின் பேரில் அவரது மகள் தானியாவுடன் கைது செய்யப்பட்ட பாபுல் கான் வழக்கை விசாரித்தபோது, ​​கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பனீந்திரா சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளிநாட்டினர் தடுப்பு முகாமில் வைக்க வேண்டும் என்று கூறி ஒரு உத்தரவை பிறப்பித்தார். கான் மற்றும் அவரது மகள் பெங்களூரின் சர்ஜாப்பூரின் குடியேற்றத்திலிருந்து 2018 ஆகஸ்டில் கைது செய்யப்பட்டனர் மற்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அவர்களின் கைது அறிக்கையில் அவர்கள் தோட்டாக்கள் வைத்திருப்பதாகக் கூறினர். தொடர் விசாரணையின் பின்னர் இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தந்தை-மகள் இருவரும் பெங்களூருவுக்கு அருகிலுள்ள தடுப்பு மையத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று ஜாமீன் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

உத்தரவு இருந்தபோதிலும், இருவரும் நீதித்துறை காவலில் இருந்தனர் மற்றும் ஜாமீனுக்கான உறுதி (Surety) வழங்க முடியாததால் மூன்று மாதங்களுக்கு முன்பு அவர்கள் தண்டனையை நிறைவு செய்தனர். அவர்கள் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை முடித்த பிறகும் அவர்கள் தடுப்பு மையத்திற்கு மாற்றப்படவில்லை. அவர்களின் வழக்கறிஞர் இப்போது அவர்கள் வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்னர் அவர்களை நீதித்துறை காவலில் இருந்து தடுப்பு மையத்திற்கு மாற்றுமாறு காவல்துறையை வலியுறுத்தியுள்ளார்.

“குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டனையை நிறைவு செய்துள்ளனர், மேலும் FRRO அறிக்கை மற்றும் வெளியேறும் விசாவிற்காக நீதித்துறை காவலில் காத்திருக்கிறார்கள். அனைத்து வேலைகளும் முடிந்ததும், அவர்கள் பங்களாதேஷுக்கு நாடு கடத்தப்படுவார்கள். ஆனால் நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும், அவர்கள் தடுப்பு மையத்திற்கு மாற்றப்படவில்லை ”என்று அவர்களின் வழக்கறிஞர் சிராஜுதீன் அகமது கூறினார்.

இருவரும் மோசடி செய்யப்பட்ட ஆதார் அட்டைகளுடன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர்களின் இந்திய குடியுரிமையை நிரூபிக்க முடியவில்லை என்றும் வழக்கறிஞர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், அவர்கள் பங்களாதேஷ் அடையாள அட்டைகளுடன் காணப்படவில்லை என்றாலும், அவர்கள் மீது வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தந்தை-மகள் இருவரின் வழக்கு, தேசிய குடிமக்கள் பதிவு (என்.ஆர்.சி) போன்ற குடியுரிமை நடைமுறை மூலம் அடையாளம் காணப்பட்டவர்களைத் தடுத்து வைக்க மாநில அரசால் தடுப்பு மையத்தைப் பயன்படுத்த முடியுமா என்ற கேள்விகளை எழுப்புகிறது. என்.ஆர்.சி முதன்முதலில் அசாமில் செயல்படுத்தப்பட்டது, ஒரு வருடம் முன்பு கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை இதேபோன்ற ஒரு நடைமுறையை இம்மாநிலத்தில் செயல்படுத்தும் சாத்தியம் குறித்து விவாதித்தார். பொதுமக்கள் எதிர்ப்பிற்கு பின்னர், பெங்களூருக்கு வெளியே தடுப்புக்காவல் மையம் என்.ஆர்.சி உடன் இணைக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

”தடுப்புக்காவல் மையம் திட்டமிடப்பட்டபோது என்.ஆர்.சி இல்லை. இந்திய சட்டங்களை மீறும் சட்டவிரோத வெளிநாட்டவர்களை தடுப்பில் வைப்பதே எங்களின் முக்கிய நோக்கம். தடுப்பு மையங்கள் இருக்கும் மற்ற நாடுகளைப் போல் தான் இதுவும். இதற்கும் என்.ஆர்.சி க்கும் எந்த தொடர்புமில்லை.”என்று தடுப்பு முகாம் அதிகாரி கூறினார்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, கர்நாடகாவில் தற்போது 729 சட்டவிரோத வெளிநாட்டினர் உள்ளனர், மேலும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது என்று கூறுகிறார்கள். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 35 இடங்களை தடுப்புக்காவல் மையங்களாக மாற்ற அடையாளம் காணப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான சட்டவிரோத குடியேறியவர்கள் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர், பொதுவாக அவர்கள் விசா வரம்புகளை மீறி இருப்பதைக் காணலாம். “சட்டவிரோத வெளிநாட்டவர்களில் பெரும்பாலோர் நைஜீரியா, சூடான், ஏமன் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள்” என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

***********************

இது தி நியூஸ் மினிட் எனும் தளத்திலுள்ள கட்டுரையின் மொழிபெயர்ப்பு. இதன் உள்ளடக்கம் சில கேள்விகளை எழுப்புகிறது.

1. சட்டத்தை மீறி தங்கியிருக்கும் வெளிநாட்டவரை தடுத்துவைக்க சிறைகள் தான் இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்தது. எப்போதிலிருந்து அவர்கள் தடுப்புக் கொட்டடிகளில் அடைக்கப்படவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது? ஏன் அவ்வாறு தனியாக பிரித்து அடைக்கப்பட வேண்டும்.

2. என்.ஆர்.சியுடன் இந்த தடுப்பு கொட்டடிகள் இணைக்கப்படவில்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் ஒருவர் இந்தியக் குடியுரிமை பெற்றவரல்லர், வெளிநாட்டினர் என்பதை எதனை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்வர்?

3. பாபுல்கான் வழக்கில் அவர் பங்களாதேசைச் சேர்ந்தவர் என்பதை எதை கொண்டு முடிவு செய்யப்பட்டது? அவரிடம் பங்களாதேஷ் ஆவணங்கள் எதுவும் இல்லை. ஆனால், அவரிடம் ஆதார் அட்டை இருக்கிறது. அஸ்ஸாமில் இது போன்ற நடவடிக்கைகளால் லட்சக் கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதுவரை அவர்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் கிடப்பில் கிடக்கிறது.

4. நீதி மன்றங்கள் மட்டுமல்ல ஒன்றிய அரசும் இதுபோன்ற கொட்டடிகளுக்கு நேரடியாக ஆட்களை அனுப்ப முடியும் என உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் குடியிரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய இஸ்லாமிய மக்களின் அச்சம் நியாயமானது என்பது உறுதியாகிறதே.

5. நாடுகடத்தப்படும் வரை இந்த கொட்டடிகளில் தங்கி இருப்பார்கள் என்றால் அதன் பொருள் என்ன? இந்திய அரசு குற்றம்சாட்டும் நாடு (எ.கா. பங்களாதேஷ்) அவர்களை தங்கள் குடிமக்களாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் இந்தக் கொட்டடிகளில் கிடக்க நேரிடும் அப்படித்தானே.

6. இது சிறை அல்ல, இணைய வசதி என்றெல்லாம் தற்போது அட்டவணைப்படுத்தினாலும் அரசு எப்படி நடந்து கொள்ளும் என்பதற்கு கண்ணெதிரே சான்றுகள் இருக்கிறது. திபெத்தியர்களும், ஈழத் தமிழர்களும் இந்தியாவைப் பொருத்தவரை அகதிகள் தாம். அவர்கள் இருவரும் சமமாக நடத்தப்படுகிறார்களா?

இவைகளிலிருந்து தெரிவது என்ன? பாஜக, பார்ப்பன அரசும் அரசாங்கமும் தங்களின் கொடூரத்தனங்களிலிருந்து கொஞ்சமும் பின்வாங்காமல் முன்னேறிக் கொண்டிருகிறது என்பது தான். புதுப்புது போராட்ட உத்திகளைக் கண்டறித்து அந்த கொடூரங்களை வீழ்த்துவோம்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s