விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுப்போம்

அடாவடியாக, எந்த பாராளுமன்ற மரபுகளையும் மதிக்காமல், விவாதம் நடத்தாமல் நிறைவேற்றப்பட்ட, விவசயிகளுக்கு மட்டுமன்றி, மக்கள் அனைவருக்கும் எதிரான, வேளாண் சட்டங்களை நீக்கு எனும் கோரிக்கையோடு பத்து நாட்களைக் கடந்தும் தில்லி முற்றுகைப் போராட்டம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. சற்றேறக் குறைய 500க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் இப் போராட்டத்தில் ஒருங்கிணைந்து இருக்கின்றன, ஒருங்கிணைத்து வருகின்றன. போராட்டக் களத்திலிருந்து கிடைக்கும் செய்திகளெல்லாம் பெரும் உவகையை தருகின்றன.

ஒரு லட்சத்துக்கு பக்கத்தில் உழவு வண்டிகள், இரண்டு மாதங்களுக்கு போதுமான உணவுப் பொருட்கள், ஒன்றரைக் கோடி விவசாயிகள் என்று, இந்த உலகம் இதுவரை கண்டிராத பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகளின் அமைதிப் போராட்டம் நாட்டின் தலைநகரை உலுக்கிக் கொண்டிருக்கிறது. வேளாண் சட்டங்களை திரும்ப பெறு என்பது அம்பானி, அதானி, மோடி உருவப்படங்களை எரிப்பது, ரிலையன்ஸ் பெட்ரோல் நிலையங்களை முடக்குவது, தில்லியின் அனைத்து வழிகளையும் அடைப்பது என்று விரிவடைந்து வருகிறது. பஞ்சாப், ஹரியானா மட்டுமல்லாமல் ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள் தில்லியை நோக்கி நகரத் தொடங்கி இருக்கிறார்கள்.

இத்தனையும் எளிதாக நடந்து விடவில்லை. அல்லது இந்திய அரசும், அரசாங்கமும் போராட்டம் நடத்துவது மக்களின் உரிமை என்று மதித்து நடக்கவில்லை. மாறாக விவசாயிகளை முடக்குவதற்கு சட்ட வழியிலான, சட்டத்துக்கு அப்பாற்பட்ட அனைத்து வழிகளிலும் முயன்றது. தடியடி நடத்தி கலைத்துப் பார்த்தார்கள். கண்ணீர்புகை குண்டுகளை வீசினார்கள். அதிலும், பயன்படுத்தும் காலம் கடந்த கண்ணீர்புகை குண்டுகளை வீசினார்கள். அவ்வாறு பயன்படுத்துவது உயிரிழப்பை ஏற்படுத்தலாம் எனத் தெரிந்தும் அவ்வாறு பயன்படுத்தினார்கள். தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தினார்கள். சாலைகளின் குறுக்கே தட்டிகளை வைத்து மறித்தார்கள், பெருவீத வண்டிகளை சாலைகளின் குறுக்கே நிறுத்தினார்கள். கப்பல்களில் பயன்படுத்தும் சரக்குப் பெட்டிகளை கொண்டு வந்து சாலைகளை அடைத்தார்கள். பெரும் பாறாங்கற்களை, பாறைகளை கொண்டு வந்து சாலைகளை அடைத்தார்கள். பத்தடி அகலத்துக்கு சாலைகளின் குறுக்கே அகழிகளை தோண்டினார்கள். இன்னும் வெளியில் தெரியாத எத்தனையோ வழிகளில் தடுக்க நினைத்தார்கள். துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதைத் தவிர பிற அனைத்தையும் முயற்சித்துப் பார்த்தார்கள். அத்தனையையும் மீறித்தான் இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

மட்டுமல்லாது, பேச்சுவார்த்தை நாடகங்களையும் வெற்றிகரமாகவும், உறுதியுடனும் கடந்து கொண்டிருக்கிறது விவசாயிகளின் குழு. அதிலும், ஒன்றிய அரசு தரும் உணவு தண்ணீரையும் கூட தொடமாட்டோம் என்று துணிச்சலையும், தனித் தன்மையையும் நிருவி இருக்கிறார்கள் விவசாயிகள். இதுவரை எதிரிகளின் அணியில் இரண்டகர்களை உருவாக்கி, அதிகார அத்துமீறல்களை காட்டி ஆச்சமூட்டி தங்களுக்கு தேவையானதை நிறைவேற்றி வந்திருக்கும் பாஜக கும்பலை விவசாயிகளின் இந்த ஒதுக்கல் அடித்துத் துவைத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. இன்னும், ஊடகங்களையும் அவர்களின் அடிவருடித் தனத்தை சுட்டிக்காட்டி ஒதுக்கித் தள்ளியிருப்பது இந்தப் போராட்டத்தின் தனித்தன்மையை அனைவருக்கும் தெளிய வைத்திருக்கிறது.

இந்திய அரசின் தன்மைகளுக்கு ஏற்ப இனி போராட்டங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் போராட்டம் கட்டியம் கூறிக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு. ஓட்டு அரசியல் கட்சிகளும், புரட்சிகர கட்சிகளும் நடத்தும் போராட்டங்கள் அது எந்த வடிவிலான போராட்டங்களாக இருந்தாலும் அவை அரசுக்கு போதிய நெருக்கடிகளை தராத அடையாளப் போராட்டமாக ஆகியிருக்கிறது என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக உணர்த்தி இருக்கிறது. இது போன்ற பல படிப்பினைகளை இந்தப் போராட்டம் தந்திருக்கிறது என்றாலும் முதன்மையான ஒரு விதயத்தையும் இந்தப் போராட்டம் வெளிப்படுத்தி இருக்கிறது.

இந்தியா ஒரு விவசாய நாடு என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். நேரடியாகவும், மறைமுகமாகவும் கிட்டத்தட்ட 80 கோடிப் பேர் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எல்லா மாநிலங்களிலும் விவசாயிகள் பரவலாக இருக்கிறார்கள். என்றாலும் பஞ்சாப் ஹரியானா மாநிலங்கள் தான் இந்தப் போராட்டத்தில் கிளர்ந்தெழுந்து நிற்கின்றன, பிற மாநிலங்களில் இந்த எழுச்சி இல்லை. இதன் காரணம் என்ன? அல்லது, போராட்டங்கள் குறிப்பாக புரட்சிகர இடதுசாரிகளால் நடத்தப்படும் போராட்டங்கள் மக்கள் நலன் சார்ந்தவை என்றாலும், அவைகளில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொள்வதில்லையே ஏன்?

அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடு கூர்மையடையும் போது தான் பெருந்திரள் மக்கள் போராட்டங்கள் நடக்கும். இந்தியாவைப் பொருத்தவரை மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான முரண்பாடு கருத்தியல் எல்லையை தாண்டவே இல்லை. அதாவது, போராடாமல் நமக்கு வாழ்வு இல்லை எனும் உண்மை, மக்களிடம் அவர்களின் சொந்த பாடங்களினூடாக சேரவே இல்லை. மாறாக, வெளியிலிருந்து – அரசியல் கட்சிகள் உள்ளிட்டவைகளின் பரப்புரை வழியாக – ஒரு கருத்து எனும் அளவில் மட்டுமே சென்று சேர்ந்திருக்கிறது. அரசியல்வாதிகளின் ஊழல் தொடங்கி அரசு ஊழியர்களின் அதிகார மீறல்கள் வரை எதும் மக்களுக்கு தெரியாததல்ல. என்றாலும், அதனுள் தான் வாழ வேண்டும், அதனுள் தான் வாழ முடியும், அரசுக்கு எதிராக நின்று அமைதியான வாழ்க்கை வாழமுடியாது என்பது அவர்களின் சொந்த பாடங்களினூடாக வந்தடைந்த முடிவாக இருக்கிறது. போராடாமல் வாழ்வில்லை என்றல்ல, போராடினால் நம்மால் வாழ முடியாது என்பதே மக்களிடம் படிந்திருக்கும் முடிவு. இது தான் யதார்த்தம். இந்த யதார்த்தத்தை கணக்கில் கொள்ளாமல், அதாவது, அரசுக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடு இல்லாமல், அடுக்கடுக்கான சான்றுகளின் மூலம் பரப்புரை செய்வதால், அது மக்களுக்கு தெரிந்து விடுவதால் மக்கள் போராட்டத்துக்கு அணி திரண்டு விட மாட்டார்கள். “நன்றாக பேசுகிறீர்கள்” என்று கேட்டு பாராட்டி விட்டு நகர்ந்து விடுவார்கள்.

இந்த விவசாயிகள் போராட்டத்திலும் அது தான் நடந்து கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை ஒட்டியே வாழ்ந்து வருகிறார்கள். என்றாலும், அது லாபகரமான தொழிலாக இல்லை. இதை அரசு தரும் சொற்பமான மானியங்கள் மூலமோ, (இலவச மின்சாரம் போன்ற) திட்டங்கள் மூலமோ, அரசின் கொள்முதல் மூலமோ, வங்கிக் கடன்கள் மூலமோ, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்பதன் மூலமோ அல்லது இது போன்ற ஏதோ ஒன்றின் மூலம் ஈடுகட்டிக் கொண்டு, பெட்டிக்கடை போன்ற ஏதோ ஒரு விவசாயம் சாராத தொழிலை துணையாகக் கொண்டிருப்பதன் மூலமோ ஈடுகட்டிக் கொண்டு சமாளித்து வருகிறார்கள். இதில் புதிய சட்டத்தின் மூலம் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவதினால் அவர்கள் அரசை எதிர்த்து போராட்ட்த்தில் குதித்து விடுவார்களா? (இதன் பொருள் வேளாண் சட்டங்களை ஆதரித்து கருத்து கூறுகிறேன் என்பதல்ல. மக்களின் யதார்த்தம் இப்படித்தான் இருக்கிறது என்பதை புரிய வைப்பதே)

ஆனால் பஞ்சாப், ஹரியானா மற்றும் அதனை சூழ்ந்த பகுதிகளின் நிலை வேறு. இந்தப் பகுதி விவசாயிகள் தொடக்கத்தில் இருந்து, பசுமைப் புரட்சியினூடாக இன்று வரை விவசாயத்தை ஓரளவு லாபகரமான தொழிலாக நடத்தி வருகிறார்கள். பெரிய அளவில் நிலங்கள் உடமையாய் இருப்பது, உழவு எந்திரங்களைப் பயன்படுத்துவது என்று நாட்டின் பிற பகுதிகளை விட சிறப்பாக விவசாயம் செய்து வருகிறார்கள். குறிப்பாகச் சொன்னால் துணைத் தொழில்களால் அல்ல, விவசாயத்தினால் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர்களின் சிறப்பான வாழ்வை குலைப்பது போல் வேளாண் சட்டங்கள் வந்திருக்கின்றன. எனவே தான் அவர்கள் துணிச்சலுடன் போராடுகிறார்கள்.

அரசுக்கும் மக்களுக்குமான முரண்பாடு முற்றாமல் இருக்கும் போது, அது முற்றுவதற்கான நடைமுறைகளைச் செய்யாமல் வெறுமனே சான்றுகளுடன் பரப்புரை செய்து விடுவதால் மட்டுமே மக்களை போராட்டத்தின் பக்கம் அணிதிரட்ட முடியாது எனும் உண்மையை துலக்கமாக எடுத்துக் காட்டி இருக்கிறது, விவசாயிகளின் இந்த தில்லிப் போராட்டம்.

இந்தியா போன்ற துணைக்கண்ட நாட்டில், முழுமையாக வளர்ச்சியடையாமலும், லாபகரமான தொழிலாக இல்லாமல் இருக்கும் நிலையிலும், பெரும்பான்மை மக்கள் ஈடுபடும் தொழிலாக விவசாயம் இருக்கிறது. இந்த நிலையில் இருக்கும் விவசாயத்தை, வளர்த்தெடுத்து, முன்னேற்றி அதில் ஈடுபட்டிருக்கும் மக்களை வாழ வைக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக, விவசாயத்தை அப்படியே கார்ப்பரேட்டுகளுக்கு மாற்றிக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்தச் சட்டத்தை முறியடித்தாக வேண்டும். உண்ணும் உணவை உணர்வோடு உண்ணும் யாருக்கும் இதில் மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை.

தில்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் அடுத்தடுத்து தங்கள் போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று அதை நாடு தழுவிய வேலை நிறுத்தமாக முன்னெடுத்திருக்கிறார்கள். இதை ஆதரிப்பது என்பது வெறும் பரப்புரையாக மட்டும் இருந்து விடாமல், மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான முரண்பாடு குறித்த ஆய்வுகளை செய்வதும், அப்படியான முரண்பாடுகளை கூர்மையடைய வைக்கும் வழிமுறைகளை புதிய போராட்ட வடிவங்களாக வடித்தெடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். அது தான் இங்கிருந்தே விவசாயிகளின் தில்லிப் போராட்டத்தில் பங்கெடுக்கும் வழிமுறை.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s