கிரேக்க குலம் 2

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 18

கிரேக்க இனக்குழுக்களின், சிறு மக்களினங்களின் அதிகார அமைப்பு பின்வருமாறு:

1. நிரந்தரமான அதிகாரத்தைக் கொண்டது கவுன்சில் (bule). ஆதியில் அது அநேகமாக குலத் தலைவர்களைக் கொண்டதாக இருந்திருக்க வேண்டும்; பின்னர் அவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து விட்டபடியால் அவர்கள் பொறுக்கப்பட்டார்கள். இது பிரபுத்துவ அம்சத்தை வளர்க்கவும் பலப்படுத்தவும் ஒரு வாய்ப்பை உருவாக்கியது. வீர யுகத்தைச் சேர்ந்த கவுன்சில் பிரபுக்களை (kratistoi) கொண்டு அமைக்கப்பட்டிருந்தது என்று டியொனீசியஸ் திட்டமாகக் கூறுகிறார். முக்கிய விவகாரங்களில் கவுன்சில் தான் இறுதியான முடிவைச் செய்யும். எஸ்கிலஸ் எழுதிய நாடகங்களில் ஒன்றில் தீபஸ் நகர கவுன்சில் ஒரு வழக்கில் கட்டுப்படுத்துகின்ற முடிவைச் செய்தது: இடியோக்ளசின் சடலத்தை முழுமரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்; பலினீகசின் சடலத்தை நாய்கள் தின்னும்படி வெளியே எறிந்து விட வேண்டும். [எஸ்கிலஸ், தீபசிற்கு எதிராக எழுவர்.] பிற்காலத்தில், அரசு உதித்ததிலிருந்து இக்கவுன்சில் ஒரு செனெட்டாக மாற்றப்பட்டது.

2. மக்கள் சபை (agora). இராகோஸ்களிடையே கவுன்சில் கூட்டங்கள் நடைபெறுகின்ற பொழுது ஆண்களும் பெண்களுமாக மக்கள் வட்டமாகச் சுற்றி நின்று முறைப்படி விவாதங்களில் பங்கெடுத்து, அதன் மூலம் முடிவுகளை உருவாக்கினார்கள் என்று நாம் பார்த்தோம். ஹோமர் காலத்து கிரேக்கர்களிடையில் – ஒரு பழைய ஜெர்மானிய சட்டச் சொல்லை உபயோகிப்பதானால் – இந்த Umstand (சுற்றி நின்று கொண்டிருப்பவர்கள்) ஒரு முழுமையான மக்கள் சபையாக வளர்ந்து விட்டது. பண்டைக்கால ஜெர்மானியர்களிடையிலும் இப்படியே நடைபெற்றது. முக்கியமான விவகாரங்களைப் பற்றி முடிவெடுப்பதற்கு கவுன்சில் இந்த சபையைக் கூட்டியது. ஒவ்வொரு ஆணுக்கும் பேச உரிமையிருந்தது. கையைத் தூக்கிக் காட்டுவதின் மூலம் (எஸ்கிலசின் நாடகமான முறையிடுபவர்கள் என்பதில்) அல்லது கோஷமிடுவதன் மூலம் முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த முடிவு சர்வசக்தி கொண்டது, ஷோமான் தமது கிரீசின் பண்டைக்கால பழக்கங்கள் என்னும் நூலில் கூறியபடி,

“நிறைவேற்றுவதற்கு மக்களுடைய ஒத்துழைப்பு தேவைப்படுகின்ற விஷயத்தை விவாதிக்கும் பொழுது மக்களைத் தம்முடைய சித்தத்துக்கு எதிரானவற்றை ஒத்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்துகின்ற எந்தச் சாதனங்களைப் பற்றியும் ஹோமர் ஒரு குறிப்பும் தரவில்லை.”

இனக்குழுவின் வயதுவந்த ஒவ்வொரு ஆண் உறுப்பினனும் ஒரு போர்வீரனாக இருந்த இக்காலத்தில் மக்களுக்கு எதிராக நிறுத்தப்படக் கூடிய முறையில் மக்களிடமிருந்து தனியான சமூக அதிகாரம் என்பதாக ஒன்று இன்னும் இருக்கவில்லை. புராதன ஜனநாயகம் இன்னும் முழு மலர்ச்சியிலிருந்தது. கவுன்சில் மற்றும் பஸிலியசின் அதிகாரத்தையும் அந்தஸ்தையும் பற்றி முடிவு செய்கின்ற பொழுது இது தொடக்க நிலையாக இருந்தாக வேண்டும்.

3. இராணுவத் தளபதி (basileus). இதைப் பற்றி மார்க்ஸ் பின்வரும் கருத்தைக் கூறுகிறார்: “ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் – அவர்களில் பெரும்பாலோர் சிற்றரசர்களின் பிறவிச் சேவகர்கள் – பஸிலியசை நவீன அர்த்தத்திலுள்ள அரசனாகக் காட்டுகிறார்கள். அமெரிக்கக் குடியரசுவாதியாகிய மார்கன் இதை மறுக்கிறார். பசப்புக்கார கிளாட்ஸ்தனையும் பற்றி அவர் எழுதிய உலகத்தின் இளமை என்னும் நூலையும் பற்றி அவர் மிகவும் கிண்டலாக, ஆனால் உண்மையாகப் பின்வருமாறு எழுதுகிறார்:

திரு. கிளாட்ஸ்தன் வீர யுகத்தைச் சேர்ந்த கிரேக்கத் தலைவர்களை அரசர்களாகவும் சிற்றரசர்களாகவும் வாசகர்களுக்குச் சித்திரித்துக் காட்டுகிறார். அத்துடன் அவர்களுக்கு கனவான்களின் குணங்களையும் சூட்டுகிறார். எனினும் கிரேக்கர்களிடையே மூத்த மகன் வாரிசாகும் வழக்கம் பொதுவாக போதுமான அளவுக்கு, ஆனால் தெளிவில்லாதபடி வரையறுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது என்று அவரே ஒப்புகொள்ள வேண்டியிருக்கிறது.

உண்மையாகப் பார்த்தால், இத்தகைய நிபந்தனைகளுடன் கூடிய மூத்த மகன் வாரிசு முறை போதுமான அளவுக்கு, ஆனால் தெளிவில்லாதபடி வரையறுக்கப்பட்டிருப்பது இல்லாமைக்கு ஒப்பானதே என்பதை கிளாட்ஸ்தனே உணர்ந்திருக்க வேண்டும்.

இராகோஸ்களிடையிலும் இதர செவ்விந்தியர்களிடையிலும் தலைவர் பதவி குறித்து வாரிசு முறைக்குள்ள இடம் என்ன என்று முன்னரே பார்த்தோம். எல்லா அதிகாரிகளும் பெரும்பாலும் குலத்துக்குள்ளாகவே தேர்ந்தெடுக்கப்பட்டபடியால், அந்த அளவுக்கு அவர்கள் குலத்துக்குள் வாரிசு முறையிலேயே வந்தார்கள். காலியாகின்ற பதவியில் முந்திய அதிகாரியின் அடுத்த குல உறவினனை, அதாவது அவனுடைய சகோதரனையோ, சகோதரியின் மகனையோ – அவனை நிராகரிப்பதற்குப் போதிய காரணங்கள் இருந்தாலொழிய – அமர்த்துவது நாளடைவில் வழக்கமாகி விட்டது. கிரீசில், தந்தையுரிமையின் கீழ், பஸிலியஸ் பதவி பொதுவாகவே மகனுக்கு அல்லது புதல்வர்களில் ஒருவனுக்குத் தரப்பட்டது என்ற விஷயம் பொதுத் தேர்தல் மூலம் வாரிசைத் தேர்ந்தெடுப்பதில் புதல்வர்களுக்கு முதன்மை அளிக்கப்பட்டிருக்கலாம் என்பதையே குறிக்கிறது; ஆனால் பொதுத் தேர்தல் இல்லாமல் சட்டப்படி வாரிசாகப் பதவிக்கு வர முடியும் என்று அது உட்கிடையாகக் கூடக் குறிக்கவில்லை. இங்கே, இராகோஸ்கள் மற்றும் கிரேக்கர்கள் மத்தியில் குலங்களுக்குள்ளே விசேஷமான பிரபுத்துவக் குடும்பங்களின் முதல் முளைகளை நாம் காண்கிறோம். மேலும், கிரேக்கர்களிடையே பிற்காலத்தில் வரப் போகும் பரம்பரைத் தலைவர் பதவி முறையின் அல்லது முடியாட்சி முறையின் முதல் முளைகளைக் காண்கிறோம். எனவே கிரேக்கர்களிடையில் பஸிலியஸ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும், அல்லது குறைந்தபட்சம், அவர்களின் அங்கீகாரம் பெற்ற உறுப்பினால் – கவுன்சில் அல்லது அகோரா – உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். ரோமானிய அரசனை (rex) பொறுத்தமட்டில் இப்படி நடைபெற்றது.

இலியாத் காவியத்தில் “ஆண்களின் தலைவனாகிய” அகமெம்னான் கிரேக்கர்களின் தலைமை அரசனாகச் சித்திரிக்கப்படவில்லை; முற்றுகையிடப்பட்டிருக்கும் நகரத்துக்கு முன்பாகவுள்ள கூட்டு இராணுவத்தின் தலைமைத் தளபதியாகவே சித்திரிக்கப்பட்டிருக்கிறான். மேலும், கிரேக்கர்களிடையில் உட்பிளவுகள் ஏற்பட்ட பொழுது அவனுடைய இந்தத் தன்மையைத் தான் ஒடிஸியஸ் பிரபலமான ஒரு பகுதியில் சுட்டிக்காட்டுகிறான்: நமக்குப் பல தளபதிகள் இருப்பது நல்லதல்ல, நம் எல்லோருக்கும் ஒரு தளபதியே இருக்கட்டும் முதலியன (இத்துடன் செங்கோலைப் பற்றி மக்களிடையே பிரபலமடைந்திருக்கும் வரிகள் பின்னால் சேர்க்கப்பட்டவை). [ஹோமர், இலியாத், இரண்டாவது பாடல்.] “ஒடிஸியஸ் இந்த இடத்தில் ஆட்சி முறையைப் பற்றிப் பிரசங்கம் செய்யவில்லை; போர்க்களத்தில் தலைமைத் தளபதிக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்று அவன் வற்புறுத்துகிறான். டிராய் முன்னே ஒரு ஒரு இராணுவமாக மட்டுமே காட்சியளிக்கின்ற கிரேக்கர்களுக்கு அகோராக் கவுன்சிலின் நடவடிக்கைகள் போதிய ஜனநாயகத் தன்மையை கொண்டிருக்கின்றன. அஹில்லஸ் பரிசுகளைப் பற்றி, அதாவது யுத்த லாபங்களைப் பிரிப்பதைப் பற்றிப் பேசுகின்ற பொழுது அகமெம்னானை அல்லது வேறு யாராவதொரு பஸிலியசைப் பங்குபிரப்பவனாகச் செய்யவில்லை, எப்பொழுதும் ‘ஆஹேயர்களின் புதல்வர்களையே’, அதாவது மக்களையே பங்குபிரிப்பவர்களாகச் செய்கிறான். ‘ஜேயசின் புதல்வன்’, ‘ஜேயசால் ஊனூட்டப் பெற்றவன்’ ஆகிய அடைமொழிகள் எதையும் நிரூபிக்கவில்லை, ஏனென்றால் ஒவ்வொரு குலமும் ஒரு தெய்வத்தின் வம்சவழியில் வந்த்துதான்; மேலும் இனக்குழுத் தலைவனுடைய குலமோ ஒரு முக்கியமான தெய்வத்தின், இங்கே ஜேயசின் வம்சவழியில் வந்தது. பன்றி மேய்ப்பவனான யூமியஸ், இன்னும் மற்றவர்களைப் போன்ற சுதந்திரமில்லாதவர்களும் கூட ‘தெய்வத்தன்மை பெற்றவர்கள்’, இது ஒடிஸி காவியத்தில் கூட, ஆகவே இலியாத் காவியத்துக்கு மிகவும் பிந்திய காலத்தில் கூட அப்படி இருந்தது. மேலும், ஒடிஸியில் தூதனாகிய மூலியசுக்கு ‘மாவிரன்’ என்று பட்டம் தரப்படுவதைக் காண்கிறோம்; டெமடோகஸ் என்னும் கண் பார்வையில்லாத பாடகனுக்கும் அதே பட்டம் சூட்டப்படுகிறது. சுருக்கமாகக் கூறுவதென்றால், ஹோமருடைய அரசுடைமை என்று சொல்லப்படுவதைக் குறிப்பதற்கு கிரேக்க எழுத்தாளர்கள் பயன்படுத்திய basileia என்ற சொல்லும் (ஏனென்றால் அதன் சிறப்பான அம்சம் இராணுவத் தலைமையே ஆகும்) அதனுடன் சேர்த்து தலைவர்களின் கவுன்சில், மக்கள் சபை ஆகியவையும் இராணுவ ஜனநாயகம் என்றே பொருள்படும்” (மார்க்ஸ்).

பஸிலியசுக்கு இராணுவ வேலைகள் மட்டுமன்றி மதசம்பந்தமான வேலைகளும் நீதிமன்ற வேலைகளும் இருந்தன; பிந்தியவை தெளிவாகக் குறிக்கப்படவில்லை; இனக்குழுவின் அல்லது இனக்குழுக்களின் கூட்டின் மிக உயர்ந்த பிரதிநிதி என்ற முறையில் அவன் இராணுவ வேலைகளைச் செய்தான். சிவில் மற்றும் நிர்வாக வேலைகளைப் பற்றி எங்குமே குறிப்பிடப்படவில்லை; ஆனால் அவன் தனது பதவியின் காரணமாகக் கவுன்சில் உறுப்பினனாக இருந்த்தாகத் தோன்றுகிறது. சொல் இலக்கணப்படி, பஸிலியஸ் என்ற சொல்லை Konig என்று ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்ப்பது முற்றிலும் சரியானதே; ஏனென்றால் Konig (Kuning) என்ற சொல் Kuni, Kunneஇலிருந்து வந்தது, அது குலத் தலைவனைக் குறிக்கிறது. ஆனால் பழைய கிரேக்க மொழியைச் சேர்ந்த பஸிலியஸ் என்ற சொல் Konig (அரசன்) என்ற சொல்லின் நவீன அர்த்தத்துடன் எவ்வழியிலும் பொருந்தவில்லை. தூகிடிடஸ் பண்டை basileia என்பதை patrike, அதாவது குலத்திலிருந்து பெறப்பட்டது என்று திட்டமாகக் குறிக்கிறார்; அதற்குக் குறிப்பிட்ட, ஆகவே வரையறுக்கப்பட்ட வேலைகள் இருந்தன என்றும் கூறுகிறார். அது தவிர, வீர யுகத்தைச் சேர்ந்த basileia என்பது சுதந்திர மனிதர்கள் மீது செலுத்திய தலைமை என்றும் பஸிலியஸ் ஒரு இராணுவத் தலைவன், நீதிபதி, தலைமைப் புரோகிதன் என்றும் அரிஸ்டாட்டில் கூறுகிறார். எனவே பிற்காலத்தில் ஏற்பட்ட அர்த்தத்தில் பஸிலியசுக்கு அரசாங்க அதிகாரம் கிடையாது. [கிரேக்க பஸிலியஸ் மாதிரி, அஸ்டெக் இரானுவத் தலைவனும் நவீன அர்த்தத்தில் சிற்றரசனாகத் தவறாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறான். ஸ்பானிஷ்காரர்களின் தகவல்களை மார்கன்தான் முதன்முதலாக வரலாற்று ரீதியில் விமர்சித்தார்; அவர்கள் முதலில் விஷயங்களைத் தவறாகப் புரிந்து கொண்டும் மிகைப்படுத்தியும் கூறினார்கள், பின்னர் வேண்டுமென்றே திரித்தும் கூறியுள்ளனர். மெக்சிகர்கள் அநாகரிக நிலையின் இடைக்கட்ட்த்தில் இருந்தார்கள், ஆனால் நியுமெக்சிகோவைச் சேர்ந்த புயேப்ளோ செவ்விந்தியர்களை விட உயர்வான தரத்திலிருந்தார்கள்; அரைகுறையான தகவல்களைக் கொண்டு முடிவு செய்யக் கூடிய அளவில் அவர்களுடைய சமூக அமைப்பு பின்வருவனவற்றிற்குப் பொருத்தமாக இருந்தது என்று மார்கன் எடுத்துக்காட்டினார்: மூன்று இனக்குழுக்கள் கொண்ட கூட்டு; அது வேறு சில இனக்குழுக்கள் தனக்குக் கப்பம் கட்டுமாறு செய்தது; அது சமஷ்டிக் கவுன்சிலாலும் சமஷ்டி இரானுவத் தலைவனாலும் நிர்வாகம் செய்யப்பட்டது; அந்த இரானுவத் தலைவனை ஸ்பானிஷ்காரர்கள் ‘சக்கரவர்த்தியாகச்’ செய்து விட்டார்கள். (எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு.)]

ஆக, வீர யுகத்தைச் சேர்ந்த கிரேக்கச் சமூக அமைப்பில் பண்டைக் குல அமைப்பு இன்னும் விறுவிறுப்புடன் இருப்பதை நாம் காண்கிறோம்; ஆனால் அதன் நசிவின் தொடக்கத்தையும் நாம் காண்கிறோம்: தந்தையுரிமையும் தந்தையின் சொத்துக்குக் குழந்தைகள் வாரிசாவதும் அமுலுக்குவந்து விட்டன, இந்த வாரிசு முறை குடும்பத்துக்குள் செல்வம் குவிவதற்கு வழி செய்தது; செல்வத்தில் ஏற்றத் தாழ்வு ஏற்பட்டதன் விளைவாக, ஆட்சி முறை பாதிக்கப்பட்டுப் பரம்பரைப் பிரபுத்துவ முறை மற்றும் முடியாட்சி முறையின் முளைகள் துளிர்த்தன; அடிமைகளாக்கப்பட்டார்கள், ஆனால் அது இனக்குழுவின் சக உறுப்பினர்களையும் குலத்தின் சக உறுப்பினர்களையும் கூட அடிமைப் படுத்துவதற்கு ஏற்க்கெனவே வழியை அமைத்து வந்தது; முன்பு இனக்குழுக்களிடையில் நடைபெற்ற சண்டைகள் இப்பொழுது கால்நடைகளையும் அடிமைகளையும் செல்வங்களையும் கைப்பற்றுகின்ற நோக்கத்துடன் நிலத்திலும் கடலிலும் திட்டமிட்ட படையெடுப்புகளாக, இழிந்து முறையான வாழ்க்கைத் தொழிலாக மாறி விட்டன; சுருக்கமாகக் கூறினால், செல்வம் மிகவுயர்ந்த சம்பத்தாகப் புகழப்பட்டது, மதிக்கப்பட்டது, செல்வத்தைப் பலவந்தமாக கொள்ளையடிப்பதை நியாயப்படுத்துவதற்காகப் பண்டைய குல விதிமுறைகள் வேண்டுமென்றே தவறான வழியில் செலுத்தப்பட்டன. ஒன்றே ஒன்றுதான் இல்லை; குல அமைப்பின் பொதுவுடைமை மரபுகளுக்கு எதிராகத் தனி நபர்கள் புதிதாகச் சேர்ந்த சொத்தைப் பாதுகாப்பதற்கு மட்டுமன்றி, முன்பு துச்சமாக மதிக்கப்பட்ட தனியுடைமையைப் புனிதப்படுத்துவதுடன் அப்படிப் புனிதப்படுத்துவதே மனிதச் சமூகத்தின் மிக உயர்ந்த நோக்கமென்று பிரகடனப்படுத்துவதற்கு மட்டுமன்றி, சொத்து செர்ப்பதற்கு இடையறாது வளர்ந்து கொண்டிருந்த புதிய வடிவங்களுக்கும் அதன் விளைவாக மேன்மேலும் செல்வத்தைப் பெருக்குவதற்கும் பொதுமக்களுடைய அங்கீகாரம் என்னும் முத்திரையைப் பதிப்பதற்கும் உரிய ஒரு ஸ்தாபனம் இல்லை. சமூகத்தில் புதிதாக எழுந்து கொண்டிருந்த வர்க்கப் பிரிவினையை நிரந்தரமாக்குவது மட்டுமன்றி உடைமையில்லாத வர்க்கத்தை உடைமை வர்க்கம் சுரண்டுவதற்குள்ள உரிமையையும் முந்தியதன் மீது பிந்தியது செலுத்தும் ஆதிக்கத்தையும் நிரந்தரமாக்கக் கூடிய ஒரு ஸ்தாபனம் இல்லை.

அந்த ஸ்தாபனம் வந்து சேர்ந்தது. அரசு உருவாக்கப்பட்டது.

இந்நூலின் முந்தைய பகுதிகள்

  1. மாமேதை ஏங்கல்ஸ்.
  2. 1884 ல் எழுதிய முன்னுரை
  3. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி
  4. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2
  5. ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய கலாச்சாரக் கட்டங்கள்
  6. குடும்பம் – 1
  7. குடும்பம் – 2
  8. குடும்பம் – 3
  9. குடும்பம் – 4
  10. குடும்பம் – 5
  11. குடும்பம் – 6
  12. குடும்பம் – 7
  13. குடும்பம் – 8
  14. குடும்பம் – 9
  15. இராகோஸ் குலம் 1
  16. இராகோஸ் குலம் 2
  17. கிரேக்க குலம் 1

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

One thought on “கிரேக்க குலம் 2

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s