சிந்து நதி சமவெளி நாகரீகம் குறித்து தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அது திராவிட நாகரீகம் என்பதும் இன்று ஐயந்திரிபற நிறுவப்பட்டுள்ளது. ஆனால் தொடக்கத்தில், அதாவது இந்த நாகரீகம் அகழ்ந்து கண்டெடுக்கப்பட்ட காலத்தில் அது ஆரிய நாகரீகம் என்றே அறிவிக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிவந்த அந்தப் பொய்யை ஹிராஸ் பாதிரியார் என்பவர் தான் உடைத்து அது திராவிட நாகரீகம் என உறுதியாக வெளிப்படுத்தினார்.
அண்மையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், தெற்காசிய தொல்லியல் துறையில் சிந்து சமவெளி மக்களின் உணவுப் பழக்கம் குறித்த ஆய்வில் முனைவர் பட்டம் பெற்ற அக்ஷிதா சூரியநாராயணன் தலைமையிலான குழுவினர் அண்மையில் சிந்து சமவெளி கால ஹரப்பர்கள் வாழ்ந்ததாக சொல்லப்படும் இன்றைய ஹரியானா மற்றும் உத்திரப் பிரதேசம் பகுதிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 172 மண்பாண்ட பொருட்களை ஆய்வு செய்தனர். பன்றி, மாடு, வெள்ளாடு, செம்மறியாடு ஆகியவற்றின் இறைச்சிகளின் எச்சங்கள் இருந்தது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்பகுதியில் கிடைத்த எலும்புகளில் 50% முதல் 60% எலும்புகள் மாடுகளுடையதாக இருப்பதால், அக்கால மனிதர்கள் அதிகளவில் மாட்டிறைச்சியை சாப்பிட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது. இந்த ஆய்வின் முடிவுகள், ‘Journal of Archaeological Science’ இதழில் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வுச் செய்தி வெளியான பிறகு சிந்து வெளி நாகரீகம் குறித்து மேலும் அறிந்து கொள்ளும் விருப்பம் மக்களிடம் வந்திருக்கிறது. அந்த வகையில் சிந்துச் சமவெளி நாகரீகம் குறித்த தகவல்களை முழுமையாக அறிந்து கொள்ள விரும்புவோருக்கு இந்த நூல் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ள பழமையான நூல் என்றாலும் விரிவான தகவல்களை உள்ளடக்கிய நூலாக இது இருக்கிறது.
படியுங்கள் .. புரிந்து கொள்ளுங்கள் .. பரப்புங்கள்