கிரேக்க குலம் 1

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 16

கிரேக்கர்களும் பெலாஸ்கியர்களும் அதே மூல இனக்குழுவிலிருந்து தோன்றிய மற்ற மக்களினங்களும் அமெரிக்கர்களைப் போலவே ஏடறியா வரலாற்றுக் காலத்திலிருந்தே குலம், பிராட்ரி, இனக்குழு, இனக்குழுக்களின் கூட்டு என்ற அதே அங்ககமான தொடர்வரிசை முறையைக் கொண்டிருந்தார்கள். பிராட்ரி இல்லாமற் போய் விடலாம்; உதாரணமாக, டோரியர்களிடையே அது இல்லை. இனக்குழுக்களின் கூட்டு எங்குமே இன்னும் முழு வளர்ச்சி பெறாதிருக்கலாம். ஆனால் எல்லா இடங்களிலும் குலம் அடிப்படை அலகாக இருந்தது. கிரேக்கர்கள் வரலாற்றில் நுழைந்த காலத்தில் அவர்கள் நாகரிகத்தின் வாயிற்படியில் இருந்தார்கள். கிரேக்கர்களும் மேற்குரிய அமெரிக்க இனக்குழுக்களுக்கும் இடையில் அநேகமாக மாபெரும் இரண்டு முழுமையான சகாப்தங்கள் இருக்கின்றன. வீர யுகத்தைச் சேர்ந்த கிரேக்கர்கள் அந்த அளவுக்கு இராகோஸ்களை விட்டு முன்சென்றிருக்கிறார்கள். கிரேக்க குலம் இக்காரணத்துக்காகவே இராகோஸ் குலத்தின் பழமையான தன்மையைப் பெற்றிருக்கவில்லை. குழு மணத்தின் முத்திரை கணிசமான அளவுக்கு மங்கலாகிக் கொண்டிருந்தது. தாயுரிமை தந்தையுரிமைக்கு வழிவிட்டது; அதனால் மேலோங்கிய தனிச்சொத்து குல அமைப்பில் முதல் உடைப்பை உண்டாக்கியது. முதல் உடைப்பை தொடர்ந்து இயல்பாகவே இரண்டாவது உடைப்பும் ஏற்பட்டது. தந்தையுரிமை ஏற்பட்ட பிறகு ஒரு பணக்காரப் பெண்ணின் செல்வம் திருமண உறவின் மூலம் அவளுடைய கணவனைச் சேர்ந்ததாகும், அதாவது மற்றொரு குலத்துக்குச் சேர்ந்ததாகும். ஆக, குலச் சட்டம் அனைத்தின் அடிப்படையும் உடைக்கப்பட்டது. இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், குலத்துக்கள் செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அந்தப் பெண் தன் குலத்துக்குள்ளேயே மணந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது மட்டுமன்றி அப்படி மணப்பது கடமையாகவும் ஆக்கப்பட்டது.

குரோட் எழுதிய கிரேக்க வரலாறு என்ற நூலின்படி, அதீனியக் குலம் பின்வருவனவற்றால் ஒன்றுசேர்க்கப்பட்டிருந்தது:

1. பொதுவான மதச் சடங்குகள், குலத்தின் ஆதி முன்னோர் என்று கருதப்பட்டு அதற்கேற்ப விசேஷப் பெயர் அளிக்கப்பட்டிருந்த ஒரு தெய்வத்துக்கு வணக்கம் தெரிவிக்கும் பொருட்டு புரோகிதங்களுக்கு விசேஷமான சலுகையுரிமைகள்.

2. பொதுவான இடுகாடு (டெமஸ்தேனஸ் எழுதிய யூபுலைடிஸ் நூலை ஒப்ப்புநோக்குக).

3, பரஸ்பர வாரிசுரிமைகள்.

4. பலாத்காரத்துக்கு எதிராக ஒருவருக்கொருவர் உதவி, பாதுக்காப்பு மற்றும் ஆதரவளித்தல்.

5. சில சந்தர்ப்பங்களில் குலத்துக்குள்ளேயே மணக்கும்படி பரஸ்பர உரிமையும் கடமையும், குறிப்பாகப் பெற்றோர்கள் இல்லாத பெண்கள் அல்லது பணக்காரப் பெண் வாரிசுகளுக்கு.

6. குறைந்தபட்சம் சில சந்தர்ப்பங்களிலாவது, பொதுச் சொத்துக்கு உடைமை கொண்டிருத்தல், அதற்கென்று ஓர் அர்ஹனும் (தலைவன்) பொருளாளரும் இருத்தல்.

சில குலங்களைப் பிணைத்து வைத்திருந்த பிராட்ரி இன்னும் குறைவான நெருங்கிய உறவைக் கொண்டிருந்தது. ஆனால் இங்கேயும் இதே போன்ற தன்மையுள்ள பரஸ்பர உரிமைகளையும் கடமைகளையும் காண்கிறோம். விசேஷமான மதச் சடங்குகளில் ஒன்றுகூடித் தொழுதல், பிராட்ரியின் உறுப்பினன் கொல்லப்பட்டால், அதற்கு வழக்குத் தொடர்கின்ற உரிமை ஆகியவற்றில் இதைக் காண்கிறோம். மேலும், ஒரு இனக்குழுவின் எல்லா பிராட்ரிகளும் சில பொதுவான புனிதச் சடங்குகளைப் பிரபுக்களிடமிருந்து (ஏவுபட்ரிடுகளிலிருந்து) பொறுக்கப்பட்ட ஃபிலோபஸிலியஸ் (இனக்குழுவின் தலைவன்) என்பவனது தலைமையின் கீழ் குறித்த காலமுறைப்படி நடத்தின.

குரோட் மேற்குறியபடி எழுதினார். மார்கஸ் மேலும் கூடுதலாக எழுதுவதாவது: “கிரேக்க குலத்தில் காட்டு மிராண்டியை (உதாரணம், இராகோஸ்) தவறுக்கிடமின்றிக் கண்டுபிடிக்க முடியும்”. மேலும் நாம் ஆராய்கின்ற பொழுது அவன் இன்னும் சரியாகத் தெரிகிறான்.

உண்மையில் கிரேக்க குலத்துக்குப் பின்வரும் குணாம்சங்களும் உண்டு:

7. தந்தையுரிமைப்படி மரபு வழி.

8. பணக்காரப் பெண் வாரிசு தவிர மற்றவர்கள் குலத்துக்குள்ளே மணம் புரிந்து கொள்வதற்குத் தடை. இந்த விலக்கும் அதை ஒரு கட்டளையாக அமைந்திருப்பதும் பழைய விதியின் செல்லத்தக்க தன்மையைத் தெளிவாக நிரூபிக்கின்றன. ஒரு பெண் மணக்கும் பொழுது தன் குலத்தின் மதச் சடங்குகளைக் கைவிடுகிறாள், தன் கணவனுடைய குலத்தின் மதச் சடங்குகளை ஏற்கிறாள், கணவனுடைய பிராட்ரியில் அவள் சேர்க்கப்படுகிறாள் என்று எங்கும் ஒப்புக்கொள்ளப்பட்ட விதியிலிருந்து இது தொடர்கிறது. இதுவும் டிகயேர்கசுடைய நூலின் பிரபலமான ஒரு பகுதியும் குலத்துக்கு வெளியே மணம் செய்வதுதான் விதி என்று நிரூபிக்கின்றன. ஆணோ, பெண்ணோ யாரும் தமது குலத்துக்குள் மணக்க அனுமதிக்கப்பட வில்லை என்று பெக்கர் தான் எழுதிய ஹரீக்லஸ் என்ற நூலில் நேரடியாக அனுமானிக்கிறார்.

9. சுவீகாரத்தின் மூலம் குலத்துக்குள் சேர்கின்ற உரிமை; குடும்பத்தால் சுவீகாரம் செய்வதன் மூலம் கடைபிடிக்கப்பட்டது, ஆனால் பொதுச் சடங்குகளுடன் நடைபெற வேண்டும், அதுவும் அசாதாரணமான சந்தர்ப்பங்களில் மட்டுமே.

10. தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் நீக்குவதற்கும் உரிமை. ஒவ்வொரு குலத்துக்கும் ஒரு அர்ஹன் இருந்தான் என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்தப் பதவி குறிப்பிட்ட சில குடும்பங்களின் பரம்பரையுரிமை என்று எங்குமே சொல்லப்படவில்லை. அநாகரிகக் காலத்தின் முடிவு வரைக்கும் கறாரான பரம்பரைக்கு எதிராகவே நிலைமை பெரும்பாலும் இருந்தது; குலத்துக்குள் ஏழைகள், பணக்காரர்களுக்கு இடையில் முழு சமத்துவம் நிலவியபடியால் இது முற்றிலும் பொருத்த மில்லாததாகும்.

குரோட் மட்டுமன்றி, நீபூர், மொம்ஸென், மூலசிறப்பான பண்டைக்காலத்தின் இதர முந்திய வரலாற்றாசிரியர்கள் அனைவரும் குலம் என்ற பிரச்சினையைத் தீர்க்கத் தவறினார்கள். அதன் தனித்தன்மையான குணாம்சங்கள் பலவற்றை அவர்கள் சரியாகக் குறிப்பிட்டார்கள் என்றாலும், அதைக் குடும்பங்களின் குழுவாகவே எப்பொழுதும் கருதியபடியால் குலத்தின் தன்மை மற்றும் தோற்றத்தைத் தாங்களே புரிந்து கொள்ள இயலாதபடிச் செய்துவிட்டார்கள். குல அமைப்பில் குடும்பம் சமுதாயத்தின் அலகாக ஒருபொதும் இருக்கவில்லை, அப்படி இருக்கவும் முடியாது. ஏனென்றால் கணவனும் மனைவியும் அவசியமாகவே வேறுபட்ட இரண்டு குலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். குலம் முழுவதும் பிராட்ரிக்குச் சொந்தம்; பிராட்ரி முழுவதும் இனக்குழுக்குச் சொந்தம். ஆனால் குடும்பத்தைப் பொறுத்தமட்டில், அதில் ஒரு பாதி கணவனுடைய குலத்துக்கும் மறுபாதி மனைவியின் குலத்துக்கும் சொந்தம். அரசும் கூட பொதுச் சட்டத்தில் குடும்பத்தை அங்கீகரிக்கவில்லை. இன்றைக்கும் கூட அது சிவில் சட்டத்தில்தான் இருக்கிறது. எனினும் ஏடறிந்த வரலாறு அனைத்தும் தனிப்பட்ட ஒருதாரக் குடும்பத்தை மூலக்கருவாகக் கொண்டு அதைச் சுற்றியே சமுதாயமும் அரசும் படிப்படியாக உருப்பெற்றன என்ற அபத்தமான கருத்திலிருந்துதான் – இது குறிப்பாக 18 ஆம் நூற்றாண்டில் மறுக்க முடியாத கருத்தாக நிலைத்து விட்டது – தொடங்குகிறது; உண்மையில், தனிப்பட்ட ஒருதாரக் குடும்பம் நாகரிகக் காலத்துக்கு மிகவும் முற்பட்டதல்ல. ஆகவே முந்திய கருத்து அபத்தமே.

மார்க்ஸ் மேலும் கூறுகிறார்: “திரு. குரோட் தயவு செய்து இதையும் கவனிக்கட்டும். கிரேக்கர்கள் புராணங்களிலிருந்து தமது குலங்களைக் கண்டுபிடித்த போதிலும், தாங்களே படைத்த தெய்வங்களையும் தெய்வாம்ச புருஷர்களையும் கொண்ட அந்தப் புராணங்களை விட குலங்கள் வயதில் மூத்தவையாகும்.”

முக்கியமான, முற்றிலும் சந்தேகப்பட முடியாத சாட்சி என்ற முறையில் மார்கன் குரோட்டை விரும்பி மேற்கோள் காட்டுகிறார். ஒவ்வோர் அதீனியக் குலமும் தனது பிரபலமான முன்னோரிடமிருந்து பெறப்பட்ட பெயரைத் தனக்குச் சூட்டிக் கொண்டிருந்தது என்று குரோட் மேலும் கூறுகிறார்; சொலோன் காலத்துக்கு முன்பு பொது விதியாகவும், அதற்கு பின்னரும் ஒருவன் தன்னுடைய சொத்து சம்பந்தமாக உயிலெழுதி வைக்காமல் இறந்து போனாலும், அவன் சொத்துக்கு அவனுடைய குல உறுப்பினர்கள் (gennetes) வாரிசானார்கள் என்றும், ஒருவன் கொல்லப்பட்டால், முதலில் அவனுடைய உறவினர்களும் கடைசியாக பிராட்ரி உறுப்பினர்களும் குற்றவாளி மீது நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்வதற்கு உரிமையும் கடமையும் பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறுகிறார்:

 “மிகவும் பண்டைக்கால அதீனியச் சட்டங்களைப் பற்றி நாம் கேள்விப்படுகிறவை எல்லாம் குலப் பிரிவுகளையும் பிராட்ரிப் பிரிவுகளையும் அடிப்படையாக்க் கொண்டுள்ளன.”

பொது முன்னோர்களிடமிருந்து குலங்கள் பிறந்தது “பள்ளிப் படிப்புள்ள அற்பவாதிகளூக்கு” (மார்க்ஸ்) தலைவலி ஏற்படுத்துகின்ற புதிராகவே இருந்து வந்தது. இது இயற்கைதான், இந்த முன்னோர்களெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று அவர்கள் சாதிப்பதால் குலங்கள் எப்படி தனித்தனியான, தனித்தன்மையுள்ள, ஆதியில் முற்றிலும் தொடர்பில்லாமலிருந்த குடும்பங்களிலிருந்து வளர்ச்சியடைந்தன என்பதை விளக்க முடியாமல் தவிக்கின்றனர். எனினும் குலங்கள் இருப்பதை விளக்குவதற்காகவாது எப்படியாகிலும் அவர்கள் இதை விளக்கியாக வேண்டும். எனவே அவர்கள் வார்த்தைச் சுழலைக் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். மரபு வரலாறு என்பது கட்டுக்கதையே, ஆனால் குலம் என்பது உண்மையானது என்ற சொற்றொடருக்கு அப்பால் பின்வருமாறு கூறுகிறார் (அடைப்புக் குறிகளுக்குள் இருக்கும் கூற்றுகள் மார்க்ஸ் எழுதியிருப்பதாகும்):

“இந்த மரபு வரலாற்றைப் பற்றி நாம் மிகவும் அபூர்வமாகத் தான் கேள்விப்படுகிறோம். ஏனென்றால் பிரசித்தி பெற்ற, வணங்கத்தக்க சில விஷயங்களில் இது பகிரங்கமாக்கப்படுகிறது. ஆனால், அதைவிட அற்பமான குலங்கள் தமது பொதுக் கிரியைகளைப் பெற்றிருந்தன” (இது சற்று விசித்திரமானதுதான், திருவாளர் குரோட்!), “பொதுவான அமானுஷ்ய முன்னோரையும் மரபு வரலாற்றையும் பொற்றிருந்தன. அதை விடப் பிரபலமான குலங்கள் பெற்றிருந்த மாதிரியே” (அற்பமான குலங்களுக்கு எவ்வளவு விசித்திரமாயுள்ளது, திருவாளர் குரோட்!); “அமைப்புத் திட்டமமும் கருத்தியலான அடிப்படையும்” (அன்புடையீர், ideal அல்ல, carnal தான், அதாவது நமது மொழியில் உடலின்பத்துக்குரியது!) “எல்லாவற்றிலும் ஒன்றாகவே இருந்தன.”

இதற்கு மார்கன் அளித்த பதிலை மார்கஸ் பின்வருமாறு சுருக்கித் தருகிறார்: “ஆதி வடிவத்திலிருந்த குலத்துக்கு – மற்ற மனிதர்களைப் போலவே கிரேக்கர்களும் இதைப் பெற்றிருந்தனர் – பொருத்தமான இரத்த உறவுமுறை குலங்களின் எல்லா உறுப்பினர்களின் பரஸ்பர உறவை பற்றிய அறிவைப் பாதுகாத்து வந்தது. தங்களுக்கு மிகவும் முக்கியத்துவத்துவத்தைக் கொண்டிருந்த இந்த விஷயத்தை அவர்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே நடைமுறையின் மூலமாக அறிந்திடுந்தார்கள். ஒருதாரக் குடும்பம் வந்ததும் இது மறக்கப்பட்டது. குலப் பெயர் ஒரு மரபு வரலாற்றை உண்டாக்கியது. அதனுடன் ஒப்பிட்டால் தனிப்பட்ட குடும்பத்தின் மரபு வரலாறு அற்பமாகத் தோன்றியது. இப்பொழுது இந்தப் பெயர் அதைத் தாங்கியிருப்பவர்களுக்குத் தமது பொது முன்னோரை நிரூபிப்பதற்கே. ஆனால் குலத்தின் மரபு வரலாறு எவ்வளவோ பின்னுக்குச் சென்றதால், அதன் உறுப்பினர்கள் – அதிகச் சமீப கால முன்னோர்கள் உள்ள சிலர் தவிர – இப்பொழுது தமது பரஸ்பர இரத்த உறவு முறையை நிரூபிக்க முடியவில்லை. ஒரு பொது முன்னோர்கள் உள்ள சிலர் தவிர – இப்பொழுது தமது பரஸ்பர இரத்த உறவு முறையை நிரூபிக்க முடியவில்லை. ஒரு பொது முன்னோருக்குப் பெயரே ஒரு சான்றாக, முடிவான சான்றாக இருந்தது – சுவீகாரங்கள் மட்டும் இதற்கு விலக்காகும். மறுபக்கத்தில், குரோட்டும் நீபூரும் செய்வதைப் போல குல உறுப்பினர்களிடையே எல்லா இரத்த உறவுமுறையையும் உண்மையில் மறுத்தல் – இது குலத்தை மூளையின் வெறும் கட்டுக் கதையாக, கற்பனைப் படைப்பாக மாற்றி விடுகிறது – ῾கருத்தியலான’ விஞ்ஞானிகளுக்கு, அதாவது அறைகளுக்குள் அடைபட்டிருக்கின்ற புத்தகப் புழுக்களுக்கு ஏற்புடையதாகும். குறிப்பாக ஒருதார மண முறை முளைவிடத் தொடங்கியதிலிருந்து தலைமுறைகளின் பரஸ்பரத் தொடர்பு வெகு தூரத்துக்குக் கொண்டு போகப்பட்டிருப்பதாலும் கடந்த காலத்தின் எதார்த்தம் புராணக் கற்பனையில் பிரதிபலிப்பதாகத் தோன்றுவதாலும் நமது வெகுளித்தனமான அற்பவாதிகள் கற்பனையில் தோன்றிய மரபு வரலாறு உண்மையான குலங்களைப் படைத்தது என்று முடிவு செய்தார்கள், முடிவு செய்தும் வருகிறார்கள்!”

அமெரிக்கர்களிடையே இருப்பதைப் போல பிராட்ரி ஒரு தாய்க் குலமே; அது சில சேய்க் குலங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. அதே சமயத்தில், அது அவற்றை ஒற்றுமைப் படுத்தியுமுள்ளது; பெரும்பாலும் ஒரு பொது முன்னோரிடமிருந்து தோன்றியதாகவும் காட்டி வந்துள்ளது. எனவே குரோட் கூறுகின்றபடி,

“ஹெகடேயசின் பிராட்ரியின் சம காலத்திய உறுப்பினர்களும் பரம்பரை இரத்த உறவு உள்ள பதினாறாவது தலைமுறைக்கு முந்திய முன்னோராக ஒரு பொதுவான தெய்வத்தைக் கொண்டிருந்தனர்”.

எனவே இந்த பிராட்ரியின் எல்லாக் குலங்களும் உண்மையாகவெ சகோதரக் குலங்களாகும். “துருப்புகளை பிராட்டரிகளாகவும் இனக்குழுக்களாகவும் அணிவகுத்து நிறுத்துக, பிராட்ரி பிராட்ரிக்குத் துணையாகவும் இனக்குழு இனுக்குழுவுக்குத் துணையாகவும் இருகட்டும்!” [ஹோமர், இலியாத், இரண்டாவது பாடல்,]  என்று அகமெம்னானுக்கு நெஸ்டர் அறிவுறுத்துகின்ற பிரபலமான பகுதியில் ஹோமர் பிராட்ரியை ஒரு இராணுவ அலகாகத்தான் இன்னும் கூறுகின்றார்.

ஒரு பிராட்ரியின் உறுப்பினனைக் கொன்றவன் மீது வழக்குத் தொடர்வதற்கு பிராட்ரிக்கு உரிமையும் கடமையும் உண்டு; கடந்த காலத்தில் அதற்கு இரத்தப் பழிக் கடமை இருந்ததை இது குறிக்கிறது. மேலும், அதற்குப் பொதுவான ஆலயங்களும் விழாக்களும் உள்ளன. ஏனென்றால் மரபு வழியாக வந்த பழைய ஆரிய இயற்கை வழிபாட்டிலிருந்து கிரேக்க புராணம் முழுவதும் குலங்கள், பிராட்ரிகளினால் தான், அவற்றுக்குள்ளாகவே தான் வளர்ச்சியடைந்தது. பிராட்ரிக்கு ஒரு தலைவன் (phratriarchos) இருந்தான்; மேலும், டெ குலான்ஷ் கருத்தின்படி, கட்டுப்படுத்தும்படியான முடிவுகளைச் செய்கின்ற பொதுக் கூட்டங்களும் நீதிமன்றமும் நிர்வாகமும் இருந்தன. பிற்காலத்தை சேர்ந்தப் அரசும் கூட குலத்தைப் புறக்கணிக்கின்ற பொழுதே பிராட்ரியிடம் சில பொதுக் கடமைகளை ஒப்படைத்த்து.

இரத்த உறவுள்ள சில பிராட்ரிகள் ஒரு இனக்குழுவாக அமைந்தன. ஆட்டிக்காவில் ஒவ்வொன்றும் மூன்று பிரட்ரிகளைக் கொண்ட நான்கு இனக்குழுக்கள் இருந்தன; ஒவ்வொரு பிராட்ரியிலும் முப்பது குலங்கள் இருந்தன. குழுக்கள் இவ்வளவு கவனமாகப் பிரிக்கப்பட்டிருப்பது தன்னியல்பாக தொன்றிய அமைப்பில் உணர்வுப் பூர்வமாக, திட்டமிட்ட முறையில் குறுக்கிட்டிருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.இது எப்படி, எப்பொழுது, ஏன் செய்யப்பட்டது என்பதை கிரேக்க வரலாறு வெளியிடவில்லை. ஏனென்றால் கிரேக்கர்கள் பாதுகாத்து வைத்திருந்த நினைவுகள் வீர யுகத்துக்கு முந்திச் செல்லவில்லை.

கிரேக்கர்கள் ஒப்புநோக்கில் சிறிய நிலப்பரப்பில் அடர்த்தியாக குழுமியிருந்தார்கள். எனவே அவர்களுடைய கிளைமொழி வேறுபாடுகள் பரந்த அமெரிக்க காடுகளில் வளர்ச்சியடைந்த கிளைமொழிகளின் வேறுபாடுகளைக் காட்டிலும் குறைவாகவே தெரிந்தன. எனினும் இங்கே கூட முக்கிய கிளைமொழியைக் கொண்டிருந்த இனக்குழுக்களே ஒரு பெரிய காட்டில் ஒன்றுபட்டிருந்தன என்று பார்க்கிறோம். சின்னஞ்சிறிய ஆட்டிக்காவும் கூடத் தனக்கு ஒரு கிளைமொழியைக் கொண்டிருந்தது; அது பின்னால் கிரேக்க உரை நடை மொழியாயிற்று.

ஹோமரின் காவியங்களில் கிரேக்க இனக்குழுக்கள் ஏற்கனவே சிறிய மக்களினங்களாக இணைந்துள்ளதைப் பொதுவாகக் காண்கிறோம். எனினும், அவற்றினுள் குலங்களும், பிராட்ரிகளும், இனக்குழுக்களும் தமது முழுச் சுதந்திரத்தை இன்னும் வைத்துக் கொண்டிருந்தன. அவர்கள் ஏற்கனவே அரண் சூழ்ந்த நகரத்தில் வாழ்ந்தார்கள். கால்நடை மந்தைகளின் வளர்ச்சி, விவசாயம், ஆரம்பக் கைத்தொழில்கள் ஆகியவற்றுடன் மக்கள்தொகையும் பெருகியது. அதனுடன் செல்வ விஷயத்தில் இன்னும் அதிகமான வேறுபாடுகள் வந்து சேர்ந்தன. பழைய, இயற்கையாக வளர்ச்சியடைந்த ஜனநாயகத்துக்குள் இவை ஒரு புதிய பிரபுத்துவ அம்சத்தை தோற்றுவித்தன. பல்வேறு சிறு மக்களினங்கள் மிகச் சிறந்த நிலத்துக்காகவும் கொள்கைக்காகவும் போரிட்டு வந்தன. யுத்தக் கைதிகளை அடிமைகளாக்குவது ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாக இருந்தது.

இந்நூலின் முந்தைய பகுதிகள்

  1. மாமேதை ஏங்கல்ஸ்.
  2. 1884 ல் எழுதிய முன்னுரை
  3. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி
  4. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2
  5. ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய கலாச்சாரக் கட்டங்கள்
  6. குடும்பம் – 1
  7. குடும்பம் – 2
  8. குடும்பம் – 3
  9. குடும்பம் – 4
  10. குடும்பம் – 5
  11. குடும்பம் – 6
  12. குடும்பம் – 7
  13. குடும்பம் – 8
  14. குடும்பம் – 9
  15. இராகோஸ் குலம் 1
  16. இராகோஸ் குலம் 2

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s