இந்தியாவில் வருமான ஏற்றத் தாழ்வுகள்

(இக்குறிப்பு Indian Income Inequality, 1922-2015: From British Raj to Billionaire Raj? என்ற தலைப்பில் தாமஸ் பிக்கெட்டியும் லூகாஸ் சான்செலும் இணைந்து எழுதிய ஆய்வு கட்டுரையை தழுவி எழுதப்படுகிறது)

இந்தியா தன்னுடைய எழுபத்து நான்காவது சுதந்திர நாளில் அடியெடுத்து வைக்கின்றது. கடந்த எழுபத்தி நான்காண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் கிட்டத்தட்ட 300 இலட்சம் கோடி அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது. இது குறிப்பிடத்தகுந்த செய்திதான் என்றாலும், பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்று இத்தனை பத்தாண்டுகள் ஆகிய பின்னரும் கூட இந்தியாவில் வறுமையும், வேலையில்லா திண்டாட்டமும், இந்தியர்களை மேல் கீழாக அடுக்கி வைத்துள்ள சாதி போன்ற சமூகப் பிரச்சனைகள் நீக்கமற நிறைந்திருக்கின்றது.  இந்த சமூக-பொருளாதார பிரச்சனைகளில் நாம் பெரிதும் கவனத்தை குவிக்காத மற்றொரு சமூக-பொருளாதார பிரச்சனை, இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் வருமான ஏற்றதாழ்வாகும். இக்குறிப்பில் இந்தியாவில் வருமான ஏற்றதாழ்வுகள் பற்றியும் அது விளைவிக்கக்கூடிய சமூக பிரச்சனைகள் பற்றியும் சற்றே சிந்தித்துப் பார்ப்போம். 

வேகமான பொருளாதார வளர்ச்சியே அதாவது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி இரண்டு இலக்கங்களில் தொடர்ச்சியாக சில பத்தாண்டுகள் வளருவது  வறுமை, வேலையில்லா திண்டாட்டம் போன்ற இந்தியாவின் சமூக-பொருளாதார பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமையும் என்று புதிய தாராளவாதப் பொருளியலாளர்கள் கூறுகின்றனர். இந்தக் கூற்று உண்மையா? நாம் 1922ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு வரையில் இந்தியாவின் வருமான ஏற்றதாழ்வை பற்றி தாமஸ் பிக்கெட்டியும், லூகாஸ் சான்செலும் தங்களுடைய ஆய்வில் எடுத்துரைப்பதைக் கொண்டு இந்தக் கூற்றைச் சரிபார்ப்போம். ஆசிரியர்களின் ஆய்வு முடிவை குறித்து காண்பதற்கு முன் இந்தியாவில் வருமான ஏற்றதாழ்வுகளை ஆராய்ச்சி செய்வதில் உள்ள பிரச்சனைகள், வரம்பு என்ன? வருமானம் தொடர்பாக கிடைக்கக்கூடிய தரவுகள் இந்தியாவில் போதுமானவையாக இருக்கின்றவா? போன்றவற்றை பார்த்துவிடுவோம்.

வருமான ஏற்றத் தாழ்வை மதிப்பீடு செய்வதில் உள்ள பிரச்சனைகள்

இந்தியாவில் வருமான ஏற்றத்தாழ்வுகளை மதிப்பீடு செய்வதற்கு பெரும் தடைகளாக இருப்பது தரவுகளாகும். 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா, ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சிக் குறியீட்டில் சிறப்பாக வளர்ந்திருந்தாலும் கூட இந்தியாவிடம் முறையான முழுமையான வருமானம் தொடர்பான தரவுகள் இல்லாமல் இருக்கின்றது. இது இந்தியாவில் வருமான ஏற்றத்தாழ்வை மதிப்பீடு செய்வதில் பெரும் சிக்கல்களை உருவாக்குகின்றது. இந்த ஆய்வில் ஆசிரியர்கள் 1922ஆம் ஆண்டிலிருந்து இந்திய வருமான வரி துறையின் தரவுகளை பயன்படுத்தியுள்ளனர். இந்தியாவில் வருமான வரிச் சட்டம் பிரித்தானிய காலனியக் காலத்தில் கொண்டு வரபட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்திய வருமான வரித்துறை 2000ஆம் ஆண்டில் அதுவரையில் தான் வெளியிட்டுக் கொண்டிருந்த வருமான வரித் தரவுகளை வெளியிடுவதை நிறுத்திக்கொண்டது. அது ஏன் நிறுத்தியது என்ற காரணம் புரியாததாக இருக்கின்றது என்றாலும், பல்வேறுவிதமான அழுத்தங்களுக்கு பிறகு 2011ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் வருமான வரித் துறை வருமான வரி தொடர்பான தரவுகளை வெளியிடத் தொடங்கியது. இந்தியாவின் வருமான வரித் தரவில் உள்ள பெரிய பிரச்சனையே அது 2014-15ஆம் ஆண்டு கணக்கின்படி இந்திய மக்கள் தொகையில் வெறும் மேல்நிலையில் உள்ள 7 விழுக்காட்டினரின் தரவுகளை தருகின்றது. இது பிரச்சனையாக இருக்கின்ற அதேவேளையில் இந்தியாவில் மேல்நிலை வருமான ஏற்றதாழ்வை புரிந்து கொள்ளவும் ஓரளவுக்கு உதவிகரமாக இருக்கும்.

வருமான வரித்துறை தரவுடன் தேசிய மாதிரி சுற்றாய்வு அமைப்பு (ஆங்கிலத்தில், National Sample Survey Organization) சுற்றாய்வு செய்யும் குடும்ப நுகர்ச்சி பற்றிய தரவுகள் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தேசிய மாதிரி சுற்றாய்வு அமைப்பு நுகர்ச்சி பற்றிய தரவுகளை சேகரிக்கின்றதே அன்றி வருமானம் பற்றிய தரவுகளை சேகரிப்பதில்லை. இந்த ஆய்வில் வருமானத்துக்கு ஒரு பதிலியாக நுகர்ச்சியை எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தரவு இந்தியாவில் நுகர்ச்சியின் அளவில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களைக் கொண்டு வருமானம் பற்றி அனுமானிக்க வசதியாக இருக்கும். உண்மையான நிலையைவிட குறைவாக தகவல்களைத் தெரிவித்தல், இந்திய ஒன்றியம் போன்ற பெரும்நிலப்பரவில் குறைவான மாதிரி எடுத்தல் போன்றவை குடும்ப நுகர்வு பற்றிய தரவில் உள்ள பிரச்சனைகளாக இருக்கின்றன.

இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ள இதர தரவுகள் ஃபோப்ஸ் என்னும் அமைப்பின் செல்வம், செல்வந்தர்கள் பற்றிய பட்டியல், தேசிய வருமான கணக்குகள் தரவுகள், 1950களிலிருந்து இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி பற்றிய தரவுகள் ஏற்றத்தாழ்வு தரவு தளத்திலிருந்து (World Inequality Database) எடுக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர மிக்ஷிகன் பல்கலைக்கழகத்தின்  The Inter University Consortium for Applied Political and Social Sciences Research இந்தியாவில் மனித மேம்பாடு சுற்றாய்வுகளை (Human Development Survey) 2004-05ஆம் ஆண்டிலும் 2011-12 ஆம் ஆண்டில் சுற்றாய்வு செய்துள்ளது. இது இந்தியாவின் கிராமப்புறம், நகர்ப்புறம் பகுதியில் 4 இலட்சம் குடும்பங்களை சுற்றாய்வு செய்துள்ளது. நுகர்ச்சி தரவுகளையும் வருமான தரவுகளும் ஒருசேரத் திரட்டுவதே இந்தச் சுற்றாய்வின் சிறப்பம்சம் ஆகும்.

இந்த ஆராய்ச்சியில் ஆசிரியர் வந்தடைந்த முடிவை பொருள்கொள்வதற்கு அவர்கள் பயன்படுத்தியுள்ள தரவுகளை அறிந்து கொள்வது இன்றியமையாதது ஆகும்.

ஆய்வுமுடிவுகள் 

காலனியக் காலத்திலிருந்து 2015ஆம் ஆண்டு வரையில் இந்தியாவில் வருமான ஏற்றத்தாழ்வு அசைவியக்கம் என்னவாக இருந்துள்ளது? 1930களின் பிற்பகுதியில் 1% இந்திய மக்கள்தொகையில் மேல்தட்டில் இருப்பவர்கள் 21 விழுக்காடு தேசிய வருமானத்தை தன்வசப்படுத்தியிருந்தனர். இது 1980ஆம் ஆண்டுகளின் தொடக்கக் காலத்தில் 6 விழுக்காடாக சரிந்து, 1980களின் பிற்பகுதியிலிருந்து அண்மைக் காலத்தில்  22 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இந்திய மக்கள்தொகையில் 0.1விழுக்காட்டினர் மொத்த தேசிய வருமானத்தில் 2014-15ஆம் ஆண்டில் 8.2 விழுக்காட்டை தன்வசமாகியுள்ளனர். இது அதிகபட்சமாக சுதந்திரத்துக்கு முன்னர் இந்தியாவில் 8.9 விழுக்காடாக நிலவியதுடன் சற்றே குறைவான நிலையில்தான் உள்ளது.

இந்தியாவில் மேல்தட்டில் உள்ள 10விழுக்காடினர்  நடுத்தட்டில் (அதாவது 10விழுக்காடு மேல்தட்டுக்கும் 50விழுக்காடு கீழ்தட்டுக்கும் இடையில் உள்ளவர்கள்) உள்ளவர்களும் இணைந்து தேசிய வருமானத்தில் தன்வசப்படுத்தக்கூடிய வருமானம் 40 விழுக்காடாக 1950களில் இருந்தது. இது 1982-83ஆம் ஆண்டுகளில் 46 விழுக்காடாக அதிகரித்தது. 2014-15ஆம் ஆண்டுகளில் நடுத்தட்டில் உள்ள 40 விழுக்காடு மக்கள்தொகையினர் தன்வசப்படுத்தி வந்த தேசிய வருமானம் 29.2 விழுக்காடாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்தியா மக்கள்தொகையில் கீழ்தட்டில் உள்ள மக்கள்தொகையில் 50 விழுக்காட்டினர் தேசிய வருமானத்திலிருந்து 1955-56ஆம் ஆண்டுகளில் 19 விழுக்காட்டைப் பெற்று வந்தனர். இது 1982-83ஆம் ஆண்டுகளில் 23.6 விழுக்காடாக அதிகரித்து 2014-15ஆம் ஆண்டில் 14.9 விழுக்காடு அளவுக்கு குறைந்துள்ளது.

இந்தியாவில் 1980-2015 வரையில், கீழ்தட்டில் உள்ள 50 விழுக்காடு மக்கள்தொகையினர் ஈட்டு வருமானம் 90 விழுக்காடு அளவு வேகத்துக்கு அதிகரித்துள்ளது. அதேவேளையில், மேல்தட்டில் உள்ள 10 விழுக்காட்டினர் ஈட்டு வருமானத்தின் வேகம் 435 விழுக்காடு அளவு வேகத்துக்கு அதிகரித்துள்ளது. மக்கள்தொகையில் 0.01 விழுக்காட்டினர் ஈட்டும் வருமானம் 1699 விழுக்காடு அளவு வேகத்துக்கு அதிகரித்துள்ளது. மக்கள்தொகையில் 0.001 விழுக்காடினர் ஈட்டும் வருமானம் 2040 விழுக்காடு அளவு வேகத்துக்கு அதிகரித்துள்ளது.

இந்தியாவை சீனாவுடன் ஒப்பிட்டு பார்ப்பது சுவாரசியமாக இருக்கும். இந்தியாவில் கீழ்தட்டில் உள்ள 50 விழுக்காடு மக்கள்தொகையினர் ஈட்டும் வருமானம் சீனாவில் கீழ்தட்டில் உள்ள மக்கள்தொகையினர் ஈட்டு வருமானத்தைவிட 4 மடங்கு குறைவாக வளருகின்றது. அதாவது சீனாவில் கீழ்தட்டில் உள்ள 50 விழுக்காட்டினர் இந்தியாவில் கீழ் தட்டில் உள்ள 50 விழுக்காட்டினரை விட வேகமாக வளர்ந்துள்ளனர். இந்தியாவின் நடுத்தட்டில் உள்ள 40 விழுக்காடு மக்கள்தொகையினர் சீனாவின் நடுத்தட்டில் உள்ள 40 விழுக்காட்டினரை விட 8 மடங்கு குறைவான வேகத்தில் வளர்ந்துள்ளனர்.  ஒப்பீட்டளவிலும் இந்த காலக்கட்டத்தில் சீனாவில் கீழ்தட்டில் உள்ள 50 விழுக்காடு மக்கள்தொகையினர் ஈட்டியிருக்கும் வருமானம் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளைவிட அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

முடிவுரையாக….

இந்தியாவில் வருமான ஏற்றத்தாழ்வை மதிப்பிடுவதில் உள்ள பிரச்சனைகளை சுட்டிக்காட்டும் இந்த ஆய்வு. அதேநேரத்தில் கிடைக்ககூடிய தரவுகளை சிறப்பாக பயன்படுத்தி சில முடிவுகளுக்கு வந்தடைந்துள்ளது. அதன்படி, இந்தியாவில் 1980களுக்கு பிறகு வருமானம் ஈட்டுவதில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளது மட்டுமல்ல இந்த ஏற்றதாழ்வுகளின் அளவு பிரித்தானிய காலனிய காலத்தில் நிலவிய ஏற்றதாழ்வுகள் அளவுக்கு ஒப்பாக இருக்கின்றது என்பது வேதனையளிக்கக் கூடிய செய்தியாகும்.

நாம் இந்த இடத்தில் இந்த குறிப்பின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட புதிய தாராளவாத பொருளியலாளர்களின் கூற்றை நோக்கித் திரும்புவோம். இந்தியப் பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சி இந்தியாவின் சமூகப்-பொருளாதார பிரச்சனைகளுக்கான தீர்வு. உண்மையில் நடந்திருப்பது என்னவென்றால், இந்தியா வேகமாக வளர்ந்துள்ள காலக்கட்டத்தில்தாம் வருமான ஏற்றதாழ்வுகளும் அதிகரித்துள்ளது. எனவே, வறுமை, வேலையில்லா திண்டாட்டம், வருமானம் – செல்வ ஏற்றதாழ்வுகள் என்பது அடிப்படையில் பகிர்ந்தளிப்பு சம்மந்தப்பட்ட பிரச்சனையாகும். பொருளாதார வளர்ச்சி பற்றி கவலைக் கொள்வது எவ்வளவு முக்கியமோ பகிர்ந்தளிப்பு மீது கவனம் குவிப்பது அவ்வளவு முக்கியமாகும். ஆகவே, புதிய தாராளவாதப் பொருளியளாலாளர்கள் குறிப்பிடுவது போல், பொருளாதார வளர்ச்சியே பகிர்ந்தளிப்பை சரியாகவும் நியாயமாகவும் தீர்மானிக்கும் என்ற கூற்றுக்கு இந்த குறிப்பில் கண்ட தரவிலிருந்து சான்றுகள் இல்லை என்பது உறுதி. பொருளாதாரத்தில் பகிர்ந்தளிப்பு தானாக நடைப்பெறாது என்ற வாதத்தை ஒப்புக்கொண்டோம் என்றால், பொருளாதாரத்தில் தலையீடு செய்ய வேண்டும் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். எனவே, இந்த இடத்தில் பகிர்ந்தளிப்பு என்ற பொருளாதாரப் பிரச்சனை அரசியல் தளத்துக்கு இட்டுச் செல்கின்றது.

நியாயமான பகிர்ந்தளிப்பு என்பது முற்போக்கு அரசியலின் பிரிக்க முடியாத அங்கமாகும். இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் வளர்ந்து வரும் வருமான-செல்வ ஏற்றதாழ்வுகளை சரிசெய்வது பற்றிய உணர்வுநிலையற்று இருக்கின்றனர். அக்கட்சிகள் அனைத்துமே இப்பிரச்சனையை பற்றி கண்டும் காணாமல் இருந்து கொண்டிருக்கின்றனர் அல்லது வருமான-செல்வ ஏற்றதாழ்வு பிரச்சனையின் வீரியத்தை பற்றி அறியாமல் இருக்கின்றனர். இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் தலையாயப் பிரச்சனையாக இருக்கும் சுற்றுச்சூழல் பிரச்சனை போன்றே வருமான-செல்வ ஏற்றதாழ்வுகள் பிரச்சனையும் இருக்கின்றது என்பது என் கருத்து.

இந்தியாவில் வருமான ஏற்றதாழ்வுகள் பற்றிய இந்த ஆய்வுக் கட்டுரை நமக்கு வேறு சில செய்திகளையும் சிந்தனை செய்யத் தூண்டியுள்ளது. இந்தியாவில் வருமானம் தொடர்பான தரவுகளை முறையாகத் திரட்ட புள்ளியியல் அமைப்புகள் வேண்டும். இந்தியா என்பது மாநிலங்களால் ஆனது. எனவே, ஒவ்வொரு மாநிலத்துக்கு வருமான-செல்வ ஏற்றதாழ்வுகள் தொடர்பான தரவுகள், தரவுத் தளங்கள் உருவாக்கப்பட வேண்டும். அந்த வகையில் நம்முடைய தமிழ்நாட்டுக்கும் கூட வருமான-செல்வ ஏற்றதாழ்வுகள் தரவு தளத்தை உருவாக்குவது அது சாத்தியமா? சாத்தியமில்லையா? போன்றவற்றை சிந்திக்க வேண்டும். நமக்கு ஏன் இத்தகைய தரவுகள் வேண்டும் என்றால், அப்போது தான் தமிழ் சமுதாயத்தில் உள்ள வருமான-செல்வ ஏற்றதாழ்வுகளை குறைக்கவும் அதற்கான நோக்கங்களையும் உருவாக்க முடியும். மாநிலங்களுக்கு மாநிலம் வருமானம்- செல்வ ஏற்றதாழ்வுகள் தரவுகள் எவ்வளவு அத்தியாவசியமானதோ அதே அளவுக்கு முக்கியத்துவம் கொண்டது மாநிலத்துக்குள் உள்ள சாதி கூட்டுக்குள் (அதாவது, பட்டியல் வகுப்பு, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முன்னேறிய வகுப்பினர்) என்ற வகையில் வருமான-செல்வ ஏற்றதாழ்வுகள் தரவு தளத்தை உருவாக்க வேண்டும். தமிழ் சமுதாயம் சாதிய சமூக அமைப்பைக் கொண்ட சமுதாயம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

தாமஸ் பிக்கெட்டியும் லூகாஸ் சான்செலும் செய்த ஆய்வு வருமான-செல்வ ஏற்றதாழ்வு எனும் முக்கியமான பிரச்சனையின் மீது நம்முடைய கவனத்தை திருப்பியுள்ளது. இந்தியா தன்னுடைய எழுப்பத்து நான்காவது சுதந்திர நாளில் நின்றுக்கொண்டிருக்கும் தருவாயில், இந்தியாவில் பெருகி வரும் வருமான-செல்வ ஏற்றதாழ்வுகள் பற்றி அறிந்து கொள்வதும் அது பற்றிய விவாதங்களை முன்னெடுப்பது இன்றியமையாதது ஆகும்.

பா.பிரவின்ராஜ் – ஊடாட்டம்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s