
லட்சுமி விலாஸ் வங்கி. நூற்றாண்டை நெருங்கி செயல்பாட்டில் இருந்து கொண்டிருக்கும் வங்கி. தற்போது அந்த வங்கிக்கு வாராக்கடன் முற்றியதால் வணிகம் தடை செய்யப்பட்டு, ஒரு சிங்கப்பூர் வங்கியுடன் இணைப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறன. இது மட்டுமல்லாமல், யெஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி என அடுத்தடுத்து வங்கிகள் வீழ்வதற்கு காத்துக் கொண்டிருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் லெஹ்மன் வங்கி வீழ்ந்தது உலகெங்கும் பேசுபொருளாகியது. மட்டுமல்லாமல், சப் பிரைம் நெருக்கடி என்று உலகப் பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கவும் செய்தது. இந்த நிலை இங்கு மட்டுமல்ல, இப்போது மட்டுமல்ல, உலகெங்கும் அவ்வப்போது வங்கிகள் வீழ்வது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு தான். இந்த நிகழ்வுகளிலிருந்து மக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன? என்பது தான் தற்போது இன்றியமையாததாக இருக்கிறது.
முதலில், வங்கிகள் என்றால் என்ன? அவைகள் எப்போது தொடங்கப்பட்டன? அவைகள் தொடங்கப்பட்டதன் நோக்கம் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கான பதில்களில் இருந்து தான் அந்தப் பாடம் குறித்த புரிதல் தொடங்க வேண்டும். கி.பி 11ம் நூற்றாண்டிலிருந்தே வங்கிகள் தொடங்கப்பட்டு விட்டன. என்றாலும், தொடக்கத்தில் சில தனிப்பட்ட வேலைகளுக்கான பொருளாதாரத் திரட்டல் எனும் அளவில் தான் இருந்தன. வங்கிகளுக்குள் ஒருங்கிணைப்போ, ஒரே வேலைத் திட்டமோ இல்லாமல் தேவைகளிலிருந்து தத்தமது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டன. இன்றைய ஒருங்கிணைந்த, திட்டமிடப்பட்ட மூலதனத் திரட்டலை நோக்கமாகக் கொண்ட வங்கிகள் முதலாளித்துவ தொழிற்புரட்சிக்குப் பின்னரே ஏற்பட்டன, அல்லது பரிணாமமடைந்தன.
இன்றைய வங்கிகளின் நோக்கமாக சொல்லப்படுவது என்னவென்றால், கொடுக்கல் வாங்கலை எளிமைப்படுத்துவது என்பதில் தொடங்கி நாட்டின் பொருளாதாரத்தை தாங்கிப் பிடிப்பது என்பது வரை பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. என்றாலும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரே நோக்கம் என்றால், அது மக்களிடம் பரவலாக, சிறிய அளவில் இருக்கும் பொருளாதார உபரியை சேமித்து கார்ப்பரேட்டுகளுக்கு பயன்படுத்தக் கொடுப்பது என்பது தான். இன்னும் விரிவாக கூற வேண்டுமென்றால், ஒரு இடத்தில் சுரண்டிச் சேமித்த பொருளாதாரத்தை இன்னொரு இடத்தில் மூலதனமாக மாற்றுவதற்கு சட்டத்தின் பாற்பட்ட, அல்லது சட்டத்துக்கு அப்பாற்பட்ட வழிகளில் கடத்துவது. இருக்கும் நாட்டில் சொற்ப அளவில் இருக்கும் வரியையும் கட்டாமல், அரசுக்கு தெரியாமல் சேமித்து வைப்பது என்று பல திசைகளில் வங்கிகள் செயல்படுகின்றன. எல்லாவற்றிலும் இருக்கும் ஒரே தன்மை, வங்கிகள் கார்ப்பரேட்டுகளின் நலனுக்கானவை என்பது மட்டுமே.
இந்தியாவில் 60களின் பிறகு, அதாவது வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு வங்கிகளின் செயல்பாடு மிகவும் பர்ந்து விரித்த அளவில் நடைபெறுகிறது. சற்றேறக் குறைய குக்கிராமங்களைத் தவிர ஏனைய அனைத்து கிராமங்களிலும் வங்கிக் கிளைகள் செயல்படுகின்றன. அனைத்து வங்கி நிறுவனங்களையும் சேமவங்கி (ரிசர்வ் வங்கி) கட்டுப்படுத்துகிறது. ஒரு வங்கி எந்த அளவுக்கு வைப்புகள் பெறவேண்டும்? எந்த அளவுக்கு கடன் கொடுக்க வேண்டும்? எந்த அளவுக்கு கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்? கணக்குகளை தணிக்கைக்கு உட்படுத்துவது தொடங்கி எவ்வளவு வட்டி பெற வேண்டும்? கொடுக்க வேண்டும் என்பது வரை அனைத்தையும் சேம வங்கி தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளது. இந்த நிலையில் 500க்கும் மேற்பட்ட கிளைகளுடன், 94 ஆண்டுகளாக செயல்பட்டு வந்திருக்கும் ஒரு வங்கியின் வீழ்ச்சிக்கு, சேமவங்கி எந்த விதத்திலும் பொறுப்பில்லை என்று கூறிவிட முடியுமா?
லட்சுமி விலாஸ் வங்கியின் சிக்கல் தனிப்பட்ட ஒன்றல்ல, எல்லா வங்கிகளும் வாராக்கடன் பிரச்சையில் சிக்கித் தவிப்பது போலவே லட்சுமி விலாஸ் வங்கியும் வாராக்கடன் சிக்கலில் சிக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில் வாராக்கடனின் எல்லை உச்சத்தை தொட்டிருக்கிறது. இந்த வாரக்கடன்களுக்கும் சேமவங்கியின் கொள்கைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூற முடியுமா? எனவே, இந்த விதயத்தில், லட்சுமி விலாஸ் வங்கி தனிப்பட்ட முறையில் செய்த தவறுகளை சேமவங்கி தலையிட்டு சரி செய்ய முயல்கிறது எனும் புரிதலே பிழையானது.
லட்சுமி விலாஸ் வங்கியின் மொத்த சொத்து மதிப்பு 5,000 கோடி, இதன் நிரந்தர வைப்புத் தொகை 31,000 கோடி. இந்த வங்கியின் வாராக்கடன் மதிப்பு 2,000 கோடிக்கு மேல் என்று கூறப்படுகிறது (இந்த வாராக்கடன் மதிப்பை சேமவங்கி கூட இவ்வளவு தான் என்று துல்லியமாக அறிவிக்கவில்லை) இந்த வாரக்கடனை வாங்கியவர்கள் விவசாயிகளோ, தொழிலாளர்களோ, ஏழைகளோ அல்லர். அந்த வாராக்கடனை வாங்கிய ஏழை(!)களின் பட்டியல் இது தான்,
ஜெட் ஏர்வேஸ் குழுமம்,
ரிலையன்ஸ் ஹவுசிங் பைனான்ஸ்
காக்ஸ் அண்ட் கிங்ஸ்,
ரெலிகேர் நிறுவனம்,
நீரவ் மோடி குழுமம்,
காபி டே,
இந்த நிறுவனங்கள் வாங்கிய கடனை கட்ட முடியாத நிலை வந்ததால் சேமவங்கி முன்வந்து இந்த நிதி நிலமையை சரி செய்யும் பொருட்டு அந்த வங்கியின் வணிகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும், அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் மக்கள் தாங்கள் சொந்தப் பணத்தை தங்களுடைய தேவைக்கு என்றாலும் 25,000 ரூபாய்க்கு மேல் எடுக்கக் கூடாது என்றும் அறிவித்திருக்கிறது. கடன் வாங்கி ஏமாற்றிக் கொண்டிருப்பது கார்ப்பரேட்டுகள், ஆனால் தண்டனையோ மக்களுக்கு. இது சேமவங்கியின் மீட்பு நடவடிக்கையின் முதல்படி.
லட்சுமி விலாஸ் வங்கியின் வளர்ச்சிக் குழுத் தலைவர் கே.ஆர்.பிரதீப், அண்மையில் புளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “வங்கியின் நிதிநிலையை சரி செய்து கொண்டிருக்கிறோம். அதற்கான நிதி ஆதாரம் எங்களிடம் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார். இதனடிப்படையில் கடந்த ஆண்டே இந்தியாஃபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்துடன் இணைந்து சரி செய்வதற்கான முயற்சியில் இறங்கியது. ஆனால், சேமவங்கி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, மீத்தா மக்கன் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைத்தது. தற்போது மீத்தா மக்கன் குழு அளித்திருக்கும் பரிந்துரை என்னவென்றால் லட்சுமி விலாஸ் வங்கியை சிங்கப்பூரின் டி.பி.எஸ் வங்கியுடன் இணைக்கலாம். இதற்குத் தேவையான 2,500 கோடி நிதியை அந்த வங்கி அளிக்க முன் வந்திருக்கிறது, என்பது. அதாவது இந்திய நிதி நிறுவனத்துடன் இணைந்து நாங்கள் சரி செய்து கொள்கிறோம் என்று லட்சுமி விலாஸ் வங்கி கூறியதை ஏற்க மறுத்த சேம வங்கி, வெளிநாட்டு வங்கியுடன் இணைக்க ஏற்பாடு செய்திருக்கிறது. இது தான் மீட்பு நடவடிக்கையின் இறுதிப்படி.
லட்சுமி விலாஸ் வங்கி நாளொன்றுக்கு 500 கோடி அளவுக்கு வரவு செலவு செய்கிறது. நாடெங்கும் 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 569 கிளைகள், ஏழு பிராந்திய அலுவலகங்கள் இந்த வங்கிக்கு இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான கிளைகள் கிராமப்புறங்களில் செயல்படுகின்றன. மொத்த சொத்து மதிப்பு 5,000 கோடி. தற்போது சேமவங்கி மதிப்பிட்டிருக்கும் 2,500 கோடியை தந்து லட்சுமி விலாஸ் வங்கியை எடுத்துக் கொள்ளவிருக்கும் சிங்கப்பூரைச் சேர்ந்த டி.பி.எஸ் வங்கி சென்னையில் வெறும் 16 கிளைகளை மட்டுமே கொண்டிருக்கும் ஒரு வங்கி. ஆக, 2,500 கோடியை முதலீடு செய்து நாடெங்கும் 569 கிளைகளுடன் 5,000 கோடி சொத்து மதிப்பு கொண்டிருக்கும் வங்கியை சொந்தமாக்கிக் கொள்ளப் போகிறது, அல்லது கபளீகரம் செய்யப் போகிறது சிங்கப்பூரைச் சேர்ந்த டிபிஎஸ் வங்கி.
லட்சுமி விலாஸ் வங்கி தனியாரால் நிர்வகிக்கப்படும் வங்கி என்றாலும், மக்களின் சொத்தான பொதுத்துறை நிறுவனங்கள் இப்படித் தான் அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டன, கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அரசின் கொள்கை தனியார்மயம் என்பது தேசிய முதலாளிகளுக்கு பொருந்தாது, பன்னாட்டு முதலாளிகளுக்கே பொருந்தும் என்பது தான் உண்மை. அரசு என்பது மக்களை ஒடுக்கும் இராணுவம் காவல் துறை தவிர ஏனைய அனைத்தும் தனியாருக்கு எனும் அரசின் கொள்கையின் பொருள் பெரு முதலாளிகள் பொருளாதார ரீதியாக மக்களை ஒடுக்குவார்கள், அரசு உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மக்களை ஒடுக்கும் என்பது தான்.
இதை மக்கள் எவ்வாறு எதிர் கொள்வது என்பது தான் மெய்யான பிரச்சனை. ஏனென்றால் வங்கிகளின் சுரண்டல் என்பது அடுத்ததடுத்த வடிவங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மக்களின் சேமிப்பை பெருமுதலாளிகள் கொள்ளையடிக்கிறார்கள் என்பது அதில் முதன்மையானது. தற்போது உலகின் அரசுகள் பணப் புழக்கம் என்பது ரொக்கமாக இருக்கக் கூடாது எனும் திசையில் சென்று கொண்டிருக்கின்றன. அனைத்தும் வங்கிகள் மூலம் மிண்ணனு முறையில், மெய்நிகர் பணமாக மாற்றம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் கட்டணம் எனும் முறையை புகுத்திக் கொண்டிருக்கிறார்கள். நுகர்வு வெறியில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கும் மக்களும் அதை ஏற்றுக் கொள்ள பழக்கப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பத்து ரூபாய்க்கு தேனீர் குடித்து விட்டு அதற்கு பரிமாற்றக் கட்டணமாக ஐந்து ரூபாய் செலுத்தும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
இதற்கு தீர்வு என்ன? என்று சிந்தித்தாக வேண்டிய கட்டத்தில் மக்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். திட்டவட்டமாக வங்கிகளின் நோக்கம் மக்களின் சேமிப்பை கார்ப்பரேட்டுகள் பயன்படுத்த வகை செய்வது என்று உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் மக்களுக்கு அதில் கிடைப்பதாக கருதப்படும் கொஞ்சத்திலும் கொஞ்சமான பலன்களை துறப்பது குறித்து மக்கள் சிந்தித்தாக வேண்டும். சேமிக்க வாய்ப்பிருக்கும் மக்கள் தங்களிடம் மேலதிகமாக இருக்கும் பணத்தை வங்கிகளில் முடக்கி வைப்பதை விடுத்து, அதை சிறு சிறு முதலீடுகளாக்கி தனக்கு அருகில் இருக்கும் மக்களோடு இணைந்து தொழிலோ, விற்பனைக் கடைகளோ அல்லது அந்தந்த பகுதிகளுக்கு உகந்ததாக இருக்கும் ஏதாவது உற்பத்திசாலைகளையோ தொடங்க வேண்டும். அதில் சக மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். இதை சங்கிலித் தொடர்போல விரிந்த அளவில் கொண்டு செல்ல முடியும். இதை புரட்சிகர கட்சிகள் தங்கள் நோக்கங்களோடு இணைத்து அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாட்டை கூர்மையடையச் செய்ய முடியும்.
தொடர்ச்சியாக அரசு எந்திரம் தங்களின் கார்ப்பரேட் சேவையில் மக்களை எந்த எல்லைக்கும் சென்று கொடுமைக்கு ஆட்படுத்தலாம் என்று வெளிப்படையாக இறங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது, இருப்பது மக்கள் நல அரசு எனும் மூடநம்பிக்கையை ஒழித்துக் கட்டுவது மக்களின் இன்றியமையாத தேவையாக இருக்கிறது.