
செய்தி:
கரோனா தடுப்பு மருந்துகள் 100 சதவீதம் பாதுகாப்பானவை என இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்ட் என்ற கரோனா தடுப்பு மருந்தையும், ஐசிஎம்ஆர், புனேயில் உள்ள வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்ஸின் எனும் தடுப்பு மருந்தையும் தயாரித்து வருகின்றன.
இந்த நிறுவனங்களின் கரோனா தடுப்பு மருந்துகளை அவசர காலத்துக்கு பயன்படுத்திக் கொள்ள மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது.
செய்தியின் பின்னே:
சற்றேறக்குறைய ஓராண்டு காலமாக மக்கள் கொரோனா பீதிக்குள் ஆழ்த்தப்பட்டிருக்கிறார்கள். பொது முடக்கத்திலிருந்து தற்போது தான் மக்கள் வெளியில் வந்து கொண்டிருக்கிறார்கள், இந்த நிலையில் கொரோனாவுக்கான தடுப்பூசி இலவயமாக மக்களுக்கு போடப்படவிருக்கிறது என்பது எந்த அளவுக்கு வரவேற்புக்குறிய செய்தியாக இருந்திருக்க வேண்டும்? மாறாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இந்த தடுப்பூசி நூறு விழுக்காடு பாதுகாப்பானது என்று சான்றிதழ் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலை ஏன் ஏற்பட்டது?
முதலில் உலக அளவில் தடுப்பூசிகளுக்கு எதிராக தொடர்ச்சியான இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது முழுமையாக இன்னும் பரிசீலிக்கப்படவில்லை.
அடுத்து, இந்தியாவில் இந்த தடுப்பூசி மருந்துகளை கொண்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனம், சீரம் மருந்து நிறுவனம் எனும் இரண்டு நிறுவனங்களும் முறையாக மூன்றாவது கிளினிக்கல் பரிசோதனையை இன்னும் முடிக்கவில்லை எனும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இது உண்மையா? இதற்கு அரசின் பதில் என்ன?
கோவாக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு மருந்துகளுக்கும் ஒப்புதல் அளித்த முதல் நாடு இந்தியா தான். இது மட்டுமல்லாமல் உலகிலேயே ஒரே நேரத்தில் இரண்டு மருந்துகளுக்கு அனுமதி கொடுத்தது இந்தியா மட்டும் தான். உலக அளவிலும் இந்திய ஆளவிலும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் இந்த நேரத்தில் மிக விரைவாக இந்த இரண்டு மருந்துகளுக்கும் அனுமதி அளிக்க வேண்டிய தேவை என்ன?
இன்னும் இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு, “அவசரகாலத்துக்கு பயன்படுத்திக் கொள்ள” அனுமதி அளித்திருப்பதாகத் தான் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் நடந்து கொண்டிருக்கும் ஒத்திகைகள் மக்கள் அனைவருக்கும் போடுவதற்கான முன்னேற்பாட்டுடன் நடத்தப்பட்டு வருகின்றன. இது ஏதோ ஒரு ஐயத்தை ஏற்படுத்துகிறதே. இதை யார் தெளிவிப்பது?
வாட்ஸாப் வதந்திகளை நம்பாதீர்கள் என்கிறார்கள். வதந்திகளை நம்ப விரும்பவில்லை. ஆனால் அது குறித்து எழும்பியிருக்கும் ஐயங்களுக்கும், கேள்விகளுக்கும் பதிலளிக்கும் கடமை யாருக்கு இருக்கிறது?
அதாகப்பட்டது, “விலக வேண்டிய நேரத்துல பராக்கு பாத்துட்டு, மேல பாஞ்சப்புறம் அப்படா அப்படாங்கக் கூடாது” அம்புட்டுதேன்